கேரளாவும் கொரோனாவும்

This entry is part 1 of 9 in the series 31 மே 2020

நாகர்கோவில் கேரளா எல்லையில் பாரசாலை பக்கம் ஒரு முக்கிய பிரமுகரின் திருமணம். ஊர்மக்கள், அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகளென பலரும் வந்து கொண்டே இருக்கிறார்கள்.கேரள போக்குவரத்து துறை அமைச்சரும் ஒரு காரில் வந்து இறங்கினார். அவருடைய சக நண்பர்களும் கூடவே வந்து இறங்கினர். வாசலில் வரவேற்றுக் கொண்டிருந்த இருவர் எல்லோரையும் வரவேற்பதைப் போலவே வாருங்க சார் என அவரை உள்ளே அழைத்து வரவேற்றார். ஆச்சரியமாகத்தான் இருந்தது அந்த திருமணத்திற்கு சென்றிருந்த நம்ம ஊர் நண்பருக்கு. அவரும் கற்பனை செய்து பார்த்தார் நம்ம ஊரில் ஒரு சாதாரண சட்டமன்ற உறுப்பினர் வந்தாலே திருமண வீட்டார் எவ்வளவு அமர்க்களமாக வரவேற்பார்கள். எத்தனை பேனர்கள் தொங்க விட்டிருப்பார்கள். வாண வேடிக்கையுடன் எத்தனை வாத்தியங்கள் முழங்கி இருக்கும் என்று.

அவர் அந்த கற்பனையில் மிதந்து கொண்டிருக்கும் நேரத்தில் இன்னொரு வாகனம் வந்து நின்றது. அது மாவட்ட ஆட்சித் தலைவரின் வாகனம். தபேதார் கதவைத் திறக்க மாவட்ட ஆட்சித் தலைவர் வாகனத்தை விட்டு இறங்கினார். அதற்குள் வெளியே வரவேற்க இருந்தவரில் ஒருவர் மண்டபத்தின் உள்ளே போய் மாவட்ட ஆட்சித் தலைவரின் வருகையை சொல்ல உள்ளே இருந்த ஒரு கூட்டமே வெளியே வந்து மாவட்ட ஆட்சித் தலைவரை மிகுந்த மரியாதையுடன் அழைத்துச் சென்றது.

நண்பருக்கு மிகுந்த ஆச்சரியம். இந்த ஊரில் அமைச்சருக்கு அப்படியொன்றும் இவர்கள் மரியாதை செலுத்தவில்லை. ஆனால் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு இவ்வளவு பெரிய மரியாதையா என்று. பொறுமை இழந்த நண்பர் அந்த திருமண வீட்டாரின் ஒருவரிடமே கேட்டு விட்டார்.

‘’என்ன ! இந்த கல்யாணத்திற்கு முதல்லே அமைச்சர் வந்தாரு. அவரை எல்லோரையும் போலவே வரவேற்று உள்ளே அனுப்பினீங்க? இவரு ஒரு மாவட்ட கலெக்டர்தானே… இவருக்கு மட்டும் இவ்வளவு பெரிய வரவேற்பு கொடுக்கறீங்க?’’ என்றார்.

உடனே அவர் ‘’அமைச்சர் இந்த ஆட்சி இருக்கிற வரைக்கும்தான் அமைச்சர். ஆனா அவரு ஐ ஏ எஸ் படிச்சவர். எண்ணைக்கும் அவரு நிரந்தரமா ஆட்சித் தலைவர்தான்’’ என்றார் ஒரே பதிலில். 

அப்போதுதான் நண்பருக்கு கேரள மக்கள் படித்தவர்களுக்கு கொடுக்கும் மரியாதை விளங்கியது.  அதேபோல்தான் அங்கே அரசியல்வாதிகளும் படித்தவர்களுக்கு மரியாதை கொடுப்பார்கள். ஆனாலும் அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்குமிடையேயான பனிப்போரைப் பொறுத்தவரை கேரளாவும் மற்ற மாநிலங்களுக்கு விதி விலக்கல்ல. அப்படியொன்றும் அங்கேயும் அதிகாரிகள் சுதந்திரமாக செயலபட இயலாது. எதிர் கட்சியிலிருந்து சாதாரண குடிமகன் வரை கழுகுப்பார்வையுடன் எல்லாவற்றையும் கண்காணித்து கொண்டே இருப்பார்கள். ஆளும் வர்க்கம்தான் மிகுந்த எச்சரிக்கையுடன் முடிவெடுக்கும்.

அதிகாரிகளின் ஆலோசனைகள் அரசாங்கத்திற்கு கடந்து செல்லும். அரசாங்கம் உத்தரவிடும். மாற்று கருத்துடைய எதிர்க் கட்சிகள் போராட்டம் அறிவிக்கும். மாதத்தில் பெரும்பாலான நாட்கள் கேரளாவில் கடையடைப்பு, பந்த் போன்ற நாட்களாகவே இருக்கும். சட்டமன்ற வளாகத்திற்கு முன்பு எப்போதுமே போராட்டக்காரர்களின் பந்தல்களை நிரந்தரமாக காணலாம்.

அதில் தனி மனிதர்கள் சிலர் சின்ன கூரைப் பந்தலில் வருடக்கணக்காய் போராட்டம் செய்த வரலாறும் உண்டு. கேரளாவை நம்பி இன்னொரு மாநிலத்திலிருந்து அங்கே திட்டமிட்டபடி பயணம் செய்து திரும்ப இயலாது. காரணம் ஏதாவது ஒரு கட்சி நாம் போகிற அன்று திடீரென்று பந்த் நடத்தும். பேருந்துகள் ஓடாது. ஆட்டோக்களென எந்த சாலை போக்குவரத்தும் இருக்காது. உங்களின் சொந்த இரு சக்கர வாகனத்தில் சென்றால் கூட கல்லெறிவர்.

இதெல்லாம் கேரள யதார்த்தமாய் இருந்தாலும் கொரோனா , இயற்கை சீற்றம் போன்ற அசாதாரணமான தருணங்களில் பொதுமக்களோடு அரசியல் கட்சிகளெல்லாம் அரசாங்கத்தோடு ஒத்துழைக்கும். அரசாங்கம் இடுகிற உத்தரவை மக்கள் இருநூறு சதவீதம் நடைமுறைப் படுத்துவர். எதிர்க்கட்சிகள் இந்த மாதிரி அரசியல் ரீதியான விமர்சனங்களை மிக கவனமாகவே வைப்பர்.

மக்கள் உன்னிப்பாக எல்லாவற்றையும் கவனித்து கொண்டிருக்கிறார்களென்ற அச்சம் அரசியல்வாதிகளுக்கும் உண்டு. ஊடகங்களும் அரசியல்வாதிகளின் தவறுகள், தடுமாற்றங்களை உன்னிப்பாக கவனித்து கொண்டிருப்பர். காரணம் கேரளாவில் ஒருவனுக்கு சாப்பிடுவதற்கு உணவில்லையென்றாலும் கூட அவன் செய்தித்தாளை காசு வாங்கி படிக்கத் தவற மாட்டான். சாலையில் பார்த்தாலே பலரும் கை அக்குளுக்குள் ஒரு செய்தித்தாளை மடித்து வைத்துக் கொண்டு நடந்து செல்லும் காட்சி சாதாரணம். அந்த அளவிற்கு எல்லோருக்கும் செய்தித்தாள் வாங்கி படிக்கும் பழக்கம் உண்டு. இந்தச் சூழல்தான் கொரோனா போன்ற காலக்கட்டங்களிலும் ஆளும் கட்சியையும் எதிர்கட்சியையும் பொது மக்களையும் ஒருங்கிணைந்து ஆரோக்கியமாக செயல்பட வைக்கிறது.

கொரோனா போன்ற சூழல்களில் தனிமனித இடைவெளி, பொது இடத்தில் துப்புதல், முக கவசமின்றி உலாவுதல், ஊரடங்கு மீறல் போன்ற விஷயங்களில் தமிழக சூழலில் மக்களில் சிலர் காவல்துறையினருக்கு கூட பயமில்லாமல் பயணிப்பர். ஆனால் கேரளாவில் இந்தத் தவறை ஒரு தனி மனிதன் செய்தால் அவனருகில் இருக்கும் இன்னொரு மனிதனே அதை கண்டித்து விடுவான். இத்தோடு காவல்துறையினரும் மிகவும் கண்டிப்புடன் அதை செயல்படுத்துவர். அந்த அளவிற்கு பொதுமக்களுக்கு தான் வாழும் சமூகத்தின் மீதே பயமுண்டு. அதனால்தான் அங்கே பொது கழிப்பிடங்கள் சுத்தமாக இருக்கின்றன.

தமிழகத்தில் காவல்துறையினர் அடித்தாலும் பிரச்சனை. சட்டத்தையும் நடைமுறைப் படுத்த வேண்டும். அன்பாய் அவர்களுக்கு கொரோனா விழிப்புணர்வை செய்கிற நிர்ப்பந்தம். ஆகப் பார்த்தால் அட்டகாசம் செய்கிற அரசியல்வாதியின் பிள்ளையை அடிக்கவும் கண்டிக்கவும் இயலாமல் அவஸ்தைப்படுகிற ஒரு பள்ளி ஆசிரியரின் மனநிலைதான் அவர்களுக்கும்.

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் இயற்கையாகவே கேரளாவின் ஊரமைப்பு சாதகமாகவே இருக்கிறது. தற்போது திருவனந்தபுரம், எர்ணாகுளம் போன்ற நகரங்களில் அபார்ட்மென்ட் குடியிருப்புகள் வந்தாலும் பெரும்பாலான வீடுகள் தனி வீடுகள். வீட்டைச் சுற்றி பெரிய காலி இடம் இருக்கும். ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு கிணறு இருக்கும். ஒரு குறுகிய சந்து போல் இருக்கும். அதற்குள் நான்கு சக்கர வாகனங்கள் போகாது. அதற்குள் போனால் உள்ளே பெரிய வெட்ட வெளியில் சுற்றுச் சுவருடன் மரங்களுக்கிடையே தனி வீடு இருக்கும். எப்படி பார்த்தாலும் சமூகத்தில் மனிதர்களுக்கிடையே அங்கே சமூக இடைவெளிக்கு சாதகமான அம்சங்கள் நிறைய உண்டு. அவர்கள் பெரும்பாலும் தமிழகத்திலிருந்து வருகிற அரிசி, காய்கறி போன்ற வேளாண் பொருட்களையே நம்பி வாழ்ந்தாலும் நெருக்கடியான நேரங்களில் அவர்களால் வீட்டு வளாகத்திலுள்ள தண்ணீர், கிழங்கு, ஏரி மீன், வாழை, தென்னை, பலா என எல்லாவற்றையும் வைத்து ஆரோக்கியமாக வாழவும் இயலும்.

நூறு சதவீதம் எழுத்தறிவை எளிதில் எட்டியவர்களானதால் படித்தவர்களிலிருந்து கூலி வேலை செய்கிற தொழிலாளர்கள் வரை அங்கே எல்லோருக்கும் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு கொரோனாவிற்கு முன்பே உண்டு. எல்லோருமே உணவு உண்பதற்கு முன்பு கையை சுத்தமாக கழுவி விட்டு சாப்பிடும் பழக்கம் கொண்டவர்கள், வெளியே சென்று வந்தால் கை கால் மட்டுமல்ல பெரும்பாலானவர்கள் தினம் இருவேளை தலைக்கு குளிப்பவர்கள். தினமும் தலைக்கும் உடலுக்கும் தேங்காய் எண்ணெய் தேய்த்து குளிக்கும் வழக்கம் கொண்டவர்கள். சமூகத்தில் சுத்தம் பார்த்து வளர்ந்தவர்களாதலால் சமூகத்தில் சாதி, பொருளாதார வேறுபாடின்றி எல்லோருமே சுத்தம் சுகாதாரம் பேணுபவர்கள். இதெல்லாம்தான் கேரளாவில் கொரோனாவிற்கு எதிரான போரில் அவர்களுக்கு சாதகமான அம்சங்கள். இந்த பழக்கவழக்கங்களை கேரளாவின் எல்லைப் புற தமிழக மாவட்டங்களிலும் காண இயலும்.

இன்னொன்று கொரோனா நோய் கேரளாவை எட்டிய உடனேயே எல்லா ஊடகங்களும் அதை ஒழிப்பதற்கான போரில் கங்கணம் கட்டிக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்துகிற செய்திகளை தொடர்ந்து வெவ்வேறு நிகழ்ச்சி வடிவங்களில் மக்களுக்கு கொடுத்துக் கொண்டே இருந்தனர். கேரளாவின் சுகாதாரத்துறையின் தன்னலமற்ற சேவை மக்களிடையே மிகப் பெரிய அளவில் விழிப்புணர்வையும் நம்பிக்கையையும் அளித்தது.

மருத்துவர்களும், செவிலியர்களும், சுகாதாரப் பணியாளர்களும் போர் படை வீரர்களின் நேர்த்தியுடன் செயல்பட்டனர். அதனால்தான் அங்கே ஒவ்வொரு தெரு முனையிலும், ஒவ்வொரு கடையின் முன்பும் சோப்பும், நீரும், வாஷ் பேசின் போன்ற இத்யாதிகள் ஆயுதங்களாய் மக்களிடையே கொரோனாவை ஒழிக்கும் போரில் முன்னிறுத்தப்பட்டன. பல தேவையான பொருட்களை விற்கிற கடைகளின் முன்பு சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டிய அடையாளங்களாக உரிய தூரங்களில் மனிதர்கள் நிற்பதற்கு வட்டங்கள் வரையப்பட்டு வரையறுக்கப்பட்டன. அதுவே கொரோனா கொடூரமான பிறகு பிற மாநிலங்களும் கடைபிடிக்க முன்மாதிரியாக இருந்தது.

கேரளாவில் பெரும்பாலான மக்கள் அயல்நாட்டில் வேலை பார்ப்பவர்கள். அதனால் வீட்டிற்கு இருவராவது அயல் நாட்டில் வேலை செய்பவர்களாக இருந்தார்கள். சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமான கேரள மக்கள் வெளிநாடுகளில் வேலை பார்க்கிறார்கள். அதனாலேயே கொரோனா முதன்முதலில் கேரளாவை எட்டிப் பார்த்தது. துவக்கத்திலேயே வெளிநாட்டிலிருந்து பயணிகள் விமானத்திலிருந்து இறங்கிய உடனேயே மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் அவர்களை உரிய மருத்துவ பரிசோதனையுடன் தனிமைப் படுத்தினர். விமான நிலைய பரிசோதனையிலிருந்து ஏமாற்றி தப்பித்த கதைகளெல்லாம் அங்கே ஈடேறவில்லை. அந்த அளவிற்கு அங்கே மருத்துவ பரிசோதனையை முறையாக செய்தார்கள்.

ஊரடங்கு நடைமுறைகளுக்கு முன்பாகவே வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களையெல்லாம் தனிமைப் படுத்தியும், கொரோனா பாதிப்பிற்குள்ளானவர்களை குணப்படுத்தி கொரோனா நோய் இல்லையென்று இருமுறை ஊர்ஜிதமான பின்பும் குறிப்பிட்ட நாட்களுக்கு தனிமைப் படுத்தும் நடைமுறையையும் , அவர்களின் உறவினர்களையும் தொடர்பில் இருந்தவர்களையும் இதே முறையில் தனிமைப் படுத்துதலையும் அரசும் மக்களும் முறையாக கடைபிடித்தனர்.

இந்த இக்கட்டான தருணத்திலும் அவர்கள் வயதானவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் போது வயதானவர்கள்தானே என்று கடுகளவும் கருதவில்லை. மாறாக அவர்களுக்கு எதிர்ப்பு சக்தி குறைவு என்ற அளவில் இன்னும் அதிக கவனத்துடன் சிகிச்சை அளித்தனர். அதனாலேயே உலகின் கொடூரமான கொரோனாவிலிருந்து பத்தனாம்திட்டா நகரசபைக்குட்பட்ட 93 மற்றும் 88 வயதான தம்பதியினரை மீட்டு உலக சாதனை செய்ய இயன்றது. கொரோனாவை சிகிச்சையாலும் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையை அந்த தம்பதியினர் மூலம் உலகிற்கு அவர்களால் அளிக்க இயன்றது. அந்த நம்பிக்கையே பல நோயாளிகளின் எதிர்ப்பு சக்தியினை பன்மடங்கு அதிகரிக்க வைத்திருக்கும்.

இன்னும் ஒரு குறிப்பிடத்தக்க விஷயம் கேரளாவில் சிறியது பெரியது என்றில்லாது எந்த உணவு விடுதிக்கு சென்றாலும் இலையை போடுவதற்கு முன் அவர்கள் ஒரு கோப்பை நிறைய வென்னீர் வைப்பார்கள். அந்த வெந்நீரும் ராமச்சம் வேர் இடப்பட்டதாகவோ அல்லது மூலிகை நீராகவோ இருக்கும். அந்த அளவிற்கு அங்குள்ள மக்களுக்கு சுகாதார விழிப்புணர்வு முழுமையாக உள்ளது. கேரளாவின் தட்பவெப்பநிலை காரணமாக வைரஸ் போன்ற தொற்றுகளுக்கு அடிக்கடி இலக்காகிற மாநிலமானதால் அதை எதிர் கொள்வதில் மற்றவர்களைவிட அவர்களுக்கு முன்னனுபவம் உண்டு. இன்னும் சுவாசக் குழாய் தொடர்பான நோய்கள் அங்கே பரவலாக அறியப்பட்ட நோயானதால் ஆயுர்வேதம், ஹோமியோ போன்ற பாரம்பரிய மருத்துவமுறைகளால் அவர்கள் அதை எதிர்கொள்கிற அனுபவமும் அவர்களுக்கு சாதகமான அம்சங்களாகும். பெரும்பாலும் இயற்கையோடு இயைந்து வாழ்கிற வாழ்க்கை, வென்னீர் குடித்தல், நீராவி பிடித்தல், பாலில் மஞ்சள், நல்ல மிளகு சேர்த்து குடித்தலென எல்லா பழக்கவழக்கங்களுமே போர் படை வீரர்களாய் அவர்களை கொரோனாவிலிருந்து காத்தன. கொரோனா என்ற  துஷ்டனை துஷ்டனாக நம்பினார்கள். தூர விலகி நின்றார்கள். அதனாலேயே கொரோனாவால் அந்த அளவிற்கு அங்கே வேகமாய் தன் தாக்குதலை நடத்த இயலவில்லை.

இன்னொரு முக்கியமான விஷயம் கேரளாவில் அரசு ஊரடங்கை தளர்த்தினால் கூட பெரும்பாலான மக்கள் அவர்களே முன்னெச்சரிக்கையாய் இரண்டு நாட்களுக்கு வெளியே வர மாட்டார்கள். ஆனால் சென்னை போன்ற நகரங்களில் அரசாங்கம் எத்தனை முறை எச்சரித்தாலும் தனிமனிதர்கள் சுயநலமாய் ஊரெங்கும் சுற்றித் திரிவர். அவர்களிடம் இங்கிருப்பது சமூகத் தொற்று குறித்த சமூக பயமல்ல. நம்மைத் தொற்றாது என்ற மூடத்தனமான பொது தைரியம்.

இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் அதன் பூகோள அமைப்பிற்கேற்ப பல்வேறு பழக்கவழக்கங்களுடனான சமூக அமைப்பினைக் கொண்டது. ஆனால் கொரோனாவிற்கு எந்த பேதமும் இல்லை. சாதி, இனம், மதம், நிறம், நாடு, பொருளாதாரம், கட்சி, பதவி என எந்த பேதமும் இல்லை, அதனால் நாம் உலகின் நல்ல வழக்கங்கள் எங்கிருந்தாலும் அதை கடைப் பிடித்து கொரோனாவை வெல்வதுதான் விவேகமான வழியாக இருக்கும்.

குமரி எஸ்.நீலகண்டன்

punarthan@gmail.com

Series Navigationதன்னையே கொல்லும்
author

குமரி எஸ். நீலகண்டன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *