தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

24 ஜனவரி 2021

கவிதை

Spread the love


ப.தனஞ்ஜெயன்

பச்சை மொழி காற்றிலெங்கும்
புறப்பட்டுக் கலைந்து
செல்கின்றன
துருவ தேசம் சென்று திரும்பி
பென்குயினின்
நடனத்தில்
குளிர் அருந்திப் பேசுகின்றன

மஞ்சள் வானம் பார்த்து
ரசித்த எலியிஸ் குயினென்சிஸ்
ஆப்பிரிக்கத் தோட்டமாய்
ஆடி நின்று
வான் விலக்கும் குடிசையில்
ஏழ்மை மொழி பேசி வழிகின்றன
உலகெங்கும்

நிரம்பி
வழிந்தோடும் குருதிகளின்
கால்வாய்கள்
வறண்டு போய் திகைக்கிறது

மண் எழுதும்
மானுடமாய் பிணவாடை வீசும்
ஆஷ்விட்ஸ் அடக்குமுறைகள்

உலகெங்கும் கட்டியெழுப்பிய
அதிகாரம்
துருவம் தேடி அலைகிறது

உலகை விழுங்கும் 
கருநாகமொன்றாய்
வாய்த்திருந்து உள்ளிழுக்க
சடங்கின்றி
உள் சேரும் உடல் பூவாய்
கனக்கிறது

காற்றெங்கும் விஷம் வீச
கூண்டுக்குள்
நிறவேடம் நடந்தேறி 
நின்றிருக்க
எதிர்வினைகள் கலக்கிறது

இயேசுவின் மூன்றாம் நாள்
இங்கு இல்லை
புத்தனின் மௌனத்தில்
அமைதியில்லை
பிறையின் ஒரு பகுதி
உடைந்த துகள்களில்
நட்சத்திர முகங்கள் 
பார்த்து அதிசயித்தன

உலக காக்கையின் குரல்களும் 
பறவைகளின் குரல்களும்
புரிகின்றதா உங்களுக்கு

இனி வரும் காலம் முகாம்களை
தேட வேண்டியதில்லை
ஒவ்வொரு வீட்டையும்
ஆஷ்விட்ஸ் ஆக மாற்றிவிடுவார்கள்
நமக்கான துன்பங்கள் எங்கிருந்து புறப்படுகிறது என்பதை
தெரிந்துகொள்ளுங்கள்.

ப.தனஞ்ஜெயன்.danadjeane1979@gmail.com9751800333
ஆஷ்விட்ஸ்−வதை கூடாரங்கள்
எலியிஸ் குயினென்சிஸ்−பனை மர வகை.

Series Navigationகேள்வியின் நாயகனே!நிரந்தரமாக …

Leave a Comment

Archives