தமிழ்நாட்டு கல்வியின் அவல நிலையின் மோசமான உதாரணம் — சீமான்

This entry is part 11 of 11 in the series 13 செப்டம்பர் 2020

.

விவசாயம் சார்ந்த பொருளாதாரத்துக்கு தமிழ்நாட்டை அனுப்ப கோரும் சீமானின் பேச்சு இங்கே.

அவ்வப்போது அவர் “நாயே நாயே” என்று  திடீர் திடீர் என்று கத்துவதால் உங்களது இதயத்துக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் நான் பொறுப்பில்லை என்று கூறிகொண்டு இந்த வீடியோவை பார்க்கும் படி கேட்டுகொள்கிறேன்

இதய பலகீனமானவர்கள் அதனை பார்க்கமுடியாவிட்டால்,  அவர்களுக்காக இவரது சில கருத்துக்களை இங்கே படித்துகொள்ள எழுதுகிறேன்.
1. ஆங்கிலப்பள்ளிகளை மூடவில்லை, ஆனால் இதற்குமேல் திறக்க அனுமதி இல்லை  
2. ஆங்கில பள்ளிகள் எத்தனை இருக்கிறதோ அதனை விட அதிகமாக தமிழ் மொழி பள்ளிகள் திறக்கப்படும்.
3. பயிற்றுமொழி தமிழ், கட்டாய பாட மொழி ஆங்கிலம். உலக மொழிகள் அனைத்தும் விருப்பமொழி. விரும்பினால் படிக்கலாம்.  இந்தி, உருது, ஜெர்மன் எல்லாம் விருப்பமொழி
4. தமிழ் மொழி படிப்பதற்கு காரணம் இனம் வாழ.
5. கல்வி, மருத்துவம் ஆகியவை இலவசக்கல்வி.
6. வேளாண்மை தமிழ் தேசிய தொழிலாக மாற்றுவார்கள்.
7. கல்வி வேலைவாய்ப்பு கிராமத்துக்கு கொண்டு செல்வார். அதனால் வேளாண்மையில் இருக்கும் விவசாயிகள் கிராமத்திலேயே இருக்க வேண்டும்.
8. வேர்வை உப்புப்பூர்க்க ஒருவன் உழைத்தால்தான் ஒருவேளை சோறு என்று சட்டம் போடப்படும்.
9. எல்லா படித்த இளைஞர்களையும் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
10. எல்லா நிலங்களையும் ஒத்திக்கு வாங்கி அதில் எல்லா படித்த இளைஞர்களை ஈடுபடுத்தி பண்ணை நிலத்தில் உழைக்க செயல்படுத்துவார்
11. ஆடுமாடு மேய்த்தல் அரசுப்பணி. (டென்மார்க் வெறும் ஆடுமாடுதான் மேய்க்கிறது என்று கூறுகிறார்)
12. ஆந்திரா, அமெரிக்கா என்று ஆடுமாடுகளை ஏற்றுமதி செய்வார்.
13. ஆடுமாடு மேய்த்தலை மேம்படுத்தினால், பட்டுப்பூச்சி வளர்த்தல், மீன் வளர்த்தல், கோழி வளர்த்தல், விவசாயம் செய்தல் ஆகியவை முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
14. துபாயில் ஆடுமாடு மேய்ப்பதற்கு பதிலாக தமிழ்நாட்டில் ஆடுமாடு மேய்க்க அரசுப்பணி வழங்குவார்.
15. பாலில் நெய், பால்கோவா உற்பத்தி செய்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வார்.

இன்னொரு வீடியோவில், விவசாயத்தை அரசுவேலையாக மாற்றப்படும் என்று சீமான் கூறும் பேச்சு


சீமானின் பேச்சுக்கள் போல பல வாட்ஸப் செய்திகளை தினந்தோறும் நான் பார்க்கிறேன். அதுவும் முக்கியமாக படித்த இளைஞர்களும்,  தமிழ்நாட்டில் படித்துவிட்டு பிறகு பல வேறு நாடுகளில் வேலை செய்பவர்கள் கூட இது போன்ற தகவல்களை, பரிமாறிகொள்கிறார்கள்.

சீமான் எந்த அளவுக்கு படித்திருக்கிறார் என்று எனக்கு தெரியவில்லை. வீராவேசமாக பேசுபவர்களிடம் தமிழர்கள் மட்டுமல்ல எல்லா மனிதர்களுமே மயங்கிவிடுகிறார்கள். அவர்கள் உரத்து கத்தும்போது, அவர்கள் உண்மையை சொல்லுவதால்தான் அவர்கள் கோபத்துடம் பேசுகிறார்கள் என்று உள்ளார நினைத்துவிடுகிறார்கள். இந்த மனித  பலவீனத்தை பல அரசியல்வாதிகள் உபயோகப்படுத்துகொண்டுவிடுகிறார்கள்.

டென்மார்க்கின் முக்கிய தொழிலே ஆடுமாடு மேய்த்தல்தான் என்று சொல்லுகிறார் சீமான். அது தவறு.

டென்மார்க்கில் விவசாயம் சார்ந்த தொழில்கள், டென்மார்க்கின் வருமானத்தில் சுமார் 2 சதவீதமே பங்கு வகிக்கின்றன.

விக்கி இவ்வாறு கூறுகிறது.
By 2017 services contributed circa 75% of GDP, manufacturing about 15% and agriculture less than 2%.[125]
2017இல் சர்வீஸ் 75 சதவீத வருமானத்தையும், தொழில்துறை 15 சதவீதத்தையும் விவசாயம் 2 சதவீதத்துக்கும் குறைவாகவே டென்மார்க் பொருளாதாரத்தின் பங்காக இருக்கிறது.

ஆனால் சீமான் போன்றவர்களுக்கும் சீமானின் உரைவீச்சில் மயங்குபவர்களுக்கும் ஏன் சர்வீஸஸில் 75 சதவீத வருமானம் வருகிறதே, இது என்ன? என்று தெரியாது.

விவசாயம் சார்ந்து ஒரு வாதத்தை வைப்பது எளிது. எதற்கு புல்லட் ரயிலை போடுகிறாய்? புல்லட் ரயிலையா தின்னப்போகிறாய் என்று கேட்பது ஒரு மடையனின் கேள்வி.

ஆனால் இது ஏன் கேட்கப்படுகிறது? அது ஏன் விரும்பப்படுகிறது? அது ஏன் ஆஹா என்று கைதட்ட வைக்கிறது என்பது இப்போது முக்கியமான கேள்வி.

அதனைத்தான் இங்கே பேசப்போகிறேன்.

புல்லட் ரயிலை சாப்பிட முடியாது. ஆனால் புல்லட் ரயில் போன்ற விஷயங்கள் ராஜஸ்தானில் விளையும் பொருட்களை தமிழகத்துக்கு அலுங்காமல் நலுங்காமல் கொண்டு வர வைக்கமுடியும். அதே புல்லட் ரயில், ஸ்ரீரங்கத்தில் உற்பத்தியாகும் மல்லிகையை அது வாடுவதற்குள் ராஜஸ்தானுக்கு கொண்டு சென்று விற்க வைக்க முடியும்.

ஆறுவழிச்சாலையை எதிர்க்கும் மடையர்களுக்கும் இதுதான் பதில். விவசாயம் செய்துவிட்டு அதனை விற்க கொண்டு செல்லவில்லை என்றால் செய்த விவசாயம் பாழ். எடுத்துச்செல்ல வேகமான தெரு இல்லை என்றால்,  உற்பத்தியான பாலை தொழுவத்தில்தான் கொட்ட வேண்டும். கன்னியாகுமரியில்  உற்பத்தியான பாலை டெல்லியில் விற்கவேண்டுமென்றால்,  logistics என்றால் என்னவென்று புரியவேண்டும்.  அதனை MBA பட்டப்படிப்பில் படிக்கிறார்கள். supply chain management என்றால் என்னவென்று புரியவேண்டும். உற்பத்தி செய்துவிட்டால் மட்டும் போதாது. அதனை சேமிக்கவும், அதனை வினியோகிக்கவும், அதனை மக்களிடம் கொண்டு சேர்க்கவும், அதனை பதனப்படுத்தவும் தெரிந்திருக்க வேண்டும்.

பிரச்னை என்னவென்றால், தமிழ்நாட்டில் ஏராளமான மக்கள் இன்னமும் விவசாயத்தை நம்பி இருக்கிறார்கள்.

ஆனால் வெகுவேகமாக விவசாய துறை வளர்ந்து வருகிறது. இதனால் முன்பு பத்து ஏக்கரில் உற்பத்தியான விவசாய பொருட்களை இன்று ஒரு ஏக்கரிலேயே உற்பத்தி செய்யமுடிகிறது. ஏராளமான பொருள் சந்தைக்கு வரும்போது உற்பத்தி செய்த பொருளின் விலை குறைகிறது.  

ஏன் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்பதன் அடிப்படை காரணம் இதுதான்.

உதாரணத்துக்கு ஒரு விஷயத்தை பார்ப்போம்.
 ஆயிரம் பேருக்கு உணவு  உற்பத்தி செய்ய 900 பேர்கள் உழைத்துகொண்டிருந்தார்கள் என்று வைத்துகொள்வோம். மீத 100 பேர்கள் விவசாயம் சம்பந்தமான இதர தொழில்கள், அதாவது ஏர் கலப்பை செய்வது, துணி துவைப்பது, போன்ற வேலைகளை செய்துகொண்டிருந்தார்கள் என்று வைத்துகொள்வோம்.
அப்படியானால் அப்போது இந்த 900 பேர்கள் உற்பத்தி செய்துதான் அந்த ஆயிரம் பேரும் சாப்பிட முடியும். இந்த விவசாயிகள் மீத 100 பேர்கள் விவசாயம் இல்லாத தொழிலை செய்யும்போது அவர்களுக்கு கூலி என்பது இவர்கள் உற்பத்தி செய்வதில் அதிகமாக மிஞ்சுவதையே கொடுக்க இயலும்.

இதனை ஏறத்தாழ கொல்லைப்புறத்து விவசாயம் எனலாம். கொல்லைப்புறத்தில் விளைவதை வீட்டில் சாப்பிட்டு மிச்சமாக மிக கொஞ்சமே மிஞ்சும். அதுவே இந்த 100 பேர்களுக்கு உணவாக அவர்கள் செய்யும் உழைப்புக்கு கூலியாக செல்லும்.

இதுவே உற்பத்தி அதிகரிக்கிறது என்று வைத்துகொள்வோம். ஆயிரம் பேருக்கான உணவை வெறும் 50 பேர்களே உற்பத்தி செய்துவிடமுடியும் என்று வைத்துகொள்வோம். இப்போது 950 பேர்கள் என்ன வேலை செய்தாலும் அவர்களுக்கான உணவை இந்த 50 பேர்களே கொடுத்துவிட முடியும். இப்போது மீத 950 பேர்கள் என்ன வேலை செய்வார்கள்? அவர்களாலும் உணவு உற்பத்தி செய்யமுடியும் அல்லவா? அவர்களும் உற்பத்தி செய்வார்கள். அப்போது ஏராளமான உணவு உற்பத்தியாகும்.  ஒரு பொருள் மிக அதிகமாக இருந்தால், அதன் விலை குறையும். டன் டன்னாக தக்காளி உற்பத்தியானால் தக்காளியின் விலை கடுமையாக குறையும் அல்லவா?  வருடம் முழுவதும் உழைத்து உற்பத்தி செய்த விவசாயி அந்த உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை பார்க்கவியலாது.

இந்த வரைபடத்தில் ஒரு ஹெக்டேருக்கு உற்பத்தி எவ்வாறு அதிகரித்துவருகிறது என்பதை காட்டுகிறது.
https://ourworldindata.org/crop-yields
மேலும் சில வரைபடங்களை இதில் காணலாம்.

இதில் தெரிவது என்ன?
விவசாய தொழில்நுட்பம் வளர வளர,  அதிக உற்பத்தி செய்யும் தாவரங்களையும் கண்டுபிடிக்க கண்டுபிடிக்க, உற்பத்தி வெகுவேகமாக அதிகரிக்கிறது. இதனாலேயே உலகத்தில் முன்பு தலைவிரித்தாடிய பஞ்சங்கள் இன்று காணாமல் போய்விட்டன. அதுமட்டுமல்ல, அரிசி போன்ற உணவு தாவரங்களின் விலை வீழ்ச்சி அடைந்திருக்கிறது. (சீமான் போன்றவர்கள் 30 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு ரூபாய்க்கு மூன்று படி கொடுத்தார்கள், இன்று ஒரு ரூபாய்க்கு ஒரு கவளம் கூட வாங்கமுடியாது என்று சொல்லலாம். அதை புரியவைக்க நான் பொருளாதார படிப்பு நடத்த வேண்டும் )

உற்பத்தி அதிகரிக்க அதிகரிக்க, பொருள்களில் விலை குறைகிறது. இதனால் உற்பத்தி செய்த விவசாயி அதன் மூலம் வருமானம் பெற்று வசதியாக வாழ முடியாமல் ஆகிறது.

இதற்கு விடை என்ன?

விவசாயத்தை சார்ந்து மக்கள் இருப்பது குறைக்கப்பட வேண்டும்.

மற்ற தொழில்கள் விரிவடைய வேண்டும். விவசாயத்தை சார்ந்து மக்கள் இருப்பது குறைய குறைய ஒரு விவசாயி பெறும் வருமானம் அதிகரிக்கும். ஏனெனில், மிதமிஞ்சிய உற்பத்தி இருக்காது. மிதமிஞ்சிய உற்பத்தி இருந்தாலும் அந்த உற்பத்தியை விற்று கிடைக்கும் பணம் குறைவான விவசாயிகளுக்கே செல்லும். அந்த குறைவான விவசாயிகள் வளமையான வருமானம் பெறுவார்கள்.

உதாரணமாக 100 பேர், 1000 ரூபாய் பெருமானமுள்ள உணவுப்பொருட்களை உற்பத்தி செய்தால், அது ஆளுக்கு 10 ரூபாயாக பிரியும்.  ஆனால் 10 பேர் 1000 ரூபாய் பெருமானமுள்ள உணவுப்பொருட்களை உற்பத்தி செய்தால், அது ஆளுக்கு 100 ரூபாயாக பிரியும்.  இதனைத்தான் சீமான் புரிந்துகொள்ள வேண்டும்.

அதிகமான ஆட்களை விவசாயத்துக்குள் தள்ளுவது என்பது முழு தமிழ்நாட்டையுமே ஓட்டாண்டியாக்கும் வேலை.   இன்று தேவை விவசாயத்தை நம்பி இருப்பவர்களை விவசாயத்திலிருந்து எடுத்து அவர்களுக்கு மாற்று தொழில்களை தருவது.

இன்று சென்னையில் கார் உற்பத்தியில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். கார் உற்பத்தியை நிறுத்திவிட்டு எல்லாரையும் விவசாயத்துக்கு அனுப்பினால், அவர்களுக்கு முதலில் நிலம் எங்கே இருக்கிறது?

இவரது இன்னொரு கருத்து கம்யூனிஸ்டுகளிடமிருந்து கடன் வாங்கப்பட்டது.
நிலங்களை மக்களிடமிருந்து ஒத்திக்கு எடுத்து (கம்யூனிஸ அரசாங்கத்தில் எல்லா நிலங்களும் மக்களுக்கே சொந்தம் என்ற பெயரில் எல்லாம் அரசாங்கத்துக்கு சொந்தமாகும்.)  எல்லா படித்தவர்களையும் இழுத்து வந்து அவர்களை விவசாயிகளாக கூட்டுப்பண்ணையில் ஈடுபடுத்தப் போகிறேன் என்று சொல்லுகிறார்.

கூட்டுப்பண்ணை முறையை எந்த நாட்டில் அறிமுகப்படுத்தினாலும் மிகப்பெரும் தோல்வி அடைந்திருக்கிறது. அது மட்டுமல்ல, சீனா, ரஷ்யா, கம்போடியா போன்ற நாடுகளில் பெரும் பஞ்சத்தையும் பேரழிவையும் இந்த மடத்தனமான யோசனை உருவாக்கியிருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் யாருக்குமே வரலாறு தெரியாது. அவர்களுக்கு அண்ணாவின் சொற்பொழிவும், பெரியாரின் இனவெறியும், சீமானின் அறிவுஜீவித்தனமுமே போதுமானது.  

இந்த கூட்டுப்பண்ணை மடத்தனத்தோடு சீமான் சொன்ன இன்னொரு விஷயத்தையும் இந்த சீன, ரஷிய, கம்போடிய சர்வாதிகாரிகள் செய்தார்கள். அதாவது, படித்தவர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், கல்லூரி பேராசிரியர்கள் எல்லாரையும் வலுக்கட்டாயமாக பிடித்து வந்து பண்ணைகளில் வேலை செய்ய வைத்தார்கள். உடல் உழைப்பை கற்றுத்தருகிறார்களாம். ஏராளமான மக்கள் கொல்லப்பட்டார்கள். கட்டாய உழைப்பால் உற்பத்தியை பெருக்கமுடியவில்லை. பெரும் பட்டினி பஞ்சத்தில் பல கோடிக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள். உக்ரைன் பஞ்சம், கம்போடிய பஞ்சம், சீன பஞ்சம் என்று சற்றே தேடினால் இந்த கம்யூனிஸ மாயைகள் விலகும்.

ஏன் சீமான் உளறுகிறார்? அவர் உளறுகிறார் என்று ஏன் எலிய தமிழ் பில்லைகளால் கண்டுபிடிக்கமுடியவில்லை?
இதனால்தான் தமிழ்நாட்டு கல்விமுறையை பற்றி பேச வேண்டியிருக்கிறது.

தமிழ்நாட்டு கல்விமுறை தரத்தை ஆங்கிலத்தில் சொன்னால், race to the bottom என்று சொல்லலாம்.

காமராஜர் முதற்கொண்டு பலரும் கல்வியை பரந்துபட்டதாக ஆக்கி அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்று முனைந்திருக்கிறார்கள். அதில் குறையேதுமில்லை.


பிரச்னை கல்வியின் தரம்.

எழுதப்படிக்க தெரிவது ஒன்றே குறிக்கோள் என்றால், தமிழ்நாட்டில் கல்விமுறையை பாராட்டலாம். ஆனால் இன்றைய நவீன உலகத்துக்கு எழுதப்படிக்க தெரிவது ஒரு பொருட்டே அல்ல.

தமிழ்நாட்டில் கல்வி முறையும் கல்வியின் தரமும் மிக மிக கேவலமாக இருக்கிறது.  கர்னாடகாவில் ஒரு ஆறாம் வகுப்பில் படிப்பவனின் தரம் தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பின் தரமாக இருக்கிறது.

மேலும் தமிழ்நாட்டின் கல்வியின் தரத்தை இதர இந்திய மாநிலங்களோடு ஒப்பிடுவதை விட்டுவிட்டு உலக நாடுகளின் கல்வித்தரத்தோடு ஒப்பிட வேண்டும்.

தமிழ்நாட்டில் எந்த ஒரு பொதுதேர்வும் வைப்பதற்கு கடினமான எதிர்ப்பு இருக்கிறது.
தேர்வே எழுதாமல் பாஸ் அறிவித்தால் அந்த முதலமைச்சர் மிகச்சிறந்த முதலமைச்சர் ஆகிவிடுகிறார்.
எதிர்கட்சி தலைவராக இருக்கும் ஸ்டாலினும் அவரது புத்திரரான உதயநிதி ஸ்டாலினும் , தேர்வுக்கு பணம் கட்டவில்லை என்றாலும் அவர்களை பாஸ் செய்தவர்களாக அறிவிக்க வேண்டும் என்றெல்லாம் அடிச்சி விடுகிறார்கள்.

அதையே சீமானும் அடிக்கடி சொல்லுகிறார். எலிய தமில்பில்லைகள் எவ்வளவு சோதனைகளை தாங்கவேண்டும் என்று நினைத்தால் எனக்கு இப்பவே அடிவயிறு கலங்குகிறது.

சரி, தேர்வு வைக்க வேண்டாம். எந்த அடிப்படையில் கல்லூரிகளில் சேர்ப்பீர்கள்?

நீட் தேர்வை எழுதி பாஸ் செய்ய முடியாத ஒரு மாணவர், எந்த அடிப்படையில் மருத்துவ துறையில் ஐந்து வருடம் கடினமாக படித்து புரிந்துகொண்டு தேர்வு எழுதி மருத்துவராக ஆகமுடியும் என்று இவர்கள் கருதுகிறார்கள்?

அனிதா என்னும் மாணவி இந்த கல்வி தந்தைகளில் ஒருவர்  நடத்திய ஒரு தனியார் பள்ளியில் படித்து ”நூற்றுக்கு நூறு” வாங்கியும் நீட் தேர்வில் தோல்வியுற்றியிருந்தார். அதனால் அவர் தற்கொலை செய்துகொண்டார்.

இதில் குற்றவாளிகள்,  அவரது மரணத்துக்கு காரணமான அந்த தனியார் பள்ளியும், அப்படிப்பட்ட கேவலமான ஒரு கல்வியை கொடுத்த தமிழக அரசுமே அன்றி நீட் தேர்வை கொண்டுவந்த அரசாங்கம் அல்ல.

இன்றைக்கு நீட் தேர்வு எதனால் எதிர்க்கப்படுகிறது? இங்கே கல்வித்தந்தைகள் தனியார் மருத்துவ கல்லூரிகள் நடத்துகிறார்கள். அதில் நீட் தேர்வில் 720 மதிப்பெண்களில் குறைந்தது 120 மதிப்பெண் பெற்றவர்தான் சேரமுடியும் என்று கொண்டுவந்ததால், பல கோடிரூபாய்களை பணக்காரர்களிடமிருந்து பெற்று அவர்களது உருப்படாத குழந்தைகளுக்கு மருத்துவம் படிக்க வைக்கும் பிஸினஸ் பாதிக்கப்பட்டிருக்கிறது. அந்த கல்வித்தந்தைகளும் அந்த கல்வித்தந்தைகளின் நண்பர்களும் நடத்தும் தொலைக்காட்சிகளில் ஊடகவியலாளர்கள் வாயிலும் வயிற்றிலும் அடித்துகொண்டு, நீட் தேர்வால் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்று பிதற்றுகிறார்கள். பார்ப்பவர்கள் மனம் பதைக்கும் படி ஊளையிடுகிறார்கள்.

 இப்போது சீமானின் முதல் ஐந்து புள்ளிகளை பேசுவோம்.

இன்றைக்கு இருக்கும் ஆங்கிலப்பள்ளிகளை எல்லாம் மூடாமல் (!) தமிழ் பள்ளிகளை திறக்கப்போவதாக சொல்லுகிறார்.
ஏனெனில் அவருக்கே தெரியும். இன்று ஆங்கிலப்பள்ளிகளை மூடுவேன் என்று சொன்னால், அந்தகூட்டம் கலைந்துவிடும். ஆங்கிலத்தை எதிர்த்தால் அவருக்கு படியளக்கும் பெரிசுகள் சட்டையை கோர்த்து கேள்வி கேட்கும்.

 அவர் சொல்லுவதெல்லாம், ஆங்கிலப்பள்ளிக்கு போகாதவர்களை  தமிழை படிக்க வைப்பேன், ஏனெனில் ”தமிழ் இனம் வாழ” என்கிறார்.
ஆங்கிலப்பள்ளிகளை விட சிறப்பாக தமிழ் பள்ளிகளை நடத்தப்போவதாகவும் சொல்லுகிறார்.

ஆங்கிலம் கட்டாயப்பாடம், ஆனால் இந்தி மற்ற மொழிகள் கற்றுகொள்ள உதவி செய்வேன் என்கிறார். ஆமாம் இது ஏறத்தாழ இன்று மத்திய அரசாங்கம் அறிவித்திருக்கும் மும்மொழி கொள்கைதான்.

சீமான் நேரடியாக அந்த மும்மொழி கொள்கையை வரவேற்றுவிடலாம்.

https://en.wikipedia.org/wiki/National_Education_Policy_2020

பிரச்னை பள்ளிகள் அல்ல. பிரச்னை கல்லூரிகள். பிரச்னை பல்கலைக்கழகங்கள்.

தொழில்நுட்பம் , மருத்துவம், உயர்கல்வி, அறிவியலில் பிஹெச்டி எந்த மொழிகளில் செய்யப்படுகிறது என்பதுதான்.

சீமான் போன்றவர்கள் எந்த அடிப்படையும் இல்லாமல், எல்லாம் தெரிந்த மேதாவி மாதிரி உளறுவதற்கும், அதற்கு விசிலடிச்சான் குஞ்சுகள் கைதட்டுவதும் காரணம், உயர் கல்வி ஆங்கிலத்துக்கு சென்றதுதான்.

தமிழ் வளர்ப்பதாக பீலா விடும் திராவிட அரசியலின் கடந்த 60 வருட ஆட்சியில் சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் மட்டுமே தமிழில் பொறியியல் சொல்லித்தரப்படுகிறது.  அதுவும் சமீபத்தில்தான்.

உயர்கல்வி தமிழில் இருந்தால், அந்த கல்வியை கற்றவர்களுக்கு படித்ததை பேச அதுவும் தமிழில் பேச பல்லாயிரக்கணக்கான வாய்ப்புகள் வருகின்றன. அந்த கல்வி, செவிவழியாகவே பல கோடி பேரை சென்றடைகிறது.  விவசாய பொருளாதாரம், நியூட்ரினோ அறிவியல், சப்ளை செயின் மேனேஜ்மண்ட் ஆகியவை எப்படியாகிலும் எல்லா தமிழர்களையும் ஒரு அடிப்படை அறிவுக்கு கொண்டு வந்திருக்கும். அவர்கள் அதனை படிக்கவில்லை என்றாலும் தமிழில் அவை பேசப்படும் பொருள்களாக ஆகியிருக்கும்.

ஆனால், உயர்கல்வி என்பது ஆங்கிலத்தில் மட்டுமே என்று ஆகிவிட்டதால், எந்த ஒரு உயர்கல்வியில் கற்ற விசயமும் பேசப்படும்போது அது தானாக ஆங்கிலத்தில் உரையாடப்படுகிறது. ஏனெனில் அந்த பொருளாதார சிக்கல்களை விளக்கும் வார்த்தைகளும், அறிவியலுக்கான வார்த்தைகளும் அதன் சொற்கட்டமைப்புகளும் தமிழில் வரவே இல்லை. அதனால் தமிழ் சவலைக்குழந்தையாக ஆகி, திமுகவின் வெற்று கூச்சலுக்கான, இந்தி போன்ற மொழிகளின் மீது வெறுப்பை தூண்டவும், அதன் மூலம் மக்களை கொந்தளிப்பு நிலையில் வைக்கவுமான விஷயமாக ஆகிவிடுகிறது.

இன்னொரு விஷயமும் இருக்கிறது.
ஆங்கிலம் என்பது அன்னிய மொழி. அன்னிய மொழி என்பதை ஆங்கிலேயர்களின் மொழி என்பதால் சொல்லவில்லை. அன்னிய மொழி என்பது, அதன் வார்த்தை கட்டமைப்புகளும், அதன் இலக்கணமும், அதன் சொற்களும் மக்களுக்கு அன்னியமானவை.  ஆகவே நீங்கள் பொருளாதாரத்தை ஆங்கிலத்தில் கற்றுகொள்ள வேண்டுமென்றால், உங்களுக்கு ஆங்கில மொழியை முழுமையாக அறிந்திருக்க வேண்டும். அப்போதுதான் பொருளாதாரத்தை ஆங்கிலத்தில் படிக்கும்போது உண்மையிலேயே புரிந்துகொள்ள முடியும். அது இங்கிலாந்து நாட்டில் இருப்பவர்களுக்குத்தான் எளிதில் சாத்தியமானது.

ஆனால் இந்தி,  கன்னடம், மலையாளம் போன்றவை நமக்கு அன்னிய மொழிகள் அல்ல. அவற்றின் இலக்கணம் , அவற்றின் சொற்கட்டமைப்புகள், வார்த்தைகள் போன்றவை மிகவும் நெருங்கியவை.  இதனால்தான் தமிழர் ஒருவருக்கு இந்தி கற்றுகொள்வது மிக மிக எளிது. ஆனால் ஆங்கிலம் கற்றுகொள்வது மிக மிக கடினம்.

இந்தியாவிலிருந்து அறிவியல், பொருளாதாரம், தொழில்நுட்பம் போன்றவற்றில் புதிய கண்டுபிடிப்புகள் இல்லாமல் இருப்பதற்கு முக்கிய காரணமாக நான் இதனைத்தான் காண்கிறேன்.

இதனை ரிச்சர்ட் பெயின்மன் தன்னுடைய நூலில் குறிக்கிறார்.

பிரேசில் சென்றிருந்தபோது அங்கே மாணவர்கள் தங்களுடைய பிராந்திய மொழியான  போர்ச்சுகீஸ் மொழியில் கற்காமல், ஆங்கிலத்தில் கற்பதையும், அது அவர்களை வெறுமே மனப்பாடம் செய்யும் மடையர்களாக ஆக்கியிருப்பதையும் குறிப்பிடுகிறார்.

இன்று வளர்ச்சியடைந்த எந்த நாட்டை எடுத்துகொண்டாலும், அவர்கள் தங்களுடைய பிராந்திய மொழியிலேயே (பிராந்திய மொழி, தாய்மொழி அல்ல) உயர்கல்வியை கற்றுத்தருவதை பார்க்கலாம்.  அமெரிக்கர்கள் ஆங்கிலத்திலும், ஜெர்மானியர்கள் ஜெர்மன் மொழியிலும்,  பிரான்ஸ் பிரெஞ்சிலும், இத்தாலியில் இத்தாலி மொழியிலும் கற்றுத்தருகிறார்கள், படிக்கிறார்கள்.  சீனாவில் சீன மொழி மண்டாரின் மொழியில்தான் உயர்கல்வி நடக்கிறது. ஜப்பானில் ஜப்பான் மொழியில்தான் உயர்கல்வி நடக்கிறது. கொரியாவில் கொரிய மொழியில்தான் உயர்கல்வி.  ரஷியாவில் ரஷ்ய மொழியில்தான் உயர்கல்வி.

இரண்டாம் உலகப்போர் முடிவில் ஜப்பான் மிகப்பெரும் தோல்வி அடைந்து கிடந்தபோது செல்வங்கள் ஏதுமின்றி ஏழையானார்கள். அடிப்படை வசதிகள் செய்யவும், உணவுக்கும் கூட பணமில்லை. ஆனால், அவர்கள் தங்களில் சிறந்தவர்களை தேர்ந்தெடுத்து அமெரிக்காவுக்கு அனுப்பி முழுநேர வேலையாக முக்கியமான அனைத்து அறிவியல் தொழில்நுட்ப புத்தகங்களையும் ஜப்பானிய மொழியில் மொழிபெயர்த்தார்கள். தற்போதைய சாப்பாட்டைவிட, எதிர்கால ஜப்பான் அவர்களுக்கு முக்கியமாக இருந்தது.

இன்று ஜப்பானிலிருந்து வெளிவரும் அனைத்து கண்டுபிடிப்புகளுக்கும் பின்னால் ஜப்பானிய மொழி கல்விதான் இருக்கிறதே தவிர ஆங்கில கல்வி அல்ல. சொல்லப்போனால் அங்கே இருக்கும் பெரும்பாலான ஜப்பானிய அறிவியலாளர்களுக்கும் பொறியலாளர்களுக்கும் மருத்துவர்களுக்கும் ஆங்கில மொழியே தெரியாது. ஆனால் அவர்கள் குருட்டுத்தனமாக மொழிவெறி பிடித்தும் அலையவில்லை. ஆக்ஸிஜன் என்பதை ஆக்ஸிஜன் என்றே எழுதிகொண்டார்கள். கார்பண்டை ஆக்ஸைடை கரியமிலவாயு என்றும்  தமிழ் வெறியர்கள் அதனை ஆக்சிசன் என்று எழுதித்தள்ளி, சுய புளகாங்கிதம் அடைந்து தமிழை காப்பாற்றிவிட்டோம் என்று நிம்மதியாக தூங்க போயிருப்பார்கள். இவர்களுக்கு ஜ ஷ, ஸ ஹவை தமிழ் படுத்தினாலே தமிழை காப்பாற்றிவிட்டதாக கருதிவிடுகிறார்கள் (ஆனால் என்னவோ ஸ்டாலின் ஸ்டாலினாகத்தான் இவர்கள் எழுத்தில் இருக்கிறார். சுடாலின் ஆகவில்லை)

இன்றைய தேவை என்று நான் கருதுவது இதுதான்.
1. அனைத்து ஆங்கில, இந்தி மொழி வழி கல்வி முறையும் தமிழ்நாட்டிலிருந்து அறவே நீக்கப்பட்டு, தமிழுக்கு, அதாவது பிராந்திய மொழிக்கு, அனைத்து பள்ளிகளும் மாற்றப்படவேண்டும். ஆங்கில வழி கல்வி அறவே ஒழிக்கப்படவேண்டும்.
2. அனைத்து கல்வியும், கல்லூரி கல்வி, முதுநிலை கல்வி, பிஹெச்டி ஆகிய அனைத்தும் குறிப்பிட்ட வருடத்துக்குள் தமிழுக்கு மாற்றப்பட வேண்டும்.
3. இந்தியும் ஆங்கிலமும் கட்டாயமற்ற மொழியாக கற்றுத்தரப் படவேண்டும். அதாவது அதில் பாஸ் பெயில் என்று இல்லாமல் பேச்சு மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து இருக்க வேண்டும்.
4. தாய்மொழி கற்றுகொள்ள வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமே அன்றி, உருது மீடியம், தெலுங்கு மீடியம் போன்றவை ஒழிக்கப்பட வேண்டும்.
5. இதுவே அனைத்து இந்திய மாநிலங்களுக்கும் விஸ்தரிக்கப்படவேண்டும்.  உதாரணமாக கர்னாடகத்தில் கன்னடமொழியே பிரதானமாக உயர்கல்விக்கும் பயன்படுத்தப்பட வேண்டும்.

அப்படி நடந்தால், வேறு வழியின்றி, தனியாரும் அரசும், தமிழில் உயர்கல்வி நூல்களை மொழிபெயர்க்க நிர்பந்திக்கப்படும். அது முதல்முறையாக செய்யப்படும்போது கண்றாவி மொழிபெயர்ப்பாகத்தான் இருக்கும். ஆனால், தொடர்ந்து மூன்றாவது நான்காவது முறை மொழிபெயர்க்கப்படும்போது தமிழ் அந்த அறிவியல், தொழில்நுட்ப வார்த்தைகளை ஸ்வீகரித்துகொள்ள ஆரம்பிக்கும். (அப்படி ஏதும் நடந்தால், ஷ,ஸ,ஜ, ஹ போன்ற எழுத்துக்களை நீக்கிவிட்டு தமிழ் எழுதும் மட வெறியர்களை தயவு செய்து நாடுகடத்திவிட வேண்டுமாய் மன்றாடி கேட்டுகொள்கிறேன்)

இது சாதிக்கப்பட்டால், இன்னும் 20 வருடங்களுக்குள் அறிவியல், தொழில்நுட்பத்தில் தமிழகம் மட்டுமின்றி அனைத்து மாநிலங்களும் சிறந்துவிளங்கும்.

இதன் மீது விவாதத்தை நாம் முன்னெடுக்க வேண்டும்.

இணைப்புகளின் பகுதிEffective Speech of seeman (2019) என்ற YouTube வீடியோவின் முன்னோட்டம்Effective Speech of seeman (2019)நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் விவசாயம் அரசு வேலையாக மாற்றப்படும் – சீமான் என்ற YouTube வீடியோவின் முன்னோட்டம்நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் விவசாயம் அரசு வேலையாக மாற்றப்படும் – சீமான்

Series Navigationதி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 11 – பத்து செட்டி
author

சின்னக்கருப்பன்

Similar Posts

5 Comments

  1. Avatar
    Thirumalai says:

    I think one of the very few productive articles written in Tamil on this topic. Kudos. Now tell me why English can not be used for higher studies? Why reinventing the wheel by translating into Tamil? Is it not simple and easy to understand any subject written in English. Considering the effort needed in translation i think keeping English as a medium is not a big issue. The problem is not with English it is with alienating students from English. Fir Most village govt school kids English is made into a nightmare.

  2. Avatar
    BSV says:

    //Is it not simple and easy to understand any subject written in English?// இக்கேள்வியை சீனாவிலும், ரஷ்யாவிலும், ஜப்பானிலும், பிரான்சிலும் ஏன் கேட்கவில்லை அந்நாட்டு மக்கள்? இந்நாடுகளில் உயர் கல்வி அவர்கள் மொழியில்தான். எப்படி சாத்தியமானது? இந்நாடுகள் வல்லரசுகள்தானே?

  3. Avatar
    Suseendran says:

    இக்கட்டுரையின் பெரும்பாலான வாதங்களை நான் மறுக்கிறேன்.

    1.வேளாண் துறையில் ஆட்குறைப்பு நிகழ்ந்து தனிநபர் வருமானம் உயர்வதுதான் விவசாய தற்கொலைகளுக்கு தீர்வு என்கிறார். அதை நான் ஒத்து கொள்ள மாட்டேன். பெரும் விளைநிலங்கள் நில உச்சவரம்பு என்ற பெயரில் சிறுசிறு நிலங்களாக துண்டாடப்பட்டதே விவசாயத்துறையின் வீழ்ச்சியாக பார்க்கிறேன். அதே போல, பொருள் உற்பத்தி அதிகரித்திருப்பது மறுப்பதற்கில்லை ஆனால் அவை இயற்கை முறையில் விளைந்தவை அல்ல. பசுமை புரட்சி காலத்தின் கட்டாயம் அதற்க்காக இயற்கை விவசாயதிற்கு முழுக்கு போடுவது சரியல்ல, சிறிது சிறிதாக அதை நோக்கி நகர்வதே சரி.

    2.கூட்டு பண்ணையைப் பற்றிய வாதம் குழப்பமூட்டுகிறது. நானறிந்த வரையில் கூட்டு பண்ணை என்பது சிலர் தம் விருப்ப படி இணைந்து உழைப்பது அதை கம்யூனிச நாடுகளின் அதிகார உத்தரவுகளுடன் எப்படி ஒப்பிட முடியும்?

    3.தகுதியற்ற மாணாக்கர்களை தேர்ச்சி செய்த எடப்பாடியாரை கிண்டல் செய்து விட்டு, தகுதியற்றவர்களை ஆசிரியர்களாக நியமித்த காமராஜை கல்வி கண் திறந்தவராக வழிபாடு செய்வதில் நியாயமில்லை. விருப்ப,வெறுப்புகளை ஒதுக்கி விட்டு தமிழக கல்வி வரலாற்றை ஆராய்ந்தாலொழிய தீர்வு என்பது சாத்தியமல்ல என்று தோன்றுகிறது.

    4.நான் நீட் போன்ற தகுதி தேர்வுகளை எதிர்க்கிறேன். நான் எதை படிக்க வேண்டும் அல்லது கூடாது என்பதை அரசு முடிவு செய்வது அடிப்படை உரிமைக்கு எதிரானதாக நான் பார்க்கிறேன். நான் டாக்டருக்கு தகுதியானவானா என்று சான்றளிப்பது தான் அரசு அதிகாரம் அன்றி டாக்டர் படிக்க தகுதியுள்ளதா என்று சொல்வது அல்ல. பல்கலைக்கழக,கல்லூரிகள் போதிய வசதிகள் கொண்டு, சரியாக பாடம் நடத்தப்பட்டு , முறையாக தேர்வுகள் நிகழ்ந்து தகுதியானவர்கள் உருவாக்குவது அரசு கடமை ஆனால் கல்லூரிகள் அனுமதி துவங்கி தேர்வுகளில் முறைகேடு என எல்லாவற்றிலும் லஞ்ச லாவண்யங்கள் நிரம்பி, பயிற்சி நிறுவனங்களின் அட்டகாசங்கள் என சகலத்திலும் தகுதி என்பதை கோட்டை விட்டு இத்தேர்வால் மட்டும் தகுதி நிரூபிக்க படுகிறது என்பது மாயை.

    4.தாய்மொழி கல்வி என்பது அவசியம் ஆனால் அதற்காக பிறமொழி வழிகல்விகளை அறவே நீக்க வேண்டும் என்று பேசுவது சரியல்ல. அது தனிமனித சுதந்திரதின் மீதான அத்து மீறல்.

    1. Avatar
      பொன்.முத்துக்குமார் says:

      // நான் டாக்டருக்கு தகுதியானவானா என்று சான்றளிப்பது தான் அரசு அதிகாரம் அன்றி டாக்டர் படிக்க தகுதியுள்ளதா என்று சொல்வது அல்ல. //

      இது நடைமுறைக்கு ஒத்துவராது. இருப்பது சில ஆயிரம் இடங்கள். அவற்றுக்குப் போட்டி போடுவது லட்சக்கணக்கான மாணவர்கள். எனில் எந்த அடிப்படையில் இருக்கும் சில ஆயிர இடங்களை ஒதுக்க முடியும் ?

      மருத்துவப்படிப்புக்குத் தகுதியானவன்தானா என்று சோதிக்காமல் அனைவருக்கும் இடம் தரவேண்டுமென்றால் அத்தனை இடங்களை உருவாக்குதல் சாத்தியம்தானா என்று யோசியுங்கள்.

      இன்னொன்றும் உண்டு. மருத்துவப்படிப்பு கடினமானது. மற்ற கல்லூரிப்படிப்பு போலல்ல. என் உறவினர் பெண் (பன்னிரண்டாம் வகுப்பில் 95%-க்கும் மேல் வாங்கியவள்) மருத்துவக்கல்லூரி இரண்டாமாண்டு மிக மிகக்கடினமாக உழைக்கவேண்டியிருந்தது என்று சொன்னாள். எனவே, இந்த பின்னணியில் பார்க்கையில் மருத்துவக்கல்வி என்ற அந்த கடினமான சவாலை எதிர்கொள்ளும் தகுதி உள்ளதா இல்லையா என்று தீர்மானிப்பதை பிழை என்று சொல்ல இயலாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *