கணக்கும் வழக்கும் முன்னுரை

author
0 minutes, 2 seconds Read
This entry is part 5 of 20 in the series 2 பெப்ருவரி 2020

டாக்டர். எல்.கைலாசம்

எனது உயிரினும் உயிரான வாசக தெய்வங்களேஎனது வாழ்க்கை சரிதம் கணக்கும் வழக்கும் – தொகுதி-1 அமேசான்.காம் இருக்கிறது. கிண்டில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இந்த புத்தகம் இலவசமாக கிடைக்கும். இ -புத்தகம் விலை ரூபாய் ஐம்பது (50) மட்டும். வாங்கிப் படித்து ஆதரவழியுங்கள்.  உங்கள்அன்பானடாக்டர் எல். கைலாசம்

கணக்கும் வழக்கும்

 முன்னுரை

வாசக எஜமானரே சொல்லுங்கள்

நான் வாழ்க்கை எனும் படகில் ஐம்பத்து ஒன்பது ஆண்டுகள் முடிந்து அறுபதை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் (2019), பழைய சிந்தனைகளில் எனது மனம் திரும்பிப் பயணித்ததை என்னால் தடுக்க முடியவில்லை. அன்பரே, காலம் தான் எத்தனை விரைவாக ஓடுகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்த என்னை திசை மாறாமல் அமைதியான சீரான வாழ்க்கை அமைய துடுப்பாக உதவியவர்கள் பலர். வாழ்க்கை படகில் என்னையும் ஏற்றிக் கொண்ட என் பெற்றோர் என்னை பாதுகாக்க பட்டபாடு கொஞ்சம் நஞ்சமில்லை. அவர்களுடன் நானும் மதுரை-பொன்னகரம், திருச்சி-கிராப்பட்டி, பிறகு சிறிது காலம் சிறிய தந்தையின் பாதுகாப்பில் கோயமுத்துர்-ஊத்துக்குளி என்று வைகை, பொன்னி, நொய்யல் என்று அழகிய ஆறுகளையும், அதனை ஒட்டி இருக்கும் வயல் வெளிகளையும், பெரும் விருட்சங்களையும் அதிலிருக்கும் பல கோடி உயிரினங்களையும் பார்த்து பார்த்து பரவசப்பட்ட என்னை தந்தையின் அரவணைப்பு, வாழ்க்கை ரதத்தை சென்னையை நோக்கி செலுத்தியது.

சென்னையில் வேகத்தில் எனது வாழ்வின் முறைகளும் மாற, கிறித்துவகல்லூரியில் கிடைத்த அனுபவ பாடங்களும் இலக்கியப் பாடல்களும், கணிதமும் என்னை முற்றிலுமாக மாற்றியது. எனக்குள் படிப்பெனும் வெறியை ஊட்டிய தோழர்கள், பின் நான் எடுத்த விசுருபத்தைக் கண்டு அதிசயித்துப் போனார்கள். மாபெரும் எழுத்தாளர் பி.எம்.கண்ணன் அவர்கள் எனது வாழ்க்கைப் படகின் வேகத்தை குறைத்து, நிதானமாக்கி ஆசையினால் வரும் தீமையை மறக்கமுடியா வேதத்தைக் கற்றுக் கொடுத்து நான் ஏமாளியாதிருக்கப் பாதுகாப்பு கவசம் கொடுத்தார்கள்.

வாலிபத்தின் துடிப்பிலிருந்த எனது எல்லையில்லாத ஆசைகளுக்கு் வடிகாலாக அமைந்த சென்னை மாநில கணக்காயர் அலுவலகம், என்னை ஓரளவுக்கு மனிதனாக மாற்றியது. வாழ்க்கை ரதம் அங்கு எனக்கு புதுப்புது சொர்க்கங்களை காட்டியது. எனது ஏக்கங்கள் பலவும் அங்குதான் நிறைவேறின.

கால ஓட்டத்தில் எனது தாயும் தந்தையும் வாழ்க்கை இரதத்தில் இருந்து இறங்கிப் போக, புதியதாக கட்டிலுக்கு வந்த துணைவியும், மகன்களும், தோழியும் எனக்கு அள்ளி அள்ளி கொடுத்த ஆனந்தத்தை என்ன வென்று சொல்வது? வாழ்க்கை படகில் அவர்கள் செல்ல என்னை கரையோரமாக சில பல இடங்களுக்கு செல்ல தூண்டி அதன் மூலம் கொடுத்த அனுபவத்தையும் கற்றுக்கொண்ட பாடங்களையும் என்னவென்று சொல்வது? அவை எங்களது வாழ்க்கைப் படகை பொறுமையாகவும், நிதானமாகவும் செலுத்த உதவியது.

வாழ்க்கை படகில் மகிழ்வாக சென்று கொண்டிருந்த போது வெகுதூரத்தில் தெரிந்த ஆராய்ச்சிப் பொன்மானைக் கண்டு நான் ஆசைப்பட, துணைவியும் அனுமதிக்க, நான் ஓடத்திலிருந்து இறங்கி பொன்மானைக் கண்டு ஓட, அது என்னைக் கண்டு ஓட, விடுவேனா நான்? அதைப் பிடித்துக் கொண்டு வந்து இறங்கும் பொழுது மகன்கள் பெரிதாக வளர்ந்திருந்தார்கள். பெரியவனுக்கு அண்ணா பல்கலைக் கழகத்தில் படிக்க வாய்ப்பு கிடைக்க, எங்கள் வாழ்வு பூத்துக்குலுங்கும் என்று எண்ணிணேன். அது நடக்கவும் செய்தது. அலுவலகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக பொறுப்பும் அதிகரித்தது. வாழ்க்கை இரதம் எந்த ஆட்டமும் இல்லாமல் செல்ல துணைவியாரும் உதவ அதில் நான் வெற்றியும் பெற்றேன்.

எனது எழுத்தார்வம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்தது. மலர்ச்சோலையில் நான் பார்த்த மங்கைத் தாயை உலகுக்கு அறிமுகப்படுத்தினேன். நான் பார்த்து அதிசயப்பட்ட கயலை, அகிலமும் பார்க்க காட்டினேன். “ராஜாங்கமே வேண்டாம்; வேங்கடத்தான் காலடி போதும்” என்று மணிமகுடத்தை இறக்கி வைத்த மன்னார்கோவில் ராஜனை உலகுக்கு நான் மீண்டும் சொன்னேன். துணிச்சலான விலாசினிப் பெண்ணை ஈரேழு உலகத்துக்கும் அறிமுகப்படுத்தினேன். ராஜாளியை பறக்கவிட்டேன். தணிக்கை துறையில் ஆராய்ச்சி கட்டுரைகளை, புதிய புதிய வர்ணங்களை உலகுக்கு காட்டினேன்.

நான் ஆசைப்பட்டது போல, பெரிய மகனும் பொன்மான் ஆராய்ச்சியைக் கண்டு ஆசைப்பட அதற்கும் நான் உதவினேன். இதற்கிடையில் சிறிய மகனும் தனி ராஜாங்கம் வேண்டும் என்று காலூருக்கு செல்ல வாழ்க்கை இரதம் அதிகப் பொறுப்புடன் மலையாள மண்ணுக்கு சுழன்று செல்ல, அங்கும் நான் ஒரு புதுவசந்தத்தை நான் பார்த்தேன். உயரமான மலைகளும், ஆழமான கடலும் இடையில் சிறிய அளவில் நிலமும் உள்ள பூமியில் வாழ்க்கை இரதத்தில் செல்லும் பொழுது கிடைத்த நண்பர்கள் பலர். வாழ்வின் வழி முறைகளை தெரிந்து உணர்ந்து வாழும் மீனவநண்பர் ஒருவர் எனக்கு கிடைக்க, அவரின் சமுதாயத்தைப் பற்றி சிப்பிகுளம் வரை சென்று முத்தெடுத்து, நீரோடி மீன்காரியின் பின்சென்று அவள் வாழ்வை அறிந்து எழுதிய முத்துச்சிப்பி படிக்கும் அனைவருக்கும் வாழ்வு இதுதானா என்று சொல்லத்தான் செய்யும்.

மலையாள மண்ணிலிருந்து வாழ்க்கை இரதம் மீண்டும் சென்னை வர, எண்ணைக் கடை வாழ்வு சற்று சுருங்கினால் போல்தான் இருந்தது. ஆனால் நாச்சியாரும், அதைத் தொடர்ந்து விக்கிரம சோழரின் ராஜாளியும்,வாழ்வில் பிடிப்பையும் உத்வேகத்தையும் கொடுத்தார்கள்.

ஆகா! வாசக அன்பர்களே எனது வாலிப வேடம் கலைகிறது. இதுவரை ஆடிய ஆட்டத்தின் வேகம், வேகமாக குறைகிறது. அலுவலகத்திலிருந்து நான் இறங்கும் இடம் வெகுதூரத்தில் தெரிகிறது. அங்கு இருப்பவர்கள் என்னை “வா, வா” என்று அழைப்பது தெரிகிறது. இறங்கத்தான் வேண்டும். நானே படகில் எத்தனை நாள் இருக்க முடியும்? புதிதாக வருபவர்களுக்கு இடம் கொடுக்கத்தான் வேண்டும். இங்கு இறங்கி வேறு படகில் ஏறத்தான் வேண்டும். இதுவரை ஆடிய ஆட்டமெல்லாம் முடிந்து விடுமோ? இந்த தள்ளாத வயதில் புதியபடகின் வேகத்தை தாங்க முடியுமா? இதுவரை வாழ்ந்த சிக்கலில்லாத வாழ்வு இனியும் தொடர அந்த செந்தில் வேலவன் துணை புரிவானா? நான் ஏறப்போகும் புதிய படகிலிருந்து், இறங்கும் பொழுது எதை எடுத்து செல்ல முடியும்? இதுவரை தேடிய செல்வம் கூட வருமோ? நான் செய்த புண்ணியங்கள் வருமா? அறியாமல் செய்த பாவங்கள் தொடருமோ? என் புதினத்தைப் படித்து வாழ்வை சீராக்கிக் கொண்டவர் யாரவது என்னுடன் தான் வருவார்களா? இந்த ஆவி புதுப்படகை விட்டுப் போகும் பொழுது என் கூட என்ன தான் வரும்?

வாசக நண்பரே, சொல்லுங்கள். விரைந்து சொல்லுங்கள். கை கால்களும் இயங்காமல் போகுமோ?, காதுகளும் கேட்க முடியாமல் போகுமோ? புத்தியும் மங்குமோ? வாழ்வின் நெருப்புக் கனல் சுட்டு விடுமோ? எதுவும் உணர முடியாத சொர்க்கமும் எனக்கு கிடைக்குமோ?

கண்கள் சொருகுகின்றன வாசக எஜமானரே, வெகு தொலைவில் சூனியம் தெரிகிறது. விரைந்து சொல்லுங்கள். நீங்கள் சொல்வதை நான் உணர வேண்டுமல்லவா? விரைந்து சொல்லுங்கள்.

டாக்டர். எல்.கைலாசம்

Series Navigationசெலேடார் ஆற்றின் சதுப்புநில யட்சிகள் – இரண்டாம் பாகம்யாம் எந்தையும் இலமே:முனைவர் தே ஞானசேகரனின் ” தந்தை இல்லாத என் வீட்டு முற்றம் ” நூல்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *