தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

17 ஜனவரி 2021

ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

Spread the love

  1. இல்லாதிருக்கும் அகழி

காலத்தின் அடர்கருநிழல் படர்ந்த உருவம்
கண்ணெதிரே நிற்கக்கண்டும்
அடையாளந்தெரியாதுழலும் அக்கணம்
தான் செய்யாத குற்றத்திற்காகத்
தவித்துத் தண்ரனைையனுபவித்துக் கூனிக்குறுகி
அவமானப்பட்டுநிற்கும் உள்.
அடையாளமெனல் தோற்றக்கூறுகளுக்கு அப்பாலும்
நீண்டுகொண்டேபோக
அப்பட்ட அந்நியமாதலைக் காட்டிலும் அவலமாய்
அடுத்தடுத்து நிற்கும்போதும் இடையோடும்
கண்ணுக்குத்தெரியா அகழியில் மறைந்திருப்பன
முதலைகளோ மூழ்கடிக்கப்பட்ட மூச்சுத்துளிகளோ
மலர்களோ மறுவாழ்வோ
இறங்கிப்பார்த்துவிடலாமென்றால்
இல்லாதிருக்கும் அகழியின் நீராழம்

கணுக்காலளவோ கழுத்தளவோ …….
கண்டறியும் வழியறியாது கலங்கிநிற்கும்
கால்களைக்
கீழிழுத்தவாறிருக்கும்
பிணமாய் கனக்கும் மனம்.

  • ஒரு கதையின் கனபரிமாணங்கள்


”சீக்கிரம் தூக்கம்வந்துவிடும்போலிருக்கிறது
சின்னதாக ஒரு கதை சொல்லேன்”, என்று கேட்ட பிள்ளைக்கு
என்ன கதை சொல்ல என்று
கணநேரம் குழம்பினாள் தாய்.

சீக்கிரம் வந்துவிடப்போகும் தூக்கத்தில் சிக்கிக்கொண்டிருந்தது

அந்தச் சின்னது.

குழந்தையை மட்டுமா சமீபித்துக்கொண்டிருந்தது தூக்கம்?
அவளையும்தான்.

இருவரையும் நெருங்கிவந்துகொண்டிருக்கும் தூக்கங்கள்
ஒன்றையொன்று குறுக்குவெட்டிக்கொள்ளும் புள்ளியில்
முடிந்துவிடவில்லையென்றால் பின்
அதிலிருந்து கிளைபிரிந்து எதிரெதிர்த் திசைகளில் போய்க்கொண்டிருக்கும்
தூக்கங்களிலும் சிக்கிக்கொண்டிருப்பது அதே கதையின் நீட்சிதான்
என்று எப்படிச் சொல்ல முடியும்?

பாதி மூடிய பிள்ளையின் கண்களையே பார்த்தபடி
இரண்டு பூக்கள் மலர ஆரம்பித்ததாகக் கதை சொல்ல ஆரம்பித்த அம்மா
ஒன்று சின்னது இன்னொன்று பெரியது என்று சொன்னதைக் கேட்டு _

‘இரண்டுமே அழகு,
இரண்டுமே ரொம்ப வாசனை’
என்று நாக்குழறக் கூறி கதையை நிறைவுசெய்து
உறங்க ஆரம்பித்தது பிள்ளை.


Series Navigationசாகித்ய அகாதமி விருது (2015) பெற்ற “இலக்கியச் சுவடுகள்” – ஆ.மாதவன்வெகுண்ட உள்ளங்கள் – 6

Leave a Comment

Archives