பஞ்சு மிட்டாய் பூக்கும் மரம்

This entry is part 1 of 6 in the series 19 ஜனவரி 2020

  • மு. கோபி சரபோஜி

வேக வாழ்க்கையில் எதையும் கணிக்கத் தவறுவதைப் போல கவனிக்கவும் தவறி விட்டோம். பிரபஞ்சத்தைச் சுற்றிலும்  நிகழும் அத்தனை நிகழ்வுகளும் ஏதோ ஒரு அதிசயத்தை, ஆச்சர்யத்தை, ஆர்ப்பரிப்பை, அற்புதத்தை, வாஞ்சையை தன்னுள் புதைத்தே வைத்திருக்கிறது. போகிற போக்கிலோ, மேம்போக்காகவோ வாழ்க்கையை நகர்த்திப் போகிறவர்களால் அவைகளை இரசிக்கவும், அனுபவிக்கவும் முடியாது. கொஞ்சம் மெனக்கெட்டால், ஒரு குழந்தையின் உற்று நோக்கலோடு அணுகினால் சாத்தியம் என்பதற்கான சான்றாய் சந்தியா பதிப்பக வெளியீட்டில் “பஞ்சு மிட்டாய் பூக்கும் மரம்” பூத்திருக்கின்றது.

சுருங்கிய சொல், விரிந்த பொருள் என்ற கட்டுமானத்தில் எந்த சமரசமும் செய்யாததாலயே குறள் இன்று வரையிலும் பல குரல்களில் களமாடிக் கொண்டிருக்கிறது. வள்ளுவனின் குறளடியை விரித்து, சீரைச் சுருக்கி படைப்பின் கட்டுமானத்தில் நின்று நெய்யப் பட்டிருக்கும் இந்தக் கவிதைத் தொகுப்பும் அந்த மறைநூலைப் போல நம் மனதிலும், சிந்தனையிலும் நின்று களமாடுகிறது.

பக்கத்திற்கு மூன்று கவிதைகள் என்பது எண்ணிக்கையாக அல்லாமல் நமக்குள் ஒரு திறப்பைத் தரக்கூடிய சாவிகளாக அமைகின்றன. சமூகம் சார்ந்தும், வாழ்வியல் சார்ந்தும், வாழ்க்கை சார்ந்தும்  பொட்டில் அடித்தாற்போல சொல்லும் மூன்றடிகள் ஒரு பெரும் கிளர்ச்சியை, மாற்றத்தை மென்மையாக நமக்குள் கிளர்த்தியபடியே இருக்கின்றன.

கண்மாய் வற்றினாலும் / பெயர் மாறவில்லை / வண்ணாந்துறை / என்ற மூன்றடிகளை வாசித்து நிறைவு செய்கையில் சமூகத்தில் வர்ணாஸ்ரமத்தின் கோடுகள் இன்னும் உறங்கிக் கொண்டிருக்கின்றன  என்ற அமிலக் காற்று நம் முகத்தில் அறைகிறது. காலச் சக்கரத்தின் சரடு பிடித்துக் கொண்டு இதை ”இல்லை” என வாதிடலாம்.  வெறும் வாதங்கள் வாழ்வியலாகி விடாது. அவசியமற்றுப் போனாலும் இன்னும் நாம்  ”வண்ணாந்துறை”, ”தட்டார் தெரு”, ”அம்பட்டையன் கடை” என அடையாளங்களை மாற்றிக் கொண்டிராத மனநிலையில் தானே இருக்கிறோம்.

அப்பா ஏரோட்டிய பின் / வரப்பில் செருகிய  கம்பு / நாளடைவில் மரமாகிப்போனது / இது எதார்த்தம்.  இந்த எதார்த்தத்தின் வழியாக மரமாய் இருந்த அவர் தான் / கம்பு போலாகி விட்டார் / என்ற வரி விவசாயிகளின் வாழ்வியலைப் பேசுகிறது.

ஒரு படைப்பு தன்னளவில் நின்று வாசிக்கின்றவனின் அக, புறவயங்களில் ஏற்படுத்தும் தாக்கங்களோடு காணும் காட்சியின் மீதான மாற்று பார்வையை வாசிப்பின் வழியாக முன் வைக்கும் போது மனதுக்கு நெருக்கமானதாகி விடுகிறது. நெருக்கத்தில் வந்தனைகின்ற எந்த ஒரு படைப்பும் அசைத்துப் பார்க்கவே செய்யும் என்பது நிதர்சனம். இந்த நிதர்சனத்தை இத்தொகுப்பின் பல்வேறு பக்கங்களிலும் கண்டுணர முடிகிறது..

இறைவனின் உண்டியல் துவார விளிம்பில் தெரியும் சில மழைத்துளிகளின் காட்சியை உண்டியல் துவார விளிம்பில் / சில மழைத்துளிகள் / இயற்கையின் காணிக்கை / என்ற அடிகள் சிலாகிக்க வைக்கிறது. இந்த வரிகள் திரும்ப வராத ஒன்றை காணிக்கையாக்கப் பழகு என மனிதனுக்கு இயற்கை போதிக்கும் பாடத்தையும் அறியத் தருகிறது. அறிகிறோமா? என்பது ஐயப்பட வேண்டிய ஒன்றாகவே இருக்கிறது. இன்னொரு கோயில் காட்சி, ”தொட்டில்கள் கட்டப்பட்ட / கோயில் மரத்தில் / படுத்துறங்குகிறது நம்பிக்கை / என்று விரிகிறது. தாய்மை அடைதல்  மீதான நம்பிக்கை நசிவுரும் போதெல்லாம் அதற்கு உயிர் கொடுத்துச் சிதையாமல் காப்பவைகளாக ஆலய மரங்களில் கட்டப்படும் தொட்டில்கள் இருக்கின்றன.  “கோயில் மரத்தில் / படுத்துறங்குகிறது” என்ற வார்த்தை ஆதிகாலம் தொட்டு நிலைத்து நிற்கும் அந்த நம்பிக்கைக்குப் போதுமானதாகிறது.

அந்தஸ்து, சமூகம், சாதி திமிர், அகங்காரம் அத்தனையும் மனிதன் உயிருடன் இருக்கும் வரை கொக்கரித்த படியே இருக்கும். அந்த மூச்சோட்டம் நின்று போனால் யாரையெல்லாம் விலக்கி வைத்தானோ அவர்களின் கைங்கர்யத்தாலயே அவனுக்கான இவ்வுலக வாழ்வு நிவர்த்தியடைகிறது. இந்த இயலியல் உணராமல் வாழ்ந்தவனின் இவ்வுலகப் பயணம் ஆண்ட பரம்பரையின் பிணத்தில் / ஆதி திராவிடனின் கைரேகைகள் / என்பதாய் அமைகிறது. இரண்டாமடியில் நிற்கும் “அடுக்கி இருந்த சாண வரட்டிகளில்” என்ற வரி இல்லாமலே மற்ற இரண்டு வரிகளும்  சொல்ல வந்ததைச் சொல்லி விடுகிறது,

ஒருவரின் துயரங்கள், சங்கடங்கள், கஷ்டங்களை  கொண்டாட்டங்களாக்கப் பழகிவிட்டோம். அல்லது பழக்கப்படுத்தப் பட்டு விட்டோம். அதன் பொருட்டு மற்றவரின் துயரங்களை விடவும் நமக்கான சந்தோசங்களே முதலிடத்தில் வந்தமர்ந்து விடுகிறது. உற்றுக் கேளுங்கள் / மழையென்று  கொண்டாடப்படுவது / துளிகள் உடையும் சப்தம் / என்ற வரிகளில் “மழையின் துயரமும்”, மூச்சுக் காற்றடைத்த பலூனில் தான் / அழுகையை நிறுத்தியது உங்கள் குழந்தை / என்ற வரிகளில் ”நிரப்பப்பட்ட மூச்சுக்காற்றும்” நம் பழக்கம் சார்ந்து வாழ்வியலில் மேற்கொள்ளும் செயல்களுக்கான எதிர் கேள்வியை எழுப்பிக் கொள்ளும் மனநிலையைத் தந்து போகிறது.

உயர்திணை, அஃறிணை என்ற பாகுபாடின்றி காணும் அத்தனையும் தொகுப்பு முழுக்க அழகியல் சார்ந்த கவிதைகளாகப் பூத்திருக்கின்றன. அதன் வழி நம்மையும் அந்த அழகியல் பார்வைக்குள் கொண்டு வந்து நிறுத்தி விடுகின்றன. வீட்டில், பள்ளியில் பென்சில் சீவும் குழந்தைகளிடம் சீவிச்சீவி குப்பையாக்காதே என கடிந்து கொள்வோம். கடிதலுக்காக நாம் தேடும்  காரணமானது, இழைகள் சூழ / விரியும் மலர் / பென்சில் சீவும் சிறுமி /  எனக் காட்சியாய் விரிகிறது. காரணங்களைத் துறங்கள்; காட்சிகள் மாறும். அது கவிதையாகக் கூட பிறப்பெடுக்கலாம். இந்தச் சாத்தியத்திற்கு ”தன் நெடு வாழ்வினைத் / தோசைக் கல்லில் எழுதிப் பார்க்கிறாள் அம்மா/ பூஜ்ஜியமாகக் கிடைக்கிறது விடை” என்ற வரிகள் சான்றாகிறது.

வாழச் சொல்கிறது வாழ்க்கை. அதை எப்படி வாழ வேண்டும்? என்பதில் பலருக்கும் தெளிவில்லை. வாழ்க்கையை சிடுக்குகளாலும், சிக்கல்களாலும் இழைத்துக் கொள்கின்றோம். கடந்த காலத்தில்  கால் அலம்பிக் கொண்டு கண்னுக்கு முன் தெரிகின்ற எதிர்கால வானவில்லை கொண்டாடவும், இரசிக்கவும் தவறி விடுகிறோம். ஒரு பெரிய தன்னம்பிக்கைக் கட்டுரையோ, தொகுப்போ தரக்கூடிய உத்வேகத்தை ஜென் தத்துவம் போல முதுகிற்குப் பின்னால் / எதுவுமே அழகில்லை / கரை நின்று கடல் பாருங்கள் /  என மூன்றடி சொல்லிவிடுகிறது. கடந்தகாலத்தை பயனற்று கழற்றி விடப்பட்ட / மிதிவண்டியின் சக்கரம் /  என சாடுகிறது இன்னொரு கவிதை. அதனால் முதுகாய் நகர்ந்து போய் விட்ட கடந்தகாலத்தில் இருந்து கரை ஏறுங்கள். கடலின் அற்புதம் தானாகப் புலப்படும்.

கூரான வேல் கொண்டு கொடிய விலங்குகளிடமிருந்து மீட்டெடுப்பதைப் போல சின்ன, கூரிய வார்த்தை ஆயுதம் கொண்டு வார்த்தெடுத்த வரிகளால் சமூகத்தின் மீதும், சக மனிதர்கள் மீதும் அன்பை, காதலை, அழகியலை, கசப்பை, மென் அதிர்வுகளாய் இத்தொகுப்பின் கவிதைகள் ஏற்படுத்துகின்றன. இந்த அதிர்வை தொகுப்பின் எந்த ஒரு பக்கத்தில் இருந்தும் தரிசிக்க முடியும். அப்படி, தரிசித்தவர்களால் மட்டுமே ஒரு யானையை பலம் பொருந்திய, உடல் பெருத்த ஒரு உயிரினமாக இல்லாமல் அதன் எடையளவு பசியைச் சுமந்து திரியும் உயிரினமாகப் பார்க்க முடியும்.

—————————————————————————————————————————————-

கட்டுரையாளர் தொடர்புக்கு – nml.saraboji@gmail.com

Series Navigationஅளித்தனம் அபயம்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *