‘ஆறு’ பக்க கதை

author
0 minutes, 1 second Read
This entry is part 9 of 17 in the series 27 செப்டம்பர் 2020

குணா


எனக்குத் தெரியவில்லை. ஆற்றுப் படுகையென்பது ஆனந்தம் மட்டுமில்லை. சில்லென்ற காற்றும், சிலு சிலு ஓடையும். சிறு வயதில் நடை பழக நடை வண்டி கொடுத்தார்கள். எனக்கு ஞாபகமில்லை. சொல்லிக் கேட்டதுண்டு, அடுத்தவர் பழகுவதை பார்த்ததுண்டு. அந்த ஆற்றில் நீந்திய ஞாபகம் நன்றாக இருக்கிறது.

பால பருவம். நானாக பழகிய ஆறு. வேண்டிய மட்டும் நீந்தி குலாவி, நீர் குடித்து, கண்ணில் வெளியேற, தெளிவு பெற்று, நாங்கள் நண்பர்கள் என்று சொல்லித் திரிந்த நாட்கள்.

ஆற்றங்கரை ஊரை விட்டு சற்று ஒதுக்குப் புறம் என்பதை ஒரு நாளும் உணர்ந்ததில்லை. ஊரே அங்கு தானிருக்கும், காலையும் மாலையும் நேரம் கண்ட நேரமெல்லாம். பொழுது போக்கோடு பொழுதாய் போவது அத்தனை சந்தோஷம் அனைவருக்கும்.

பள்ளிப் பருவங்களில், காலையும் மாலையும் நீர் கொண்ட நாட்களில் நீந்தி விளையாட, நீரில்லா கோடையில் ஓடி விளையாட, என்றும் தோழமை பாராட்டிய ஞாபகங்கள்.

படிப்பு முடித்து புலம் பெயர்ந்த காலத்தும் அந்த ஞாபகங்கள் பதிந்து போனவை. வந்த இடத்தில், வாராந்திர காலங்களில், போவோமென்று போன போதும், போன இடங்களில் பார்த்த நீர்நிலைகள் அந்த அந்நியோன்யத்தை கொண்டு வந்ததில்லை. அருகில் அமரத் தோன்றும். அதனுள் இறங்கத் தோன்றியதேயில்லை. வளர்ந்த பருவத்தில் வந்த தயக்கமா என்று புரியவில்லை. புலம் பெயர்ந்த இடத்தில் வந்து ஒட்டிக்கொண்ட பயம் கூட இருக்கலாம். கரை புரண்டு ஓடுவது ஒரு தயக்கத்தை உண்டு பண்ணுவதில் ஒரு நியாயம் இருக்கிறது. அமைதியாய் இருக்கும் ஏரிகள் கூட ஒரு தாக்கத்தை தான் உண்டு பண்ணி இருக்கிறது.

விடுமுறைக்கு செல்லும் போதும் பழைய அந்நியோன்யம் இருந்ததில்லை. ஏதோ ஒரு கூச்சம் ஒட்டிக்கொண்ட அழுத்தம். அடுத்த தலைமுறைக்கு எங்கும் அந்த தயக்கத்தை பார்க்க முடிவதில்லை.  அவர்களுக்கு எங்கானாலும் சரி, தண்ணீர் எங்கள் தோழன் என்று சகஜமாய் இறங்கிப் போய்விடுகிறார்கள். நமது இளம் வயது ஞாபகம் தான் கண் முன் நிற்கிறது.

அந்த ஆற்றங்கரையோரம் மூன்று வீடுகள். மச்சி வைத்து கட்டிய வீடென்றால் கம்பீரம் என்று மூன்று தலைமுறைக்கு முன் கட்டிய வீடுகள். கொல்லைப்புறம் இருந்ததாய் கேள்வி பட்டதுண்டு. பார்த்ததில்லை. ஒவ்வொரு கோடையிலும், ஆற்று நீர் அரிக்கக் கூடாது என்று மண் அணைக்கும் பழக்கம், தவறாமல் ஒரு அங்கமாகிப் போனது. அரிப்பதும், அணைப்பதும், அந்த மூன்று வீடுகளுக்கும் வருடாந்திர பழக்கம்.

மூன்று வீடுகளிலும் சொல்லி வைத்தாற் போல் அடுத்த தலைமுறை புலம் பெயர்ந்து விட்டது. வெவ்வேறு இடங்களுக்கு.

போன முறை இங்கு வந்து போன போது கூட மூன்று குடும்பங்களும் ஒன்றாகத் தான் வந்து போனார்கள். அப்படியே பழகிப் போய்விட்டார்கள். மெல்போர்ன் போன போதும், ஸ்டாக்ஹோம் போன போதும், ஒன்றாகவே போய் வந்தார்கள். இந்த பிணைப்பு, தூரம் ஒரு பொருட்டல்ல என்று அடுத்த தலைமுறையிலும் தொடர்கிறது.

மூன்று தலைமுறை என்பது சாதாரணமில்லை. அந்த வீடுகள் கட்டப்பட்ட வருஷம் சுண்ணக் கலவையில் பதிக்கப் பட்டு பளிச்சென்று தெரிவது தான் அந்த வீடுகளுக்கு விசேஷம்.

ஒரு முறை விடுமுறைக்கு போன போது குழந்தைகள் ஆற்றுப்படுகையில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அரித்த மண்ணை அணைத்துக் கொண்டிருந்தார்கள். அதிகமாய் அரித்திருந்ததாய் எனக்கு தோன்றியது.

பெற்றவரிடம் பேசிப் பார்த்தேன், கூடவே வந்து விடச்சொல்லி. மறுத்து விட்டார். அடுத்த தலைமுறைகளுக்குள் நாங்கள் பேசிப் பார்த்தோம், சேர்ந்தே ஒவ்வொரு இடத்திலும் இருக்கச் சொல்லி. அவர்கள் பிரிந்து அந்த இடத்தை விட்டு வர சம்மதிக்கவில்லை. சொந்தம் கடந்த தோழமை. உறவுகள் தாண்டிய பந்தம். ஆண், பெண் மாறிப் பிறந்தால், உறவினை நீட்டிக்க ஒப்பந்தம் போட்டனர். அது நிறைவேறாமலே போய்விட்டது.

என்னதான் இருந்தாலும் சொந்த மண் தரும் சுதந்திரம் மற்ற இடத்தில் வருவதில்லை. பழகப் பழக தான் சொந்தம் என்பது, உணரத் தான் தெரிய வரும்.

ஒவ்வொரு முறையும் கரை புரண்டோடும் வெள்ளம் பார்க்கும் இடங்களிலெல்லாம் இளமை நினைவுகள் வந்து போய் கொண்டிருக்கும். அசாதாரண மிரட்சி ஒட்டிக் கொண்டு விடும். ஒரு முறை தொடர்பு கொண்டு பேசி விடத் தோன்றும். பேசி முடித்த பின்பு தான் ஒரு ஆசுவாசம் தோன்றும்.

தூரம் கடந்து, பிரிந்து வந்த பட்சத்தில் ஒரு பரவசம் உண்டானது. நாட்கள் செல்லச் செல்ல, பிரிவு ஒரு ஏக்கத்தை தான் உண்டு பண்ணியது. எந்த பக்கத்திற்கும் விட்டுச் செல்ல முடியாத ஒரு நிலை. வந்த இடம் தந்த சுகம், பின் கடன் பட்டு, கடனாகிப் போய்விட்டது. பின்னர் அதுவே பழகி, அது தான் என்றாகி விட்டது. அது தான் என்பது, நம்மைச் சார்ந்தவரையும், அத்தோடு இணைத்துக் கொள்ளத் தான் தோன்றியது. அப்படி ஒரு நம்பிக்கை. தன்னம்பிக்கை கிடைத்து விட்ட பட்சத்தில், கடன் சுமை பெரிதாகிப் போனதில்லை. அதுவே வாழ்க்கையாகிப் போய் விட்டது. மெல்ல விடுபடும் போது, அது தான் நம் வழி என்றாகி அதற்குள் பயணிக்கும் பட்சத்தில், அடுத்த ஒரு அலை பாயும் நிலையை தேடிச் செல்லும் மன நிலை. இருந்தும் அடி மனதில் அந்த சிறு பிராய பழக்கங்கள். பின்னாளில் நம்மோடு பல சேர்ந்தாலும்,  அந்த சிறு பிராய பதிவுகள் நமக்கே ஆனவை. அப்படித் தான் ஆகிப் போனது அந்த ஆற்றுப் படுகை கால நாட்கள். ஒரு அத்தாட்சியாய்.

ஒவ்வொரு முறை ஊர் சென்று திரும்பும் போதும், என் இல்லாள் கேட்பதுண்டு. எத்தனை காலம்… அதன் அழுத்தம் மெல்ல அதிகரிப்பதை நான் உணராமலில்லை. நாம் பெற்றதுகளுக்கு, நமக்கு வந்த இடம் தான் சொந்த இடம் என்றாகிவிட்ட பின்னர் அது சற்று அதிகரிக்கவே செய்தது.

போன முறை சென்ற போது, கேட்டு மட்டுமே இருந்த கொல்லைப்புறம் சற்று வளர்ந்திருந்தது. சொல்லிக் கொண்டு மூன்று வீடுகளுக்கும் நிறையவே மண் அணைத்து வளர்த்திருந்தார்கள்.

சர்வே நம்பரை தோண்டி பார்த்ததில், காலப் போக்கில் ஆறு இக்கரையில் கரைத்து அடுத்த கரையில் சேர்த்திருந்தது தெரிய வந்ததாம். அதனால் சொல்லித் தெரிந்த கொல்லைப் புறம் நன்றாகவே தெரிந்தது. மூன்று ஆண்டுகளாய் ஆற்றில் சரிவர தண்ணீர் வராததும் கூடுதலாய் உதவி பண்ணியிருந்தது.

எனக்கு மட்டும் விசித்திரமாய் தெரிந்தது. பிறந்தது முதல் அப்படி பார்த்ததில்லை. மனசுக்குள் ஒட்டிக் கொள்ளவில்லை. ஒருவித பாதுகாப்பாய் தோன்றினாலும் ஒத்துப் போகவில்லை. அக்கரையில் எடுத்து இக்கரையில் ஏற்றியிருந்தார்கள். ஆற்றின் போக்கே மாறியிருந்தது. வரும் தண்ணீரை தடம் மாற்றி, அது தான் வழி என்று ஆக்கியிருந்தார்கள். அநேக காய்கறிகள் வளர்த்திருந்தார்கள். ஆற்றின் வண்டல், அப்படியொரு செழுமை. காய்த்துக் குலுங்கியிருந்தன. அப்படியொரு விளைச்சல்.

நாமிருக்கும் பூமிதன்னில் எத்தனை வித்தியாசங்கள். அத்தாட்சி அடிப்படையில் பாகுபாடுகள். இருக்க வீடு இல்லாதவர்கள், இருக்கும் வீட்டிற்கு கப்பம் கட்டுபவர்கள், அத்தாட்சி வேண்டி கடன் பட்டு ஆயத்தம் செய்பவர்கள், அத்தாட்சி கொண்டவர்கள்… யார் தந்தது இந்த அத்தாட்சி… இதோ தலைமுறை கடந்தும் தேடி நிலை நாட்டும் அத்தாட்சி… அதற்குள் கட்டுப்பட்டு நாம் வாழ பழகிக்கொண்டோம். அதற்கான வரைமுறைகளை வரையறுத்து விட்டோம்.

விடுமுறை முடிந்து திரும்பி வந்து வெகு நாட்களாகியும் அந்த தாக்கம் என்னிலிருந்து போகவில்லை.

அடுத்த முறை பேசும் போது பட்டாவை உறுதி செய்து விட்டதாய் சொன்னார் என்னைப் பெற்றவர். உனது ஓய்வு காலத்தில் இங்கு வந்து தங்கலாம் என்றார். எனக்குள் அது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

அவரவர்க்கே வரும் அந்த எண்ணம். நமக்கு பிடித்துப் போனது அடுத்தவருக்கும் ஒத்துப் போகும், ஒத்துப் போக வேண்டும் என்ற எண்ணம். எனக்கு வந்து, அவர்களை என்னோடு வந்து இருக்கச் சொன்னது போல், இப்பொழுது அவர் முறை. மறுத்து எதுவும் சொல்லவில்லை. அவரை சங்கடப் படுத்த வேண்டாமென்று.

கட்டாயமாக சிரமம். இளமை காலம் முதல் அமெரிக்க வாசம். இருந்தவர்களுக்குத் தான் தெரியும். ஓய்வு காலத்தில் கிராமப் புறத்து ஆற்றுப் படுகை வாசம் அத்தனை சாத்தியமில்லையென்று. ஒரு வேளை கிராமம் வளர்ந்து விடுமோ… நமக்கு ஏற்றார் போல் மாறி விடக்கூடுமோ என்ற சிறு எண்ணம். இருந்தும் கூட வந்தவளுக்கு ஒத்துப் போகுமா… நான் பெற்றதுகளுக்கு என்னைப் போல் சாத்தியம் இல்லாது போகுமோ… இயற்கை விவசாயம், இன்னது பலது என்று வந்து போனது. இப்படித்தான் எண்ணம் ஓடியதே தவிர போய் இருக்க யோசனை வரவேயில்லை.

அதற்குப் பிறகு மூன்று முறை போய் வந்து விட்டேன். பிள்ளைகளை சாக்கு வைத்து உடையவள் ஒதுங்கிக் கொண்டாள்.

ஸ்வீடனும், ஆஸ்திரேலியாவும் கூட பேசுவதோடு ஒட்டிக் கொண்டிருந்தது. பெற்றவர்கள் தான் ஒவ்வொரு முறையும் வந்து போய் கொண்டிருந்தார்கள். ஒன்றாக வந்து, ஒன்றாக தங்கி போனார்கள்.

நான் மட்டும் அவர்கள் வராத வருடங்களில் போய் வந்து கொண்டிருந்தேன்.

ஒவ்வொரு முறையும் சிறு மாற்றம் கொண்டு வரத் தலைப் பட்டிருந்தார்கள். அந்நிய வாசத்தை ஆற்றுப் படுகையில் வியாபிக்க முற்பட்டிருந்தார்கள். வலைதளம் வீட்டில் வந்து வந்து போனது. வீட்டின் வெளியிலிருந்து தாராளமாய் வியாபித்தது.

பூமியின் சுழற்சியில் ஒன்றை மட்டும் உணர முடிந்தது. பருவ மாற்றங்கள் ஒன்றாகவே வந்து போய்க்கொண்டிருந்தன. அதன் தாக்கம் மட்டும் இடத்திற்கேற்றார் போல் மாறியிருந்தது. குளிர் என்றால் குளிர், மழை என்றால் மழை, வேனிலும், இளம் வேனிலும் இப்படித்தான்.

சீனாவில் வெள்ளம், அணை உடையும் அபாயம் என்று செய்தி பார்த்த போது காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனத்த மழை, அணைகள் நிரம்பின, வெள்ள அபாயம் என்ற செய்தி.

எனக்குள் அப்பொழுதெல்லாம் வந்து உறுத்தும் அந்த பயம் வந்து ஒட்டிக் கொண்டது.

உலகச் செய்திகளில் அந்த ஊரைப் பற்றி அத்தனை முக்கியத்துவம் இருக்காதென்று பிராந்தியச் செய்திகளை அடிக்கடி பார்ப்பதுண்டு. அப்பொழுதும் அப்படித்தான்.

பிராந்தியச் செய்திகளை பார்த்த எனக்குள் அந்த பயம் கூடுதலானது. எங்கும் வெள்ளக்காடு. விடாது மழை. கண்ட காணொளிகள் கவலையை அதிகரித்தன. தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றவை எதுவும் பயனளிக்கவில்லை.  அலைபேசியில் முற்பட்டதில் குரல் கேட்டவுடன் துண்டித்துக் கொண்டது.  சிறு ஆசுவாசம். இருக்கிறார்கள் என்று.

ஆஸ்திரேலியாவிற்கும், ஸ்வீடனுக்கும் தொடர்பு கொண்டதில் அவர்களுக்கும் அதே நிலை. சரியாக தொடர்பு கொள்ள முடியவில்லை.

அணைகள் திறப்பு… அதிகப்படியான நீர் வெளியேற்றம்… தொடர் மழை. ஊரில் மற்ற தெரிந்தவர்களை அலைபேசியில் தொடர்பு கொள்ள முடிந்ததில் ஊரே வெள்ளக்காடு, எல்லோரையும் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்கிறார்கள் என்று மட்டும் தெரிந்தது. என்றால் ஆற்றுப் படுகை…?

உடன்பிறவா உறவுகளிடம் கலந்தாலோசித்து, ஒருமுறை ஊருக்கு சென்று வருவது என்று தீர்மானித்தோம். ஒவ்வொரு மூலையிலிருந்தும் புறப்பட்டோம்.

கொரோனாவின் தாக்கம் வேறு. விமான சேவை சரிவர சாதாரண நிலைக்கு வந்தபாடில்லை. அப்படியே போனாலும், பதினான்கு நாட்கள் தனிமைப் படுத்தி கொரோனா இல்லை என்று தீர்மானித்த பின் தான் போக வேண்டிய இடத்திற்குப் போக முடியும் என்ற நிலை.

உற்றவள் சொல்லிப் பார்த்தாள். கொஞ்சம் பொறுத்து போகலாமென்று. நிலைமை சரியாகட்டுமென்று. மனது கேட்கவில்லை. புறப்பட்டேன்.

அங்கு இங்கென்று மாறி டில்லிக்குச் சென்றடைய மூன்று நாட்களாயிற்று. அப்படி இப்படியென்று மெல்போர்னும், ஸ்டாக்ஹோமும் வந்து சேர்ந்தது. பேசத்தான் முடிந்தது. பார்க்க முடியவில்லை. வன வாசம் தொடங்கிற்று. ஒவ்வொரு நாளும் தொடர்பு கொள்ள முயன்ற பிரயத்தனங்கள் வீண். பார்த்த செய்திகள் எதுவும் சாதகமாயில்லை.

அந்த கிராமம் தமிழக, கர்நாடக எல்லைப் புறத்தில். காவிரி பிரச்சினை இருக்கும் போது மட்டுமல்ல… இந்த கொரோனா காலத்திலும் சங்கடம். ஊரடங்கும் தளர்வுகளும் மாறி மாறி… எது எப்படி இருக்கும், எந்த வழியாய் போய்ச் சேருவது என்ற குழப்பங்கள்.

ஒரு வழியாய் பதினான்கு நாட்கள் வனவாசம் முடித்து… விமான நிலையம் வரும் போது மூன்று பேரும் பார்த்துக் கொண்டோம். அதுவே பிறந்த மண்ணை தொட்டது போன்ற உணர்வு. பங்களூருவை அந்த இரவில் சென்றடைந்தோம். ஒரு டாக்ஸி பிடித்து போகலாமென்றால், இரண்டு பேருக்கு மேல் கூடாதென்று இரண்டு பிடித்தோம். போக வேண்டிய இடத்தைச் சொன்னதும் முரண்டு பிடித்தார்கள் இரு டிரைவர்களும். காலையில் தான் போக முடியும் ரோடு சரிவர இல்லையென்று. ஒருவாறாய் பேசி, விடியற்காலை வர ஒப்புக் கொண்டார்கள்.

உள்ளுக்குள் சிறு உதறலெடுத்தது. அதிகாலை நேரம். எப்பொழுதும் இருக்கும் பங்களூருவின் சில்லென்ற காற்றை உணர முடியவில்லை. விடியற்காலை புறப்பட்டதும் காரின் கண்ணாடியை லேசாக இறக்கி விட்டேன். டிரைவர் என்னை ஒரு மாதிரியாக பார்த்தார். அருகில் இருந்த சந்தோஷ் மட்டும் புரிந்தவனாய் என் கையை லேசாக பிடித்து அமுக்கினான். அது இதமாக இருந்தது. அப்படியே கண்ணயர்ந்து போனேன்.

சீராக போய்க் கொண்டிருந்த கார் உலுங்க ஆரம்பித்தது. ஆட்டம் என்னை எழுப்பி விட்டது. மரமும் மலையும், முன்னால் தெரிந்த சாலை மோசமாக பழுதடைந்திருந்தது.

போன மழையில் இங்கெல்லாம் வெள்ளம். கன்னடம் கலந்த தமிழில் டிரைவர் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தது மட்டும் காதில் விழுந்தது. எனது எண்ணங்களெல்லாம் அங்கு நான் பார்த்தவற்றைச் சுற்றியே.

ஆற்றுப் படுகையிலிருந்து கிட்டத்தட்ட நான்கு காத தூரம். அங்கிருந்த பலசரக்கு கடையைக் காணோம். புதிதாக ஒன்று முளைக்க முற்பட்டுக் கொண்டிருந்தது.

ஒரு குறிப்பிட்ட தூரம் போனதும், இதற்கப்புறம் போக இயலாதென்று காரை ஓரங்கட்டிவிட்டார்கள். பேசி அவர்களை இருக்கச் செய்துவிட்டு இறங்கி நடந்தோம். ஊர் எல்லை வரவே இன்னும் ஒரு காதம் போக வேண்டும்.

போகும் வழிகளில் கண்ட எதுவும் அதற்கான உருவில் இல்லை. நடந்தோம்.

ஊரில் இருந்த வீடுகள் சிதலமடைந்திருந்தன. எதுவும் தப்பவில்லை. அநேகம் பேர் ஏதாவது சரி செய்து வாழ வழி செய்து கொண்டிருந்தார்கள். சாலைகளை போய் வர வேண்டி செப்பனிட ஒரு குழு வேலை செய்து கொண்டிருந்தது.

ஊரின் ஒரு குறிப்பிட்ட எல்லையைத் தாண்டி செல்ல எதுவுமில்லை. கிட்டத்தட்ட கால் காத தூரம். ஆற்று நீர் அரித்த தடம்.  இருந்தும் இறங்கி நடந்தோம்.

வீடுகள் இருந்த இடம். கரையை சீரமைத்துக் கொண்டிருந்தார்கள். தூரத்தில் நாங்கள் வாழ்ந்த வீட்டிற்கு அடையாளமான சுண்ணத்தில் 1952. பாதி மண்ணில் பொதிந்து…

சீரமைத்துக் கொண்டிருந்தவர்களில் ஒருவர் எங்களைப் பார்த்து… “ஆத்து மேட்டுப் புள்ளைங்க தானே நீங்கள்லாம்…”

கேட்டதும் ஏதோ கிடைத்து விட்டது போன்ற எண்ணம். ஆதங்கத்துடன் தலையாட்டி பார்த்தோம்.

“எல்லாம் போயிடுச்சு… ராத்திரி வெள்ள அபாய எச்சரிக்கை வந்து காப்பாத்த வந்தவங்களால ஊர்ல இருந்தவங்கள படகுல தான் காப்பாத்த முடிஞ்சது. அவ்வளவு வெள்ளம். அணை திறந்ததவிட மழையோட உக்கிரம் தான் ஜாஸ்தி. எதுக்கும் தாசில்தார் ஆபீஸ்ல போய் கேளுங்க…”

நாங்கள் ஒருவரையொருவர் கையை இருகப் பிடித்துக் கொண்டோம். கண்ணில் நீர் முட்ட திரும்ப நடந்தோம்.

“சந்தோஷ்…” கூப்பிட்ட குரல் கேட்டு திரும்பினோம். பள்ளிக் காலத்து பால்ய சிநேகிதன்.

“நாங்க நினைக்கறத்துக்கு கூட நேரமில்லை. முடிஞ்சு போச்சு. உங்களுக்கு சொல்லணும்னு தோணறப்போ நம்பர் இல்லை. மலையப்பன் சொன்னான் தம்பி தொடர்பு பண்ணுச்சுன்னு. அப்போ ஊரே வெள்ளக்காடு. தாசில்தார் ஆபீஸ ஒருவட்டு பாத்து மனு கொடுத்துட்டு போங்க. அடிச்சுட்டு போன வீட்டுக்கெல்லாம் வேற இடத்துல கட்டி கொடுக்கறாங்கலாம்”

நாங்கள் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்து நிற்கும் வரை அழுது முடித்தோம். காரை நோக்கி நடந்தோம்.

“என்ன சார்… தாசில்தார் ஆபீஸூக்கா…” பழக்கப் பட்டது போல் கேட்ட டிரைவரிடம், ஒருமித்த குரலில் சொன்னோம், “ஏர்போர்ட்”.

திரும்பும் வழியில் அநேக நினைவுகள் சுற்றிச் சுற்றி வந்தன.

மூன்று தலைமுறைகளை பறை சாற்றிய சுண்ணம் மண்ணில் புதைந்து விட்டது. வாங்கி வைத்த பட்டா கேள்விக்குறியாகி … அத்தாட்சியை நிலை நிறுத்த வேண்டும். அவை அவசியமில்லை என்ற உணர்வு தான் மேல் நோக்கி நின்றது.

சொல்லிக் கொள்கிறாற் போல் எங்களைத் தவிர எங்களுக்கு வேறு பந்தம் இல்லை.

விமானம் ஏறும் போது எங்களுக்குள் அந்த மண்ணைவிட்டு, பந்தம் தொலைத்து பிரியும் இறுக்கம் இருந்தது.

  • குணா (எ) குணசேகரன்
Series Navigationகவிதைஅருளிசெயல்களில் பலராம அவதாரம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *