முல்லை

This entry is part 2 of 10 in the series 15 செப்டம்பர் 2019

                                

“மாயோன் மேய காடுறை உலகமும்” என்று தொல்காப்பியம் கூறும் நிலப்பகுதி முல்லையாகும். இது காடும் காடு சேர்ந்த பகுதிகளயும் கொண்டதாகும். தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் பிரிந்து தனித்து இருக்கும்போது நினைந்து நினைந்து இரங்குவதே முல்லைத் திணையாகும்.  

====================================================================================

                       செவிலி கூற்றுப் பத்து

1.மறிஇடைப் படுத்த மான்பிணை போல,

 புதல்வன் நடுவணன் ஆக, நன்றும்

இனிது மன்றஅவர் கிடக்கை; முனிவின்றி

நீல்நிற வியலகம் கவைஇய

ஈனும், உம்பரும், பெந்றலருங் குரைத்தே

      [மறி=குட்டி  மான்=ஆண்மான்; பிணை=பெண்மான்; கிடக்கை=படுக்கை; முனிவு=வெறுப்பு; நீல் நிறவியவுலகம்=நீல நிற வானம்; கவை கவைஇய=கவிந்த; ஈன்=இவ்வுலகம்; உம்பர்=மேல்உலகம்;பெறலருங்குரைஉத்தே=பெறுவதற்கரியது]

      வீட்டு முத்தத்துல ஒரு ஆண்மானும் பெண்மானும் அதுங்களோட குட்டியை நடுவுல போட்டுக்கிட்டுப் படுத்திருக்குங்க. அதைப் பாத்த செவிலி அவளோட ஊட்ல அவ பொண்னணு படுத்திருந்ததை நெனச்சுப் பாக்கறா. அப்ப அவ பொண்ணோட அம்மாக்கிட்ட சொல்ற பாட்டு இது.

      ”அதோ பாரு; குட்டிய நடுவிலப் போட்டுக்கிட்டு அதை அணைச்சுக்கிட்டு ஆண்மானும் பெண்மானும் படுத்துக்கிட்டு இருக்குங்க. இதேபோலத்தான் நம்ம பொண்ணும், பையனை நடுவில போட்டுக்கிட்டு அவனோட படுத்திருந்தா. இந்த அகலமான ஒலகத்திலும் சரி, மேல் ஒலகத்திலும் சரி இது போலப் பாக்கவே முடியாது”

      மான்களின் பாசத்தைப் பாத்தவள் இதுபோலத்தானே நம்ம பொண்ணும் அவ கணவனும் இருப்பாங்கன்னு சொல்றா.

=====================================================================================2.  புதல்வற் கவைஇய தாய்புறம் முயங்கி,

நசையினன் வதிந்த கிடக்கை, பாணர்

நரம்புளர் முரற்கை போல.

இனிதால்; அம்ம்! பண்புமார் உடைத்தே

      [கவைஇய=அணைத்த; முயங்கி=தழுவி; நசையினள்=விரும்பினன்; வதிந்த=தங்கிய; கிடக்கை=படுக்கை; முரற்கை=இசை]  

      இதுவும் போன பாட்டு மாதிரியேதான் செவிலி அம்மாகிட்ட சொல்றது.

”அன்னையே! அவதன்னோட பையனை மார்போட அணைச்சுக்கிட்டுப்படுத்திருக்கா.

அவன் அவளோட முதுக்குப்புறமா அவள அணைச்சுக்கிட்டுப் படுத்திருக்கான். அந்தப் படுக்கை எப்படி இருக்கு தெரியுமா? பாணருங்கள்ளாம் யாழை மீட்டி வாசிக்கத் தயார் செஞ்சது போல இருக்கு. அத்தோட இசை போல இனிப்பாவும் நல்லாவும் இருக்கு”

      அவன் அணைச்சுக்கிட்டு இருந்த அந்த நிலை அவனுக்குப் புடிச்சிருக்கு; அவளுக்கும் மனசுக்குப் புடிச்சிருக்கு. பாக்கற செவிலிக்கும் கேக்கற அவ அம்மாவுக்கும் கூடப் புடிச்சிருக்காம்.

=====================================================================================

3.புணர்ந்த காதலியின் புதல்வன் தலையும்

அமர்ந்த உள்ளம் பெரிது ஆகின்றே;

அகன்பெரும் சிறப்பின் தந்தை பெயரன்

முறுவலின் இன்னகை பயிற்றிச்

சிருதேர் உருட்டும் தளர்நடை கண்டே.

      [அமர்ந்த=விரும்பிய; முறுவலின் இன்னகை=புன் சிரிப்பு; தலை=இடம்]

இதுவும் செவிலித்தாய் சொல்ற பாட்டுதான்.

      அவன் அவனோட புள்ள சின்ன தேரை உருட்டி மெதுவா நடந்து வர்றதைப் பாக்கறான். எல்லா எடத்திலேயும் நல்ல பேரெடுத்த அவனோட அப்பா பேரை வச்சிட்டு இருக்கற அவன் புள்ள லேசாச் சிரிச்சுக்கிட்டு தேரை உருட்டிட்டு வரான். அதை பாத்த அவனுக்கு அவன் காதலிகிட்ட வச்சிக்கிட்டு இருக்கற அன்பைப் போலவே புள்ளக்கிட்டயும் பெரிதான ஆசை உண்டாயிட்டுது.

=====================================================================================

4. வாள்நுதல் அரிவை மகன்முலை ஊட்டத்

தானவள் சிறுபுறம் கவையினன் நன்றும்

நறும்பூந் தண்புறவு அணிந்த,

குறும்பல் பொறைய நாடுகிழ வோனே

      [கவையினன்=அணைத்தனன்; நறும்பூ=வாசனைப் பூக்கள்; புறவு=முல்லை நிலம்; பொறை=சிறிய குன்று; அரிவை=தலைவி; வாள்=ஒளி; நுதல்=நெற்றி]

  இதுவும் போன பாட்டு மாதிரியே செவிலித்தாய் சொல்றதுதான்.

      ”அவன் இருக்கற முல்லை நெலத்துல வாசனையான பூவெல்லாம் இருக்கற காடும், சின்ன குன்றும் இருக்குது. அவனோட மனைவி தன் புள்ளக்குப் பாலூட்டும்போது அவன் அவ முதுகைத் தழுவி அன்பு காட்டறான்”

=====================================================================================

5. ஒண்சுடர்ப் பாண்டில் செஞ்சுடர் போல,

மனைக்கு விளக்கு ஆயினள் மன்ற கனைப்பெயல்

பூப்பல அணித்த வைப்பின்

புறஅணி நாடன் புதல்வன் தாயே.

      [ஒண்=ஒளிமிக்க; பாண்டில்=கால்விளக்கு; கனைப்பெயல்=ஓசையுடன் கூடிய மழை; வைப்பு=ஊர் முல்லை நிலம்; புறவு=காடு]

      போன பாட்டு மாதிரியே இதுவும் செவிலி சொல்ற பாட்டுதான்.

       பெரிய சத்தத்தோட இடி முழங்கி மழை பெய்யறதால பல பூவெல்லாம் பூத்து அழகா இருக்கற முல்லை நாட்டை சேந்தவன் அவன். அவனோட புள்ளக்குத் தாயா இருக்கற அவ பாண்டில்னு இருக்கற தண்டுல ஏத்தி வச்ச வெளிச்சம் தர்ற வெளக்கு போல வீட்டுக்கும் அவளுக்கும் பெருமை சேக்கறா”

=====================================================================================

6. மாதர் உண்கண் மகன்விளை யாடக்

காதலித் தழீஇ இனிதுஇருந் தனனே;

தாதுஆர் பிரசம் ஊதும்

போதார் புறவின் நாடு கிழவோனே

      [தாது=தேன்; பிரசம்=வண்டு; போது=மலர்; புரவு=முல்லைக் காடு; ஊதும்=உறிஞ்சிப் பருகும்]

      போன பாட்டு மாதிரிதான் செவிலி சொல்றதுதான். பையன் வெளயாடறான். அவனும் அவளும் அதைப் பாத்துக்கிட்டிருக்காங்க. அதைத்தான் அவ இப்படி சொல்றா.

      ”அவன் முல்லை நெலத்தைச் சேந்தவன். அங்க வண்டெல்லாம் வந்து தேனை உறிஞ்சறப் பூவெல்லாம் நெறய இருக்கும். அவன் கண்ணுல மையெல்லாம் தீட்டியிருக்கற அவனோடப் புள்ள வெளயாடறதை அவளத் தழுவிக்கிட்டே மகிந்ச்சியோடப் பாத்துக்கிட்டிருக்கான்”

====================================================================================

7. நயந்த காதலித் தழீஇயப் பாணர்

நயம்படு முரற்கையின் யாத்த பயன்தெரிந்து

இன்புறு நுகற்சி நுகரும்;

மென்புல வைப்பின் நாடுகிழ வோனே.

      [நயந்த =விரும்பிய; தழீஇய=தழுவி; நயம்=இனிமை; முரற்கை=துள்ளல் ஓசை; கிழவன்=தலைவன்; வைப்பு=ஊர்]

      செவிலித்தாய் சொல்ற பாட்டுதான் இதுவும். அவனும் அவளும் சேந்து இருந்ததைத்தான் சொல்றா.

      ”பாணருங்க துள்ளல் ஓசையைப் பாடறாங்க. அதைக் கேட்டுக்கிட்டே மிருதுவான எடமெல்லாம் இருக்கற ஊரைச் சேந்தவனான அவன் அவக்கிட்ட  அன்போடத் தழுவிக்கிட்டு இருந்தான்.”

=====================================================================================8. பாணர் முல்லை பாடச் சுடரிழை

வாணுதல் அரிவை முல்லை மலைய,

இனிதுஇருந் தனனே, நெடுந்தகை

துனிதீர் கொள்கைத் தன் புதல்வனொடு பொலிந்தே

      [முல்லை=முல்லைப் பண்; மலைய=சூட; நெடுந்தகை=நீண்ட புகழை உடையவள்; துனி=வெறுப்பு; பொலிந்தே=அழகுற அமைந்தே]

      அவனும் அவளும் எப்படி இருந்தாங்கன்னு செவிலி சொல்ற பாட்டுதான் இதுவும்.

      ”பாணருங்கள்ளாம் முல்லைப் பண்ணை யாழில பாட்டிக்கிட்டு இருக்காங்க. நல்ல நகையெல்லாம் போட்டுக்கிட்டு அழகான நெத்தியும் இருக்கற அவ முல்லைப் பூவைத் தலையில வச்சுக்கிட்டு  ஒக்காந்திருந்தா. அவனும் அவனோட புள்ளயையும் வச்சுக்கிட்டு  அவகிட்டக்க வெறுப்பே எப்போதும் இல்லாத கொணத்தோட அந்த இசையைக் கேட்டுக்கிட்டு ஒக்காந்திருந்தான்.

=====================================================================================

9. புதல்வன் கவைஇயினன் தந்தை; மென்மொழிப்

புதல்வன் தாயோ இருவரும் கவைஇயினள்;

இனிது மன்றஅவர் கிடக்கை;

நனிஇரும் பரப்பின் இவ்உலகுடன் உறுமே.

      [கவைஇயினன்=அணைத்தனன்; மென்மொழி=மென்மையான மழலைப் பேச்சினன்; கிடக்கை=படுக்கை; நனி=மிகுதி; இரும்=பெரிய;உறும்=ஒப்பாகும்]

      ”புள்ளய அவன் தழுவிக்கிட்டான்; மழலையா பேசற அந்தப் புள்ளயையும் அவனையும் சேத்து அவ தழுவிக்கிட்டா. பாக்கறதுக்கு அது ரொம்ப இனிமையா இருந்திச்சு. இந்த ஒலகம் பூரா கிடைச்சாதான் அந்த இன்பத்துக்கு நேரா இருக்கும்”

====================================================================================

10. மாலை முன்றில் குறுங்காற் கட்டில்

மனையோள் துணைவி ஆக, புதல்வன்

மார்பின் ஊரும் மகிழ்நகை இன்பப்

பொழுதிற்கு ஒத்தன்று மன்னே!

மென்பிணித் தம்ம பாணனது யாழே!

      [முன்றில்=முற்றம்; குறுங்கால் கட்டில்=குறுகிய கால்களை உடைய கட்டில்; ஒத்தன்று=ஒத்ததாயிற்று]

      செவிலித்தாய் அவங்க ஊட்டுக்குப் போறா. அப்ப அவளும் அவனும் புள்ளயோட அவங்க ஊட்டு முத்தத்தில படுத்துக்கிட்டிருக்கதைப் பாக்கறா. அவ தனக்குள்ளயே சொல்லிக்கற பாட்டு இது.

      ”சாயங்காலப் பொழுதில, சின்னதா காலெல்லாம் இருக்கற கட்டில்ல, அவ பக்கத்துல ஒக்காந்திருக்க, அவன் படுத்துக்கிட்டு இருக்கான். அவன் மார் மேல ஏறி அவன் புள்ள வெளையாடிக்கிட்டு இருக்கான். ரொம்ப மகிழ்ச்சியா அவங்க சிரிக்கிறாங்க. அந்தச் சத்தம் பாணனோட யாழிலேந்து வர்ற முல்லைப் பண்ணுக்குச் சமமா இனிமையைத் தருது”

====================================================================================

=====================================================================================

Series Navigationகவிதைகனவுகளற்ற மனிதர்கள்
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *