ஜென் ஒரு புரிதல் – பகுதி 10

This entry is part 6 of 33 in the series 11 செப்டம்பர் 2011

சத்யானந்தன்

உயர்வு தாழ்வு, நன்மை தீமை, மகிழ்ச்சி துன்பம், உண்மை பொய், இருப்பது இல்லாதது, இனிப்பு கசப்பு இப்படி இரன்டில் ஒன்றைத் தேடுவதாகவோ அல்லது இனங்காணுவதாகவோ வாழ்க்கைகள் கழிந்து வரலாறாய் மாறின. ஆன்மீகம் என்பது இந்த இருமை நிலைகளுக்கு அப்பாற்பட்டே இருக்கிறது. நமது தேடலை இந்த இருமைகளுக்கு மட்டுமே பழகிய பார்வை த்டை செய்கிறது. புரிதலுக்கான ஒரே ஒரு திசை காட்டியாக இந்த இருமை புற உலகு சம்பந்தப்பட்டதென்பதும் ஆன்மீகம் அக உலகிலானது என்று ஜென் வழி நமக்குப் பிடி படுகிறது. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘ஹன் ஷன்’னின் கவிதைகளை வாசிப்போம்:

அடர்ந்த பனி மலைப் பாதையின்
கரடுமுரடான தடம் வளர்ந்து கொண்டே போகிறது
பாறைகளும் புதருமான பள்ளத்தாக்கு
அகண்ட நீரோட்டம் பனி படர்ந்த புற்கள்
பாதை வழுக்குகிறது மழை இல்லாமலும்
காற்றில்லாமல் பைன் மரங்கள் பாடும்
இந்த உலகின் தளைகளிலிருந் து விடுபட்டு
வெண்மேகங்களில் என்னுடன் யார் அமரக் கூடும்?

என் மனம் வசந்த காலத்து நிலவைப் போல
பசுமையான சுனையில் பளபளக்கும்
அதனுடன் எதையும் ஒப்பிடவே இயலாது எனும் போது
அதைப் பற்றி என்ன விளக்கம் சொல்வது?

இந்த சிகரங்களின் எதிரே அமர்ந்திருக்கும் போது
முழுநிலவொளி வானுலகின் ஜொலிப்பு
தன்னுள் ஒளியெதும் இல்லா நிலவில் உள்ளவை
பல்லாயிரம் பிரதிபலிப்புகள்
தனது ஆன்மா விரிந்து வெற்றிடமாய்
அதன் நுட்ப ரகசியத்தை உணருங்கள்
இந்த நிலவு இதயத்தின் அச்சு போலானது

————-

பச்சைப் பசேலெனத் துளிர்த்த தளிரிலைகளைக் காண்கிறோம்
அவற்றின் ஆயுள் எவ்வளவு?
இன்று பறிக்கத் தவிக்கும் விரல்களின் முன்
நாளை தோட்டக்காரர் துடைப்பத்தின் அருகில் தரையில்

வியக்க வைக்கும் இளைஞரின் மனம்
காலப்போக்கில் கிழடு தட்டும்
உலகும் மலர்கள் போலத் தானா
செவ்வண்ணத்து முகங்கள் எத்தனை நாள் இளமை காட்டும்?

அழிந்த நகரத்தை நான் என்
குதிரையில் கடந்து செல்கிறேன்
அழிவின் காட்சியான இந்நகர்
ஒரு பயணியின் சிந்தனையைத் தூண்டும்

உக்கிரமாகவோ சிறிய அளவிலோ
நடந்த சண்டைகள்
பெரியதும் சிறியதுமாய் கல்லறைகள்
நடுங்கும் காட்டுக் கொடியின் நிழல்
ஒலிக்கும் மர இலைகளின் சலசலப்பு
கேட்பாரற்றுக் கிடக்கும் எலும்புகளின் மீது
அமரரின் பெயர் இல்லை

நெடிடுயர்ந்த மலை முகடுகளின்
கீழ் நான் தனியே வாழ்கிறேன்
மேகங்கள் நாள் முழுவதும் மூட்டமாய்
எனது குடில் மங்கலாயிருக்கும் உள்ளே
ஆனால் எனக்குள் ஓசையேதும் இல்லை

கனவில் நான் ஒரு பொன்வாயிலைக் கடந்து சென்றேன்
கற்பாலத்தைக் கடந்து செல்லும் போது என்
ஆன்மா விழித்தெழுந்தது
என் ஒரே சுமையையும் பின்னே விட்டு விட்டேன்
என் உணவுப் பாத்திரம் மரக் கிளையில் உரசி
ஒலி எழுப்பிக் கொண்டிருக்கிறது

மலையின் மீது மேகமென்னும் பெரிய மேலங்கியை
அணிந்து யாரோ வாழ்கிறார்
தகதகக்கும் கதிரவன் செடி கொடிகளை
உணவாகக் காட்டும்
ஆனாலும் நீண்ட பாதை நெடுகும்
சந்தேகங்களும் கழிவிரக்கங்களும்

அபூர்வமானது இந்த விண்ணுலக ஜந்து
பார் கூர்ந்து எதையும் காணாமல் தனியாய்
நீ தேடும் முன் அது மறைந்திடும்
அது வரும் செல்லும் ஆனால்
கதவுகள் வழி அல்ல
ஒரு சதுர அங்குலத்தில் பொருத்திக் கொள்ளும்
எல்லா திசைகளிலும் அது பரவும்
நீ அடையாளம் கண்டு நோக்காவிடில்
சந்தித்திருந்தாலும் அறிய மாட்டாய்

சிகரங்களின் மேலே தெளிவான வானில் பளிச்சிடும் நிலவு
எதற்குமே ஒளிகூட்டுவதில்லை
விலைமதிப்பில்லா நகை ஒன்று ஒளிந்திருக்கும்
உடலின் உள்ளே புலன்களுள் புதைந்து

நீரோடையின் அருகே அமர்ந்து
பசுமை கொஞ்சும் வெள்ளத்தைக் காணலாம்
சிகரத்தின் மேலேறி நீண்டிருக்கும் ஒரு
பாறை மீது அமரலாம்
மேகம் போல் பற்றற்றிருக்கும் என் மனம்
தொலைவில் உள்ள உலகில் இருந்து எனக்கு
என்ன தேவை?

நம்பிக்கையுள்ளோருக்கு ஒரு செய்தி
உங்கள் இயல்பு எது என்றறியத்தானே
எதையோ அசை போடுகிறீர்கள்?
உங்கள் இயல்பு இயற்கையாயிருக்கிறது
இறையுலகம் வழங்கியது முழுமையானது
நிரூபணதைத் தேடி அலைவது
வழிதவறித் திண்டாடவே வைக்கும்
நடுமரத்தை விட்டுவிட்டு கிளைகளில் தேடுவது
அசட்டுத்தனமாய் முடியும்

குழந்தைகளே! எரியும் இந்த வீட்டிலிருந்து
வெளியேருங்கள் உங்களுக்காக
மூன்று வண்டிகள் வெளியே காத்திருக்கின்றன
கூரையில்லா வாழ்க்கையிலிருந்து உங்களைக் காப்பாற்ற
கிராமத்து மைதானத்தில் இளைப்பாருங்கள்
வானின் முன்பு எல்லாமே உள்ளீடற்றதாய்
எந்த திசையும் மேலானதோ கீழானதோ அல்ல
கிழக்கைப் போன்றே நல்லதே மேற்கும்
இதன் அர்த்தம் புரிந்தவர்
எந்த திசையிலும் செல்லலாம்

பௌத்தத்தின் மறுமலர்ச்சி வடிவமே ஜென். ஆனால் புத்தர், பௌத்தத் தலங்கள் பற்றிய குறிப்புகள் மிகமிகக் குறைவாகவே தென்படும். கிட்டத்தட்ட இருக்கவே இருக்காது. ஆனால் ஊசியால் பலூனைக் குத்தியது போல நம் மயக்கத்தைத் துடைத்து விழிப்பைத் தட்டும். இப்போது வாசித்த கவிதையில்
“கிழக்கைப் போன்றே நல்லதே மேற்கும்
இதன் அர்த்தம் புரிந்தவர்
எந்த திசையிலும் செல்லலாம்” என்னும் பதிவு மிக ஆழ்ந்த உட்பொருள் கொண்டது. ஜென்னில் ஆழ்ந்து அர்த்தம் காண இன்னும் தொடர்ந்து வாசிப்போம்

Series Navigationஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 7நான் எப்பொதெல்லாம் தனிமையிலிருக்கிறேன்
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *