பொய்யில் நிச்சயிக்கப்படுகின்றன திருமணங்கள்….

author
2
0 minutes, 31 seconds Read
This entry is part 7 of 14 in the series 28 ஜூன் 2020

கோ. மன்றவாணன்

      “ஆயிரம் பொய்சொல்லி ஒரு கல்யாணத்தைப் பண்ணி வை” என்று அறிவுரை சொல்கிறார்கள். மொய் இல்லாமல் திருமணம் நடக்கலாம் பொய் இல்லாமல் திருமணம் நடக்காது என்று ஆகிவிட்டது..

      ஆயிரம் தடவைகள் “போய்ச்சொல்லி” ஒரு திருமணத்தை நடத்தி வை என்று சொன்னதாகச் சிலர் சொல்கிறார்கள். இப்படி விளக்கம் அளிப்பவர்களின் நோக்கமும் பொய்சொல்லித் திருமணம் செய்யாதீர்கள் என்பதாகத்தான் இருக்கும்.

      ஒரு திருமணம் நடக்க ஆயிரம் பொய்சொல்லலாம் என்று எந்தச் சான்றோரும் சொல்லி இருக்க முடியாது. பொய் சொல்லக் கூடாது பாப்பா என்றுதான் பாடினார் பாரதியார்.

      பொய்மையும் வாய்மை இடத்த; புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின் என்ற வள்ளுவர் வழங்கிய சலுகையால் நல்லது நடப்பதற்குப் பொய்சொல்லலாம் என்று கருதி இருப்பார்களோ…? உயிர்போகும் இடரில் இருப்பவரிடம் அதிர்ச்சியான செய்தியைச் சொல்லக் கூடாது என்பது வரையில் அந்தக் குறளை ஏற்கலாம்.. சட்டத்தின் ஓட்டையைப்போல் எல்லாவற்றுக்கும் அதைப் பொருத்திக்கொண்டு பொய்க்கு நீதி கற்பிக்கக் கூடாது.

      பொய் என்பது இருபுறமும் கூர் உள்ள கத்தி. ஒரு பொய்யைச் சொல்லித் திருமணத்தை நடத்தவும் முடியும். ஒரு பொய்யைச் சொல்லித் திருமணத்தைத் தடுக்கவும் முடியும். ஆனால் பொய்யால் நிறைவேறும் எதுவும், சிக்கல்களை அள்ளிவந்து குவித்துக்கொண்டே இருக்கும்.

      திருமண அழைப்பிதழிலேயே பொய் அரங்கேறி விடுகிறது. பொறியியல் பட்டம் பெற்ற மணமகளைவிட அதிகம் படித்தவராக மணமகன் படிப்பைக் குறிப்பார்கள். திருமணம் நடந்து குழந்தை பெற்ற பிறகே தெரியவரும், மாப்பிள்ளை 9ஆம் வகுப்பைத் தாண்டாதவர் என்று.

      வாடகை வீட்டைச் சொந்த வீடாகச் சொல்லிக் கொள்வார்கள். நிலபுலன் உள்ளதாக நீளமாகப் புளுகுக் கயிற்றைத் திரிப்பார்கள். சம்பளம் பல்லாயிரம் என்று பொய்க்கம்பளம் விரிப்பார்கள். வயதைக் குறைப்பார்கள். ஜாதகத்தைக்கூட மாற்றி சாதகமாக எழுதித் தருவோர் இருக்கிறார்கள். பெரும்பணக்காரத் தோரணை காட்டுவார்கள். நோயைப் மறைப்பார்கள். பொய்யின் திரை நாளையே கிழிந்துவிடும் என்று தெரிந்தாலும் இன்று  அலங்காரமாகக் கட்டித் தொங்கவிடுவதில் அலாதியான துணிச்சல் பலருக்கு உண்டு. கெட்டிக்காரனின் பொய்யும் புரட்டும் எட்டு நாளிலே தெரிந்து போகும் என்பார்கள். அது அந்தக் காலக் கணிப்பு. பொய்யையம் புரட்டையும் அறிவதற்கு எட்டு மாதங்கள்கூட… எட்டு ஆண்டுகள்கூட ஆகிவிடுகிறது. அவ்வளவு திறமையோடு புளுகித் தள்ளுகிறார்கள்.

      எய்ட்ஸ் நோயாளி ஒருவர். அவருக்கு அந்த நோய் இருப்பது அவருடைய குடும்பத்தினருக்கும் தெரியும். கொடிய நோயை மறைத்தார்கள். அவருக்கு அழகான அப்பாவியான பெண்ணை மணம்முடித்தார்கள். அளவுக்கு மீறி வரதட்சணையையும் வற்புறுத்தி வாங்கிக்கொண்டார்கள். ஆறு மாதங்களிலேயே பொய்யின் தோல் உரிந்தது. பிறந்தகத்துக்கு அவள் வந்துவிட்டாள். அந்தப் பெண்ணின் மனம் என்னபாடு படும் என்பதை நினைத்துப் பாருங்கள்.  

      ஏற்கனவே திருமணம் ஆகிக் குழந்தைகள் இருக்கும், அதை மறைத்து இன்னொரு திருமணம் செய்துகொள்கிறார்கள். இதில் ஏமாந்து போகிறவர்களில் மெத்த படித்தவர்களும் உண்டு. பெரும்பதவிகளில் இருப்போரும் உண்டு. சமூக மதிப்பில் உயர்ந்து நிற்போரும் உண்டு.

      திருமணம் ஆனால் மனநோய் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கை நம் சமூகப் பரப்பில் உள்ளது. இது தவறான நம்பிக்கை.  மறுதரப்பினருக்குத் தெரிவிக்காமல் மனநோய்ப் பீடித்தவரை மணம்செய்து வைக்கிறார்கள். இதனால் சட்டை கிழிகிறதோ புடவை கிழிகிறதோ… வாழ்க்கை கிழிந்து தொங்குகிறது.

      இவ்வாறு திருமணம் நடந்து முடிந்த பிறகே, உண்மைகள் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கும். ஏமாற்றப் பட்டோம் என்று மனம் வலிக்கும். ஒற்றுமை உடைந்து நொறுங்கும். மணவாழ்வு சீர்குலையும். ஏமாற்றப்பட்டவர் ஆணாக இருந்தால் பெரும்பாலும் அவர் அதை எளிதாகக் கடந்து போகிறார். ஆணுக்கு சமூகம் அளிக்கும் சலுகைதான் அதற்குக் காரணம். ஏமாற்றப்பட்டவர் பெண்ணாக இருந்தால்… அவர்கள் அடையும் வேதனைகள் ஏராளம்.  சமூகச் சூழ்நிலைகளால் பொறுத்துப் போக வேண்டியவளாக இருப்பாள். பொறுக்கவே முடியாத சூழல்களும் உருவாகின்றன.

      சில நேரங்களில் சின்னச் சின்னப் பொய்கள்கூட, திருமண வாழ்வைச் சிதைத்துவிடுகின்றன.

      மாப்பிள்ளை குடிகாரர் என்றால் அதை மறைக்க வேண்டியதில்லை. அதை ஏற்கிற பெண்ணை அவர் திருமணம் செய்துகொள்ளலாம். இதில் இன்னொரு பக்கம் இருக்கிறது. மாப்பிள்ளையே தான் குடிப்பழக்கம் உடையவர் என்று சொன்னாலும்.. பெண்ணைப் பெற்றோர் அதைப் பெண்ணிடம் மறைத்துத் திருமணம் செய்து வைப்பார்கள். ஆனால் குடும்பச் சீர்குலைவுக்குக் குடிப்பழக்கமும் காரணமாக இருக்கிறது.

      என் நண்பர் ஒருவர் தன்னைப் பற்றிய குறிப்பைத் தட்டச்சு செய்து வைத்திருந்தார். மணமகன் தேடி வருவோரிடம் அதைக் கொடுப்பார். அதில் அவர் தனக்குச் சர்க்கரை நோய், ஆஸ்துமா இருப்பதாகக் குறித்திருந்தார். குடிப்பழக்கம், புகைப்பழக்கம் உண்டு என்று தெரிவித்து இருந்தார். வாழ்க்கையை நடத்த முடியாத, குறைவான சம்பளத்தையும் வெளிப்படுத்தி இருந்தார். பெண்கொடுக்க யாரும் வரவில்லை. அவரை முழுவதும் அறிந்த ஒரு பெண் அவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்குள் சிக்கல்கள் இருக்கலாம். ஏமாற்றப்பட்டோம் என்ற மனவீழ்ச்சி அவர்களிடத்தில் ஏற்பட வாய்ப்பு இல்லை. இதுபோலவே சில ஆண்டுகளுக்கு முன் வந்த  “மணமகன் தேவை” விளம்பரத்தில் பெண்ணுக்கு 1ஆம் வகை நீரிழிவு நோய் இருப்பதாகவும், நாள்தோறும் இன்சுலின் செலுத்திக்கொள்வதாகவும் குறிப்பிட்டு இருந்தனர். இதுதான் நேர்மை.

      எல்லா மனிதர்களுக்கும் குறைகளும் உண்டு; நிறைகளும் உண்டு. நூறு விழுக்காடு நிறைகள் கொண்ட ஒருவரைக் காண முடியாது. குறைநிறைகளை அலசி ஆராயலாம். அவரவர் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப, விட்டுக் கொடுக்க வேண்டியதை விட்டுக்கொடுத்தும், விலக்க வேண்டியதை விலக்கியும் மணத்தேர்வு செய்யலாம். முடிவுகள் தவறாகப் போகலாம். தவறுகளில் நம் பங்கு இருப்பதால் நம் மனம் தாங்கிக்கொள்ளும். தவறுகளில் நம் பங்கு இல்லை என்றால் மனம் பொறுக்காது. புரிதலுக்காக இதையே இன்னொரு முறையில் சொல்கிறேன்.

      நேரடியான அணுகுமுறையில்  தீமையை அடைந்தால் மனம் கவலையுறும். அதிலிருந்து மீளவும் வழி கண்டறியும். ஆனால் பொய்சொல்லி, நம்ப வைத்து, மோசம் செய்வதை மனம் பொறுத்துக்கொள்ளாது. மணவாழ்க்கைக் கசப்புகளுக்குப் பல காரணங்கள் இருந்தாலும், அவற்றுள், சூதுவாதுகளால் ஏமாற்றப்பட்டோம் என்ற உணர்வால் எழும் மனக்கொதிப்புகளுக்கு வலு அதிகம்.

திருமணம் என்பது…

      சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்கிறார்கள் கடவுள் பற்றாளர்கள்.

      ரொக்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்கிறார்கள் காசேதான் கடவுள் என்பவர்கள்.

      பொய்யில்தான் நிச்சயிக்கப்படுகிறது என்கிறார்கள் கல்யாணத் தரகர்கள்.

      பொய்யில்தான் தொடங்க வேண்டுமா மணவாழ்வை?

Series Navigationவெகுண்ட உள்ளங்கள் – 5சொல்வனம் இணையப் பத்திரிகையின் 225 ஆம் இதழ்
author

Similar Posts

2 Comments

  1. Avatar
    valavaduraian says:

    மன்றவாணன் எண்ணித் துணிந்து எழுதி இருக்கிறார். சில உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டி உள்ளார்.
    அவர் எழுதி உள்ளவற்றில் பெரும்பான்மையானவை இன்று நடக்கின்றன.யதார்த்தமாக வாழ்வில் நடப்பதைத் தெளிவாக எழுதி உள்ளார். சமூக நேயம் இதில் இருக்கிறது. சிலருக்கு இது பாடமாக இருக்கக்கூடும். சிலர் திருந்தினால் நல்லது

  2. Avatar
    BSV says:

    இக்கட்டுரை பலமாக காதல் மணங்களுக்குத் தளம் அல்லது தாளம் போடுகிறது. இதை வாசிப்பவர்கள், தரகர் மூலமாகவோ, மணவிளம்பர தளங்கள் மூலமாகவோ, பெண் அலலது மாப்பிள்ளைத் தேடப் பயந்துவிடுவார்கள். நேர்மையான வணிகமும், பொய் சொல்லாத தரகரும் உலகத்தில் இல்லை. மண விளம்பர தளங்கள் வியாபாரமே.

    நெருங்கிய சொந்தங்களுக்குள் தெரிந்த குடும்பத்தில் தேடவேண்டிய நிலை. வரதட்சணை பெருக்கிக் கொடுக்க வேண்டும். பார்த்துச்செய்யும் மணத்தில் டவுரிக்குத்தான் முதல் மரியாதை. ஆனால் அதை கடைசியில் கேட்பதாக பாவ்லா காட்டுவார்கள்.

    இக்கட்டுரை எடுத்துக்காட்டும் பொய்கள்; பித்தலாட்டங்கள்; ஏமாற்றுக்கள் எல்லாம், காதல் மணங்களில் இருக்கா. காதல் மணமென்றால், இன்று காதலித்து நாளை மணமென்று இல்லாமல், நன்கு பல நாட்கள் – வருடங்கள் கூட – ஒருவரையொருவர் நன்கு தெரிந்து பழகி, பின்னர் குடும்பங்கள் நேரில் பார்த்த பின்னர் செய்யும் மணங்களே. ஆனால் அது பெண்ணின் பரிபூரண சாய்ஸ், பெற்றோர் முலாம் மட்டுமே பூசுகிறார்கள். இங்கு சாதி வந்து பீதி கிளப்பும். வெவ்வேறு சாதிகள் ஓகேயென்றால், ஏமாற்றில்லை. கவலையுமில்லை.

    இக்கட்டுரை அரைத்த மாவை அரைக்கிறது. இது சொல்லும் ஒவ்வொரு விசயமும் தெரியாமல் எவருமே இந்தியாவில் இல்லை. காதல் மணம் வேண்டாவென்றால் பெற்றோர் பார்த்துச் செய்யும் மணங்களில் எப்படி ஏமாற்றைத் தவிர்க்கலாம் என்று வழி காட்டியிருந்தால் என் பின்னூட்டத்தின் முதல்வரிக்கு இடமே இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *