தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

17 ஜனவரி 2021

ஆயுள் தண்டனை

சி. ஜெயபாரதன், கனடா

Spread the love

சி. ஜெயபாரதன், கனடா

முதுமையின் வெகுமதி இதுதான்.
ஊழ்விதித் தண்டனை
இதுதான்.
இளமை விடை பெற்றது
எப்போது ?
முதுமை உடலுள் புகுந்தது
எப்போது ?

முடி நரைத்து எச்சரிக்கை விடுகிறது !
மூப்பு முதிருது
மூச்சு திணருது.
நாக்கு பிறழுது,
வாய் தடுமாறுது,
கால் தயங்குது, கை ஆடுது,
கண்ணொளி மங்குது.
காதொலி குன்றுது.
குனிந்தால்
நிமிர முடிய வில்லை.
நிமிர்ந்தால்
குனிய முடிய வில்லை.
உடல் நிமிர்ப்பு குன்றிப் போய்
புவியீர்ப்பு மிஞ்சிப் போய்
முதுகு கூன் விழுகுது.

ஓய்வகக் காப்பு மாளிகையில்
தள்ள நேரிடும்
தருணம் இதுதான் !
முதியோருக்கு
ஆயுள் தண்டனை இதுதான் !
குடும்பத்தில்
தம்பதியர் இருவரும்
அனுதினம்
பணம் சம்பா திக்கப் போகும்
கட்டாய நிலை
காரணம் !

காலை எழுந்தால்
கண்ணொளி மங்கும்.
சேவல் கூவல்
செவிதனில் நழுவும்.
கால்கள் தள்ளாடும்.
இரவா, பகலா,
சனியா, புதனா
காலையா, மாலையா
ஜூனா, ஜூலையா,
நினைவில் வர
சற்று நேரம் எடுக்குது !
மங்குது கண்ணொளி
விக்குது சொல்லொலி.
திக்குது வாய்மொழி
சுருங்குது நடைவழி
திரும்ப இயலாது உடனே.
உடல் தளர்ச்சி,
முடக்குது உடம்பை.

பாரத விடுதலைப் போராட்டம்
பற்றிக் கூற வீட்டில்
பேரன் பேத்தி கட்குத்
தாத்தா தேவை.
பேரன்பு ஊட்ட வீட்டில்
பாட்டி தேவை.
ஓயும் முதியோர் தனிமையில்
ஒதுக்கப் பட்டு
ஆயுள் மட்டும் நீள்கிறது,
அன்பூட்டும்
வாய்ப்பில்லாது !

Series Navigationஒழுங்கீனமென்ற சமூகத் தொற்றுபிரகடனம்

Leave a Comment

Archives