புத்தகங்கள் குறித்த அறிமுகக் குறிப்புகள்

This entry is part 2 of 11 in the series 26 ஜனவரி 2020

இன்று புத்தக அலமாரியை மாற்றி அடுக்கும்போது இவ்விரு புத்தகங்களும் கண்ணில் பட்டன. முன்பொரு காலத்தில் எதோ ஒரு வெகுஜன இதழை மேய்ந்து கொண்டிருந்தபோது இதில் ஒரு புத்தகம் குறித்த சின்னஞ்சிறிய குறிப்பு ஒன்று அதில் இருந்தது. ஆறு வரிதான் இருக்கும். கூடவே பதிப்பகம் பெயர். உடனே அந்த கோடைக்கால பின்மதிய வேளையில் பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டேன். பதிப்பகம் என்றவுடன் கற்பனையில் பிரம்மாண்டமாக நினைத்துக் கொண்டு சுலபமாக கண்டுபிடித்துவிடலாம் என்று போனேன், ஆனால் லாயிட்ஸ் ரோடு ஆரம்பத்திலிருந்து ஆறு ஏழு பேரிடம் விசாரித்த பிறகுதான் அந்த விலாசத்தை ஒரு வழியாக கண்டு பிடிக்க முடிந்தது. குறுகலான தெருவில் நெரிசலாக இருந்த ஒண்டு குடித்தன வீடுகளில் ஒன்றில் இருந்த அந்த விலாசத்தின் வாசலில் இரண்டு அக்காக்கள் உட்கார்ந்து கதை பேசிக்கொண்டு இருந்தார்கள்.

“இன்னாபா வோணும்…”

“இந்த அட்ரஸ்ல கருப்பு பிரதிகள்னு ஒரு பதிப்பகம்… “

“அப்டின்னா… “

“புக்லாம் அச்சடிப்பாங்கோ…”

“ஓ! அதா.. தோ லெப்ட்ல படி போவுது பாரு.. அதுல போய் பாரு.. “

அது போன்ற மிகக்குறுகலான மாடிப்படிகளை நான் அதற்கு முன் கண்டதில்லை. ஒரு பீரோவை மேல கொண்டு போறதுன்னா எப்படி கொண்டு போவாங்க என்று யோசனை செய்தவாறே மேலே சென்றால் மாடியில் இருந்த அந்த ஒண்டுக்குடித்தன அறை முழுதும் புத்தகங்கள். பக்கெட்டில் துணி ஊற வைத்துக்கொண்டிருந்தவர் என்னைக் கண்டதும் கையை துடைத்துவிட்டு வந்தார். நீலகண்டன் என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டார். அவரிடம் சிறுது நேரம் என்னவோ பேசிக்கொண்டிருந்துவிட்டு புத்தகம் வாங்கிக்கொண்டு திரும்பினேன்.

அதற்குப்பிறகு சென்னையில் எங்கெங்கோ சொன்று புத்தகம் வாங்கியிருக்கிறேன். ஒரு முறை பதிப்பகம் என்று இருந்த விலாசத்துக்குப் போனால் அங்கு புத்தகம் பைண்டு செய்து கொண்டு இருந்தார்கள். விற்பனை செய்யும் இடம் வேறு என்றவரிடம் மல்லுகட்டி அவர் யாரிடமோ போனில் பேசி அனுமதி பெற்று சுடச்சுட புத்தகம் வாங்கி வந்திருக்கிறேன். திநகர் பஸ்ஸ்டாண்டு பக்கத்தில் இருந்த சிறிய அறையில் எனிஇந்தியன் பதிப்பகத்தில் முதல் முறையாக ஹரன் பிரசன்னாவை பார்த்தேன். நான் கேட்ட தியோடர் பாஸ்கரனின் ‘எம் தமிழர் செய்த படம்’ கைவசம் இல்லை, ஏற்பாடு செய்கிறேன் என்றவர் சொன்னபடியே அன்றைய சாயங்காலம் உட்லண்ட்ஸ் ட்ரைவ்-இன் பதிவர் சந்திப்பில் கொண்டு வந்து கொடுத்தார். அப்போது வாங்கிய எல்லா புத்தகங்களுக்குமே அறிமுகம் வெகுஜன இதழ்களில் வந்த குறிப்புகள்தான்.

+++

இன்று புத்தக வெளியீட்டு விழாக்கள் பல தினுசுகளில் நடக்கின்றன. இளைப்பாறுதல், மைல்ஸ்டோன் அடைந்ததற்கு திருப்தியடைதல், ரிசார்ட் எடுத்து நண்பர்களோடு குடித்துக் கும்மாளமிட்டு கொண்டாடுதல், பிரம்மாண்ட அரங்கில் மாஸ் காட்டி அரசியல் தொடர்புகளை வளப்படுத்திக் கொள்ளுதல் என்று பல காரணங்களுக்காக அவை நடக்கின்றன என்று தூரத்து நண்பர் சொன்னார். விழா எப்படியென்றாலும் அங்கு புத்தகமும் விற்பனைக்கு வைக்கப்படுகிறது என்பதால் புத்தக விற்பனையும் ஒரு முக்கிய நோக்கம்தான் என்று தெரிகிறது.

ஆனால் விழாக்கள் மூலம் அடையும் பேஸ்புக் ட்விட்டர் நண்பர்கள் கொண்ட வாசகர் வட்டத்தைத் தாண்டிய மிகப்பெரிய ஒரு சந்தை சரியான புத்தக அறிமுகம் இல்லாமல் வெளியே இருக்கிறது. அவர்களுக்குத் தேவை லட்சக்கணக்கில் கொட்டிக்கிடக்கும் புத்தகங்களில் இருந்து அவர்களுக்கு தேவையான புத்தகம் குறித்த ஒரு சிறிய அறிமுகம்.

அமெரிக்காவில் வருடா வருடம் பில் கேட்ஸ், ஒபாமா எல்லாம் பரிந்துரைக்கும் புத்தகப் பட்டியல் வெளியாகும்போது புத்தகங்களின் விற்பனை செமையாக எகிறும். நம்மூரில் செலிப்ரிட்டீஸ் பட்டியல் போடுகிறார்களோ இல்லையோ விகடன், குமுதம், தினமலர், துக்ளக், முரசொலியில் எல்லாம் புத்தகங்கள் குறித்த அறிமுகக் குறிப்புகள் தொடர்ச்சியாக வந்தால் போதும், முகம் தெரியாத பல பேர் சென்னையின் மதிய வெய்யிலிலும் பைக் எடுத்துக்கொண்டு போய் புத்தகம் வாங்க தயாராகவே இருக்கிறார்கள்.

Series Navigationபாகிஸ்தானில் விலைவாசிகள்ளா, வா, புலியைக்குத்து
author

முகமூடி

Similar Posts

Comments

  1. Avatar
    பொன்.முத்துக்குமார் says:

    மதிய வெயிலிலும் பைக்கை எடுத்துக்கொண்டுபோய் புத்தகம் வாங்கி வாசிக்கத்தயாராகவே இருக்கும் வாசகர்கள், சிபாரிசு வேண்டும் என்று விகடன், குமுதம், தினமலர், துக்ளக், முரசொலி என்றெல்லாம் வாய்பார்த்துக்கொண்டிருக்கத்தேவையில்லை.

    இன்று சமூக ஊடகங்களில் இல்லாதவர்கள் அனேகமாக இன்னும் பிறக்காதவர்களாகத்தான் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். எனவே முகநூலில் கொஞ்சநேரம் உலா வந்தாலே போதும். ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற எழுத்தாளர்கள் தொடர்ச்சியாக தமது தளங்களில் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களது தளங்களை பார்வையிட்டால்கூட நிச்சயம் ஒரு பிடி கிடைக்கும்.

    சென்னையில் இருப்பவர்கள் புத்தகச்சந்தைக்கு ஒரே ஒருநாள் சென்றிருந்தால்கூட போதும். அவர்களது ரசனைக்குத்தக சிபாரிசு கிடைக்கவும் தேடி வாங்கவும் ஏதுவாக இருந்திருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *