மாத்தி யோசி

author
1
0 minutes, 23 seconds Read
This entry is part 9 of 11 in the series 5 ஜூலை 2020

கே விஸ்வநாத் 

நான் எப்பவும் போல பொழுது போகாமல் வாட்ஸப் மெசேஜை, நோண்டிக் கொண்டிருந்தேன். என்னுடைய நண்பர் ஒருவர், அவருக்கு வந்த  ஒரு மெசேஜை எனக்கு  ஃபார்வட்    பண்ணி  இருந்தார். அதில் வந்த மெசேஜ்,   கொஞ்சம் வித்தியாசமா இருந்தது. அது ஒரு நிறுவனத்தின் விளம்பரம் மாதிரி தெரிந்தது. அதில்       “தக்க கொரோனா பாதுகாப்புடன், உங்கள் சௌகரியத்திற்கு ஏற்ப, சிறந்த முறையில் எல்லா விதமான ஹேர் கட்டிங், ஹேர் டையிங், ஷேவிங்,  உங்கள் வீட்டிற்க்கே  வந்து  செய்து கொடுக்கப்படும். அணுகவும், ஆறுமுகம்”ன்னு  போன் நம்பர் கொடுத்திருந்தது. 

தலை முடியை கண்ணாடியில் பார்த்துக் கொண்டேன், சற்று கூடுதலாகத்தான் இருந்தது.பின் கழுத்தில் முடி வளைய ஆரம்பித்து விட்டது. எப்பொழுதும் மாதத்திற்கு ஒரு முறை சலூனுக்கு சென்று வந்து விடுவேன். வெய்யில் காலத்தில் முடிந்த வரைக்கும் மொட்டை அடிக்காத குறையா முடியை வெட்டிக் கொண்டு வந்துவிடுவேன். இந்தக் கொரோனாவால், எல்லா  சலூனும் இரண்டு மாதமா மூடி இருந்ததன் விளைவு, தலையில் கூடை மாதிரி முடி அதிகமாகி விட்டது. 

இந்த விளம்பரமும்  சற்று வித்தியாசமாக இருக்கவே, ஃபோன் பண்ணித்தான் பார்ப்போமே என்று பண்ணினேன்.

கொரோனா பற்றி இரண்டு நிமிடம் ஒரு பெண்மணி பேசினப் பின்பு “சொல்லுங்க சார், நான்தான் ஆறுமுகம் பேசறேன்”ன்னு ஒரு குரல் கேட்டது.

“உங்களுடைய வாட்ஸப் போஸ்டை, நண்பர் ஒருவர் அனுப்பி இருந்தார். அதான், அத பத்தி பேசலாம்னு போன் பண்ணினேன்” என்று கூறினேன்.

“ஆமாங்க, நீங்க சொல்லற நாளுக்கு, கேக்கற டைமுக்கு, ஒங்க வீட்டுக்கு வந்தே பண்ணி விடுவேங்க. என்னங்க பண்ணனும் கட்டிங்கா, கட்டிங் பண்ணி ஹேர் டை பண்ணனுமா?”

“ஹேர் கட்டிங்தான் பண்ணனும், நாளைக்கு வரமுடியுமா”.

“வரலாங்க. ஒண்ணும் பிரச்சினை இல்ல. எத்தனை மணிக்குங்க வரணும்?”

“கார்த்தால ஏழு மணிக்கு வர முடியுமா? ஆஃபீஸ் இல்ல , ஆனா கொஞ்சம் வீட்டுல வேலை இருக்கு, அதுனாலத்தான்.”

“வந்துடறேங்க. ஷார்ப்பா ஏழு மணிக்கு வந்துடறேங்க. அட்ரஸ இதே நம்பர்க்கு வாட்ஸப் பண்ணிடுங்க. வீடு எந்த ஏரியால இருக்குங்க?”.

“நம்ப மடிப்பாக்கம் குமரன் தியேட்டர் இருக்குல்ல, அதுக்கு பக்கத்து ரோடுல கடைசில வந்து வலது பக்கம் திரும்பினீங்கன்னா  “ஸ்ரேயஸ்” ஒரு  அபார்ட்மெண்ட் வலது பக்கம் இருக்கும்.  போர்டு போட்டு இருக்கும். அங்கதான். முதல்  மாடி. நான் உங்களுக்கு அட்ரஸ் அனுப்பறேன்.”

மறுநாள் சரியாக ஏழு மணிக்கு  ஒல்லியா நடுத்தர வயதில் ஒருவர் முகத்தில் மாஸ்க் போட்டுக் கொண்டு   வந்திருந்தார். 

“சார், நான் தான் ஆறுமுகம், ஹேர் கட்டிங் பண்ண வரச்சொல்லி நேத்திக்கு நீங்க எனக்கு போன் பண்ணி இருந்திங்க”.

“ஆமாம், ஆறுமுகம், வாங்க. நம்ம வீடு தனி வீடு இல்ல, வெளில உட்கார்ந்து பண்ணிக்கலாம்னா, இது ஒரு  அபார்ட்மெண்ட். அதுனாலதான் எங்க உட்கார்ந்து பண்ணிக்கலாம்னு யோசிக்கறேன்”.

“சார், இப்படியே ஓரமா சேர் போட்டு உட்காருங்க, பத்தே நிமிஷம், நான் உங்களுக்கு பண்ணி விட்டுடறேன், இந்த இடத்தையும் க்ளின் பண்ணி கொடுத்துடறேன். நீங்க ஒரு பழைய வேஷ்டி இருந்தா எடுத்தாங்க, இல்லைன்னா ஒரு பெரிய சைஸ்ல துண்டு இருந்தா கொடுங்க”.

சானிடைசர்  எடுத்து தானும் கையிலே தடவிக் கொண்டு எனக்கும் கொடுத்தார். நான்  கொடுத்த பழைய வேஷ்டியை எனக்கு போர்த்திவிட்டு என்னை ஓரமா சேரில்  உட்கார செய்தார்.  அவர்  கையோடு கொண்டு வந்திருந்த  கண்ணாடியை என்னிடம் ஒரு ஸ்டூல் கேட்டு அதையும் சுவரோரமா  நிக்க வைத்தார். சலூன் மாதிரி கண்ணாடிக்குள்ள கண்ணாடி தெரியாவிட்டாலும், என்ன நடந்துண்டு இருக்குங்கிறதை பார்த்துக் கொள்ளலாம். கத்திரிக்கோலும் சீப்பும் ஒரு கவர்லேந்து பிரிச்சு எடுத்துண்டார். புதுசுன்னு புரிஞ்சிண்டேன். என்னை பார்த்து சொன்னார் “சார், நீங்க மாஸ்க் போட்டுக்கிட்டே இருங்க. காதுகிட்ட வரும்பொழுது சொல்றேன், அப்ப மாத்திரம் கொஞ்சம் கழட்டிக்கோங்க. மத்ததெல்லாம் நான் பாத்துக்கறேன்”.

சலூன்  சேரில் உட்கார்ந்தா வர பழக்கம், மெதுவாக அவரிடம் பேச்சு கொடுத்தேன்.

“இந்த கொரோனா வந்ததுலேந்து, ரெண்டு மாசமா  ரொம்பவே  கஷ்டம், இல்லை”ன்னு கேட்டேன் .

“ஆமா சார், கொஞ்சம் கஷ்டம்தான்.  நம்ம ரெகுலர் கஸ்டமர்கள் தயவுல எப்படியோ சமாளிச்சுட்டேன், லாக்டவுன் ஆரம்பிச்சு பத்து பதினைஞ்சு நாள் என்ன பண்ணறதுன்னு புரியவே இல்லை. அப்பதான் ஒரு ரெகுலர் கஸ்டமர் போன் பண்ணி, வீட்டுக்கு வந்து ஹேர் கட்டிங் பண்ணி விட முடியுமான்னு கேட்டார், நானும் சைக்கிள் எடுத்துக்கிட்டு விடிகாலமா கிளம்பி அவர் வீட்டுக்கு போய் பண்ணி விட்டேன். அப்பதான் தோணிச்சு, ஏன்,  நம்ம கஸ்டமர் ஒவ்வொருத்தரையும் கால் பண்ணி, இந்த மாதிரி வீட்டிற்கே வந்து சர்வீஸ் பண்றேன்னு,சொல்லக் கூடாதுன்னு”

“பண்ணினீங்களா, ரெஸ்பான்ஸ் எப்படி இருந்தது, எல்லாரும் கூப்பிட்டாங்களா?”

“இல்ல சார், முதல் லாக்டவுன்ல   யாரும்  ஆபீஸ்க்கு போகல, அதுனால  ஹேர் கட்டிங் பண்ணிக்கணும்னு யாருக்கும் தோணல.   தொடர்ச்சியா  லாக்டவுன்  வரும்னு யார் சார் எதிர்பார்த்தாங்க. அதுக்கப்பறம்தான்  ஒவ்வொருத்தரா கூப்பிட ஆரம்பிச்சாங்க. நானும் போய் பண்ணி விட்டுடுவேன்.”

“போலீஸ்காரங்க ஒண்ணும் பிரச்சினை பண்ணலியா” 

“இல்லை சார், நான் கொஞ்சம் காலைலேயே கிளம்பிடுவேன், சைக்கிள்ல போறதுனால ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. அப்படியே கூப்டு கேட்டாலும், வயித்து புழைப்புக்காக போறேன்னு சொன்னா, “ஜாக்கிரதையா இருப்பா”ன்னு சொல்லி விட்ருவாங்க.

“அப்ப இந்த  லாக்டவுன் முடியற வரைக்கும் இப்படி வீட்டு சர்வீஸ்தானா?”

“இல்ல சார், நான் அதற்கப்புறமும் இதே மாதிரி வீட்டிற்க்கு போயே  சர்வீஸ் பண்ணலான்னு    இருக்கேங்க. இப்போ லாக்டவுன் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணியிருக்காங்க, கடையை திறக்க அல்லோவ் பண்ணியிருக்காங்க, ஆனாலும் ஜனங்க கடையாண்ட வரதுக்கு   பயப்படறாங்க. அவங்கள சொல்லி குத்தமில்ல சார். ஒருத்தருக்கு யூஸ் பண்ணின  துணிய, உதறி உதறி இன்னொருத்தருக்கு  யூஸ் பண்ணறோம். இந்த கொரோனா காலகட்டத்துல மனுஷங்க  பயப்படத்தானே செய்வாங்க.  இப்போ வீட்டுக்கு போறதுனாலே உங்களண்டை வாங்கின மாதிரி, அவங்க அவங்களோட துணிய வாங்கி யூஸ் பண்ணறேன், ஏன், இந்த கத்திரிக்கோல், சீப்பு கூட தனி செட், வேணும்னா அவங்க வாங்கி வெச்சுக்கலாம். அவங்க வீட்டுலேயே இருக்கும். என்னிக்கு போறேனோ அன்னிக்கு எடுத்து கொடுப்பாங்க, அவங்களுக்கு யூஸ் பண்ணிட்டு கழுவி திருப்பி கொடுத்துடுவேன்.”

அவர் தொடர்ந்தார் “இன்னொரு காரணமும் இருக்குங்க கடை திறக்க வேண்டாங்கிறதுக்கு . இப்பல்லாம் கடையாண்ட காலேஜ் போற பசங்க யாரும்  வர மாட்டேங்கிறாங்க, அவனுங்க பெரிய பார்லர் கடைக்குதான் போவானுங்க. நம்ம கடையோட  ரெகுலர் கஸ்டமர் யாருன்னா, குழந்தைங்க, ஸ்கூல் பசங்க, நடுத்தர வயசு ஆளுங்க, அப்புறம் வயசான தாத்தாக்கள். இவங்க எல்லாருக்கும் நான் வீட்டுல போய் பண்ணினா சந்தோசம்தான் படறாங்க. எனக்கும் கடை வாடகை மிச்சம், எலெக்ட்ரிசிட்டி சார்ஜ் கட்ட வேண்டாம். கடை இருக்கும் பொழுது, கஸ்டமர் வந்துட்டு, எங்கேயாவது நான்  இல்லைன்னு திரும்பி போயிடுவாங்களோன்னு, நாள் முழுக்க  கடைய திறந்து போட்டுக்கிட்டு உட்கார்ந்துகிட்டு இருக்கணும். இப்போ அப்படி இல்லை. கால் இல்லைன்னா நேரா வீட்டுக்கு போயிடுவேன். மறுபடியும் யாராவது கூப்பிட்டாங்கன்னா கிளம்பிப்  போவேன். எல்லாமே முக்காவாசி இந்த ஏரியாதானே, பக்கந்தான். தேதி போட்டு குறிச்சு வைச்சுக்கிட்டு இருக்கேன். கரெக்டா ஒரு மாசம் கழிச்சு நானே வரலாமான்னு கேட்டு போன் பண்ணி விடுவேன். சார், உண்மையே சொல்லனும்னா நான் கடைல சம்பாரிச்சதைவிட இப்போ அதிகமா சம்பாரிக்கறேன், நான் கேட்காமலே கஸ்டமர்களெல்லாம் அதிகமாகத்தான் கொடுக்கிறாங்க. கடவுள் ஒரு கதவ மூடினா இன்னொரு கதவ நிச்சயமா திறந்து விடுவான், சார்”.

வேலையே முடிச்சிட்டு, முடியெல்லாம் ஒரு தனி பையில் போட்டுக் கொண்டு முடி வெட்டிக்  கொண்ட இடத்தை அழகா பெருக்கி         துடைத்துக்  கொடுத்தார்.  நானும் அவரிடம் ஒரு  செட் கத்திரிக்கோலும் சீப்பும் வாஙகிக்கொண்டேன். ஒரு மாதம் கழிச்சு போன் பண்ணவும் சொன்னேன்.

அப்பல்லோ பார்மசிக்காரன் மருந்து முடிஞ்சிடுச்சுன்னு மெசேஜ் அனுப்பற மாதிரி, ஹேர் கட்டிங் ட்யூன்னு மெசேஜ் வருங்கிறதை நினைச்சா, சிரிப்பாகவும், ஆச்சிரியமாகவும்  இருந்தது. ஒன்று மட்டும் தெளிவாக தெரிந்தது,  பேரிடர்  வந்தால்  மக்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் தளர்ந்துதான்  போகிறார்கள், ஆனால் சீக்கிரமே நிமிர்ந்து நின்று விடுகின்றன

Series Navigationதனிமைதக்கயாகப் பரணி தொடர்ச்சி
author

Similar Posts

Comments

  1. Avatar
    jananesan says:

    தேவையும் நெருக்கடியுமே புதிய வழிமுறைகளை அறிமுகப் படுத்தும் என்பதை மாத்தி யோசி நிகழ்வுக்குறிப்பு மெய்ப்பிக்கிறது.வாழ்த்துகள் விஸ்வநாதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *