முன்னணியின் பின்னணிகள் – 3 சாமர்செட் மாம்

This entry is part 52 of 54 in the series 4 செப்டம்பர் 2011

தமிழில் எஸ். ஷங்கரநாராயணன்
3
>>>
ஜீவிதத்தில் ஒவ்வொருத்தனுக்கும் பொதுவான சிக்கல் ஒன்று உண்டு. ஒருகாலத்தில் கட்டித்தழுவி கொஞ்சிக்குலாவி, நீ இல்லாமல் நான் இல்லை, என்கிற தினுசில் ஒட்டி உறவாடிய நட்பு, காலாவட்டத்தில் தீயமர்ந்து விடுகிறது. இந்த நட்பை என்ன செய்ய வேண்டும். வலியப்போய் திரும்ப மூட்டறதா, அல்லது அப்பிடியே விட்டுர்றதா என்பது பிரச்னை. இருவருமே ஒரே ஸ்திதியைக் கடைப்பிடிப்பதாய் இருந்தால், அந்தப் பிரிவு இயல்பாய் தண்ணிக்குள் மீனாய் அடங்கிவிடும். ஆனால் ரெண்டில் ஒருத்தர் கிச்னு பிரகாசமாக உயர்ந்து ஒளிவிட ஆரம்பித்தார் என்றால் பழைய நட்பு இப்போது இடிக்கும். இந்தப் பிரபலம் இப்போது பல புதிய நண்பர்களை சிநேகம் கொண்டாட ஆரம்பித்திருப்பான். ஆனால் இந்தப் பழைய உப்புபெறாத நட்புவட்டம் காலைச் சுற்றிய பாம்பாட்டம் உதற விடாது அவனை. அவன் பிராபல்யத்தில் குளிர்காய வந்திறங்கும் பழைய கூட்டம்… உங்களுக்கு அவரை இப்பத்£ன் தெரியும், எங்களுக்கு அவனை அப்பவே தெரியுமே… அந்தக்காலத்திலேயே கதை கிதைன்னு எதாவது கிறுக்கிட்டிருப்பான்… அவன் அவர்களோடு பழைய நட்பு பாராட்டவேண்டும் என எதிர்பார்ப்புடன் அவர்கள் (நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு) காத்திருந்தார்கள். அது நிகழவில்லையென்றால் பெருமூச்சுடன் தோள்குலுக்கினார்கள். – அவன் ஆள் முன்னைப்போல இல்லப்பா. புகழ் வந்தது ஆளே மாறிட்டான். பன்னியும் குதிரையும் குட்டியா இருக்கறப்பதான் அழகு. இப்பல்லாம் என்னை எதிர்ல பாத்தாக்கூட கண்டுக்காமல் தாண்டிப் போறான். வெற்றி கண்ணை மறைக்குது…
ஆனால் தைரியமுள்ளவன் அதைத் தான் செய்வான். தாண்டிப்போயிருவான். இந்தக் கழிசடைகளைக் கூட்டியிழுத்துட்டுப் போனால் இப்பத்திய அந்த ஸ்தானத்துக்கு இழுக்குதான். அல்ராய் கியர் விஷயம் வேறானது… பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவன் இந்த நெருக்கடிக்கு இழைந்து கொடுத்தான். ஞாயிறு மாலைகளில் பழைய பட்டாளத்தில் யாராவது விருந்து என்று அழைத்தால் கூச்சத்துடன், ஆனால் போய்வந்தான்.
ஆஸ்திரேலியாவில் இருந்து வரும் குளிர்பதனப் படுத்தப்பட்ட மாட்டிறைச்சி, வீட்டு அடுப்பில் அதிகமாய் வெந்திருந்தது. அதோடு அந்த பர்கண்டி…. சிவப்பு ஒயின். அந்த கருமாந்தரத்திற்கு பர்கண்டி என்று எப்படிப் பேர் வைத்தார்களோ. இந்த சராசரிகள் பீனைக் கண்டார்களா, ஹோட்டல் டி லா போஸ்ட்டேயைக் கண்டார்களா? பழைய இனிமையான நினைவுகளை அசைபோட வேண்டியதுதான். நல்லாத்தான் இருக்கிறது… திறந்த முற்றத்தில் அமர்ந்தபடி பெரிய ரொட்டியை ஆளுக்குக் கொஞ்சமாய்ப் பிய்த்துப் பிரித்துக்கொண்டு தின்பது ஆனந்தம் தான்… (அவர்களுக்கு.) என்றாலும் பின்கட்டும் அந்த உக்கிராண அறை உக்கிர நெடிகளும் மூச்சு முட்டுதே. நல்லா வெளிப்படையாகப் பேசுகிற பால்யகால சிநேகிதன்தான் என்றாலும், நம் கதைப்புத்தக விற்பனை அத்தனை உற்சாகமாய் இல்லை என்று அவன் பேசுகையில் நாம் முகத்தை எப்படி வைத்துக்கொள்வது என்றே குழப்பம். நம் கதைகளை எந்த அளவுகோலில் பொருத்திக்கொள்வது என்றே அவனுக்குப் பிடிகிடைக்கவில்லை. அவன் அதிகாரிட்ட உன்னைப் பத்திச் சொன்னால், உன் எழுத்தை நாடகங்களை அவர் கேள்விப்பட்டதே இல்லைங்கிறார். அத்தோடு விட்டால்கூட பரவாயில்லை. பேச்சு தொடர்கையில் அவன் தன்னைக் கவர்ந்த சில சிறந்த படைப்புகளைச் சொல்லி அதைப்போல நீ எழுதுவதில்லை, என்று ஒரு நிதானப் பார்வை பார்க்கையில், உள்ளே கூசுகிறது. உடனே எழுந்து கிளம்ப முடியாமல் போகிறது என்பது தான் சிக்கல். சங்கடமாய் அவனை நேரே பார்க்காமல் வெளியே வெறிக்க வேண்டியிருக்கிறது.
இப்போது நாம் பிரபலஸ்தன், துட்டுக் கொழுத்தவன் என்றாலும், நமக்கும் சிக்கல்கள் இருக்கிறதாக ஒரு பலூனை ஊதிவிட வேண்டியதாகி விடுகிறது. நாமே நம்மையறியாமல் நம் படைப்பு பற்றி தரந்தாழ்த்திப் பேசுகிறதாகவும் கூட ஆகிப் போகிறது. அவன் சொல்வது சரி என்று மேலே அவன் பேசவிடாமல் சமாளிக்க வேண்டியதாகி விடுகிறது. நாம எத்தனை தரமா எழுதினாலும், பாத்துக்க இவனே… சனங்க என்ன நினைக்கிறாங்களோ அதான்… சொல்கிறபோதே நான் இப்போது பிரபல எழுத்தாளன் தான் என்கிற குறிப்பையும் கடத்த வேண்டும். புகழ் என்பது ஒரு மாயப்பிசாசு, வரும் போகும், என்கிறதாக நண்பனுக்குக் குறிப்பு காட்ட வேண்டும். அவன் நண்பன்தான். என்றாலும் வெடுக்கென்று வார்த்தையைக் கொட்டிவிடுகிற விமர்சகன். நடுரோட்டில் வேட்டியை உருவிவிட்டு விடுவான்.
”கடைசியா நீ எழுதின புத்தகத்தை நான் இன்னும் வாசிக்கல்ல…” என்கிறான். ”ஆனால் இதுக்கு முந்திய புத்தகத்தை வாசித்திருக்கிறேன்… அதும் பேர் என்ன? மறந்திட்டது…”
நாம் கூச்சத்துடன் சொல்கிறோம்.
”ம். அதான்… ரொம்ப ஏமாத்தமாப் போச்சுடா. உன்னோட சில நல்ல புத்தகங்கள் நான் வாசிச்சிருக்கேன். அந்தளவுக்கு இது வரல்ல. எனக்குப் பிடிச்ச விஷயங்கள் என்னன்னு உனக்குத் தெரியும் இல்லியா?”
இவனைவிட மலைமுழுங்கி மகாதேவனையெல்லாம் நாம பார்த்துப் பேசி சமாளிச்சி சிரிச்சி தலையைத்தடவி அனுப்பியிருப்போம். இவன் எம்மாத்திரம். கருமாந்திரம். நமது முதல் புத்தகம், அப்போது, அந்த இருபதாவது வயசில் எழுதியது, அதைச் சொல்வோம். வாஸ்தவத்தில் நமக்கே தெரியும் அது அபத்தக் களஞ்சியம். பாதிக்குப் பாதி வெட்டியெறியப்பட வேண்டிய, மணலும் தண்ணியுமான சகதிக்குழம்பு, விடலை விளையாட்டு…
”அதைப்போல ஒரு படைப்பை இனிமேல் நீயே நினைச்சாலும் பண்ண முடியாதப்பா…” என்கிறான் நண்பன். மனசாரப் பேசுகிறான். அந்த ஒரு மகிழ்ச்சிகரமான வெற்றி, அது உன் எழுத்துவாழ்க்கையை ராஜபாட்டையாக்கிட்ட மாதிரி, அல்லது ஆக்கிரும்ன்றா மாதிரி நீ நினைச்சிக்கறே. எப்பவுமே நான் நினைச்சிப் பாக்கறதுண்டு… நீ முதல் புத்தகத்தில் காட்டினியே அந்த வீர்யம், சாதுர்யம்… அதை அப்பறம் காட்டவே இல்லை.”
வித்தியாசமான உணர்வுகளால் நாம் பீடிக்கப் படுகிறோம். காலடியில் சூரிய தகிப்பு. கையானால் சில். தன்னைப்போல மணிக்கட்டை உயர்த்தி நேரம் பார்க்கிறோம். பத்து கூட ஆவல்ல, அதற்குள் கழட்டிக்கிட்டால் இந்தப் பழைய சிநேகிதப் பெருச்சாளி எக்குத்தப்பா நினைத்துக் கொள்வானோ, என்று படபடக்கிறது. தெரு முக்கில் கார் காத்திருக்கிறது. இங்கே வாசலில் நிறுத்தினால் பந்தா என்பார்கள், நேரம் பார்த்துக்கொண்டு பேச்சை எண்ணியெண்ணித் துட்டாச் செலவழிக்கிறான், என்பார்கள்… என்பதால் தள்ளி நிறுத்தியாகிறது. தவிர நண்பனின் வீடு சிறியது. அதன் வாசலில் காரை நிறுத்த இயலாது. அந்தத் தெருவிலேயே கார் நுழையாது. கிளம்பும்போது வாசல்வரை கூடவந்த நண்பன், ”பள்ளத்தெரு வரை நடந்தால் பஸ் நிறுத்தம். நான் வந்து உன்னை ஏத்திவிடறேன்…” என்கிறான் மகா பெருந்தன்மையாய்.
குப்பென்று ஆகிவிடுகிறது. ஒரு வெட்கத்துடன் கார் வாங்கியிருப்பதைச் சொல்லியாகிறது. அட கார் டிரைவரை ஒரு தெருவோரத்தில் காத்திருக்க வைத்துவிட்டு நாம் வந்திருப்பது அவனுக்கு விநோதமாய்ப் படுகிறது. ”ச் இருக்கட்டும். அவனுங்க வேலை அப்படி. அவன் காத்திருப்பான்…” என நாம் புன்னகை காட்டுகிறோம். கூட வரும் நண்பன் காரை நோட்டம் பார்க்கிறான். தனக்கு கார்பற்றித் தெரியும் என்கிற அலட்சியப் பார்வை. கார் வாங்குவது ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை என்கிற பார்வை. ஒருநாள் நம்முடன் சாப்பிட வர திரும்ப வலிய வரவழைத்த புன்னகையுடன் அவனை அழைக்க வேண்டியிருக்கிறது. நாம கடிதம் எழுதிக்கலாம், நான் அவசியம் எழுதுவேன், நீயும் பதில் போடணும்…. அவசரமாய்க் காரில் ஏறிக்கொண்டு ஜுட். நம்ம இவனை விருந்து என்று கிளாரிட்ஜுக்கு அழைத்துப் போனால் அ, பணத்திமிர்ம்பான். ஸோகோ விடுதிக்கு அழைத்தால் கஞ்சப் பிசினாறிம்பான்… என்ன செய்ய? முன்னாடி வந்தால் முட்டும், பின்னாடி போனால் எத்தும், என்கிற சிக்கல்.
ராய் கியருக்கு இந்தச் சங்கடம் எதுவுமே நிகழவில்லை. அவன் குணாம்சத்தை அப்படி எடுத்துச் சொல்வது வக்கிரமாய்ப் படலாம். ஒரு மனிதரிடம் எதுவும், அவனுக்குத் தேவையான எதுவும் இருப்பதாய்த் தெரிந்தால் உடனே நெருங்கிப் பழகி அதைக் கைப்பற்றி பிறகு அந்த நபரைப் புறக்கணித்து, மறந்தும் விடுவான். ஆனால் அந்த நபருக்கே தான் தவிர்க்கப் படுகிறோம் என்று தெரியாதபடி விஷயத்தை நளினமாய், மென்மையாய், கேக்கில் இருந்து காகித உறையைப் பிரிக்கிறாப் போல உருவிக்கொள்வான். லேசான கோடி காட்டல்கள், பேசுகையில் லேசான அசுவாரஸ்ய தொனி, குறிப்பு காட்டுதல் என்று நாமே புரிந்துகொள்கிறாப் போல நடந்துகொள்வான். காரியச் சித்தன். சிரித்தபடி வேடிக்கைபோல் தவிர்க்கிற அவனை யாரும் அவன்திட்டத்தை மீறி அணுகிவிட முடியாது. மேலோட்டமாய் அவனை யாரும் குற்றதொனியில் பேச அனுமதிக்காத கவனமான நடைமுறைகள் அவனுடையவை. நாம எல்லாரும் ஒரு விஷயத்தில் இருந்து பிட்டுக்கொள்ள வேண்டுமானால் சற்று முரட்டுத்தனமாய் வெளிப்படையாய் அதைக் காட்டிக்கொண்டு விடுவோம். பிறகு நாம் நடந்துகொண்டதை நினைத்து வருத்தமும் பட்டுக்கொண்டிருப்போம். ராய் இதையெல்லாம் அடிமனசுவரை வைத்துக் குழப்பிக் கொண்டதே கிடையாது. மேய்ச்சியா, மாட்டைத் திரும்பக் கட்டு, கொம்பை வீசிட்டுப் போயிட்டே இரு.
”பெரியவர் ஸ்மித் பாவம்” என்பான். ”அருமையான மனுசன். எனக்கு அவரை ரொம்பப் பிடிக்கும். என்னாச்சி தெரியல, இப்ப ஆளே கடுகடுன்னு ஆயிட்டாப்ல. நாம எதாவது அவருக்குச் செய்யணும்னு இருக்கு. அவரைப் பார்த்து கொள்ளை வருஷம் ஆச்சி. பழைய நட்பை அப்படியே பேணுவதுன்றது வாழ்க்கையில் ரொம்ப நல்ல விஷயம். கண்ணியை தெறிச்சிக்கறது நமக்கும், அவங்களுக்குமே ஒருமாதிரி வருத்தமான சமாச்சாரம்தான். நிஜத்தைச் சொல்லணும்னா, ஒராள் வளர்கிறபோது தன் பழைய வட்டத்தை விட்டு வெளிய போயிர்றான். இந்த இழப்புகளை யெல்லாம் அவன் சகிச்சிக்க வேண்டிதான்…”
ஆனால் பிறவி நடிகனாப்பா அவன். ராயல் அகாதெமியில் பெருங் கூட்டத்தின் நடுவே சக எழுத்தாளர் ஸ்மித்தைப் பார்த்தால் அந்தக் கூட்டத்தைத் தள்ளிகொண்டு ஓடுவான். அவர் தோளில் கைபோட்டு, அடாடா, உங்களை எங்க எப்பிடி பார்க்கிறதுன்னு ஆயிட்டது. இப்ப இங்க பார்க்க எத்தனை சந்தோஷமா இருக்கு!… முகமே பொங்கிப் பொலியும். பிரியமாய் மேகத்தில் இருந்து பீரிட்டெழும் ரச்மிபோல ஒரு பளீர். அந்த எதிர்பாராக் கணத்தின் கௌரவ வியூகத்தில் ஸ்மித்துக்கும் மகிழ்ச்சியே. ஸ்மித்தின் போன புத்தகத்தின் தரத்தில் பாதி தன்னால் எழுத முடிந்தாலே சாதனை, என்கிறாப்போல ராய் பசப்பினான்.
அதேசமயம் ஸ்மித் தன்னைக் கவனிக்கவில்லை என்று ராய் உணர்ந்தானானால் இவனும் வேறெங்கோ பார்க்கிறாப் போல அவர்பார்வையில் படுவான். தன்னை ராய் கண்டுகொள்ளவில்லை என்று ஸ்மித் வருத்தப்பட நேர்ந்துவிடும். அவருக்குக் கோபம் வரும். அந்தக் காலத்தில் நானும் அவனுமா ஒரு பாடாவதி ஓட்டல்னு கூட பாக்காமல் ஒரு ஆட்டைப் பகிர்ந்து வகிர்ந்து சாப்பிடுவோம்… செயின்ட் ஈவ்ஸ் பகுதியில் ஒரு மீனவக் குடிசையில் ஒரு மாதம்போலத் தங்கிக் கும்மாளமடித்திருக்கிறோம்… ராய் எப்பவுமே காரியப்பிசாசு. முரட்டுத் தடியன். ஹம்பக் பேர்வழி.
ஸ்மித் பேசியது தப்பு. அல்ராய் கியரின் முக்கிய குணாம்சமே அவரது நேர்மை தவறாமைதான். வெறும் பாவ்லா அளவிலேயே 25 வருடங்கள் ஒருத்தன் கொடிநாட்ட முடியாது. ரொம்ப கஷ்டமான காரியம், தொடர்ந்து அதைப் பேணவேண்டும். அதற்கு உள்ளும் புறமும் நாடி நரம்பெல்லாம் நடிக்க வேண்டும். மனசை இயல்பாய் வைத்துக்கொள்ள முடியாது அப்போது. சதா பதட்டம் பயம் சந்தேகம் எழும்.
ஒரு தின்னிமாடாகவோ, சோரம்போகும் சமாச்சாரம் என்றோ பாவனைகளை அவன் ரகசியமாய்ப் பழகியிருக்க முடியாது. சமூகத்தின் முன்னே பாவனை பண்ண ஆரம்பிச்சியானா தூக்கத்திலும் அதை கைவிட முடியாது. அதற்கு உள்ளூற அடுத்தாளை மட்டந்தட்டி, அவன் முட்டாள் என்கிற கணிப்பு தேவைப்படுகிறது. ராய் தாராளமாய்ப் புன்னகை காட்டினார் என்றாலும், அவருக்கு நக்கலடிக்கிற சூட்சுமமோ, அல்லது அதைப் புரிந்து உள்வாங்கி ரசிக்கிற, அல்லது எதிரடிக்கிற பக்குவமோ கிடையாது. இயல்பு நவிற்சியே தகராறு. இதில் இரட்டுற மொழிதலாவது, வஞ்சப்புகழ்ச்சியாவது… அதெல்லாம் அவர் கற்பனைக்கே ஒவ்வாதது.
அவரது சில நாவல்களை நான் வாசித்துவிட்டேன். வேறு சில பாதிவரை வந்திருக்கிறேன். என்றாலும் எல்லாவற்றிலும் அவரது பதிவு நேர்மையானது. பாசாங்கற்றது. அதன் பக்கங்களில் பிரமை இல்லை. தலைவீக்கம் இல்லை. அவர் இத்தனை பிராபல்யம் அடைந்திருக்கிறதின் முக்கியக் கூறே இது என்பேன். ரொம்ப எளிமையான எழுத்து. பொது மனிதனின் எளிய சிந்தனைகளே அவரது எழுத்து. சாமானியனின் நம்பிக்கைகளே அவரது நம்பிக்கை. அதிகார வர்க்கம் பத்தி அவர் கதை எழுதினால், அவர்கள் எல்லாரும் எப்படியும் வாழலாம் என்கிற ரகம், ஒழுக்கம் பற்றி கவலைப்படாதவர்கள், என மனசார நம்பி, மனசார எழுதினார். ஆனால் அவர்களிடமும் சில மேன்மைகள் இருக்கிறதாகவும் சேர்த்துக்கொண்டார். தாங்கள் வந்த வம்சாவழி அறிவிலேயே இந்த பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் ஆள வந்தவர்கள் என்றும் நம்பினார். குலவித்தை அது. கல்லாமல் பாகம் படும். பாகம் என்ன, முழுசுமே படும்… பிற்காலங்களில், மத்திய தர வர்க்கம் பற்றி எழுதுகையில், மனசார அவர்கள்தாம் ஒரு நாட்டின் முதுகெலும்பு, என்று குறிப்பிட்டார் ராய். அவர் காட்டிய வில்லன்கள் எப்பவுமே வில்லனாகவே இருந்தார்கள். கதாநாயகர்கள் பராக்கிரம சாலிகள். நாயகிகள் கற்புக்கரசிகள்.
ஒரு விமர்சகன் ராயைத் திட்டி வசைபாடிப் பெருக்கியிருந்தால் ராய் அவனை விருந்துக்கு அழைத்தான். நல்ல கருத்தை தைரியமா எடுத்துச் சொன்னதற்கு தான் தரும் மனசார்ந்த நன்றி அது. ஆகா ஓகோவென்று எழுதிய விமர்சகனை விருந்துக்கு அவன் அழைத்தால், தன் எழுத்தை அவன்மூலம் மேலும் மெருகேற்றிக்கொள்ள அவன் விரும்புகிறானாக்கும்…
டெக்சாசில் இருந்தோ, மேற்கு ஆஸ்திரேலியாவில் இருந்தோ முகமே அறிந்திராத புதிய ரசிகர்கள் லண்டன் வந்தால் கட்டாயம் அவர்களுக்கு அவன் தன்நாட்டை, குறிப்பாக அதன் தேசிய புகைப்படக் காட்சிசாலைகளையெல்லாம் காட்டித் தருவான். அவர்களுக்கு நம் நாகரிகத்தை அறியச்செய்ய தன்னைப்போல ஒவ்வொரு சாமானியனும் முன்வர அவன் ஒரு முன்மாதிரி. தவிரவும் நம்நாட்டுக் கலை, கலாச்சாரத்தைப் பற்றி அவர்களின் நிலைப்பாடு என்ன என்பதையும் அவன் அறிந்துகொள்கிறான் அல்லவா?
மாலைஉடை மிடுக்காக உடுத்தியிருக்கிறான் அவன். அல்லது அடிக்கடி பயன்படுத்திய நேர்த்தியாகத் தைத்த லவுஞ்சு சூட் தொளதொளவென்று உடுத்தியிருக்கவும் கூடும். இந்தக் கூட்டத்துக்கு ஒருவேளை பாந்தமாக இருக்கும் என அவன் நம்பியிருக்கலாம். மேடையில் ஏறி மகா அமைதியான கவனத்துடன் தன் ரசிகர்களை எதிர்கொண்டான். மனசில் உள்ளதைப் பேசுகிறான் என்றாலும் பணிவுக்குப் பஞ்சமில்லை. முழுக்க செய்கிற காரியத்தில் அப்படியே அவன் மூழ்கி முத்தெடுக்கிறான் என்று உணர முடியும். விட்டு விட்டு அவன் வார்த்தைகளைத் தேடுகிறதாக இடைவெளி தந்தாலும், அடுத்து அவன் வெளியே சிதற விடுகிற வார்த்தையில் அதிகத் தாக்கத்தை ஏற்படுத்தவே அப்படிச் செய்தான். அழுத்தமான, நம்பிக்கை தெறிக்கும் பிசிரற்ற குரல்.
ஒரு கதையை நன்றாகவே அவனால் சொல்ல முடிந்தது. கதை அலுப்புத் தட்டவே தட்டாமல் பார்த்துக்கொண்டான். அமெரிக்காவின், இங்கிலாந்தின் இளம் எழுத்தாளர்களுக்கு உரையாற்ற அவனுக்கு ரொம்ப இஷ்டம். தனது சிறப்புகளை அவர்களுக்கு வாரி வழங்கினான். அவன் உற்சாகத்தில் பெருந்தன்மை, பகிரும் ஆர்வம் மிளிர்ந்தது. ஒருவேளை கொஞ்சம் அதிகமாகவே அளந்தான் என்றாலும், நமக்கு அந்த உரையில் கிடைக்கிற விஷயம், இனி இந்தப் புத்தகங்களை நாம படிக்கவே வேணாம், அதான் எல்லாத்தையும் இந்த மனுசன் பட்டவர்த்தனமா மேடையிலேயே நெல்லை உதறி சாக்கை உதறிட்டானே என்று இருந்தது. இதனால் என்னாச்சி, அவன் உரையில் எந்த எழுத்தாளரின் எந்தப் புத்தகம் எல்லாம் அவன் எடுத்து விளக்கிப்பேசினானோ அந்தப் புத்தகங்கள் அந்த விழா அரங்கில் ஒரு பிரதி கூட போணியாகவே இல்லை. ஆனால் இவன் புத்தகங்களை எல்லாரும் உரை முடிந்ததும் கேட்டுவாங்கிப் போனார்கள். அவனின் தாக்கம் அத்தகைய அளவு விகசித்துப் பொலிந்தது.
அடிக்கடி அமெரிக்காவுக்கு வெற்றிகரமாக உலா போனான் என்பது மாத்திரம் அல்ல, உள்நாட்டின் சகல மூலை முடுக்குகளிலும் அவன் முழங்கினான். சின்ன சங்கம் என்று எதுவும் கிடையாது. சின்னக் குழு, சின்னப் புழு என்று எதையும் ஒதுக்க முடியாது. தங்கள் குழு அங்கத்தினருக்கு தன்னம்பிக்கை, சுயமுன்னேற்றத் தினவு அளிக்கணுமா கூப்பிடு ராயை. உடனே அங்கே ராய் ஆஜர். தயங்காமல் ஒத்துக்கொண்டு வந்து முழுசாய் ஒருமணி பேசுவான். ஒரேமாதிரி அவனுக்கே பட்டால் கொஞ்சம் மாற்றிப்பேச வேண்டியிருக்கும். சின்னச் சின்ன நூல்களாக அதை விநியோகிக்கவும் செய்வான். ஆர்வக்கோளாறு உள்ள ஆத்மாக்கள் அந்தப் புத்தகத்தைப் பிரித்துப் பார்ப்பதும் உண்டு. பட்டியல்கள் தந்திருப்பான். நவீன நாவலாசிரியர்கள். ருஷ்ய புனைவிலக்கியம். வளர்ந்து வரும் சில எழுத்தாளர்கள். அந்தப் பட்டியலில் யாருக்கும் பொதுவாக மறுப்பு எதுவும் இருப்பதில்லை. அதெல்லாம் இலக்கியம், அதை அறிந்தவர் தனித்தன்மையானவர்கள். அந்த வட்டத்தில் ராயும் உண்டு. நீயும் உண்டு…
ஆனால் இத்தோடு அவன் ஓய்ந்துவிடவில்லை. பிற எழுத்தாளர்களை ஒன்றுதிரட்டி ஊக்குவிக்கும் அமைப்புகள் சார்ந்தும் அவன் ஊடாடிப் புறப்பட்டான். நோக்காடினாலோ மூப்பினாலோ எந்த எழுத்தாளரும் வறுமையில் வாடினால், அவர் முடங்கிவிடாமல் நிதியுதவி செய்தல் போன்ற சமூக காரியங்களில் அக்கறைப்பட்டான். பிற நாட்டு எழுத்தாளர் மத்தியிலும், தன்னாட்டுப் படைப்பாளிகளின் வெளிநாட்டுப் பதிப்பக முயற்சிகளிலும் காப்பிரைட், உரிமைச் சிக்கல்கள் எழுந்தாலும் அதை சுமுகமாகத் தீர்க்க பாடுபட்டான் அவன். நாடுகளிடையே கலை இலக்கியப் பரிமாற்றம் அவசியம். சிந்தனைக்கு மொழி தடையாக இருக்கக் கூடாது என்பது அவன் சித்தாந்தம். வெளிநாட்டு இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு அவன் அழைக்கப்பட்டான். உள்நாட்டில் எந்த வெளிநாட்டு எழுத்தாளருக்காவது முறையான கவனிப்பும், வரவேற்பும் தரவேண்டுமானாலும் அந்தக் குழுவில் அவனும் இருக்கும்படி பார்த்துக்கொண்டான். எந்த பசார் புத்தகக் கடைக்குப் போனாலும் அவன் நாவல், அவன் கையெழுத்திட்ட ஒரு பிரதியாவது விற்பனைக்குக் கிடைக்குமாறு பேணினான்.
பேட்டி என்று யாராவது கேட்டு அவன் மறுத்ததாக சரித்திரமே இல்லை. எழுத்தாளப் பணியை, அதன் பாடுகளை அவனைப் போல அறிந்தவர் யாரும் இல்லை, என அவன் சொல்வது உண்மைதான். நம்மைப் பேட்டி காண்பதில் அந்த நபருக்கு எதும் துட்டு கிடைக்கும் என்றால், அவனுடன் சில சந்தோஷ மணித்துளிகளை அவன் செலவிடத் தயங்க மாட்டான். அவன் வயித்தில் அடிக்கிற பாவத்தை அவன் செய்யமாட்டான். பேட்டியாளன் அவனுடனேயே உணவு கொள்ளலாம். தன்னைப் பற்றி பேட்டியாளன் உயர்ந்த அபிப்ராயம் கொள்ளுமாறு பார்த்துக்கொண்டான். ஒரு சின்ன விஷயம், அந்தப் பேட்டி வெளியாகுமுன் அவன் ஒருமுறை அதை வாசித்துவிட்டால் நல்லது.
துண்டு துணுக்குகள் என்று சுவாரஸ்யமான விஷயங்கள் பிரபல்யங்களைப் பத்தி எழுதும் சிறு தகவல்காரர்கள், எந்த அசௌகர்ய நேரத்திலும் அவனைத் தொலைபேசியில் அழைத்து, உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டா? – உங்களுக்குப் பிடித்த காலை உணவு என்ன? – இப்படியெல்லாம் அதி சுவாரஸ்யமான தகவல்களை தங்கள் பொது அறிவு விருத்திக்காகக் கேட்டு பிரசுரிக்க விரும்பினால், அவன் சலித்துக்கொண்டதே இல்லை. எந்த அரங்க-கலந்துரையாடல்களிலும் அவன் தலையைநீட்டத் தயங்கியதேயில்லை. மதுவிலக்கு பற்றிய தன் கருத்தை, புலால் மறுத்தலை, ஜாஸ் இசை பற்றி, உடல்பயிற்சிகள், திருமண பந்தங்கள், அரசியல், பெண்களுக்கு இல்லப் பொறுப்புகள்… என்றெல்லாம் அழுத்தமாய்ப் பதிவு செய்தான்.
திருமணம் சார்ந்த அவன் கருத்துகள் நேரடித்தன்மை கொண்டவை அல்ல. கோடி காட்டினாப்போல குறிப்பு காட்டி நின்றன அவை. தகவல்காரர்கள் இப்படி கொக்கியைத் தொலைபேசியில் ஒரு சமத்காரப் புன்னகையுடன் அவனைநோக்கி வீசினார்கள். பெரும்பாலான கலைஞர்கள் இதில் விக்கித்துப் போவார்கள். என்றாலும் அவன் சாமர்த்தியன். நல்ல சமூக அந்தஸ்தில் இருந்த ஒரு நாரிமணியிடம் அவன் கொஞ்ச வருஷங்களாய் மயக்கம் கொண்டிருந்தான், என்பது ஊரறிந்த ரகசியமாய் இருந்தது. கூடாக் காதல். ஒருதலைக் காதல் அது. அவனது மயக்கத்தை அவன் வெளிப்படுத்தி விடவில்லை யானாலும், அவள் அவனை உதாசினப் படுத்தியே வந்தாள், என்பதும் யாவரும் அறிந்திருந்தார்கள். அவனது எழுத்துக்கட்ட நடுப்பகுதியில் வெளியான அவனது படைப்புகளில் இந்த அசாதாரண மோகமும், அதன் வலியும் உணர்த்தப்பட்டன.
… அவர் அதை எழுதியிருந்தார். அந்தச் சீமாட்டியுடன் அவர் காத்த அல்லது பாராட்டிய நேசத்தினால், அதன் வலிமிகுந்த உள் ஆக்கிரமிப்பினால், பிற அந்தஸ்து குறைந்த பெண்கள் அவரை அணுகுவதை அவரால் தவிர்க்க முடிந்தது. பிராபல்யம் மிக்க பெண்கள் என்கிற வட்டம் போட்டால் நாங்களும், என அவர்கள் அந்த வட்டத்தின் சிதறிய நட்சத்திரங்களாய் இருக்கிறவர்கள்… திடுமென்று கல்யாண பந்தத்தை நெருக்கமாய் உறுதிசெய்யத் தக்க எதிர்பாராத பரிசுகளை ஒரு பிரபல நாவலாசிரியன் என்றால் வழங்க முன்வந்தார்கள் அவர்கள். அவரைநோக்கிய அந்தப் பெண்களின் கண்களில் நேரே பதிவாளர் அலுவலகமும், அதன் பதிவேடும் தெரிந்தன. அவர்களிடம் அவர், மகத்தான காதல்வேட்கை கொண்டபடி, எந்த நிலையான திருமண பந்தத்திலும் தன்னால் கட்டுப்பட முடியாது என்று தெரிவித்தார். அவரது அசட்டு விளக்கம் அந்தப் பெண்களை ஆயாசப்படுத்தியது, என்றாலும் அவரை அவர்களால் கோபித்துக்கொள்ள முடியவில்லை.
ஒரு பெருமூச்சுடன் அவர், எனக்கு எப்பவுமே இனி, காலகாலத்துக்குமே அநேக லொளகிக இன்பங்கள் கொடுப்பினை இல்லை… என்றார். குடும்பம் நடத்த, பிள்ளைகள் பெற்றுப் பேணும் பரவச, பிரசவ பாக்கியம்… எனக்கு இல்லாமல் போயிற்று, என்றார். அது ஒரு தியாகம். எனது எழுத்து லட்சியத்துக்கான தியாகம்… மாத்திரமல்ல. அவரது சந்தோஷங்களுக்காக துணைவரும் அந்தப் பெண், அவளுக்காகவும்தான். நான் அவளை ஏமாற்றிவிடக் கூடாது அல்லவா? மனசில் ஒருத்தியோடு, உறவில் இன்னொருத்தியோடு உறுத்தலாய் வாழ்வதா? என் எழுத்துகள் இந்த உறவுசார்ந்த துக்கங்களால் திகைத்துப் போய்விடாதா… காவிய சோகம் காட்டினார் ராய். அப்படியே அந்தப் பெண்களுக்கும் காட்டினார் ¢டாடா.
ஒரு ஓவியனோ, எழுத்தாளனோ… கலைஞன் தன் மனைவியால் இடைஞ்சல் படக்கூடாது என்றேதான் நினைக்கிறான். எங்க வெளியே போனாலும் அவளையும் அவன் கூட்டிப்போகும்படி அவள் நிர்ப்பந்தம் பண்ணினால், பெரும்பாலும் அது அவனுக்கு இடைஞ்சலாகவே முடிகிறது. அட, மனைவியை அழைத்துப் போக முடியாத, அவன் மாத்திரம் விசிட் அடிக்கிற இடங்கள் கொள்ளையாய் இருக்கின்றன. சரி என்று அவளை விட்டுவிட்டுப் போனால், அவளுக்குத் தெரியாமல் போனால், இந்த மூக்குவேர்த்த தகவல் கழுகுகள் கிசுகிசு எழுதி, அவரது சமூக மதிப்பை மரியாதையை சூறைவிட்டு விடுகிறார்கள். அத்தனைநாள் அவர் பாடுபட்டு பொட்டலத்தில் கட்டி காபந்து பண்ணி வைத்திருந்த மரியாதையில் பொளக், ஓட்டைபோட்டு விடுகிறார்கள். அல்ராய் கியர் ஒரு பிரம்மச்சாரி. வயசு இப்ப ஐம்பது. இனிமேல் கல்யாணம் கில்யாணம் என்று எந்தக் கச்சடாவும் வேணாம்.
ஓர் எழுத்தாளன் எப்படி இருக்க வேண்டும், என்னென்ன செய்ய வேண்டும், என்பதற்கு அவரே உதாரணம். அப்படி இருந்தால் எந்தளவு உயரலாம் என்பதற்கும் அவரே சாட்சியம். அவர் ஒரு எழுத்துத் தொழிற்சாலை. அந்த ஒழுக்கம் பின்பற்றப்பட வேண்டியதொன்று. அவரது சூட்சும அறிவு, நேர்மை, செயல்திட்டங்கள், நோக்கங்கள், முடிவுகள் சார்ந்த திட்டமிடுதல்… அவரது எல்லாமே பின்பற்றப்பட வேண்டியவை என்பதில் சந்தேகம் இல்லை. (குறைந்தபட்சம் அவருக்கு.) அவர் ஒரு நடமாடும் பல்கலைக்கழகம். நல்ல ஆசாமி அவர். சில சில்லரைப் பயல்கள் அவரை தூஷணை பேசலாம். பூரண பொற்குடம் அல்லவா அவர்.
அவரைப் பற்றிய நன் நினைவுகளுடன் நான் தூங்க முயற்சி செய்தேன். நல்ல தூக்கம் என்னை ஆட்கொள்ளும் அப்போது. மிஸ் ஃபெல்லோசுக்கு ஒரு குறிப்பைக் கிறுக்கிவைத்தேன். என் புகைக்குழாயின் சாம்பலைத் தட்டிக் கொட்டினேன். கூடத்து விளக்கணைத்துவிட்டு, படுக்கையறைக்குப் போனேன்.
>>>
தொடரும்
storysankar@gmail.com

Series Navigationகனவுகளின் விடியற்காலைபஞ்சதந்திரம் தொடர் 7 – தேவசர்மாவும் ஆஷாடபூதியும்
author

எஸ். ஷங்கரநாராயணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *