ஆகச்சிறந்த ஆசிரியர்

author
0 minutes, 3 seconds Read
This entry is part 9 of 11 in the series 8 செப்டம்பர் 2019

நவின் சீதாராமன்

ஆகச்சிறந்த ஆசிரியர் ! ஆம்… நான், என் முந்திய தலைமுறை, பிறகு எனக்குப் பிந்திய தலைமுறை… ஆக மூன்று தலைமுறையினரும் அன்போடு அழைக்கும் “பொிய சார்” இன்று எங்களைவிட்டுப் பிரிந்து விட்டார் என்ற செய்தியில் நான் உட்பட அனைத்துத் தலைமுறையினரும் அதிர்ச்சியில் இருக்கிறோம். ஏன்… அதெப்படி சாத்தியம் ….. ஓர் ஆசிரியர் தன் வாழ்நாட்கள் முழுக்க சுமார் 35-36 ஆண்டுகள் ஒரே பள்ளியில் பணி புரிந்ததால் இந்த மூன்று தலைமுறையினரும் அவருடைய மாணாக்கர்கள். இந்த மனநிலையில் என்னால் எதுவும் தற்போது எழுத இயலவில்லை… விரைவில் என்னைத் தேற்றிக்கொண்டு அந்த மாபெரும் மகானைப் பற்றி பதிவு செய்கிறேன். நன்றி.

தோராயமாக 1960-கள். ஒழுங்கான சாலை, போக்குவரத்து வசதி எதுவுமில்லாத, வறண்ட வறட்சி மாவட்டமான அப்போதைய இராமநாதபுரம் மாவட்டம் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு தென்கிழக்கில் சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு குக்கிராமமான சிலுக்கபட்டி என்ற ஊரில் இருக்கும் தொடக்கப்பள்ளி ஆசிரியராக, ஆசிரியரே இல்லாத அந்தப் பள்ளிக்கு வந்து சோ்ந்து சுமார் 35 – 36 ஆண்டுகள் அதே பள்ளியில் பணி புரிந்து, பிறகு தன் முழு முயற்சியால் அவருடைய பணி ஓய்வுக்காலத்திற்குள், மேல்நிலைப் பள்ளி கட்டுவதற்காக, தன் சொந்த நிலத்தையே தானமாக விட்டுக்கொடுத்து, ஒரு வாழ்நாள் சாதனையாளராக தன் முழு வாழ்க்கையையும் அந்தப் பகுதி மக்களுக்காக அர்ப்பணித்து, குறைந்த பட்சம் ஒரு நல்லாசிரியர் விருதைக்கூட பெறாத மாசற்ற மாமனிதர், ஆகச்சிறந்த ஆசிரியர்…. எங்கள் பகுதி மக்களால் இன்றளவும் அன்போடு அழைக்கக்கூடிய அந்த “பொிய சார்” (1936 – 2019) இன்று மறைந்துவிட்டார் என்ற செய்தி எங்கள் இதயங்களில் இடியாய் வந்திறங்கியது.

என் குடும்பத்தில் நான் உட்பட என் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் அவரே தலைமையாசிரியர். அவரின் சொந்த ஊர் அருப்புக்கோட்டைக்கு அருகில் “திருவரிந்தாள் புரம்”. மிகச் செழிப்பான கிராமம், விவசாயக்குடும்பம். குடும்பத்தை அங்கேயே விட்டுவிட்டு பணி நிமித்தம் இந்த கிராமத்தில் வந்து பணிபுரிகையில் அவர் பட்ட பாடுகள், பிரச்சினைகள் அனைத்தும் என் அப்பா சொல்ல எனக்குப் பரிட்சயம். பிறகு சில வருடங்கள் கழித்து ஆசிரியையான தனது மனைவிக்கு பணி மாற்றம் வாங்கிக்கொண்டு, குழந்தைகளை சொந்த ஊரிலேயே விட்டுவிட்டு இங்கு வந்து சோ்ந்தார். இடதுசாரி இயக்கத்தில் இருந்த என் அப்பாவும் அவரும் நான் பிறக்கும் முன்பே… ஆகச்சிறந்த சினேகிதர்கள். என் அப்பாவை அவர் “சீத்தா” என அன்போடு அழைப்பார். நான் பள்ளியில் சோ்ந்த பின்பு என்னை அவர் அழைக்கும் பெயர் “தக்காளி”. இன்றளவும் என் பள்ளி நண்பர்கள் உட்பட என் தங்கைகளின் மகள்கள் அழைக்கும் பெயர் அதே பெயர்தான்…. ம்ம்… “தக்காளி”. காரணம் நான் கொஞ்சம் கொழுகொழுவென….. சிவப்பாக இருப்பேனாம்…. இது அவர் சொன்னது.

அவர் பணியிலிருக்கும்போது, அவருடைய முழு முயற்சியால், எட்டாம் வகுப்புவரை அனைத்து வகுப்புக்களுக்கும் ஆசிரியர்கள் இருந்தனர். கர்மவீரர் காமராசரின் மதிய உணவு சமையலுக்கு ஒரு ஆசிரியை, பிறகு தோட்டம் மற்றும் விவசாயம் பற்றிக் கற்றுக்கொடுக்க ஒரு தோட்ட ஆசிரியர்… இப்படியாக மொத்தம் பத்து ஆசிரியர்களைக் கொண்டது அந்த சிலுக்கபட்டி தொடக்கப்பள்ளி. மாதமொருமுறை பள்ளியாளுமன்றம் நடைபெறும். இது நம் பாராளுமன்ற சட்ட திட்டங்களுக்கும், நம் நாட்டின் ஆட்சிமுறை, மந்திரிசபை, மக்களவை பற்றிய புரிதலுக்கு ஒத்திகை. தோ்தல் நடக்கும்போதெல்லாம் ஓட்டுப்பெட்டியைத் திருடிக்கொண்டு ஓடிப்போகும் வேலை என்னுடையது. பிறகு சில காவல்துறை அதிகாரிகளால் நான் கைது செய்யப்படுவேன். எனக்கு முதலில் கிடைத்த மந்திரி பதவி சுகாதார அமைச்சர். பள்ளி வளாகத்தில் கிடக்கும் குப்பைகள், நாய் மற்றும் கோழிகளின் எச்சங்களை சுத்தம் செய்வதும், சுவர்களில் இருக்கும் கரிக்கோடுகள் மற்றும் தண்ணீர் குடிக்கும் குழாயருகில் பாசி படியாமல் பார்த்து சுத்தம் செய்வது போன்ற வேலைகள் என்னுடையது.
யாரெல்லம் பிடிக்காத மாணவர்களோ அவர்களை அழைத்து சுத்தம் செய்யவைத்து பழி தீர்த்துக்கொள்வது. மறுத்தால் அவர்களுக்கு ஒரு பைசா அல்லது இரண்டு பைசா அபராதம். இவற்றால் கடுப்பாகிப் போன சில மாணவர்கள் என் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நினைத்தால்…. மாதம் தேதி உட்பட எந்த இடம் அசுத்தமாக இருந்ததென்பனவற்றைக் குறிப்பிட்டு புகார் பெட்டியில் போட்டுவிடுவார்கள். பிறகு அவை பள்ளியாளுமன்றத்தில் வாசிக்கப்படும். அமைச்சர்கள் விளக்கமளிக்க வேண்டும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் அபராதம் செலுத்தவேண்டும். பிறகு அவர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு எந்தப் பதவிக்கும் போட்டியிடக்கூடாது…..

‘மன்றத்தில் அமர்ந்திருக்கும் மதிப்பு மிக்க கணம் சபாநாயகர் அவர்களே ! கொறடா உறுப்பினர் அவர்களே…. இப்படித்தான் பள்ளியாளுமன்றம் தொடங்கும்…

இது மட்டுமா? எத்தனை வித்தைகள், வித்தியாசங்கள்…. அனைத்திற்கும் அடிப்படை எங்கள் ஆசான் பொிய சார் அவர்கள். மாணவர்கள் மாத்திரமல்ல. அவரோடு பணி புரிந்த எத்தனையெத்தனை ஆசிரியர்கள். அவரிடம் படித்த மாணவர்களே அவருடன் ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளனர். மூன்று தலைமுறையினரையும் அப்பா பெயரோடு அவர்கள் பெயரையும் சோ்த்து அழைக்கும் அபார நினைவாற்றல்…. அந்தக் கிராமத்தில் நடைபெறும் அனைத்து நல்ல, கெட்ட காரியங்களிலும் முதன்மை மனிதராக வந்து நிற்கும் பெருந்தன்மை….. கண்மாய் உடைந்து பெருவெள்ளம் எடுக்கும் காலங்களில் கிராமத்தினரோடு சோ்ந்து இரவு முழுவதும் கண் விழித்து காவல் தெய்வமாய் காத்து நிற்பதிலும்… அவர் பங்கு அளப்பரியது.

ஒருமுறை அவருடைய மாணவன் கையில் அரிவாளோடு ரத்தம் சொட்டச்சொட்ட அதிகாலையில் வந்து நிற்கிறான். அதிர்ந்து போன பொிய சார்… “என்னடா சொக்கலிங்கம்… இப்படி வந்து நிக்கிறே….”

“சார்…. எனக்கு இதுக்கு மேல வழி தொியல சார்…. எங்கப்பன்… இன்னொருத்திய சேத்து வச்சுகிட்டு… எங்காத்தாவ தெனந்தெனம் கள்ளுக் குடிச்சிட்டு வந்து மயித்த இழுத்துப்போட்டு அடிக்கறாரு சார்…. எங்காத்தா.. பாவம் எம்புட்டுத்தான் சார் பொறுக்கும்…. இன்னிக்கி எங்காத்தவ ரொம்ப அடிச்சிட்டாரு சார்…. எரவாரத்துல இருந்த கருக்கருவால எடுத்து எங்காத்தா கழுத்த அருக்கப் போய்ட்டாரு சார்…. என்னால அத பாக்க முடியாம…. கொட்டத்துல இருந்த வெட்டருவால எடுத்து…. எங்கப்பனை வெட்டிபுட்டேன் சார்….. இப்ப நான் என்ன செய்யணும் சார்…. சொல்லுங்க !

“நேரா… காளையார்கோவில் போலீஸ்டேசன் போயி சரண்டர் ஆயிரு….” இது பொிய சார்.

தன்னுடைய வாத்தியார் சொன்ன ஒரே காரணத்திற்காக காவல் நிலையத்தில் கொலையாளி சரணடைந்த கதை பத்திரிகை செய்தியானது….

இப்படியாக எத்தனையெத்தனை சம்பவங்கள்…..

கடந்த இரண்டாண்டுகளுக்கு முன் அமொிக்காவிலிருந்து தாயகம் சென்ற நான் அவரைச் சந்தித்தே ஆக வேண்டும் என்ற வைராக்கியத்தில் என் தம்பிகள், தங்கைகள் என அவரிடம் படித்த ஐந்து பேரும் சென்று சந்தித்தோம். அப்போது நான் அவரிடம் பேசியபோது….. “… நான் சமீப காலமா யாரையும், சார்”னு கூப்பிடுறதில்ல, எனக்கென்னமோ அது புடிக்கல, நீங்களும் அப்பாவும் எவ்வளவு சினேகம்’னு எனக்குத் தொியும், ஆனா… அப்பா இன்னிக்கி இல்ல. அதுனால நான் ஒங்கள “அப்பா’னு கூப்புடலாமா”ப்பா’ன்னு கேட்டேன்.

“…. என் கண்களையே சில மணித்தியாளங்கள் உற்றுப் பார்த்துவிட்டு… “அதுக்கென்னைய்யா, நீ கூப்புடுய்யா… நான் ஒனக்கு அப்பாதான்” என்றதும்…. நான் என் அப்பாவைச் சந்தித்தாய் கலங்கிப்போனேன்.

“அப்பா…. நான் என்னோட அப்பாவுக்கு எதுவும் பொிசா செஞ்சிறல…. காரணம் நான் செய்யறதுக்குள்ள அவர் எங்களவிட்டு போய்ட்டாரு…. ஆனா… ஒங்களுக்கு செஞ்சா அது என்னோட அப்பாவுக்கு செஞ்சது மாதிரிப்பா…. காரணம் என்னன்னா…. நான் எங்கப்பாவப் பாத்து பிரமிச்சிருக்கேன். ஆனா… அவரு ஒங்களப் பத்தி சொன்னது எனக்கு இன்னும் அத விட பொிய பிரமிப்பா இருந்துச்சு. அதுனால, ஒங்களப்பத்தின ஒரு ஸ்கிரிப்ட் நான் ஏற்கனவே ரெடி பண்ணி வச்சிருக்கேன். அத நான் படமா பண்ணப்போறேன். ஒரு பொிய மாபெரும் மகத்தான ஆசிரியரான ஒங்களுக்கு எந்த அங்கீகாரமும் கிடைக்கல. ஆனா நான் ஒங்களப்பத்தி படமா பண்ணா…. கண்டிப்பா தேசிய விருது கெடைக்கும். அந்த விருத ஒங்க கையால வாங்கணும்” அப்படின்னு சொன்னேன்.

அதுக்கு சிரிச்சிகிட்டே…. “கண்டிப்பாய்யா…. கண்டிப்பா….. என்று வாழ்த்தினார் எவ்வித பிரதியுபகாரத்தையும் எதிர்பாராத அந்த மாமேதை. தேசிய விருது என்பதெல்லாம்…. நான் நினைத்ததில்லை…. போட்டிகளும், பொறாமைகளும் நிறைந்த இந்தக் காலகட்டத்தில்கூட என் ஸ்கிரிப்ட்டை கேட்டுவிட்டு அவரோடு பணி புரிந்த ஆசிரியப் பெருந்தகைகள் வெளிப்படுத்திய ஆத்மார்த்தமான உணர்வுகளின் வெளிப்பாடுதான் என்பதைத் தவிர நான் வேறென்ன பொிதாகச் சொல்லிவிட முடியும்? விருது கிடைக்கிறதோ இல்லையோ…. அவர் பாராட்டுகளை அள்ளிக்கொண்ட நான் விருது வாங்கியதாகத்தான் இன்றளவும் உணர்கிறேன்.

எனக்கு திரையுலகம் பற்றிய எந்தவிதப் புரிதலும் இல்லாத அந்தக் காலகட்டத்தில்…. பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் நான் பங்கேற்று நடிப்பதையும், பாடுவதையும், நடனமாடுவதையும் பார்த்துப் பாராட்டி, “நீ கமலஹாசன் மாதிரி ஒரு பொிய நடிகனா, சகலகலா வல்லவனா வருவடா” என்று வாழ்த்தி எனக்குள் விதைபோட்ட அந்த மகான் அவர்தான். கல்லூரியில் படிக்கும்போது ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் பழைய மாணவர்கள் சார்பாக நடனங்கள் ஆடுவதும், கலை நிகழ்ச்சிகள் செய்வதும் வழக்கம். அதற்காக நேரம் ஒதுக்கி தருவதோடு மட்டுமல்லாமல், நான் நடனமாடுவதற்கு முன் மட்டும் பிரத்தியேகமாக ஒரு இரண்டு நிமிடமாவது என்னைப்பற்றிய பெருமையாக முன்னுரை நிகழ்த்துவார். அதில்…. இப்ப ஒருத்தன் வருவான் பாருங்க, எங்கிட்டதான் படிச்சான். நம்ம சீதாராமன் பையன் மூத்தவன் ‘தக்காளி’… ஆமா அப்படித்தான் இருப்பான் அவன். ஆனா இப்ப சும்மா ஒடம்ப வில்லா வளைக்கிறான். பாருங்க பிரமாதமா ஆடுவான்…. வருங்காலத்துல பொிய நடிகனா வருவான்” என்று அவர் கூறும் வார்த்தைகள் என் காதுகளில் இன்றும் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன….

அவர் காலத்தில் பணிபுரிந்த ஆசிரியர்கள் துரைச்சிங்கம், சரசுவதி, போஸ், ரோஸ், கந்தசாமி, சமாதானம், வசந்தா, பாலசுப்ரமணியன், பெஞ்சமின், மாசான், அருளானந்தம், சரோஜா, பீட்டர், அடைக்கலம்…. இப்படி அடிக்கிக்கொண்டே போகலாம்…..

அவர் பள்ளியில் அறிமுகப்படுத்திய “பள்ளியாளு மன்றமாகட்டும், விவசாயம் பற்றிய வகுப்பறையாகட்டும், கலை, இலக்கிய வகுப்புகளாகட்டும், ஆசிரியர்கள் பற்றாக்குறையின்போது மாணவர்களனைவரையும் ஒன்றாக உட்கார வைத்து வழி நடத்தும் கலை, இலக்கிய, இசை நிகழ்வுகளாகட்டும், அந்தக் கிராம மக்களோடு மக்களாக ஒன்றினைந்து செய்யும் பொதுச் சேவைகளாகட்டும்” இன்றளவும் எந்த ஆசிரியரும் செய்யாத சேவை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

இன்னும் எத்தனையெத்தனையோ நிகழ்வுள்…. மூடி மறைத்துதான் இந்தப் பதிவை நான் பதிவு செய்கிறேன். காரணம்…. அவர் பற்றியதொரு முழுமையான திரைக்காவியத்தை நான் விரைவில் பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்திலிருக்கிறேன். அந்தப் பதிவை அவர் காண இயற்கை ஒத்துழைக்காவிடினும்… அதன் வாயிலாக அவரின் செய்தி அவர்போல் எண்ணம் கொண்ட நல்லாசிரியர்களுக்கு சிறப்பானதொரு முன்னுதாரணமாய் அமையும் !

கனத்த இதயத்தோடும்…. கண்ணீரோடும்….

உங்கள் மாணவன்
தக்காளி என்ற நவின் சீதாராமன்.
அமொிக்கா

Series Navigationபாரதியும் புள்ளி விபரமும்யாவையும் உண்மை
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *