தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

22 நவம்பர் 2020

திரும்பிப் பார்க்க

ரத்தினமூர்த்தி

Spread the love

இரத்தின மூர்த்தி

நிறையக் கனவுகள்
அதில் புதிய புதிய பரிமாணங்கள்
உன்னை சந்திக்க வருகின்ற எனக்குள்
என்னைப் பற்றியும்
என் இருப்பிடம் பற்றியும்
ஒரு நிமிடம்கூட நினைத்தறியாத
உன்னைப்பற்றியே நினைத்திருக்கும்
எனக்குள் எப்போதும்
உன் உலகம் சுழன்றபடியே இருக்கும்
கால மாற்றத்தில் நான்
பெரிய ஆல மரமாய் வளர்ந்து
நின்ற போதும்
பால்ய காலத்தில் எனக்குள்
நட்பை விதைத்துச் சென்ற உன்னை
தாலாட்டி மகிழ
விழுதுகளை வளர்த்து காத்திருந்து
தவித்துப் போனது உண்டு
உன் பாராமுகத்தால்
ஏமாற்றங்களை தாங்காமல்
வாடிப் போனது உண்டு
வாழ்க்கை வலையில் சிக்குண்டு
உணர்வுப் பறவைகளை
அனுப்பத் தவறி விட்டாயோ என
உன்மேல் கோபப் பட்டதும் உண்டு.

கால ஓட்டத்தின் வேகத்தில்
நட்பின் தாகத்தைத் தாங்காத நான்
உன்னுடன் நினைவுகளைப் பகிர்ந்திட
ஒரு நாள் சந்தித்து விடுவதென்று
புறப்பட்டு வருகிறேன்
எதிர்ப்பாராமல் வந்து நின்ற
என்னைப் பார்த்து விக்கித்து நின்ற நீ
சுதாரித்துக் கொண்டு கேட்ட கேள்வி
என் எண்ணத்தை ஓங்கி அறைகிறது
அது திரும்பத் திரும்ப ஒலிக்கிறது
“இன்னிக்குத்தான் நியாபகம் வந்ததா ?”

Series Navigationமானும் கொம்பும்அந்த ஒரு விநாடி

Leave a Comment

Archives