கனிமொழி. ஜி கவிதைகள் — ஒரு பார்வை

This entry is part 8 of 12 in the series 15 மார்ச் 2020

   

    ‘ கோடை நகர்ந்த கதை ‘ தொகுப்பை முன் வைத்து …

     ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

   திருவண்ணாமலையில் பிறந்து கடலூரில் வசித்து வருபவர் கனிமொழி . ஜி .இவரது முதல் தொகுப்பு

‘ மழை நடந்தோடிய நெகிழ்நிலம் ‘ [ 2014 ] . அடுத்த இரண்டு ஆண்டுகள் கழித்து வந்ததுதான் ‘ கோடை

நகர்ந்த கதை ‘ ! ” உறவுகளின் பாசாங்குகள் , உணர்வுகளின் தத்தளிப்புகள் , ரகசியமாய்க் கசியும் காயங்கள் ”  கனிமொழியின் கவிதைகளில் காணப்படுவதாக மனுஷ்யபுத்திரன் குறிப்பிடுகிறார்.

     தன் சிறிய அழகான முன்னுரையில் கனிமொழி , ” என் மனவெளியின் வளைகோட்டுச் சித்திரங்களுக்குள் எனக்குகந்த சொற்களின் நிறமிகளை நான் நிரப்பியிருக்கிறேன் … ” என்கிறார்.

     பல நல்ல கவிதைகளைக் கொண்ட தொகுப்பிது ! இவர் மொழியைக் கையாளும் போது சொற்கள்

காட்சிகளாக விரிகின்றன.நிதான போக்கால் இவர் நடையில் ஓர் அமைதியும் நுணுக்கமும் வாய்த்துள்ளன.

கவிதையில் நல்ல கட்டமைப்பு காணப்படுகிறது.

    ‘ வனம் பழகுதல் ‘ என்ற கவிதையை இரண்டு கோணங்களில் பார்க்கலாம். ஒன்று வனம் சென்று

திரும்பிய அனுபவம் , மற்றொன்று வாழ்க்கைப் பாதை .

திசைகள் தொலைந்த அடரிருளில்

காலிடறும் சிறு புல்லும் கடும் பாறையாகிறது

    — என்று கவிதை தொடங்குகிறது. தன் பயத்தைச் சிறு புல்லின் மீது இறக்கி வைத்ததால் புல் கடும்பாறையாகிவிட்டது.

   ‘ கதிர் இறங்காத நிழல் படர்த்தி ‘ வனம் இருப்பதால் அதைக் ‘ கருத்த பிரதி ‘ என்கிறார். நல்ல சொல்லாட்சி. அப்படிப்பட்ட வனத்தைப் பார்க்கும் போது ‘ விழிகளில் இருள் அறைந்து கலைகிறது ‘ என்பது கவிஞரின் நுணுக்கமான பதிவு.

பின் முதுகில் கூரழுத்திய பதற்றம்

மெல்ல உதிர்கிறது

சீரற்ற சுவாசம் இயல்பாகி சுதந்திரத்தின் மனம்

                     நாசியேறுகிறது

   — என்று கவிதை முடிகிறது. வித்தியாசமான கருப்பொருள் கையாளப்பட்டுள்ளது.

     ‘ அப்போதெல்லாம் ‘ கவிதை , ஆண் – பெண் பிள்ளைப் பருவ நினைவுகளைப் பதிவு செய்கிறது. ஆண்

விலகிச் சென்றதைக் கவலையோடு பேசுகிறது.  கவிதை.

அப்போதெல்லாம் நீ இப்படியில்லை

சிறு நெல்லி பறித்துத் தந்து கடிச்சுவையில்

என் முகச்சுருக்கம் கண்டு ஏளனம் செய்வாய்

   —- எனக் கவிதை தொடங்குகிறது. மாலை வீடு திரும்பும் போது அவளை முதுகில் அறைந்துவிட்டு

ஓடுவானாம் அவன்.

வெம்மை பூசிக்கொண்ட என்விரல் நுனிகளை

உன் குளிர் விரல்களால் பற்றிக்கொள்வாய்

   — என்று ஸ்பரிச சுகம் மறக்கக் கூடியதா

இப்படிப்பட்ட 6 ,7 சம்பவங்களை இக்கவிதை வரிசைப்படுத்துகிறது. சொல்லோட்டம் மிகஸ் சீராக ,

அழகாக அமைந்துள்ளது.

    இத்தொகுப்பின் தலைப்புக் கவிதை ‘ கோடை நகர்ந்த கதை ‘ மிகச் சிறிய கவிதை.

காற்றில் பறந்து

என் மேசைக்கு வந்த

இலைச்சருகு

கோடை நகர்ந்த

கதையைச் சொல்லி

சரசரக்கிறது

   — கவிஞர் பிரமிளை இக்கவிதை நினைவுபடுத்துகிறது. மிகச் சாதாரணமாக இருக்கிறது.

    ‘ வலியின் நிறம் ‘ பெண் மட்டுமே எழுதக்கூடிய கவிதை. மகளைப் பெற்றெடுத்த அனுபவத்தைப் பதிவு

செய்துள்ளது. இதில் நீலம் , சிவப்பு , மஞ்சள் , ஊதா ஆகிய நிறங்கள் பேசப்படுகின்றன. மேலும் இறுதியில் தாயையும் மகளையும் ஒரு வானவில் வளைத்திருப்பதாகக் கவிதை முடிகிறது.வித்தியாசமான

கவிதையிது.

     ‘ மகிழ்வென்பது அறிதலில்லை ‘ என்ற கவிதை , மனக்கவலையில் சிக்கிக்கொண்ட ஒரு திணறலை முன்வைக்கிறது. எந்த அனுபவத்திலும் மனம் ஒட்டாமல் ஒரு விலகல் குரலுக்குரியவரின் மனத்தைக்

கனக்கச் செய்கிறது.

என் நிலத்தின் புழுதியற்ற ஆடை

வெறுமையின் வடிவைக் கொண்டிருக்கிறது

   —என்கிறார் கவிஞர்.

மாறாத வரிசைக் கோடுகளுக்கு ஏற்றவாறு

சுருங்கிப் போனதிந்த வாழ்வு …

   — என்பதில் சுய இழப்பின் வேதனை வாசகர் மனத்தில் எளிதில் சென்றடைகிறது. பாசாங்கில்லாத

வெளிப்பாடு கவிதைக்கு ஒரு தனித்தன்மையை உண்டாக்கிவிடுகிறது.

‘ வாழ்வு பயில் ‘ என்ற நான்கு வரிக்கவிதை பிள்ளைப் பாசத்தை சூசகமாக வெளிப்படுத்துகிறது.

அலகேந்தும் இரையோடு

கூட்டுக்கு மீளும் பறவையிடம்

எளிய வாழ்வைப்

பயில முயல்கிறேன்

   — கவிதையைப் படித்து முடித்தவுடன் , பிறருக்காக வாழ்வதே வாழ்க்கையின் ஆதார சுருதி என்ற

கருத்தேற்றம் [ concept ] புலப்படுகிறது. இயற்கை மனிதனுக்கு எப்போதும் ஆசானாக இருக்கிறது.

   வாழ்வியல் பேசுகிறது ‘ அனுபவங்கள் ‘ என்ற கவிதை.

நேற்றின் அனுபவங்கள்

தன் பருமனையிழந்து

கோப்பையின் அடியில்

கசந்து தேங்குகின்றன

நாளையின் கனவுகளோ

இன்றின் கோப்பைக்குள் அடங்காது

நிரம்பி வழிகின்றன

   — இந்த இரட்டைப் படிமக்கவிதை வாழ்க்கைச் சிக்கலைக் காட்டுகிறது. ‘ கசந்து தேங்குகின்றன ‘

என்பதில் ஓர் அழுத்தத்தை உருவாக்கி மனக்காயத்தை உனர்த்துகிறது.

   ‘ பெண்தொடர் இருள் ‘ பல வாயிகளைய் கொண்ட சிறு கவிதை.

தன்னால் பார்க்கவியலாத

நடுமுதுகுப் பெரும் மச்சமென

பெண்ணை

எப்போதும் பின் தொடர்கிறது

ஓர் இருள்

   — கவிதைக்கு வெளியே பெண்ணின் பல பிரச்சினைகள் சிதறிக் கிடக்கின்றன. எதைப் பரிசீலிப்பது ?

இதில் புதிய உவமையை நீக்கினால் சொற்கள் சரிந்து கவிதை காணாமல் போகும்.

   ‘ நிலவானவள் ‘  கவிதையில் ‘ ஒரு நிலவு’ என்ற சொற்கள் மீண்டும் மீண்டும் வருகின்றன. இந்த உத்தி ஆத்மாநாம் , மனுஷ்யபுத்திரன் ஆகியோரை நினைவுபடுத்துகின்றது.

அவளில்லாத எல்லா இரவுகளிலும் தான்

நிலவைப் பார்த்துக் கொள்வதாகச் சொன்னான்

   — இவை இக்கவிதையில் முன் நிற்கும் வரிகள். ஆணின் பொய்களுக்கு அளவில்லை. ஆனால் அவை

பெண்ணால்தான் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

   ‘  கோணங்கள் ‘ – இது ஒரு  நல்ல  கவிதை.

க்ளைடாஸ்கோப்பின் சிறு துளைவழி

பார்த்த போது மகிழ்வின் வண்ணங்களை

கைக் கொண்டிருந்தன என் கனவுகள்

   — என்று கவிதை தொடங்குகிறது. ஒவ்வொரு படியாக ஏறி ஒரு தளத்தை அடைவது போல  கவிதையின் சீரான ஓட்டம் அமைந்துள்ளது. ‘  அசைவற்ற இறக்கைகளுடன் பறந்து செய்கிறேன் நான் ‘

எனக் கவிதை முடிகிறது. இறக்கைகள் அசைந்தால்தான் பறக்க முடியும் . இது அறிவியல். ‘ அசைவற்ற

இறக்கைகளுடன் பறந்து செல்கிறேன் நான் ‘ என்றால் கவிதை ! வாழ்க்கையில் நகர்தல் சாத்தியப்படவில்லை என்றே பொருள்படும், திறந்தவெளிச் சிறைச்சாலை என்பது போல

    நிறைவாக என் பார்வையில் , கனிமொழி. ஜி சராசரிக்கு மேலான கவிதாயினியாகத் தெரிகிறார். ஆனாலும் சில கவிதைகளில் ஒருவித வழுக்குத்தன்மை புலப்படுகிறது. இது கவிதை , வாசகர் மனத்தில்

தங்காமல் போகும் அபாயத்தை உருவாக்கக்கூடியது.

Series Navigationகுமுதம் –கொன்றை இணைந்து வழங்கும் சங்க இலக்கியச் சிறுகதைப் போட்டிபின்நகர்ந்த காலம் – வண்ணநிலவன் -இலக்கியப் பார்வையில்
author

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *