வயதாகிவிட்டது

This entry is part 3 of 6 in the series 16 பெப்ருவரி 2020

கூடை முள்ளங்கியை முதுகில் ஏற்றிவந்து கடைக்குள் இறக்குவார் லோகதீபன் என்கிற தீபன். ‘ட்ராலி’ அவருக்குத் தேவையில்லாத ஒன்று.  கடைக்குள் ஒரு தனி அறையை அவரே உருவாக்கியிருக்கிறார். வெட்டுக்கத்தியால் கூடையைத் திறந்து, சரக்கைக் கொட்டிக் கவிழ்ப்பார். அழுகலோ, வெம்பலோ, வாடியதோ இருந்தால் உடன் சரக்கைத் திருப்பிவிடுவார். ஒரே வாரத்தில் கணக்கு பாக்கியை சுத்தமாக செலுத்தும் ஒரே ஆள் காய்கறிச் சந்தையில் தீபன்தான். அலாவுதீன் கடையில் காய்கறிப் பிரிவு மொத்தமும் தீபன் கையில்தான் இருக்கிறது. நாளொன்றுக்கு 1000 வெள்ளி சம்பாதித்துக் கொடுக்கும் பிரிவு. அது லோகதீபனின் உழைப்பால் மட்டுமே சாத்தியமாகிறது. இதையெல்லாம் தீபன் சிந்தித்ததே இல்லை. உழைக்க மட்டுமே தெரிந்தவர். அலாவுதீன் தீபனை சொந்த சகோதரன் போல் கவனித்துக் கொள்கிறார். தோற்றத்தில் ஒரு இஸ்லாமியராகவே தீபன் தன்னைக் காட்டிக் கொள்கிறார். ‘சலாம்’ சொன்னால் ‘அலைகும் வஸ்ஸலாம்’ என்று இலக்கணச் சுத்தமாக பதில் சொல்கிறார். பாத்திஹா ஓதினால் ‘ஆமின்’ என்ற அவர் குரல்தான் உரக்கக் கேட்கும்.

30 ஆண்டுகளுக்கு முன் லோகதீபன் சிங்கப்பூர் வந்தபோது எந்த வேலையும் கிடைக்கவில்லை. நம்பிக்கை இழந்து திரும்பிவிட நினைத்தபோதுதான் அலாவுதீன் அறிமுகமானார். விசா முடிய இன்னும் பத்து நாட்களே இருக்கிறது. ‘விசா முடியும்வரை கடைக்கு வாங்கண்ணே ‘ என்றார் அலாவுதீன். யாரும் சொல்லித் தராமலேயே காய்கறிப் பிரிவில் புகுந்து விளையாடினார். விலையை அவரே நிர்ணயித்தார் . மொத்த வியாபாரியிடம் அவரே பேரம் பேசுகிறார். அடுத்தடுத்த கடைகளில் என்ன விலைக்கு அவர்கள் தருகிறார்கள் என்பதையும் நோட்டம் விடுகிறார். மாங்கு மாங்கென்று உழைக்கிறார். வியர்த்துக் கொட்டுகிறது. அலாவுதீனுக்குப் புரிந்தது. இந்த வியர்வைக்கு உள்ள மதிப்பை நாம் கொடுத்தே ஆகவேண்டும். கடையிலேயே சேர்த்துக்கொள்ள ஏற்பாடும் செய்கிறார். இன்று தீபன் வந்து 30 ஆண்டுகள் முடிந்துவிட்டன.  மனைவி, மகள், மருமகன், 7 வயதில் ஒரு பேத்தி என்று இன்று தீபனின் குடும்பம் விரிந்துவிட்டது. கூட்டுக் குடும்பம்தான். வீடு ஈசூனில். கடை ஜூரோங்கில். இரு சக்கர வாகனத்தில்தான் வருகிறார்.

தீபன் வீடு வாங்கியபோது 30000 வெள்ளி ரொக்கமாக செலுத்தவேண்டியிருந்தது. ஒரு வங்கியில் முயற்சி செய்தார். சாட்சிக் கையெழுத்துக்காக அலாவுதீனிடம் வந்தபோது மொத்தத்தையும் அவரே ரொக்கமாகக் கொடுத்துவிட்டார். அலாவுதீனுக்குத் தெரியும் . தீபன் அந்த உதவிக்கு முற்றிலும் தகுதியானவர் என்று. தீபன் மகள் திருமணத்திற்குக் கூட மண்டபச் செலவு, சாப்பாட்டுச் செலவு மொத்தத்தையும் அலாவுதீனே பார்த்துக் கொண்டார். இதற்கெல்லாம் என்ன கணக்கென்று இருவருமே அறியவில்லை.

வழக்கம்போல் ஒரு நாள் ஒரு கேரட் பெட்டியைத் தூக்கியபோது நினைவிழந்து மயங்கி விழுந்துவிட்டார். ரத்தக் கொதிப்பின் அறிகுறி அப்போதுதான் தெரிந்தது.  அதை தீபன் பெரிதுபடுத்தாவிட்டாலும் அலாவுதீன் பெரிதாக நினைத்தார்.

‘அண்ணே ஒங்களுக்கு வயசாயிடுச்சு. முன்ன மாரி நீங்க வேல பாக்காதீங்க. கடையில ஆளுங்க இருக்காங்க. நீங்க கேஸ்ல உக்காருங்க’ 

தனக்கு வயதாகிவிட்டதை முதன்முறையாக அலாவுதீன் உணர்த்துகிறார். வேலை மாறுகிறார். உட்கார்ந்திருக்கும் வேலைதான். ஆனாலும் பொறுப்பான வேலை. அலாவுதீன் மகன் இப்போது பொறுப்புக்கு வந்துவிட்டார். தீபனுக்கும் அலாவுதீனுக்கும் இடைவெளி கொஞ்சம் அதிகமானதுபோல் தெரிகிறது.

நிலப்போக்குவரத்து ஆணையத்திடமிருந்து தீபனுக்கு ஒரு கடிதம் வருகிறது. ‘உங்களுக்கு  இன்று வயது 71. 29.11.2019 வரைதான் நீங்கள் வாகனம் ஓட்டமுடியும். உங்கள் உரிமத்தைத் திரும்ப ஒப்படைக்கவும். உரிமத்தைப் புதுப்பிக்க விரும்பினால் அதற்கான சிறப்பு மருத்துவ சான்றிதழை 15 நாட்களுக்குள் சமர்ப்பிக்கவும்.’

 அலாவுதீன், மனைவி, மகள், மாப்பிள்ளை எல்லாருமே சொல்கிறார்கள்

‘உங்களுக்கு வயதாகிவிட்டது. ப்ரஸரும் இருக்கிறது. இனிமே வண்டி ஓட்டாதிங்க. லைசன்ஸ ஒப்படச்சிருங்க’ .

வயதாகிவிட்டதால் இன்னும் எததையெல்லாம் இழக்க வேண்டுமோ?  கடையிலேயே வேலை பார்க்கும் ஒரு பையனிடம் வண்டியை முறைப்படி மாற்றிவிட்டு சாவியைக் கொடுத்துவிட்டு தனியாக நின்றுகொண்டு கேவிக் கேவி அழுகிறார். தன் வண்டிபோனது உடம்பிலிருந்து இரு கைகளையும் எவனோ வெட்டிக்கொண்டு போனதுபோல் இருக்கிறது. அழுவதற்கு எப்போதுமே அவருக்குத் தனிமைதான் தேவைப்படுகிறது. இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு எதற்கெடுத்தாலும் அழுகை வருமாம். அந்த வகையில் மற்றவர்கள் கருதலாம். தன் உணர்வுகள் அவர்களுக்குப் புரியாமல் போகலாம். தனிமைக் கண்ணீரே சுகம்.

பத்தாண்டுகளுக்கு முன் தீபனின் மகளை பல்துறைக் கல்லூரியில் சேர்க்க 1200 வெள்ளி செலுத்தவேண்டியிருந்தது. ஒவ்வொன்றையும் அவாவுதீனிடம் கேட்க கூச்சமாக இருந்தது. தன் நண்பர் கலிபுல்லாவிடம் அந்தத் தொகையைக் கடனாகப் பெற்று தவணைக்குள்  கொடுத்துவிட்டாலும். அந்த உதவி தீபனால் என்றுமே மறக்கமுடியாத உதவி. எப்போது நினைத்தாலும் அவருக்காக கடவுளிடம் பிரார்த்திப்பார். அந்தக் கலிபுல்லா மகளுக்கு இப்போது திருமணம். ஒரு பவுன் நகை வாங்கிக் கொடுக்கலாம் என்று ஆசைப்படுகிறார்.அலாவுதீனிடம் கேட்டார்.

‘அண்ணே சம்பளத்தில பாக்கி இல்லண்ணே. அதிகப் பற்றாத்தான் தரணும்’

என்றபோது தீபன் அதிர்ந்தார். அலாவுதீனா இப்படிச் சொல்கிறார். அலாவுதீனா கணக்குப் பார்க்கிறார். ஆம். அவர் பார்த்துத்தான் தீரவேண்டும். அவர் மகன் பொறுப்புக்கு வந்துவிட்டார். அவருக்கு அலாவுதீன் பதில் சொல்லவேண்டும். தீபனின் உழைப்பு அந்த இளைய தலைமுறைக்கு தெரியாதுதானே.

‘வேண்டாம்ணே. பரவாயில்லை’ தீபன் சமாளித்தார்.

தீபன் எதற்காக கேட்கிறார் என்பது அலாவுதீனுக்கு தெரியும். இரவு வீட்டுக்குப் போகும்போது சட்டைப்பையில் 500 வெள்ளியை ஓர் காகித உரையில் வைத்து திணித்துவிட்டு சொன்னார்.

‘வயசாயிடுச்சுண்ணே. ஒங்கள்டேருந்து அப்படியெல்லாம் யாரும் எதையும் எதிர்பார்க்க மாட்டாங்க. ஆனாலும் கலிபுல்லாவுக்கு நீங்க செய்ய நெனக்கிறது நியாயந்தாண்ணே. காலைல அப்புடிச் சொன்னதுக்கு மன்னிச்சுக்கங்க. மகன் பக்கத்தில் நின்றார். சொல்லவேண்டி ஆயிடுச்சு’   

‘வயசாயிடுச்சுதான். உடலுக்குத்தான் வயசாயிடுச்சு . உணர்வுகளுக்குமா வயசாயிடும்.’ தீபன் நினைத்துக்கொண்டார். சொல்லவில்லை.

ஒருநாள் தீபன் சீக்கிரமே வீட்டுக்குத் திரும்பிவிட்டார். வீட்டை அடைந்தபோது வீட்டுக்குள் மகள், மனைவி, மாப்பிள்ளை பேசிக்கொண்டிருக்கிறார்கள். மாப்பிள்ளை சொன்னார்.

 ஃபோர் சீட்டட் கிராபே புக் பண்ணுவோம். நாம நாலுபேர் தானே. மாமா வந்தால் சிக்ஸ் சீட்டட் புக் பண்ணணும். நாம வர நேரமாகும். நாம சாப்புர்றதும் மாமாவுக்கு ஒத்துக்காது. வேற ஏதாவது மாமாவுக்கு வாங்கி வந்துருவோம். ‘

‘தேவையில்ல. அவருக்கு ரெண்டு கோதும தோச வச்சிருக்கேன். பருப்புக்குழம்பும் இருக்கு. அவர் சாப்பிட்டுக் கொள்வார்’  மனைவி சொல்கிறார்.

அவர்கள் எங்கே புறப்படுகிறார்கள் என்று தீபனுக்குத் தெரியும். இன்று பேத்திக்குப் பிறந்தநாள். கடற்கரையில் கொண்டாடப் போகிறார்கள்.

‘வயதாகிவிட்டதாம். நாம் அவர்களோடு சேரமுடியாதாம். அவர்கள் சாப்பிடுவதை நான் சாப்பிடமாட்டேனாம்.  சரி பரவாயில்லை. இதையும் இழப்போம். வயதாகிவிட்டதல்லவா. அவர்கள் வெளியேறுவதற்குள் அந்த இடத்தைவிட்டு நாம் வெளியேற வேண்டும்’

தீபன் வேறு மின்தூக்கி வழியாக அவசரமாக இறங்கி அரைமணி நேரம் இப்படி அப்படி என்று சுற்றிவிட்டு வீட்டுக்கு வந்தபோது மேசையில் இரண்டு கோதுமை தோசையும்.  ஒரு கோப்பையில் இரு முருங்கைக்காய்த் துண்டுகளுடன் பருப்புக் கறியும் இருந்தது. சாப்பிடும்போதே பொங்கிப் பொங்கி அழுகிறார். அந்தப் பிறந்த நாளை தீபன் ஆவலோடு எதிர்பார்த்திருந்தார். அதற்குக் காரணம் இருந்தது. வயதாகிவிட்டால் நியாயமான ஆசையைக்கூடவா இழக்கவேண்டும்.  அட! மணி ஒன்றாகிவிட்டது. பேத்தியைப் பார்க்காமல் தூங்கமுடியாது. இதோ சப்தம் கேட்கிறது. அவர்கள் வருகிறார்கள். அவர்கள் நுழைந்ததும் தன் 7வயது பேத்தியை அலாக்காகத் தூக்கி தோளில் சாய்த்துக் ளொண்டார். தூக்கிக் கொண்டே தன் அறைக்குச் சென்றார். அலாவுதீன் பேரன் ஒரு லெக்கோ பொம்மையை வைத்து விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்தபோது அதே பொம்மையை பேத்தியின் பிறந்த நாநளுக்கு வாங்கித் தர ஆசைப்பட்டார். 120 வெள்ளி. பிறந்தநாளில் கொடுத்து தன் பேத்தியை ஆச்சரியப்படுத்த வேண்டும் என்று நினைந்திருந்தார். கேக்கு வெட்டும்போது தராவிட்டால் என்ன?  இப்போது கொடுப்போம். அலமாரியைத் திறந்து அந்த பொம்மையை பேத்திக்குக் கொடுத்தார். அந்தச் செல்லப் பேத்தி இன்னும் தோளில்தான் தொங்குகிறார்.

‘தாத்தா எனக்கா….அய்ய்ய்    அப்பாக்கிட்ட வாங்கிக் கேட்டேன். அம்மாக்கிட்ட வாங்கிக் கேட்டேன். ரெண்டு நாள் வெளயாடிட்டு தூக்கிப் போட்ருவேன்னு சொல்லிட்டாங்க. இது எனக்குப் புடிக்கும்னு எப்புடித் தாத்தா ஒங்களுக்கு தெரிஞ்சிச்சு. அய்ய்…….’

‘தெரியும்மா. ஏன்னா எனக்கு வயசாயிடுச்சு.’ சிரிப்பை வெளியே கொட்டி, உள்ளே மல்லாக்கப்போட்ட கரப்பான்பூச்சியாய்த் துடித்தார்.

அலாவுதீன் மனைவி ஒரு மாதமாக மருத்துவமனையில் இருக்கிறார். திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பு தொடர்ந்த பல பிரச்சினைகள். ஒரு மாதத்திற்குப் பிறகு வீட்டுக்கு அழைத்து வர ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறார்கள். . அலாவுதீன் மகனிடம் அம்மாவைப் பற்றி விசாரித்தார் தீபன். மகன் சொன்னார்

‘ இருதயத்துக்குப் போற ரத்தக் குழாய் மெலிஞ்சு போயிருச்சாம். எப்ப வேணும்னாலும் அடச்சுருமாம். கிட்னி ஃபங்சன் பண்ணலியாம். தொடர்ந்து டயாலிஸிஸ் செய்றாங்க. எப்ப வேணும்னாலும் எதுவும் நடக்கலாமாம். அதுக்கு மேல என்ன செய்யணுமோ செய்யுங்கண்ணு டாக்டர் சொல்லிட்டாரு. அதுனால எடுத்துக்கிட்டு வந்துர்லாமுன்னு இருக்கோம்.’

‘அடப்பாவி. அவங்க ஒங்க அம்மாடா! எடுத்துக்கிட்டு வர்றியா? ‘ அந்த வார்த்தையைக் கேட்டு தீபன் குமுறினார். ‘பெத்த தாயை எவ்வளவு சீக்கிரமா அஃறிணையா ஆக்கிட்டான் பாவி யாரிடம்  சொல்லி அழுவது.’ நிழல் காணா வெயிலில் மண்புழுவாய்த் துடித்தார்.

அன்று மாலை அலாவுதீன் தன் மகனுடன் மருந்துவனை சென்றுவிட்டார். நினைத்து நினைத்து தீபன் அழுகிறார்.

‘வயதாகிவிட்டதுன்னு சொல்லுவாங்க. எவனுக்குத் தெரியும் என்னோட வேதனை.’ தீபன் துடித்தார்.  

இரவு அவாவுதீன் வீட்டுக்குப் போகவேண்டும்  அம்மாவைப் பார்க்க வேண்டும்.  முடிவு செய்தார்.

அலாவுதீன் வீடு. அம்மா படுக்கையில். கண் திறந்திருக்கிறது. எல்லாவற்றையும் தீர்க்கமாகப் பார்க்கிறார். ‘வாங்கண்ணே’ என்று சொல்லிவிட்டு கண்ணை மூடிக்கொண்டார். சில வினாடிகளில் மீண்டும் திறந்தார்.  தீபனைப் பார்க்கிறார். ஏதோ சொல்ல நினைக்கிறார். தீபன் சற்று நெருங்குகிறார்.

‘அண்ணே மகனப் பாத்துக்கங்கண்ணே’ மீண்டும் கண்களை மூடிவிட்டார்.

‘அடப்பாவி இவுங்களயா எடுத்துக்கிட்டு வரப் போறோம்னு சொன்னே..  கோழி மிதித்து குஞ்சு சாகாதுடா. இங்க குஞ்சு மிதிச்சு கோழி சாகுதுடா பாவி’

பக்கத்திலிருந்த சோஃபாவில் கால்மேல் கால் போட்டுக்கொண்டு அம்மாவுக்கு வந்தவர்கள் வாங்கி வந்த உயர் ரக ஃபிஜி ஆப்பிளைக் கடித்து மென்று தின்றுகொண்டிருக்கிறார் மகன்

‘பாத்துக்கிட்டுத்தாம்மா இருக்கேன்’ என்றார் தீபன்

மனம்விட்டு அழவேண்டும். தீபன் தனிமையைத் தேடினார்.

அடுத்த நாள் தீபன் கடைக்கு வருகிறார். எம்மார்ட்டி நிலையம் அருகே இருக்கும் ஒரு பெரிய மரத்தின் கிளைகளை கழித்துக் கொண்டிந்தார்கள்.  கிளைகளைக் கழிப்பது அவ்வப்போது நடப்பதுதானே. காற்றில் முறிந்து விழுந்தால் பேராபத்து நிகழலாம்.  பார்த்துக் கொண்டே சென்றுவிட்டார். அடுத்த நாள் அந்த மரத்தின் பக்கத்தில் மூன்று வேன்கள் நிற்கின்றன். மரத்தின் உச்சந்தலையை அறுத்துக் கொண்டிருந்தார்கள். பிறகு கழுந்தை அறுத்தார்கள். அட! மரத்தையே எடுக்கப் போகிறார்களோ? அங்கு வேலை செய்துகொண்டிருந்த ஒரு தமிழ்ப் பையனிடம் கேட்டார். அவர் சொன்னார்.

‘ஆமாண்ணே இன்னிக்கு அடிவரை அறுத்து ஏத்திடுவோம். நாளக்கி 10பேர் கடப்பாரையோடு வந்து அடி வேர்த்தூரை நெம்பி எடுத்துருவாங்க.’

‘100 வயசு மரம் தம்பி’

அதுனாலதான் எடுக்கிறோம். வயசாயிடுச்சுன்னா சீக்கு வந்துடும். எடுத்துடுவோம்ணே’

தீபனின் நண்பர் ஒருவர் தோட்டத்துறையில் வேலை செய்கிறார்.  அவரிடம் தொலைபேசியில் விசாரித்தார். அந்த மரமெல்லாம் அவருடைய மேற்பார்வையில்தான் இருக்கிறது என்று என்றோ சொன்ன ஞாபகம். அவர் சொன்னார்.

‘ஆமாண்ணே. வயசான மரங்கள அடிக்கடி சோதிப்போம். அதுக்குன்னு ஒரு குழு இருக்கு.. அடி மரத்துல ஊசிய  ட்ரில் செய்து உள்ள எறக்குவொம்.  அந்த மரத்தூள சோதிச்சுப் பாப்போம். அப்புடி சோதிச்சு அந்த மரத்த எடுத்துரணும்னு சொல்லிட்டாங்க. அதான் எடுத்துக்கிட்டிருக்காங்க.’

‘வயசாயிடுச்சுன்னா எடுத்துற வேண்டியதுதான். அது மரமானால் என்ன மனுஷனானால் என்ன?’

 சொல்லிவிட்டு தொலைபேசியை வைக்கும்போது யாரோ அழைக்கிறார்கள். அட! அலாவுதீன்தான் அழைக்கிறார். தீபன் எடுத்தார்.  

‘கடக்கி வந்துக்கிட்ருக்கேண்ணே’

‘கடக்கிப் போக வேணாம். நேரா வீட்டுக்கு வந்துருங்க’

‘ஏண்ணே’

‘முடிஞ்சிருச்சுண்ணே’

‘இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்..’ துக்கச் செய்திக்கு இஸ்லாமியர்கள் சொல்லும் வசனம். நாம் எல்லாரும் அல்லாஹ்விடம் இருந்தே வருகிறோம். அல்லாஹ்விடமே திரும்பச் செல்கிறோம். இலக்கணச் சுத்தமாக அலாவுதீனிடம் சொன்னார் தீபன் என்கிற லோகதீபன்.

யூசுப் ராவுத்தர் ரஜித்

Series Navigationபூமியைப் பிழிவோம்தூங்காத இரவு !
author

யூசுப் ராவுத்தர் ரஜித்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *