சாகித்ய அகாதமி விருது (2015) பெற்ற “இலக்கியச் சுவடுகள்” – ஆ.மாதவன்

author
0 minutes, 2 seconds Read
This entry is part 3 of 11 in the series 5 ஜூலை 2020

ஜெ.பாஸ்கரன்

குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆவுடைநாயகம் – செல்லம்மாள் தம்பதியினருக்குத் திருவனந்தபுரத்தில் பிறந்தவர் (1934) மாதவன். மலையாள வழிக் கல்வி கற்றாலும், தமிழின் மீதான பற்றால், தமிழ் இலக்கியங்கள் வாசித்து தமிழ் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டவர். 50 களில் திராவிட இயக்கம் விளைத்த விழிப்புணர்ச்சி தமிழிலக்கியத்துக்கே புதிய உத்வேகத்தைத் தந்தது – கேரளத் தமிழ்ப் பகுதிகளிலும் அதன் தாக்கம் இருந்தது.

“மலையாளக் கதைகளின் மொழிபெயர்ப்பில் துவங்கி, பொழுதுபோக்கு காதல் கதைகள், திராவிட இயக்க எழுத்துக்களின் சொல் அலங்கார வழிகளிலூடே பயணம் செய்து, சாதாரண மக்களின் வாழ்வியல் அவலங்களை நான் வாழும் பகுதியின் கலவை மொழியும் கலந்து, புதுமைப்பித்தன், ஆர்.ஷண்முகசுந்தரம், தி.ஜானகிராமன், கி.ராஜநாராயணன் என்பவர் போல வட்டார வழக்கெனும் சொந்த நாட்டு வழக்கங்களையும் முன் வைத்து இலக்கியம் படைத்து சுய வாழ்க்கைக்கான வியாபார உலகில் வெற்றி பெறாமல், தமிழ் இலககிய உலகில் நான்கு முழு நாவல்கள், ஆறு சிறுகதைத் தொகுதிகள் மற்றும் விசேஷ மலர்க் கட்டுரைத் தொகுப்புகள் என்றெல்லாம் படைத்தளித்து விட்டு, தமிழ் இலக்கிய உலகில் நானும், ‘உள்ளேன் அய்யா’ என்று எழுந்து நின்று முகம் காட்டப் பெருமையாக இருக்கின்றது”……….
– 2015 சாகித்ய அகாதமி விருது பெற்ற தன் “இலக்கியச் சுவடுகள்” கட்டுரைத் தொகுப்பில் ‘என்னைப் பற்றி…..’ கட்டுரையில் ஆ.மாதவன்!

ஆ.மாதவனின் 40 கட்டுரைகள் கொண்ட ‘இலக்கியச் சுவடுகள்’ புத்தகம் அனைவராலும் வாசிக்கப்பட் வேண்டிய அரிய புத்தகம். மாதவன் என்னும் படைப்பாளியை, மனிதர்களின் இருண்ட பகுதியில் வாழும் விளிம்பு நிலை மக்களின் நாடித்துடிப்பை உணர்ந்த மனிதனை, யதார்த்தவாதியை, முற்போக்கு சிந்தனையாளனை, இலக்கிய விமர்சகனை, மொழிபெயர்ப்பாளனை வெளிப்படுத்தும் சிறப்பான கட்டுரைகள்.

‘எனது நாவல்களின் களம்’ கட்டுரையில் ‘சாலைக் கம்போளம்’(திருவனந்தபுரம் கடைவீதி), தமிழகத்தின் தென்னாற்காடு மாவட்ட விக்கிரவாண்டி, சங்கீத மங்கலம், அனந்தபுரம் கிராமங்களை கேரளத் தமிழில் அவர் விவரிப்பதே அழகு.

தமிழில் முதல் நாவலாகச் சொல்லப்படுகின்ற ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ மற்றும் மலையாள முதல் நாவல் என்று சொல்லப்படுகின்ற ‘ இந்துலேகா ‘ என்ற நாவல்களைப் பற்றியும், அவற்றின் ஆசிரியர்கள் பற்றியும் எழுதியுள்ள கட்டுரை ஓர் ஆய்வுக் கட்டுரை என்றே சொல்லலாம்! “இருவருமே ஆங்கில இலக்கியம் போல தங்கள் மொழியும் சிறப்பும், பெருமையும் எய்திட வேண்டும் என்ற நோக்கில், மகோன்னத புரட்சிக் கருத்துக்களை – யதார்த்த மனித வாழ்க்கையின் உண்மைநயத்தோடு சொல்லிக் காட்டினார்கள். வெற்றி பெற்றார்கள்.” என்கிறார்.

காசியபனின் ‘அசடு’ நாவல் விமர்சனம் – ‘வேதாந்த சாரம் – வாழ்க்கையின் அநித்யமான விளையாட்டு – ஏற்றம் இறக்கம், கொஞ்சமாக காமசுகம் என்று பல்வேறு நிலைக்களன்களை பூச்சிதறல்களாகக் காட்டி, வட்டார மொழி நயத்துடன் கட்டுச் சேர்க்கையில்லாத நிகழ்வுகளுமாக ‘அசடு’ தமிழின் மறக்கமுடியாத புதினங்களில் ஒன்றாக நினைவு கொள்கிறது’.

‘பஷீரின் படைப்புலகம்’ கட்டுரை, அவரது படைப்புகளைச் சிறு சிறு பத்திகளாக, அழகாக ஆனால் ஆழமாக அறிமுகம் செய்கிறது. “ அவர் பயன்படுத்தும் ஒவ்வொரு வார்த்தைகளிலும் பலதரப்பட்ட மனித உள்ளங்களின் துடிப்புகள் தெளிவாக ஒலித்துக்கொண்டிருக்கும். மேல் நாட்டு இலக்கியத்தோடு ஒப்புவமை கூற எங்களுக்கோர் பஷீர் இருக்கிறார் என மலையாள இலக்கியம் அபிமானம் கொள்கிறது “ என்னும் மாதவனின் கூற்றில் உண்மையில்லாமல் இல்லை!

‘சிறுகதை படைப்பாளியின் அனுபவங்கள்’ கட்டுரையில், தனது சிறுகதையின் பாத்திரங்களை எங்கெல்லாம் கண்டு, கொண்டுவந்தார் என விவரிப்பது சுவாரஸ்யம் – ஒவ்வொரு அறிமுக எழுத்தாளரும் தெரிந்து கொள்ள வேண்டிய விபரங்கள் ஏராளமாகக் கிடைக்கின்றன!

நாவலில் சமுதாயப் போக்கு, இன்றைய இலக்கியத்தில் ஆபாஸம், வட்டார மொழிகள் நிலைத்திருக்குமா போன்ற கட்டுரைகள் சுவாரஸ்யம் மட்டும் அல்ல, சிந்திக்கவும் வைப்பவை!

“தமிழ் எழுத்தாளர்கள் பண்பாடு என்று சொல்லிக்கொண்டு, உண்மைகளை ஊமையாக்குகிறார்கள்” –
“பெரிய சஞ்சிகைகள், சிறிய சஞ்சிகைகள் எல்லாம் ஆளுக்கொரு கோஷ்டிகளை அமைத்துக் கொண்டு, சிதறிப் போயிருக்கின்றன”
“வட்டார வழக்கு என்பது வாழும் காலத்தின் சுவடுகள். நாகரீக வாழ்வு பற்றி, மொழி மாற்றமும், நடை, உடை மாற்றங்களும் வந்தாலும் இவ்வாறு வாழ்ந்தோம் என்கிற சுவடுகளில் ஒன்றுதான் வட்டார வழக்குப் படைப்புகள்” என்று தன் கருத்துக்களைத் தெள்ளத் தெளிவாக முன் வைக்கிறார் ‘இனிய உதயம்’ நேர்காணலில்!

இலக்கியத்தின் பல பரிமாணங்களை, தன் அனுபவத்தின் தெறிப்புகளாக, தமிழ், மலையாள, மேல் நாட்டு இலங்கியங்களின் துணையுடன் ஒவ்வொரு கட்டுரையிலும் எழுதியிருக்கிறார்.

சுவாரஸ்யமான தொகுப்பு!

ஜெ.பாஸ்கரன்.

Series Navigationபவர் பாயிண்ட் தொடர்பான தமிழ்ச்சொற்கள்ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *