தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

This entry is part 4 of 9 in the series 7 ஜூன் 2020

              இருபக்கத்து ஒருபக்கத்து எறி வச்சிரத்தினரே

            ஒருபக்கத்து ஒளிவட்டத்து ஒருபொன் தட்டினரே.          [101]

[இரு பக்கத்து=இரு கைகளில்; தட்டு=கேடயம்]

சிலர் தம் இரண்டு கைகளிலும் ஒரு கையில் எறியத்தக்க வச்சிராயுதத்தை ஏந்தியிருப்பார்கள். வேறு சிலர் தம் கைகளில் பொன்னாலான கேடகம் ஏந்தி இருப்பார்கள்.  

===============================================================================

             தழைவர்க்கக் கருவெப்புத் தடி சக்ரத்தினரே

            கழைமுத்துப் பொதிகக்கக் கிழிகட் கட்சியினரே.           [102]

[கரு=கருக;வெப்பு=வெப்பம்; தடி=தடுக்க; கழி=மூங்கில்; பொதிகக்க=முத்துகள் உதிர]

      அது பாலை நிலம். அங்கே வெப்பத்தினால் தழைகள் கருகுகின்றன. அவ்வெப்பத்தைத் தடுத்து நிறுத்த சிலர் சக்கர பூசை செய்வார்கள். ஒரு சிலர் முத்துகளைச்சிந்தும் மூங்கில்களை உடைய காட்டில் போய்த் தங்குகிறார்கள்.

================================================================================================================காடு பாடியது நிறைவு==================================

                        தேவியைப் பாடுவது

            கவன மாவொடு ஈராறு கதிரும் வாரியூடாடு

                  கனல்கள் தாவி ஓரேழு கடலும் வாரும்ஆலாலம்

            அவனி வேவ வான்வே அளறுவேவ வேவாமல்

                  அயிலும் நாதன்மா தேவி அகில்லோக மாதாவே.       [103]

[கவனமா=வேகமாகப் போகும் குதிரை; வாரும்=வற்றும்; அவனி=மண்ணுலகம்; அளறு=கீழுலகம்; அயிலும்=உண்ட] ஏழு கடல்கள்: உவர்க்கடல், நன்னீர்க்கடல்; பாற்கடல்; தயிர்க்கடல்; நெய்க்கடல்; தேன்கடல்; கருப்பஞ்சாற்றுக்கடல்

      மிக வேகமாகப் போகும் குதிரைகள் பூட்டிய தேரினில் உலா வந்து கொண்டிருக்கும் பன்னிரு சூரியர்களும், கடல் நடுவே தோன்றிய வடமுகாக்கினியும் மற்றும் ஏழு கடல்களும் வற்றிப் போகும்படி ஆலகால விஷம் எழுந்தது. அந்த நஞ்சை எடுத்துத் தானுண்டார் சிவபெருமான். அத்தகைய உலகநாயகனான பரம்பொருளின் நாயகியாக விளங்கி எல்லா உலகங்களுக்கும் தாயாகித் அவற்றைத் தாங்கும் தயை புரிபவளே தேவியாவார்..

=====================================================================================

                   அனக பூமி கோலோகம் அருகுநேமி பாதாளம்

                       அயன்நிவாசம் ஏழ்தீவும் அசலம் ஏழும் ஏழ்காவும்

                  கனகலோகம் ஏழ்ஆழி கஞலவீதி போதாத

                      கலக பூதவேதாள கடகம்மேய மாயோளே.            [104]

[அனகபூமி=புண்ணிய பூமி; கோ=பசு; நேமி=சக்கரம்; அயன்=பிரமன்; நிவாசம்=இருப்பிடம்; அசலம்[மலை; கா=சோலை; கலசம்=பொன்; கஞல=விளங்க; கலகம்=ஒலி; கடகம்=கங்கணம்]

      புண்ணியபூமியான இம்மண்ணுலகம், பாதாள லோகம், பிரம்ம லோகம், ஏழு தீவுகள், அவற்றில் உள்ள மலைகள், பொன்னாலான உலகம், மற்றும் ஏழு கடல்கள், ஆகியவற்றில் போய் ஆடினாலும் இடம் போதாது என்று  கூறத்தக்க அளவிற்கு உரத்த போர்க்குரல் எழுப்பும் பூதவேதாளப் படைகளை உடையவள் கங்கணம் அணிந்துள்ள தேவியாவார்.

=====================================================================================                                                                                  இரவை ஈரும்ஈர்வாள் கொல் என விடாதுபாதாள

                  இருளை வேறுபோய் நூறிஎழிலி ஏழொடேழ்ஆய

             பரவை ஒளிவாள் ஏறுபட நடாவிமீள் சோதி

                  படல குடிகா கோடிபணி மதாணி மார்பாளே.           [105]

[ஈர்தல்=பிளத்தல்; நூறு=அழித்து; எழிலி=மேகம்;பரவை=கடல்; படம்=யானை; பணி=பாம்பு; படலம்=கூட்டம்]

      இரவுப் பொழுதாகிய பகையை இரண்டு கூறாகப் பிளக்கின்ற வாள் இது எனச் சொல்லும்படிக்கு ஒளி வீசித் திகழும் மதாணி என்னும் மார்புப் பதக்கம் அணிந்தவர் அன்னை துர்க்கையாவார் மேலும் அதன் ஒளி பாதாள உலகம் வரை சென்று அங்கும் இருளை நீக்கி ஏழு மேகங்களும், ஏழு கடல்களுமான யானைப் படையின் நிறம் கெட நாகப் பாம்புகளின் உச்சித் தலையில் உள்ள நாகரத்தின மணிகளின் ஒளி மங்கிப் போகும்படி ஒளி வீசித் திகழும் மதாணி என்னும் மார்புப் பதக்கம் அணிந்தவர் அன்னை துர்க்கையாவார்.

====================================================================================

                  நிகரம் வேறு வேறாய நிலவு வீசு பேரார

                  நிபுடமாலை மால்யாறு நிமிர வீழ்வபோல் வீழ

            மகர ஏறும் ஈராளி மதுகை ஏறும் மாறாடி

                  வதன பாகம் ஏய்வாகுவலயம் மோதுகாதாளே.         [106]

[நிகரம்=அளவு; பேராரம்=பெரிய முத்துமாலை; நிபுடம்=நெருக்கம்; மகர ஏறு=ஆண் சுறாமீன்; மதுகை=வலிமை; மாறாடி=மாறிமாறி; வாகுவலயம்=தோள்வளை]

      வேறு வேறான அளவும் ஒளியும் உடைய முத்து மாலைகள் நெருக்கமாக மலை அருவி வீழ்வது போலக் காட்சி தரும்படித் தேவி மாலைகள் அணிந்து கொண்டிருக்கிறார். காளி மாதேவி இரு காதுகளிலும் குண்டலங்கள் அணிந்து கொண்டிருக்கிறார். அவை சுறாமீன் மற்றும் யாளி வடிவங்களில் இருப்பதோடு மாறி மாறி வந்து தோள்களில் மோதுகின்றன.

====================================================================================

             தமர நூபுரா தாரசரணி ஆரணகாரி

                  தருண வாள்நிலா வீசுசடில மோலி மாகாளி

            அமரர் வாழ்வு வாழ்வாக அவுணர் வாழ்வு பாழாக

                  அருளும் மோகினியாகி அமுத பானம் ஈவாளே.        [107]

[தமரம்=ஒலி; நூபுரம்=சிலம்பு; ஆரணம்=வேதம்; தருணம்=இளமை; வாள்=ஒளி; சடிலம்=சடைமுடி; மோலி=முடி; அவுணர்=அசுரர்]

      மகாகாளி சிலம்புகள் தமக்கு ஆதாரம் என்று சரண் அடைந்துள்ள திருவடிகளை உடையவர்; அவர் வேதங்களுக்கு மூலகாரணமாவார்; நிலவைப் போன்று ஒளி வீசும் தலைமுடி உடையவர்; தேவர்கள் வாழவும், அசுரர்கள் அழியவும் அருள் செய்யும் அவரே முன்னர் மோகினியாக வந்து அமுதத்தைப் பங்கிட்டவர் ஆவார்.

=====================================================================================

             எறியல் ஓவிமாவாதம் இரியவீசி ஊடாடும்

                  எழிலி பீறி மாமேரு இடையநூறி ஓர்ஆழி

            முறிய மோதிவான் யாறு முழுதும்மாறி ஆகாயம்

                  முடிய ஏறிமேலாய முகடுசாடு தாளாளே.              [108]

[மாவாதம்=பெருங்காற்று; எறியல் ஓவி=வீசாது அடங்க; எழிலி=மேகம்; நூறி=அழித்து; ஆழி=சக்கரம்; வான்யாறு=ஆகாயவழி; உகடு=அண்ட உச்சி; தாள்=திருவடி]

            அன்னை மாகாளி நடனமிடுவதால் பெருங்காற்றான சண்ட மாருதம் இடையறாது வீசாது அடங்கும்; மேகங்கள் அழியவும், மேரு மலை பொடிப்பொடியாகவும், திசைச்சக்கரங்கள் எல்லாம் ஆகாய வளியை மூடவும், அண்ட முகடும் அதிரும்.

====================================================================================

            வழியும்நீறு வேறாக மகிழும் ஓரோர் கூறு

                  மறம்அறாத ஆண்ஆள மடம்அறாத மான்ஆள

            ஒழியும் ஓரோர் கூறும் ஒருவராகி நேராகி

உடைய கேள்வர் ஓர்பாதி உருகுகாதல் கூர்வாளே.      [109]

[நீறு=வெண்ணீறு; மறம்=வீரம்; மடம்=பெண்மை; கூறு=பாகம்; கேள்வர்=கணவர்]

      இறைவனின் வலப்பக்கம் பூசிய வெண்ணீறு வழிந்து இடப்பக்கம் மிகுந்து காணப்படும். இறைவன் வலப்பக்கம் ஆண் உருவாகக் காட்சி அளிப்பவன். இடப்பக்கம் அவனே பெண் உருவாகத் தோன்றுவான். இப்படி இருபக்கங்களில் இரு உருவாகத் தோன்றினாலும் இருவரும் ஒருவரே ஆவர். மேலும் இருவரும் ஒருவரை ஒருவர் எண்ணி உருகும் அன்பு மிக்க உடையவர் ஆவர்.

====================================================================================                                 

            அதர சோதி மீதாடு குமுத வாச வாயார

                 அமிழ்தமாக நேராக அகில லோகம் ஈரேழும்

            உதர சோபிதா நாபி கமல வாயினால் மீள

                உமிழும் நீலிமேலாய உவண ஊர்தி வளர்வாளே.     [110]

[அதரம்=உதடு; குமுதம்=செவ்வாம்பல்; உதரம்=வயிறு; நாபி=தொப்பூழ்; மீள=மீண்டும்; உவணம்=கருடன்]

      காளி தேவியானவர் ஒளிவீசும் சிவந்த உதடுகளை உடையவர். அவர் சிவந்த ஆம்பல் மலர் போன்ற தன் வாய்க்கு அமுதமாக ஈரேழு உலகங்களையும் உண்டார். பின்னர் அவர்களை தன் நாபித் தாமரையாகிய வாயினால் மீண்டும் வெளிப்படுத்திக் கருடனை ஊர்தியாகக் கொண்டு நீல வண்ணம் கொண்ட அவர் வலம் வருவார்.

=====================================================================================

Series Navigationவஞ்சகத்தால் நிரம்பி வழிகிறது மனித மனம்வெகுண்ட உள்ளங்கள் – 2
author

வளவ.துரையன்

Similar Posts

Comments

  1. Avatar
    P PANDIYARAJA says:

    ஐயா,
    தக்கயாகப்பரணி தொடர் எந்தெந்த இதழ்களில் வந்துள்ளன என்பதைத் தேதிவாரியாகத் தெரிவிக்க வேண்டுகிறேன்.
    நன்றி,
    ppandiyaraja@yahoo.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *