வெகுண்ட உள்ளங்கள் – 6

author
0 minutes, 7 seconds Read
This entry is part 5 of 11 in the series 5 ஜூலை 2020

கடல்புத்திரன்

அங்கே பாபுவோடும் லதாவோடும் விளையாடுற ஆளைப் பார்த்த போது இருவருக்கும் விசயம் விளங்கி விட்டது.

“மன்னி, அடுப்பிலே தண்ணி வைத்திருந்தா தேத்தண்ணி ஊத்துங்கோ” என்றான். “இண்டைக்கு, சமையல் மூக்கை துளைக்கிறதே” என்று வேறு கேட்டான்.
“உங்க வீட்டை விட என்ன புதிதாய் இருக்கப் போகிறது தம்பி” என்றார். அண்ணன் கறிக்கு கொண்டு வார போது அவன் வீட்டயும் குடுத்து அனுப்பி விடுவான். அப்பன் கரையிலிருந்து மிச்சத்தை விற்று விட்டு வருவான். தண்ணியை எடுத்து அடுப்பிலே வைச்சவர். “தம்பி கொதிச்சதும் கூப்பிடுறேன்” என்றார். கனகன் அவர்களிடம் வந்தான்.

“திலகன், சரியான ஆளடா இவனை ஆச்சரியத்தில் ஆழ்த்தனும் என்று நினைச்சோம். நீ இங்க வந்து குட்டை உடைச்சு விட்டாய்” என்றான் நகுலன்.

“நீ பொடி போட்டு கதைத்த போதே எனக்கு ஒரு சந்தேகம். ஆனால், நான்  இவனை எதிர்பார்க்கவில்லை” என்றான் கனகன். கதைத்துக் கொண்டிருக்கையில் மன்னி “குரல் கொடுத்தார். “இதோ வாரோம் வாங்கடா எல்லோரும்” என்று சொல்ல.போய் ஆளுக்காள் தேத்தண்ணியை எடுத்து வந்தார்கள். அவ்விடத்திலே எல்லோருங்குமே ஆச்சரியம் தான். மன்னியிட தம்பிக்காரன் அப்பகுதிக்கு ஜி.எஸ்.ஆக நியமிக்கப் பட்டிருக்கிறான் என்றால்.? பொதுவாக பலர் வரவேற்ற போதும் முருகேசனைப் பொறுத்தவரையில் பற்றற்ற நிலையிலே இருந்தான்.

கல்யாணம் கட்டிய போது, மனிசியை திரும்பிப் பாராது இருந்தவயள். அதுவே வீட்டிலே பிரச்சனையாகி தினமும் சண்டையாய் வளர்ந்தது. ஏதேதோ எல்லாம் நடந்த பிறகு அவன் அவயள் வீட்டை ஏறி கேட்டதுக்காக மட்டும் முதல் தடவையாக படியேறி வந்தவன் ‘எப்ப இவன் இயக்கத்திற்குப்போனான்?

தங்கிறதுக்கு சனம் இருக்கிறது. உவனுக்கு படகு ஒட்டம் பற்றி எல்லாம் என்ன தெரியும்? ஆனால் என்னத்தைக் கதைக்க முடியும்? அவள் சந்தோசமாயிருக்கிறாள் என்பதால் ஒன்றும் பேசாமல் இருக்கிறான்.

‘தம்பி முதலே இவர்களோட சேர்ந்தவன்.திலகனுக்கு படகு ஒட்டம் பற்றி எதுவும் தெரியாத போதும், மேலிடம் சொன்னதைக் கடைப் பிடித்தான். வெளியிருந்து எல்லாம் அவுட்புட் மோட்டார்,  படகுச் சொந்தக்காரர்கள், உறவுக்காரப் பெடியனுடன் ஓடுறதுக்கு ஓட வந்தார்கள் . அவ்விடத்திற்கு பரிச்சயமானவர்களை போடாத போது, அவர்களுடைய‌ பைபர் கிளாஸ் படகுகளிற்கு  சேதாரம் கூடுதலாக ஏற்பட்டன. ஆழமற்ற கடலாததால் ஒடி ஒடி அழமான பாதை கண்டே ஒட வேண்டும்.

இல்லாது போகிற போது படகு தரை தட்டி அதன் சீமெந்து ஏர் உடைய நேர்ந்தது. கல் பகுதியில் ஏறுகிற போது பக்கப் பகுதியில் ஒட்டைகள் ஏற்பட்டன. அடிக்கடி பைபர் லேயர் வைத்து ஒட்டுற செலவுகள் ஏற்பட்டன. அதனால் அவ்விடத்து  அனுபவமிக்க பெடியளையும் சேர்த்து படகுச் சேவையை நடத்த வேண்டியிருந்தது.

ஒருநாள் சம்பளமாக  இயக்கம் ஒட்டி ஒருவருக்கு 75 ரூபா கொடுத்தது. இருவருக்குமாக‌ 150 ரூபா. வள்ள ஒட்டம் சீராக, நடை பெற்றது.

அன்டனும் நகுலனும் அவனுக்கு வலது கரமாக நின்றார்கள். அன்று ஒரு அவுட்புட் மோட்டர் பழுதுபடவே, அவர்கள் வலுவாகக் கஷ்டப்பட்டு விட்டார்கள். காரைநகரைச் சேர்ந்த படகுக்காரன் மட்டுமே ஒடினான்.

அன்டன் அணியத்தில் இருந்து பாதை காட்ட நகுலன் காசைச் சேர்த்தான். அந்தப் பிரச்சினையைக் கதைக்க திலகன், எ.ஜி. எ .யிடம் போயிருந்தான். கரைப்பக்கம் வார லிங்கனிடம் சேர்ந்த பணத்தை கொடுக்க சொல்லி வைத்தான். ஒட்டியின் சம்பளம், சாப்பாட்டுச் செலவு போக மீதியை கொடுத்து விட்டு கனகனிடம் வந்தார்கள்.

“வந்திட்டாங்கள் வெட்டிப் பொழுதைக் கழிக்க” என்ற‌ அவனது அப்பரின் வழமைக்கு மாறான‌ பேச்சு இருவருக்கும் ஒரு மாதிரியாக இருந்தது. இயக்கம் என தாம் சீரழிவது போலப் பட்டது. இவர்களால் எங்களைப் புரிந்து கொள்ள முடியாதா? களைப்பு  வேறு அவர்களை மூட் அவுட்டாக்கியது. இன்னும், எத்தனை பெடியள்கள் எல்லாம் ஏன் சீரழிகிறார்கள்? சிந்திக்கவே மாட்டார்களா?

இயக்கம், இவர்களைப் பிடித்து அடிச்சதுக்காக பழகிய முகங்களையே முறிக்கிறார்கள். புரிந்தது. இனிக் கனகனிட்டயும் முன்னை மாதிரி வரமுடியாதோ? என சிந்தனை தலையை அழுத்தியது. “அப்ப, நாங்கள் போயிட்டு வாறம்” வந்த கையோடு கிளம்பினார்கள்.

“நில்லுங்கடா தம்பி. அது தண்ணி குடிச்சு விட்டு விவரம் இல்லாமல் உளறும்.” கனகனின்  அம்மா அவர்களை மறித்தார். அதில் இழைந்த வாஞ்சையை மீற முடியாமல் உள்ளே வந்தார்கள்.

‘உழைக்காமல் வீட்டில் இருப்பதாலே.அப்பன் இப்படிக்  கதைக்கிறான்’ எனக் கனகன் நினைத்தான். நெடுக இப்படியே இருக்கிறது. நல்லதாகப் படவில்லை. அண்ணன் அப்பனோடு தொழிலுக்குப் போவதால் அவனுக்குப் புதிதாக யாரையும் தெரிந்ததாக வேண்டியிருந்தது. “டேய் உங்களுக்குத் தெரிந்து தொழிலுக்குப் கேட்கிறவர் யாராவது இருக்கினமாடா” என்று கேட்டான்.

‘வள்ளம் ‘ஒன்றை அவிழ்க்கப் போவதாக சொல்லித் திரிந்த செல்லண்ணையின் ஞாபகம் அன்டனுக்கு வந்தது. அவர் முந்தி மூத்தியப்புவோடு தொழில் பார்த்தவர். அப்புட பேரன் வளர்ந்து விடவே தொழிலுக்குள் இழுக்க விரும்பினார். அதை அப்பு  செல்லனுக்கு தெரியப்படுத்தினார்.

அவர் நவாலி பக்கத்திலே சிறிய வள்ளத்திற்கும் வலைக்கும் பேசிக் கொண்டிருக்கிறார். உதவிக்கு அன்டனைக் கேட்டிருந்தார்.

“டேய் எல்லாம் வெல்லலாமடா” என்றான் உற்சாகத்துடன்.

வென்று தான் விட்டிருக்கிறான்.

செல்லனும் வள்ளத்தை அவிழ்த்து விட்டிருந்தான். கனகனின் அப்பாவில் அவனுக்கு நிரம்ப மரியாதை இருந்தது. அன்டன் கேட்ட போது உடனேயே சேர்த்துக் கொண்டான்.

கனகனை வலைப் பொத்தல்களை தைக்கச் சொல்லி விட்டு செல்லன் காய் வெட்டிக் கொண்டு கள்ளடிக்கப் போயிருந்தான். அவன்  த‌ன் தலைவிதியை நொந்தபடி தனியக் கிடந்து போராடிக் கொண்டிருந்த போது திலகன் மன்னி வீட்டுப் பக்கம் இருந்து வருவது தெரிந்தது.பட்லையைத் திறந்து கொண்டு வந்த அவன் “டேய் அன்டனைக் கண்டனியா?” என்று விசாரித்தான்.

அன்டனோடயே கனகனும் ஒரேயடியாய் வீட்டிலேயிருந்து வெளிக்கிட்டு வந்தவன் “ஒரே அலைச்சலப்பா?”இப்படி ஏதேதோ வளவளத்து விட்டு, கனகன் செல்லனின்ரை வளவுக்குள்ள நுழைய அவன் காம்ப்பிற்கு விடை பெற்றுப் போயிருந்தான்.

“ஒ, இண்டைக்கு வெள்ளை மோட்டார், திருத்த வாரன் என்றவன், மறந்து போனன்” எனச் சொன்னவன் “எப்படி உன்ரை தொழில் போகிறது?’ என்று கேட்டான்.உந்த ஒட்டை வலையிலும் சின்ன வள்ளத்திலும் என்னத்தை பெரிதாய் எதிர் பார்க்க முடியும்”? என‌” என்று கனகன் பகிடியாக பதில் அளித்தான்.

தனது மனதில் நீண்ட நாளாய் இருந்த குமுறலையும் சொன்னான்.”நீங்களும் கடைசிலே முட்டாளாய் தானே இருக்கிறீர்கள்?”என்றான்.”நீ சொல்றது புரியிறது கனகு.நீங்கள்‌ வள்ளம் ஓடக்கே இந்த ஏர் உடையிறது பக்கப் பாட்டிலே ஓட்டை விழுகிறது  எல்லாம் இல்லை. இது உங்கட கடல்.உங்கள் ஒவ்வொருவருக்கும் பாதை தெளிவாகத் தெரியும்.தவிர உங்களிடம் போதிய வள்ளங்களும் இருக்கின்றன‌ .மர வள்ளத்தில் பாதுகாப்பு கூட‌ தான்.எங்களிற்கு ஏற்படுற பைபர் கிளாஸ் இழைகள் ஒட்டுறதும்,திருத்துறதுமான‌… விரயச்  செலவுகள் துப்பரவாக‌ இல்லை.

இந்த சிறிலங்கா அரசு, அரசாங்கம் நடத்துவது போல நாங்களும் உங்களை ஆட்டிப் படைக்கிறோம்..மாகாணவரசுகள்  இருக்கின்றன;.நகரச‌பைகள் இருக்கின்றன. பிறகு, ‌எதற்கு இந்த ஜி.எ ?,  எ.ஜி.எ ,?,  ஜி.எ ?… என்கிற நிர்வாக அமைப்புகள் எல்லாம்.  பிரிட்டீஸாரின் பழைய‌ ஒற்றைக் காலனியாட்சி போல ஆள‌ அரசுக்கு ஆசை !

 கூலுக்கும் ஆசை,மீசைக்கும் ஆசை என அலங்கோலமாக சிங்கள அரசு நிற்கிறது.

அதில், எல்லாம் ஒரு தொகை வாரிப் பேர்கள் வேலை செய்ய‌ மாட்டினமா? எல்லாருக்குமே அரச படிகளுடன் , கூடிய‌ சம்பளம். வடக்கு,கிழக்கில் தான் பிரச்சனை. ஆனால் முழு மாகாணங்களிற்குமே இதே அமைப்புக்கள்.விரயச் செலவுகள் . அந்த பணத்தில் அந்தந்த மாகாணங்களில் முதல் தரமாக பாலங்கள் ,வீதிகள் எல்லாம் அமைக்கலாமே.இந்த மக்கட் தொகையை தீவின் முக்கிய பொருளாதார துறைகளான விவசாயத்திலும்,மீன் பிடியிலும் ஈடுபட வைத்து…வளப்பைத்தை அதிகரித்திருக்கலாமே ஏன் செய்கிறார்களில்லை ?

எம்மைப் போலவே முட்டாளாகவே இருக்கினம்.

உங்களுக்கு கிடைக்க வேண்டிய பணத்தைப் பறித்த ,நாமாவது சுகப்படுறமோ? என்றால் அதுவுமில்லை. தவிர ,எங்கையெங்கோ இருந்தெல்லாம் பைபர்கிளாஸ் படகு வைத்திருப்பவர்கள் ட்ராக்டரில் படகைக்  கட்டிக் கொண்டு வாரார்கள்.உறவுக்காரப் பெடியன் ஒருத்தனையும் கூட்டி வாரார்கள். அவர்களிற்கும் தொழில் இல்லாத வறுமை..

இங்கிருக்கிற பெடியள்  சேர்ந்து பயணித்து ஒரு நாள் ‘பாதையை’ காட்டி புரிய வைத்தாலும்….அவர்களால் சரிவர கடலை படித்துக் கொள்ள முடியிறதில்லை. திருத்தச் செலவுகள் என விரயமாக  இறைத்துக் கொண்டிருக்கிறோம். வைக்கோல் பட்டறை நாய்கள் போல‌ நாங்களும் கிடக்கிறோம் “என்றான் திலகன்.

கனகன் அசந்தே போனான் !

“எங்களுடைய‌ போக்கு வரத்துச் சேவை நட்டமாக ஒடுகிறதால் அங்கால அமைப்பிடமே முழுதாய்க் கொடுத்து ஒன்றாக ஒடுகிறதே நல்லது என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இங்கால காம்பை எடுத்து விட்டால் காம் செலவும் குறையப் போகிறது. ” இருவரும் கதைத்துக் கொண்டிருக்க மாலை மங்கியது. செல்லனின் இருபுதல்விகளான கமலமும், செல்வமணியும் சேர வந்தார்கள். அவ்விடத்தில் உள்ளவர்களைப் போல் சுமாரான அழகு பெற்றவர்கள்.அவர்களைப் பார்த்து விட்டு திலகன் “பரவாயில்லையே, உனக்கு பொழுது நல்லாய்ப் போகும்” என்று கண்ணைச் சிமிட்டி பகிடி விட்டான்.

தாய்க்காரி இருவருக்கும் தேனீர் போட்டு மணி மூலமாக அனுப்பினாள்.

அவனை பொதுவாக அவ்விடத்தில் எல்லாருக்கும் தெரியும். எனவே அவனைக் குறிப்பாகப் பார்த்து முறுவலித்தாள். அவள் பார்வையில் வேறு சாதிப் பெடியன் என்ற ஆச்சரியமும் இயக்கத்தில் சீரழியிறவன் என்ற அனுதாபமும் கலந்து இருந்தன. செல்லன் வரவே.விடைபெற எழும்பினான். “எப்படியிருக்கிறாய் ?” என விசாரித்தவர் “தம்பி, கருவாடு இருக்கிறது; காம்ப்பில் சமைச்சுச் சாப்பிடுங்களன்” என்றார்.

உள் பக்கம் திரும்பி “எடியே, புள்ள கருவாடு கொஞ்சம் பையில போட்டு தம்பிட்ட குடு” என குரல் கொடுத்தார். அன்டனும் நகுலனும் அவனை மதிப்பதால் உதவி செய்ய நினைத்தார் போலும்.

காம்ப்பிலே, ஆறு ஏழு பேராவது இரவில் தங்குவது வழக்கம். ஒருதடவை அன்டனோடு போன கனகன் அங்கே கருவாட்டுக் குழம்புடன் சோற்றை ஒரு கை பார்த்திருந்தான். யாருடைய கைவண்ணமோ  ருசியாக இருந்தது. அங்கேயே திலகன் அதிகமாய் தங்கிறவன். சமயங்களில் மன்னி வீட்டு விராந்தையில் பாயை விரித்து படுத்திருப்பான். காற்று நேரங்களில் கனகனோடு இருந்து விட்டு அவன் வீட்டு மணலில் படுக்கை விரித்து விடுவான்.

அன்டன் நகுலனைப் போல் இப்ப திலகனையும் அவனோடு காணக் கூடியதாக இருந்தது.செல்லன் வீட்டை மன்னியும்  அடிக்கடி தம்பியைத் தேடி வந்து அவனை விசாரிப்பார்.

இந்த திலகன் எப்படி இயக்கத்திற்குப் போனான் என்றது கனகனுக்கு ஆச்சரியமாகவே இருந்தது. அதோடு மன்னிக்கு ஏற்பட்ட அந்த சம்பவம்? மன்னி பாவம் !, அது அவன் மனதையும் உலுக்கிக் கொண்டே இருக்கிறது..

ஊரிலுள்ளவர்களைப் போல அப்ப, அண்ணனுக்கும் வெளிநாடு போகிற ஆசை பிடித்திருந்தது. அதற்காக காசுக்காக இழுபறிப்பட்டது ஒரு பெரும் சோகக் கதை. கை கூடாது என்று நிச்சயமாகத் தெரிந்தபோது அண்ணன் குடியில் விழுந்தான். பாபும் லதாவும் பிறந்த போதும் அவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி அறவே இல்லை.

மன்னியின் சகோதரங்கள் வந்து பாராதது வேறு அவரை வெகுவாகப் பாதித்தது. சண்டையும் பூசலும் இருவருக்குமிடையில் மெல்ல மெல்ல எழ ஆரம்பித்தன. அண்ணன் அவருக்கு அடிக்கவே தொடங்கியிருந்தான். யாருடனும் அதிகமாக பழகியிராத மன்னிக்கு கமலம் ஒருத்தியே சினேகிதியாக இருந்தாள். அவளை பின்னேரங்களில் பிள்ளைகளோடு அங்கே வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருப்பதைக் காணலாம். அப்படியிருக்கிற ஒருநாள் லதா கத்தியால் விரலைச் சீவிக் கொண்டாள். சதையில் ஆழமாக வெட்டு விழுந்திருந்தது. சிறிது தொங்கியது. மன்னியோட கமலமே தொலைவிலிருந்து கொட்டக் காடு ஆஸ்பத்திரிக்கு …ஒடினாள். தொடர்ந்த நாட்களில் அண்ணனோடு அவளுக்குப் பிரச்சனை முற்றி விட்டது.அதனால் அடி கூட வாங்கினாள். அயலவர்களுக்குத் தெரிந்த போதும் யாரும் தலையிட முடியவில்லை. கடைசியில் அம்மா அண்ணனைக் கூப்பிட்டுக் கண்டித்தாள்.

“பாவம் புள்ள, அவளுக்கு நாங்க தாண்டா துணையாயிருக்க வேணும் !”

அடுத்த இரு நாட்களுக்கு பிறகு பாபு நெருப்பிலே கை வைத்து விட்டான். அதுவும் பெரிதாக கொந்தளித்து அடங்கியது. உடன் பிறப்புகளின், புருசனின் புறக்கணிப்பால் அவர் வெகுவாகப் பாதிக்கப் பட்டார். மாரிகாலம் வேறு சூழலைச் சேறாக்கியது.

ஊர்மனையில் ஏற்பட்ட வெள்ளம் வாய்க்கால் வழிய வழிந்து ஒடி குளங்குட்டைகளை எல்லாம் நிரம்பி வழியச் செய்திருந்தன‌. ஒரு மாலைப் பொழுதில் கமலத்தோடு கதைத்துக் கொண்டிருந்த மன்னி, “கொல்லைக்குப் போயிட்டு வரேண்டி பிள்ளைகளை ஒருக்காய்ப் பார்த்துக் கொள்” என்று காய் வெட்டிக் கொண்டு பின்புறமாக கிழக்கு வயல் குளத்தை நாடிச் சென்று விட்டார். நீச்சல் தெரியாது என்ற துணிச்சல் அவர்  நடையை வேகப் படுத்தி இருக்க வேண்டும். ஓட்டமாக ஓடிப் போனார். குளம் நீர் நிறைஞ்சு வழிஞ்சு பார்க்க‌ பயங்கரமாக இருந்தது. அக் குளத்தில் இறங்கினார்.

அவ்விடத்தாலே தற்செயலாக வந்த அன்டனின் அப்பா  தத்தளித்துக் கொண்டிருந்த மன்னியைக் காப்பாற்றினார். கடவுள் மனித ரூபத்தில் வருகிறது என்பது எவ்வளவு உண்மை.  பிறகே, அண்ணன் திருந்தினான். கெளரவத்தைக் கைவிட்டு அவளிட ஊர்ப் பக்கம் போய் ஆறுதலுக்கு யாரும் ஒருத்தராவது வந்து பார்க்கச் சொல்லி இரந்து கேட்டு விட்டு வந்தான்.

அப்ப தான் முதல் தடவையாக நம்ம திலகன் அங்கே வந்தான்.

அவன் வந்த போது கனகனுக்கு கூட வரவேற்பளிக்கிற மனநிலை இருக்கவில்லை. அங்கே நடந்த களேபரங்கள் அவன் மனதைப் பாதித்திருந்தன. சாதித் திமிரில் வந்தவயள், என்ற ஆவேசம் அவனுள்ளும் பற்றியிருந்தது. முன்னம் அம்மா மளிகைச் சாமான்களை அவன் மூலமாக மன்னிக்கு அனுப்பும் போதெல்லாம் ‘அவர், திலகனை நினைத்து வாரப்பாடாக ஏதாவது
சொல்வார்.“தம்பி, உன்னைப் பார்க்கையில் தம்பி ஞாபகம் வருகுதடா”
என்பார். “உன்வயசு தான் அவனுக்கும் இருக்கும்” என்பார். “நான் உங்கண்ணாவோடு வரும்போது அவன் விபரம் தெரியாதவன்”கரைவார். இருந்த போதும், வெறுக்கவே செய்தான்.

அப்ப, திலகன் வந்ததால் அதிகம் மகிழ்ந்தவர் அவர்  ஒருத்தர் மட்டும் தான். அவன் அங்கே ஒருநாள் பகற்பொழுது முழுவதும் இருந்து விட்டுப் போனான். அது அவருக்குப் பெரும் மன ஆறுதலை அளித்திருந்தது. அதற்குப் பிறகு அவனைப் பற்றி கதைப்பது இன்னமும் கூடி விட்டிருந்தது.

Series Navigationரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்கவிதைகள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *