6. பருவங்கண்டு கிழத்தி உரைத்த பத்து
முல்லை நிலத்துக்கே உரியது கார்காலம். அக்காலத்தில் தலைவன் தன் வினை முடித்து வருவதாகச் சொல்லிச் சென்றான். ஆனால் அவன் வரவில்லை. அவனை நினைத்து நினைத்து அவள் வருந்தும் பகுதி இது. இதில் உள்ளப் பத்துப் பாடல்களும் தலைவி உரைப்பதாக இருப்பதால் இப்பகுதி இப்பெயர் பெற்றது.
=============
1.கார்செய் காலையொடு கையறப் பிரிந்தோர்
தேர்தரு விருந்தின் தவிர்குதல் யாவது?
மாற்று அருந்தானை நோக்கி
ஆற்றவும் இருத்தல் வேந்தனது தொழிலே!
[கையற=செயலற; தவிர்குதல்=தங்குதல்]
அரசனுக்காக அவன் படைகூடச் சேந்து போயிப் பாசறையிலத் தங்கியிருக்கான். அவன நெனச்சு அவ சொல்லிக்கற பாட்டு இது.
”போர் செய்யறதுக்காகப் போயிருக்கற அரசனோட என் தலைவனும் போயிருக்கான். எதிரிங்களோட படையை எதிர்பார்த்து இந்தக் கார்காலத்துல பாசறையிலியே தங்க வேண்டி வந்திடுச்சு. பிரிஞ்சு இருக்கற தலைவன் எப்படி தேர்ல இங்க வர முடியும்?
================
2.வறந்த ஞாலம் தெளிர்ப்ப வீசிக்
கறங்குகுரல் எழிலி கார்செய் தன்றே;
பகைவெம் காதலர் திறைதரு முயற்சி
மென்தோள் ஆய்கவின் மறைய,
பொன்புனை பீரத்து அலர்செய் தன்றே.
[வறந்த=வறண்ட; ஞாலம்=உலகம்; தெளிர்ப்ப=செழிப்புற; கறங்கு குரல் எழிலி=ஒலிக்கின்ற மேகம்; பீரம்=பசலை; திறை=கப்பம்;]
அவன் இப்ப எதிரிங்கக்கிட்டக் கப்பம் செலுத்துங்கன்னு சொல்லிக்கிட்டிருக்கான்னு வந்தவங்க அவகிட்ட சொல்றாங்க. அதை கேட்ட அவ இது இன்னும் காலத்தை நீட்டிக்கினுதான் போகும். அதால அவன் வர்ற காலமும் நீடிக்குமேன்னு வருந்தி அவ சொல்ற பாட்டு.
”கோடை வெயிலால வறண்டு கெடக்கற நெலம் செழிப்பா ஆகற பெரிசா சத்தம் போட்டுக்கிட்டு மேகமெல்லாம் மழை பெஞ்சுது. அவரு அங்க எதிரிங்களக் கப்பம் கட்டச் செய்யற வேலயில இருக்காராம். அதால திரும்பி வர்ற காலம் இப்ப இல்ல; என் தோளோட அழகெல்லாம் போய் பொன் நெறமா இருக்கற பீர்க்கம் பூபோலப் பசல வந்திடுச்சு.
=====================
3.அவல்தொறும் தேரை தெவிட்ட, மிசைதொறும்
வெங்குரல் புள்ளினம் ஒலிப்ப, உதுக்காண்,
கார்தொடங் கின்றால் காலை; அதனால்
நீர்தொடங் கினவால் நெடுங்கண்; அவர்
தேர்தொடங்கு இன்றால் நம்வயி னானே.
[அவல்=பள்ளம்; தேரை=தவளையில் ஒருவகை; மிசை=மேடு; தெவிட்ட=ஒலிக்க; புள்ளினம்=பறவையினம்; உதுக்காண்=இப்பொழிது பார்; தொடங்கின்று=புறப்படவில்லை]
கார்காலம் வந்தும் அவன் இன்னும் வடல; அதால அவ மனசு வருந்தித் தோழிக்கிட்டச்சொல்ற பாட்டு இது.
”நீர் நெறம்பிக் கெடக்கற பள்ளத்திலெல்லாம் தேரைங்க கத்துதுங்க. மரத்தோட உச்சியிலெல்லாம் பறவைங்க கத்துதுங்க. அதோ கார்காலமும் வந்திடுச்சு. அவர் இங்க வர்றதுக்குப் பயணமே இன்னும் ஆரம்பிக்கல. அழகான என் கண்ணெல்லாம் ஒளி போயி கண்ணீரைக் கொட்ட ஆரம்பிச்சிடுச்சுங்க.’
============
4.தளவின் பைங்கொடி தழீஇ, பையென
நிலவின் அன்ன நேர்அரும்பு பேணிக்
கார்நயந்து எய்தும் முல்லை;அவர்
தேர்நயந்து உறையும் என்மாமைக் கவினே.
[தளவு=செம்முல்லை; தழீஇ=தழுவி; கவின்=அழகு; பை=பசுமை; நயந்து=விரும்பி; மாமை=மாந்தளிர் போன்ற]
கார்காலத்துல வந்துடுவேன்னு சொல்லிட்டுப் போனவன் வரல. அதால அவ மனசு வருந்தித் தோழிக்கிட்ட சொல்ற பாட்டு இது.
”செம்முல்லையோட பச்சைக் கொடியை நெலவு போல இருக்கற வெள்ளை அரும்புகள் கொண்ட வெண்முல்லை தழுவும். கார்காலத்தை விரும்பி அந்த முல்லை பூக்கும். அதுபோல அவரோட தேரை விரும்பி அழகா மாறதுக்காக என் மாமை நெறைப் பசலயும் காத்திருக்கு”
====
5.அரசுபகை தணிய, முரசுபடச் சினைஇ,
ஆர்குரல் எழிலி கார்தொடங் கின்றே;
அளியவோ அளிய தாமே ஒளிபசந்து
மின்இழை ஞெகிழாச் சாஅய்
தொல்நலம் இழந்தஎன் தடமென் தோளே.
[முரசுபட=முரசு ஒலித்திருக்க; சினைஇ=சினந்து; ஆர்குரல் எழிலி=இடிக்கும் குரலை உடைய மேகம்; அளியவோ=இரங்கத் தக்கன; சாஅய்=சோர்ந்து,மெலிந்து; இழை=ஆபரணம்; ஞெகிழ=கழல]
கார்காலம் வந்திடுச்சு. ஆனா வன் வரல; அவ வருந்தும்போது தோழி ஆறுதல்சொல்றா. அப்ப அவ தோழிக்குச் சொல்ற பாட்டு இது.
”அரசனோட பகை தணிந்து போச்சு. அதுக்கு அடையாளமா போர்மொரசு ஒலிக்குதுங்க. பெரிய இடிச் சத்தத்தோட மேகமெல்லாம் மழை பெய்யுது. அவரு சொன்னபடிக்கு வராததால என் ஒடம்பு மெலிஞ்சு போயி நகையெல்லாம் கழண்டு போச்சு. என் தோளும் அழகை விட்டுட்டுச்சு. அவையெல்லாம் பாவம்தானே?
=====
6.உள்ளார் கொல்லோ தோழி, வெள்இதழ்ப்,
பகல்மதி உருவின் பகன்றை மாமலர்
வெண்கொடி ஈங்கைப் பைம்புதல் அணியும்
அரும்பணி அளைஇய கூதிர்
ஒருங்குஇவண் உறைதல், தெளித்து
[உள்ளார்=நினைக்க மாட்டார்; பகன்றை=சிவதைக் கொடி; அளைஇய=கலந்த; ஈங்கை=ஈச்சமரம்; புதல்=புதர்; கூதிர்=கார்காலம்]
கார்காலம் வந்தும் அவன் வராததால அவ வருத்தமா தோழிக்குச் சொல்ற பாட்டு.
”தோழி, வெள்ளையான இதழ்கள் உடைய, பகல்ல வரச் சந்திரன் போல இருக்கற சிவதைக் கொடியோட பெரிய பூவெல்லாம் பச்சையான பொதர்ல பூத்திருக்கற கார்காலத்துல நம்மோட வந்து தங்கியிருக்கிறேன்னு சொன்னத அவன் நெனச்சுப் பாக்க மாட்டானா?”
======
7. பெய்பனி நலிய, உய்தல் செல்லாது
குருகினம் நரலும் பிரிவுஅரும் காலை
துறந்துஅமை கல்லார், காதலர்;
மறந்துஅமை கல்லாதுஎன் மடம்கெழு நெஞ்சே.
[நலிய=வருந்த; உய்தல்=பிழைத்தல்; குருகினம்=ஒருவகைப் பறவை; நரலும்=ஒலிக்கும்; அமைகல்லார்=பொருந்தியிரார்]
அவ தன் தோழிக்கிட்ட சொல்ற பாட்டுதான் இதுவும்.
”குருகெல்லாம் பெய்யற பனியால வர்ற குளிரைத் தாங்க முடியாம வருந்திச் சத்தம் போடற காலம் இந்தக் கார்காலம். காதல் கொண்டவங்கப் பிரியாம இருக்கற இந்தக் காலத்துல அவரு என்னை உட்டுட்டு அவங்க தங்கியிருக்க மாட்டார்தான். ஆனாலும் எதையும் அறியாத என் மனசு அவரை மறக்க மாட்டேங்குது”.
=====
8. துணர்க்காய்க் கொன்றை குழற்பழம் ஊர்த்தன;
அதிர்பெயற்கு எதிரிய சிதர்கொள் தண்மலர்
பாணர் பெருமகன் பிரிந்தென,
மாண்நலம் இழந்தஎன் கண்போன் றனவே!
[துணர்=கொத்து[ குழற்பழம்=குழல் போலும் பழங்கள்; ஊழ்த்தன=முற்றின; அதிர்கொல்=இடியோடு கூடிய மழை; சிதர்கொள்=சிந்திய; தண்மலர்=குளிர்ச்சியான மலர்]
கார்காலத்துல அவன் வராததால அவ வருந்தித் தோழிக்கிட்ட சொல்ற பாட்டுதான் இதுவும்.
”கொத்துக் கொத்தாய்க் காயிருக்கற கொன்றையில குழல் போல இருக்கற பழமெல்லாம் முத்திப் போச்சு. இடிஇடிச்சு மழை பெய்ததால சிதறி விழற குளிர்ச்சியான பூவெல்லாம் பாணருக்குப் பரிசெல்லாம் குடுக்கற அவன் இல்லாததால அழகே இல்லாத என் கண்ணைப் போல இருக்குதுங்க”
==========
9. மெல்இறைப் பணைத்தோள் பசலை தீர,
புல்லவும் இயைவது கொல்லோ? புல்லார்
ஆர்அரண் கடந்த சீர்கெழு தானை
வெல்போர் வேந்தனொடு சென்ற
நல்வயல் ஊரன் நருந்தண் மார்பே.
[இறை=சந்து; பணைத்தோள்=பெருத்த தோள்; புல்லல்=கூடுதல்; புல்லார்=பகைவர்; நறு=மணமுடைய]
அரசன் செய்யப் போன போரு முடிஞ்சுடுத்து. செய்தி சொல்ற தூதருங்க முன்னாடியே ஊருக்குத் திரும்பறாங்க. அவங்க அவக்கிட்ட “ஒன் காதலன் சீக்கிரம் வந்திடுவான்”னு சொல்றாங்க. அதைக் கேட்ட அவ தோழிக்குச் சொல்ற பாட்டு இது.
”பகைவருங்க அரண் கடக்கவே முடியாது. அதைக்கடந்து வெற்றி பெற்ற படையுடையவன் நம்ம அரசன். அவருக்குத் தொணையா போனவன்தான் நல்ல வயல்கள் இருக்கற ஊரைச்சேந்த நம்ம தலைவன். அவனோட குளிரான மார்பானது மெல்லிசா இருக்கற நம்ம பசல தீர்றதுக்காக தழுவறதுக்கு வாய்ப்பு இனி உண்டாகுமோ?
=====
10.பெருஞ்சின வேந்தனும் பாசறை முனியான்;
இருங்கலி வெற்பன் தூதும் தோன்றா;
ததைஇலை வாழை முழுமுதல் அசைய,
இன்னா வாடையும் அலைக்கும்;
என்ஆகு வென்கொல்! அளியென் யானே?
[முனியான்=வெறுக்க மாட்டான்; இருங்கை=ஆரவாரம்; வெற்பன்=மலைநாடன்; ததைஇலை=நெருங்கிய; இன்னா=கொடிய; அலைக்கும்=துன்புறுத்தும்; அளியென்=இரங்கத்தக்க]
கார்காலம் முடியப் பொகுது. அதுக்குப் பின்னால வர்றப் போற வாடைக் காலத்துலயும் தனியா கெடக்கணுமோன்னு அவ வருந்தறா. மனசுக்குள்ளயே வருந்திச் சொல்ற பாட்டு இது.
”கோபம் அதிகம் இருக்கறா அரசன் பாசறையிலத் தங்கறத விட மாட்டான். பெரிசா ஆரவாரம் இருக்கற மலைநாட்டை உடைய நம்ம தலைவன் கிட்ட இருந்து தூதும் வரல. நெருக்கமா நெறய இலையெல்லாம் இருக்கற வாழையோட அடிப்பகுதியை அசைக்கற வாடைக்காத்தும் நம்மத் துன்புறுத்தும். இரங்கத் தக்கவளான நான் என்னா ஆவேனோ தெரியல.”
========