தமிழ்நாட்டை விட்டு விலகி பலகாலம் சென்றுவிட்டு மீண்டும் தமிழகத்திற்குள் காலடி எடுத்துவைப்பவர்களுக்கு உடனடியாக முகத்தில் அறைவது அதன் மயான அமைதிதான்! தமிழர்கள் சப்தமானவர்கள். அது பேச்சானாலும் சரி, பாட்டானாலும் சரி, உச்சஸ்தாயிதான் அவர்களின் அடையாளமே. இன்றைக்கு அதெல்லாம் எங்கு போனதென்றே தெரியவில்லை.
விடிந்தும் விடியாத காலைப் பொழுதில், பல் விளக்காமல் பொடிநடையாக நடந்து, ஓலைக்கூரையிட்ட அய்யாவு டீக்கடைக்குப் போனால், அய்யாவு அப்போதுதான் நன்றாக புளி போட்டுப் பள, பளவென விளக்கிய செம்பு பாய்லரில் பட்டை தீட்டி பொட்டு வைத்துக் கொண்டிருப்பார். டேப்ரிகார்டரில் “கற்பனையென்றாலும் கற்சிலையென்றாலும் கந்தனே உனை மறவேன்” ஒலித்துக் கொண்டிருக்கும். இல்லாவிட்டால் “செல்லாத்தா, செல்ல மாரியாத்தா” சிந்தையில் வந்து ஆடிக் கொண்டிருப்பாள்.
ஊருக்குள் எங்கேயாவது அடித்துக் கொண்டிருக்கும் மேளச்சத்தம் நம் காதுகளை வந்தடையும். அல்லது அந்த அதிகாலை வேளையிலும் நாலாபக்கமும் அங்கிங்கெனாதபடி ஏதாவது சினிமாப்பாட்டு போட்டு அலற வைத்துக் கொண்டிருப்பார்கள். அதெல்லாம் இல்லாத தமிழகம் தமிழகம் போலவே இல்லை என்பது என் “கருத்து”. கோவில்களில் ஒப்புக்கு ஒரு சாமி பாட்டு போட்டுவிட்டு தினப்படி போடுகிற “நேத்து ராத்திரி யம்மா”வைக் கூடவா நிறுத்துவார்கள் படுபாவிகள்?
நினைத்தாலேயே கண்களில் கண்ணீர் முட்டுகிறது.
இன்னொருபுறம் தமிழர்கள் கடந்த முப்பதாண்டுகளில் இழந்த கலாச்சார நடவடிக்கைகள் மிக அதிகமானவை. அதிலும் தமிழக கிராமங்களை உயிர்ப்புடன் வைத்திருந்த கலாச்சாரச் செயல்பாடுகள் அவை. அதையெல்லாம் இழந்த தமிழக கிராமங்களும் இன்றைக்கு மயான அமைதியுடன் இருக்கின்றன. கிராமங்களில் ஆட்களே இல்லை என்பது வேறுவிஷயம்.
எனக்கு நினைவிருக்கிற சிலவற்றை இங்கு பட்டியலிடுகிறேன்.
முதலாவது, கோவில் திருவிழாக்களில் நடத்தப்பட்ட, பக்திமயமான தெருக்கூத்துகள். இன்றைய தெருக்கூத்துகள் ஆபாசக் களஞ்சியங்கள். காதில் கேட்கவே ஒவ்வாத, மலினமான பாலியல் வக்கிரப் பேச்சுக்கள்தான் இன்றைக்குப் பெரும்பாலும் தெருக்கூத்துகளாக நடத்தப்படுகின்றன. அவையும் அளவில் குறைந்து வருகின்றன. ஏனென்றால் அதை நடத்த ஆட்கள் இல்லை.
இரண்டாவது, வில்லுப்பாட்டு. புராண, இதிகாசக் கதைகளை கிராமங்களுக்குக் கொண்டு செல்வதில் முக்கிய பங்காற்றியவை.
மூன்றாவது, பொய்க்கால் குதிரை, கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், கோமாளிக் கூத்துக்கள் போன்ற வட்டார வழக்கு சார்ந்த கலாச்சார நடவடிக்கைகள். இவற்றையெல்லாம் சினிமாவு, டெலிவிஷனும், செல்ஃபோனும் அழித்துவிட்டன.
நான்காவது, நாதஸ்வர இசையும், தவிலிசையும். ஏறக்குறைய தமிழகத்தை விட்டு மறைந்தேவிட்டன இவைகள். இதற்கும் மேலாக நையாண்டி மேளம் என்கிற சமாச்சாரம் எங்கள் பகுதியில் உண்டு. மேளத்திலேயே பேசிக் கொள்வார்கள். பம்பை, உடுக்கை போன்ற பாரம்பரிய இசைக்கருவிகளும் அழிந்துவிட்டன.
ஊர்கூடித் தேரிழுப்பது, திருவிழா நடத்துவது போன்ற சமாச்சாரங்களும் குறைந்துவிட்டன. எங்கள் தேனிமாவட்டத்தில் நடக்கும் திருவிழாக்கள் அற்புதமானவை. இன்றைக்கு நினைத்தாலும் மனதில் மகிழ்ச்சியை நிறைக்கும் அம்மாதிரியான கலாச்சார நடவடிக்கைகளும் குறைந்துவிட்டன இன்றைக்கு என்பதில் எனக்கு வருத்தம்தான்.
இதற்கும் மேலாக வாராவாரம் உடலெல்லாம் மஞ்சளைப் பூசிக் கொண்டு, தன்னைச் சாட்டையால் அடித்துக் கொண்டு, உடுக்கை வாசித்துக் குறி சொல்லும் கோடாங்கிகள் இன்றைக்கு இல்லை. எங்கள் ஊருக்கும் வரும் கோடாங்கி ஆறடி உயரத்தில், கடா மீசை வைத்துக் கொண்டு, மஞ்சள் உடம்பில் சாட்டையால் அடித்துப் பொங்கிவரும் ரத்தத்துடன் ஊருக்கு நடுவில் நின்று கோடாங்கி சொல்லும் காட்சி இன்றைக்கும் என் மனதில் நின்று கொண்டிருக்கிறது.
அதற்கும் மேலாக சோழிகளின் மூலம் குறி சொல்லும் பெண்கள், குடுகுடுப்பைக்காரன், பூம் பூம் மாட்டுக்காரன், கழுதையில் அழுக்குப் பொதியைக் கட்டிக் கொண்டு ஆற்றுக்குக் கொண்டுசெல்லும் வண்ணான், நரிக் கொம்பு விற்கிற குறவன், வேட்டைக்குப் போய் முயல்களைப் பிடித்துவருகிற வேட்டைக்காரன், தேசாந்திரிகள், சர்க்கஸ் செய்ய வருகிற மராட்டிக்காரிகள், ஆட்டுக் கிடை போடுகிறவர்கள், சாமியார்கள், பிச்சைக்காரர்கள்….. இன்னபிற கிராமத்திற்கேயுரிய மனிதர்களை இன்று காண இயலவில்லை என எண்ணுகையில் மனது வலிக்கிறது. தமிழக சமூகத்தில் அவர்களுக்கென்று ஒரு இடம் இருந்தது. கிராமம் அவர்களை ஆதரித்து வைத்திருந்தது. இன்றைக்கு நேற்றைக்கல்ல. பல நூற்றாண்டுகளாக. அவையெல்லாம் என் தலைமுறையில் மறைந்து போனது குறித்து எனக்கு வருத்தமே.
இழந்ததை அறியாமல் இந்தத் தலைமுறை ஓடிக் கொண்டிருக்கிறது. அறிந்தாலும் அவர்களால் என்ன செய்துவிட முடியும்?
**
எனக்கு மதுரையைக் குறித்தான அறிமுகம் எதுவுமில்லை. என் வாழ் நாளில் இதுவரை நான்கோ அல்லது ஐந்து முறைகள் மட்டும்தான் மதுரைக்குப் போயிருக்கிறேன். அதுவும் மிகக் குறுகிய காலப் பயணங்களாகத்தான். எனவே எனக்கு மதுரையைக் குறித்துத் தெற்கும் தெரியாது; வடக்கும் தெரியாது.
இந்தமுறை எப்படியாவது மதுரையைச் சுற்றிப்பார்த்துவிடுவது என்கிற எண்ணத்துடன் மதுரையில் சென்று தங்கினேன். அதற்கும் மேலாக என்னுடைய நண்பர் திருமலைராஜனும் அதேசமயம் மதுரையில் இருந்தார். அவரைவிட மதுரையைச் சுற்றிக்காட்ட வேறொரு ஆள் யாரிருக்கிறார்கள் என்ற எண்ணத்துடன் மதுரை போய்ச் சேர்ந்தேன்.
பேருந்தை விட்டு இறங்கிய நிமிடத்திலிருந்து மதுரையை வெறுக்க ஆரம்பித்தேன் என்றால் மிகையில்லை. எங்கே பார்த்தாலும் குண்டும் குழியுமாக சாக்கடை நாற்றத்துடன் நாறும் மதுரை என்மனதைப் புண்படுத்தியது. ஏனென்றால் மதுரை ஒரு சாதாரண நகரில்லை. வரலாறும், புராண இதிகாசங்களும் பின்னிப் பிணைந்ததொரு புராதன நகரம் மதுரை. அதற்கு இணையான நகரங்கள் இன்றைக்கு இந்தியாவில் வெகுசிலவே இருக்கின்றன. எனினும் மதுரை அளவிற்குச் சிறப்புடைய நகரம் எதுவுமே இல்லை என்றே சொல்லலாம்.
தொடர்ச்சியாக, நீண்ட நெடுங்காலம் பாண்டியர்கள் மதுரையைத் தலைநகரமாகக் கொண்டு ஆண்டு வந்ததற்கான பல வரலாற்று, புரான ஆதாரங்கள் இருக்கின்றன. முதற்சங்க காலம் தொடங்கி (பொதுயுகம் 7000?) பதினான்காம் நூற்றாண்டுவரை தொடர்ச்சியாக பாண்டியர்கள் ஆண்டு வந்திருக்கிறார்கள். இந்தியப் புராணங்களும், ஸ்தல புராணங்களும் பாண்டிய மரபினைக் குறித்துப் பேசுகின்றன. காசிக்குப் போன அகஸ்திய முனிவரிடம் வேகவதி (வைகை) ஆற்றங்கரையில் சிவபெருமான் நடத்திய லீலைகளைக் குறித்து விளக்குமாறு அங்கிருந்த ரிஷிகள் கேட்கிறார்கள். அவர்களிடம் சிவ லீலைகளைக் குறித்துக் கூறும் அகஸ்தியர் மதுரை நகரின் சிறப்புகளையும் அவர்களிடம் கூறுகிறார்.
திருவிளையாடல் புராணம் மீனாக்ஷி அம்மன் ஆலயத்தில் இருக்கும் இருக்கும் இந்திர விமானம் நேரடியாக இந்திரனின் மேற்பார்வையில் அமைக்கப்பட்டதாகக் கூறுகிறது. கூடல் அழகரின் பெருமைகளைல் கூறும் கூடல் புராணம், அந்த ஆலயத்தில் அமைந்திருக்கும் அஷ்டாங்க விமானம் விஸ்வகர்மாவினால் அமைக்கப்பட்டது என்கிறது.
அதற்கும் மேலாக இராமாயணத்திலும், மகாபாரதத்திலும் பாண்டிய மன்னர்களைப் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. பாண்டியர்களின் புராதனத் தலைநகரமான கபாடபுரம் இராமாயணத்தில் குறிப்பிடப்படுகிறது. சீதையை இராவணன் கவர்ந்து சென்றபிறகு ராமனுக்கு உதவும் சுக்ரீவன் அவனது சேனைகளிடம் விந்தியமலைக்குத் தெற்கே “கவாடம் பாண்டியான”த்தில் சீதையைத் தேட உத்தரவிடுகிறான். கடற்கரையோரம் அமந்த அந்த நகரில் தங்கத்தால் அமைக்கப்பட்ட பாண்டிய அரண்மனைக் கதவுகளில் முத்துக்கள் பதிக்கப்பட்டிருக்கும் என்கிறது ராமாயணம். இந்தக் கபாடபுரமே பிற்காலத்தில் கொற்கை என அறியப்பட்டதாகவும் பின்னர் கடலில் மூழ்கி அழிந்ததாகவும் வரலாறு.
ராமாயணத்தை எழுதிய வால்மீகி, விந்திய மலைக்குத் தெற்கே ஆந்திர, புண்டர, சோழ, பாண்டிய மற்றும் கேரள நாடுகள் அமைந்திருப்பதாகக் குறிப்பிடுகிறார்.
அதுபோலவே மகாபாரதத்தில் பாண்டியர்களைக் குறித்தான குறிப்புகள் பல இடங்களில் வருகின்றன. திரொளபதியின் சுயம்வரத்தில் ஒரு பாண்டிய மன்னன் கலந்து கொண்டதாகவும், திக்விஜயம் புறப்பட்ட சகாதேவன் தென்னிந்தியாவிற்கு வந்து சேர, சோழ, பாண்டியர்களை வென்றதாகவும் குறிப்புகள் மகாபாரதத்தில் உண்டு. அதுபோலவே மகாபாரதப் போரில் பாண்டிய அரசன் ஒருவன் கலந்து கொண்ட தகவல்களும் இருக்கின்றன.
தென்னிந்தியாவிற்குத் தீர்த்த யாத்திரை செய்யவந்த அர்ஜுனன், மணிப்புரத்து அரசன் சித்திரவாஹனனின் மகளான சித்திராங்கதையை மணந்ததாகக் குறிப்பிடுகிறது மகாபாரதம். அந்த மணிப்புரம் பாண்டியர்களின் இன்னொரு பழமையான தலைநகரான மணலூர் எனத் தெரிகிறது. ஏனென்றால் மகாபாரதம் ஓரிடத்தில் சித்திராங்கதை பாண்டிய இளவரசி எனக் குறிப்பிடுகிறது.
கவுடில்யரின் அர்த்த சாஸ்திரமும் மதுரையைக் குறித்துக் கூறுகிறது. பாண்டிய நாட்டிலிருந்து முத்துக்கள் தனது நாட்டிற்கு வந்ததாகவும், அந்த முத்துக்கள் தாமிரபரணி ஆற்றை ஒட்டிய கடல் பகுதிகளில் விளைவதாகவும், பருத்தியால் தயாரிக்கப்பட்ட ஆடைகள் பலவும் மதுரையிலிருந்து வந்ததாகவும் குறிப்பிடுகிறார் கவுடில்யர்.
இந்திய வரலாற்று, புராணக் குறிப்புகள் மட்டுமல்லாது பிற நாட்டுப் பயணிகளும் பாண்டிய நாட்டைக் குறித்தும் மதுரையைக் குறித்தும் பல குறிப்புகள் எழுதியிருக்கிறார்கள். ரோம நாட்டு பிளினி, இப்ன் பதூதா, மார்க்கோ போலோ போன்றவர்கள் மதுரைக்கு வந்து தங்கியவர்கள். அவர்களின் வரலாற்றுக் குறிப்புகளைக் கொண்டு அன்றைய மதுரையின் சிறப்புகளை அறிந்து கொள்ள இயல்கிறது. அதற்கும் மேலாக பாண்டியர்களும் இலங்கையின் சிங்கள அரசர்களுக்கும் நீண்ட நெடிய உறவு இருந்தது. மஹாவம்சம் போன்ற நூல்கள் பாண்டிய வரலாற்றினைக் குறித்து எழுதியிருக்கின்றன.
அதெற்கெல்லாம் மேலாக சிலப்பதிகாரத்தில் மதுரையின் இடம் மிக முக்கியமானது என்பது நாமனைவரும் அறிந்த ஒன்றுதான். சமணமும், சைவமும் தழைத்த இடமும் மதுரைதான்.
ஆனால் இன்றைக்கு மதுரையின் சிறப்பு மறக்கடிக்கப்பட்டிருக்கிறது. அதனைக் குறித்துக் கவலை கொள்வோர் எவரும் இன்றைக்கு இல்லை. மதுரையைச் சுற்றியிருக்கும் மலைகள் அத்தனையும் வரலாற்றுச் சிறப்பு மிக்கவை. ஆனால் அவைகளை இன்றைக்கு அழித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனைத் தட்டிக் கேட்க எந்த நாதியும் இல்லை. வரலாற்றை விட வருமானம் முக்கியம் என்கிற சுயநலவாதிகளின் கைகளில் அகப்பட்டுச் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது தமிழகம். அதில் மதுரையும் பிற இடங்களும் அடக்கம்.
திட்டமிட்டு தமிழக வரலாறு அழிக்கப்படுகிறது. வரலாறே ஒரு சமுதாயத்தின் அடையாளம். அதுவே கலாச்சாரத்தின் ஊற்றுக் கண்ணும் கூட. அதனை இழந்த சமுதாயம் அழிவிலிருந்து மீள்வதற்கான வாய்ப்புகள் இல்லை. தாங்கள் எதை இழக்கிறோம் என்கிற அடிப்படை உணர்வே இல்லாதவர்களிடம் எதைச் சொல்லிப் புரியவைப்பது? அதுவே இறைவனின் சித்தமெனில் அப்படியே ஆகட்டும்.
***
நண்பர் திருமலை ராஜனின் புண்ணியத்தில் அழகர் கோவில், பின்னர் மதுரைக்குள்ளேயே இருக்கும் இன்னொரு கோவில் (பெயரை மறந்துவிட்டேன். அழகான கோபுரம் உடையது) என ஒன்றிரண்டு இடங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. ஊருக்கு வெளியே இருந்த அழகர் கோவில், சரவணப் பொய்கை(?) போன்ற இடங்கள் பரவாயில்லை. அதற்கு மேல் மதுரை என்னை ஈர்க்கவில்லை. ஒருநாள் தனியாளாக மீனாட்சியம்மன் கோவிலுக்குப் போயிருந்தேன். அவ்வளவே.
நாயக்கர்களுக்கு அடுத்தபடியாக சவுராஷ்ட்டிர இனத்து மக்கள் நிறைய கைங்கர்யங்களை மதுரையில் செய்திருக்கிறார்கள். ஓபுளா மண்டபமும், ஓபுளா படித்துறையும் எனக்கு ஆச்சரியமளித்தவை. ஏனென்றால் அவற்றை அமைத்தவர்கள் என்னுடைய நண்பர் விஷ்வேஷ் ஓப்லாவின் முன்னோர்கள் என எண்ணுகிறேன். மிகப் பெரும் தனவந்தர்களாக ஓப்லாக்கள் இருந்திருக்கவேண்டும். ஆனால் விஷ்வேஷ் என்னிடம் அதனைக் காட்டிக் கொண்டதில்லை. அவரிடம் மேலதித் தகவல்களைக் கேட்க வேண்டும்.
அவ்வளவுதான் எனது மதுரை புராணம். இதற்குமேல் சொன்னால் மதுரைக்காரர்கள் கோபித்துக் கொள்வார்கள்.
**
வெளிநாடுகளில் நீண்டகாலம் தங்கிவிட்டு இந்தியாவிற்கு வருகிற என்.ஆர்.ஐகளுக்கு ஏற்படுகிற கலாச்சார அதிர்ச்சி புரிந்து கொள்ளக்கூடியதுதான். அதேசமயம் காலம் எல்லாவற்றையும் மாற்றிவிடும் என்பதினைப் பெரும்பாலான வெளிநாட்டுவாசிகள் மறந்துவிடுகிறார்கள். அதனால் ஏற்படுகிற திகைப்பு, ஏமாற்றம் போன்றவற்றை அவர்களால் மட்டுமே புரிந்து கொள்ளமுடியும். அந்தச் சூழ்நிலையிலே வளர்ந்து கொண்டிருப்பவர்களுக்கு அந்த மாற்றங்கள் எந்த பிரதிபலிப்பையும் கொண்டுவருவதில்லை. அதனை இயல்பாக எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் என்.ஆர்.ஐ.களினால் அதனை அத்தனை எளிதாகக் கடக்க இயல்வதில்லை.
தி.ஜானகிராமனின் புகழ்பெற்ற கதை ஒன்று இருக்கிறது.
ஒரு ஊரில் மிகப் பேரழகியான தாசி ஒருத்தி இருப்பாள். பெரிய, பெரிய பணக்காரர்கள், பண்ணையார்கள், மிட்டாமிராசுகள் மட்டுமே அவளை அணுக முடியும் என்கிற நிலை. வேறு யாரும் அவளை நினைத்துக் கூடப் பார்க்கமுடியாது.
அதே ஊரில் கையில் காசில்லாதவன் ஒருத்தனும் இருப்பான். அவனுக்கு ஒருநாளைக்காவது அந்தத் தாசியிடம் போக வேண்டும் என்று ஆசை. ஆனால் அவன் நிலையோ ஒருவேளைச் சோற்றுக்கே தாளம் போடுகிற அளவு ஏழமையானது. எனவே வெளிநாட்டுக்குப் போய் நிறையப் பணம் சம்பாதித்துக் கொண்டு வந்து அந்தத் தாசியை எப்படியாவது அடைய வேண்டும் என்கிற வெறியுடன் வெளிநாட்டுக்குப் போகிறான்.
வெளிநாட்டில் இருபது வருட காலம் கடினமாக வேலைசெய்து நிறையப்பணம் சம்பாதித்துக் கொண்டு யாருக்கும் தெரியாமல் இரவு நேரத்தில் ஊருக்கு வருபவன் நேராக அந்தத் தாசி விட்டுக்குப் போய்க் கதவைத் தட்டுகிறான். உள்ளிருந்து “யாரது?” என்கிற கேள்வியுடன் கதவைத் திறந்து, மங்கலான வெளிச்சத்தில் தன் முன் நிற்கிற அந்த வயது முதிர்ந்த பெண்னை அடையாளம் காண அவனுக்குச் சில நொடிகள் பிடிக்கிறது.
அவளைப் பார்த்து அதிர்ந்து போகிறான் அவன். யாரை அடையவேண்டும் என்கிற வெறியுடன் இத்தனை காலம் உழைத்தானோ அதே பெண்தான் அவன் முன் நின்று கொண்டிருக்கிறாள். ஆனால் காலம் அவளது அழகையும், இளமையையும் இருந்த இடம் தெரியாமல் ஆக்கிவிட்டிருக்கிறது. பதில் சொல்லாமல் அங்கிருந்து அகன்று மீண்டும் ஊரைவிட்டுப் போகிறான் அவன் என்பது மாதிரியான கதை.
என்.ஆர்.ஐக்களின் மனோபாவமும் ஏறக்குறைய அது போன்றதுதான். தாசிக்கு வயதாவது இயற்கையில் நிகழ்கிற ஒன்று. அதனை மனிதர்களால் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால் தான் வசித்த, வளர்ந்த ஊரும், சுற்றுப்புறமும் மாறிப் போயிருப்பதனை அவர்களால் அத்தனை எளிதில் ஏற்றுக் கொள்ள இயல்வதில்லை. அந்த மாற்றங்கள் சிறப்ப்பானவையாக, தனது ஊரின் அழகினை கூட்டுபவையாக இருந்தால் நிச்சயமாக அவன் அதனைக் குறித்து பெருமை கொள்ளவே செய்வான். ஆனால் உண்மையில் அப்படியா இருக்கிறது?
தான் சென்று விளையாடிய தோப்புகளும், வயற்காடுகளும், ஆறு, குளங்களும், கோவில்களும் இருந்த இடம் தெரியாமல் அழிந்தது மட்டுமல்லாமல், சாக்கடையும், துர் நாற்றமுமாக இருப்பதைக் காண்கையில் அவன் அதிர்ந்து போகிறான். ஏறக்குறைய எதிர்பாராமல் கிழட்டு தாசியைச் சந்தித்த அதே அதிர்ச்சிதான் அவனுக்கும்.
நிலைமையைப் புரிந்து கொள்ளும் பலரும் அதனை எளிதாகக் கடந்து சென்றுவிடுகிறார்கள். என்னைப் போன்ற நோஸ்டால்ஜிக் ஆசாமிகள்தான் புலம்பித் தள்ளிக் கொண்டிருப்பார்கள். அதனைப் பிடிக்காதவர்கள் படிக்காதீர்கள் என்பதே என் வேண்டுகோள்.
- ஆலயம் காப்போம்.
- தங்கத்திருவோடு
- என்.ஆர்.ஐகளுக்கு ஏற்படுகிற கலாச்சார அதிர்ச்சி
- நாசா ஏவப்போகும் 2020 செவ்வாய்த் தளவூர்தி பூர்வ உயிமூலவி வசிப்பு தேடி, மனிதர் இயக்கும் பயணத்துக்கு குறிவைக்கும்
- இக்கரைக்கு அக்கரை பச்சை
- ஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா
- ரத்ததானம்
- தர்பார் (வித் ஸ்பாய்லர்ஸ்)
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 214 ஆம் இதழ் வெளியீடு பற்றி
- விளக்கு நிகழ்ச்சி ஏற்புரை
- விஷக்கோப்பைகளின் வரிசை !