புஜ்ஜியின் உலகம்

This entry is part 14 of 17 in the series 27 செப்டம்பர் 2020

ஸிந்துஜா


கோபால் வாசலுக்கு வந்து இருபுறமும் திரும்பிப் பார்த்தான்.  உள்ளிருந்து வந்து கொண்டிருந்த  வாலாம்பா “என்ன தேடறேள்?” என்று கேட்டாள்.

“அப்பாவை எங்க காணம்?”

“அவர் அவசரமாக புஜ்ஜிக்கு கலர்பென்சில் வாங்க மளிகை கடைக்கு போயிருக்கார்” என்றாள்.

கோபால் மனைவியை உற்றுப் பார்த்தான். அவள் செய்வது சரியில்லை என்பது போல்.

“நான் என்ன பண்ணறது? ஒரு போன் போட்டுச் சொன்னா சுப்பிரமணியா ஸ்டார்ஸ்லேந்து பறந்துண்டு வந்து கொடுத்துட்டுப் போவான்னு  அடிச்சிண்டேன். கேட்டாத்தானே? லேட்டாகும்னு விறு விறுன்னு ஓடிப் போயிருக்கார்” என்றாள்.

“என் மாமனாரை நீ ரொம்பதான் வேலை வாங்கறே” என்று கோபால் சிரித்தான். “குழந்தையை ஸ்கூலுக்கு அனுப்பத்  தயார் பண்றதிலேர்ந்து அவளைக் கொண்டு போய் விட்டுட்டு  மத்தியானம் போய் ,பொட்டுண்டை அழைச்சிண்டு வரது, சாப்பிட வக்யறது  தூங்கப் பண்ணறது,சாயங்காலம் வெளில அழைச்சுண்டு போறதுன்னு ராத்திரி படுத்துக்கற  வரைக்கும்  மனுஷன் சும்மாவே இருக்க மாட்டேங்கறாரே !.வேண்டாம்னா கேக்கறாரா?”

“மாப்பிள்ளை ஆபிஸை கட்டிண்டு அழுதா மாமனார்தானே இதெல்லாம் செய்யணும்?” என்று சிரித்தாள் வாலாம்பா.

கோபால் வாசலில் நின்றிருந்த காரில் ஏறிச் சென்றான். வாலாம்பா அப்பாவை நினைத்தபடி உள்ளே சென்றாள். அவர் இங்கு வந்து இரண்டு மாதமாகப் போகிறது. வந்ததிலிருந்து காலில் சுற்றிக் கொண்ட சக்கரத்தை எடுத்தபாடில்லை. அவர் வந்த தினம் அவளுக்கு ஞாபகத்துக்கு வந்தது.

ராமய்யர் ஊரிலிருந்து வந்த போது வாசல் தூணில் கட்டிப் போடப்பட்டிருந்த டைகர் முதலில் அவரைப்  பார்த்துக் குரைத்தது. பின்பு வாலை ஆட்டிக் கொண்டே  ஒருவித செல்லக் குரலில் அவரைப் பார்த்து முகத்தைப் பல தடவை ஆட்டிற்று.

நாயின் குரைப்புச் சத்தம் கேட்டு உள்ளிருந்து வாலாம்பா வருவதைப் பார்த்தார்.

“நாய் கூட நான் வரதைப் பாத்து இஞ்ச சந்தோஷப்படறது. அந்தப் பனாதைப் பயல் என்னடான்னா பொண்டாட்டியோட சேர்ந்துண்டு ஆட்டம் போடறான். கம்மனாட்டி ராஸ்கல்” என்று நாயின் தலையைப் பரிவுடன் தடவிக் கொடுத்தார்.

“வாங்கோப்பா” என்றாள் வாலாம்பா. “அவன் என்ன புதுசாவா கூத்தடிக்கறான்? நீங்கதான் ரெண்டு மாசம் இங்க இருந்தப்பறம் கால் பாவாம அவன்கிட்டே ஓடிப் போறேள்” என்று சிரித்துக் கொண்டே அவரிடமிருந்த கைப் பெட்டியை வாங்கிக் கொண்டாள். தொடர்ந்து “போன தடவை பாத்ததுக்கு ரொம்ப இளைச்சு போயிருக்கேளே” என்றாள் பரிவுடன்.

ராமய்யர் ஹாலில் இருந்த ஊஞ்சலில் உட்கார்ந்து கொண்டார்.

உள்ளேயிருந்து ஒரு ஐந்து வயது மலய மாருதப் புயல் ஓடி வந்து அவரைக் கட்டிக் கொண்டது.

“அட  புஜ்ஜி குட்டி ! எதுக்கு இன்னிக்கி இத்தனை சீக்கிரம் எழுந்துண்டுடுத்து?” என்று அவர் பேத்தியைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டார்.

“ஆமா, மணி எட்டரை ஆறது. என்னமோ விடிகாலம்பற எழுந்துண்ட மாதிரி” என்று வாலாம்பா பெண்ணைப் பார்த்துப் பொய்க் கோபத்தோடு கண்களை உருட்டினாள்.

“இன்னிக்கு லீவு” என்றது குழந்தை. 

“எதுக்குடி லீவு?” என்று கேட்டார் தாத்தா.

“இன்னிக்கி சண்டே.” சிரித்தது பேத்தி.

“ஆமா இவ ஸ்கூலுக்கு போகலேன்னா அது சண்டே. போடி. உள்ள போய் பல் தேச்சு குளிச்சு ஸ்கூலுக்கு போகறதப் பாரு” என்றாள் அம்மாக்காரி. 

“எதுக்குப் பொட்டுண்டைப்  போட்டுத் திட்டிண்டு இருக்கே? பெரிய ஐஏஎஸ்ஸா பாழாப் போறது? ரெண்டு நாள் ஸ்கூலுக்கு போகாட்டாதான் என்ன குடி முழுகிப் போகப் போறது?” என்று பெண்ணைக் கடிந்து கொண்டார்  ராமய்யர்.

குழந்தை சிணுங்கிக் கொண்டே உள்ளே போயிற்று.

வாலாம்பா “நீங்கதான் அவளுக்கு ரொம்ப செல்லம் கொடுக்கறது. இருங்கோ. காபி கலந்துண்டு வரேன்” என்று உள்ளே போனாள். ராமய்யர் பாத்ரூம் உள்ளே சென்று முகம் கழுவிக் கொண்டு ஹாலில் வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து கொண்டார். . 

வாலாம்பா காபியை எடுத்துக் கொண்டு வந்தாள். அவள் கூடவே கோபாலும் அவரை வரவேற்றபடியே வந்தான்.

“இன்னிக்கு மழை வரப் போறது”என்று ராமய்யர் சிரித்தார்.

“ஏன் இன்னிக்கி நீ சமைக்கப் போறயா?” என்று கோபால் மனைவியைப் பார்த்துச் சிரித்தான். .

“இல்லையே. உனக்கு ஆறு மணிதானே ஆபிஸ்ல இருக்கற டயம் ?” என்றார் ராமய்யர்.

“காலம்பற அஞ்சு மணிக்குத்தான் ஆபீசுலேர்ந்தே வந்தார்” என்றாள் வாலாம்பா.

“இன்னும் அரை மணில கிளம்பி ஆகணும்” என்றான் கோபால்.

அப்போது புஜ்ஜி உள்ளே ஓடி வந்தது. கோபாலைக் கட்டிக் கொண்டு “டாடி, நீ எனக்கு இன்னும் திவாலி  ட்ரெஸ்ஸே வாங்கித் தரலே” என்று கோபித்தது.

ராமய்யர்  “அப்படியா? சரி இன்னிக்கி நீ ஸ்கூல்லேர்ந்து வந்தப்பறம் மந்த்ரி மாலுக்கு போலாம்” என்றார்.

“அப்பறம் பட்டாசு வெடியெல்லாம் வாங்கணும்.”

“ஏய் சும்மா கிடடி. நண்டு மாதிரி இருந்துண்டு வெடி கேக்கறதா உனக்கு?” என்று வாலாம்பா குழந்தை மீது பாய்ந்தாள்.

“எனக்கு வேணும். என் ப்ரெண்ட்ஸ் எல்லாம் வெடி விடறச்சே நான் என்ன பண்ணறதாம்?”

“வேண்டாண்டா கண்ணா. அடிகிடி பட்டா அப்பறம் நான் என்ன பண்ணுவேன்?” என்றான் கோபால்.

“தாத்தா என் கூட இருப்பா. அடிபடாம பாத்துப்பா” என்றாள் குழந்தை.

“அப்பா ! என்ன பொல்லாத்தனம் ! சரி. ஜமாய்ச்சுடலாம்”என்றார் தாத்தா.

சற்றுக் கழித்து கோபால் போகிற வழியில் புஜ்ஜியை ஸ்கூலில் கொண்டு போய் விடுவதாகச் சொல்லி இருவரும் காரில் ஏறிச் சென்றார்கள்.

“நீங்க சாப்பிட வாங்கோப்பா” என்ற வாலாம்பாளுடன் அவரும் டைனிங் டேபிளுக்குச் சென்றார். இருவரும் தட்டில் இட்லியைப் போட்டுக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தார்கள்.

“மறுபடியும் இப்ப என்ன தகராறு பண்றான் சாமி அண்ணா?” என்று வாலாம்பா அவரிடம் கேட்டாள்.

“வேற என்ன? அவனோட மச்சினன்னு ஒரு தறுதலை இருக்கானே. அவன் மறுபடியும் பிசினஸ் ஆரம்பிக்கப் போறானாம். அதுக்குப் பணத்தைத் தூக்கிக் கொடுப்பேன்னு சண்டை. ஏற்கனவே அப்பிடி ஒரு பணம் குடுத்து அவன் பிசினஸ் லாஸ்னு பட்டையா நாமம் சாத்தினான். இப்போ மறுபடியும் புதுசா கம்பனி ஆரம்பிக்கிறேன்னு கிளம்பியிருக்கான். ஏமாறாதேடான்னு சொல்லச் சொல்ல கேக்காம… அவன் பொண்டாட்டியானா  புருஷன் எக்கேடு கெட்டுப் போகட்டும். தம்பியைக் கரை சேக்கணும்ணு ஒத்தக் கால்ல நிக்கறா. என்கிட்டே பணம் கேட்டான். போடா நாயேன்னு வந்துட்டேன்.”

“எல்லாம் மன்னி பண்ணற வேலை. எப்படியிருந்தாலும் நீங்க சாமியை விட்டுக் குடுக்க மாட்டேள்னு அவளுக்கு அப்பிடி ஒரு தைரியம்” என்றாள் வாலாம்பா..

 “போய் உங்க அப்பாம்மா போட்ட நகையை வித்து உன் தம்பியக்  காப்பாத்துன்னுட்டேன். அதை நான் சொல்லியிருக்கக் கூடாதாம். புருஷனும் பொண்டாட்டியுமா உர்ருன்னு மூஞ்சியை வச்சுண்டு நாலு நாளாப் பேசாம….. சகிக்கலை போயேன்.”

“சரி விடுங்கோ.அவா என்ன வேணும்னாலும் பண்ணிக்கட்டும்” என்றாள் வாலாம்பா அலுப்புடன்.

“அப்பிடி விட்டா தேவலையே. ஏதானும் நாலு காசு சேத்து வச்சுண்டு இருந்தான்னா எனக்கெதுக்குக் கவலையெல்லாம்? எல்லாத்தையும் தூக்கி வாரிக் குடுத்துட்டு பரதேசி மாதிரின்னா உக்காந்துண்டு இருக்கான்!”

‘இவர்தான் ரெண்டுங் கெட்டானாக இருந்து மனதைப்  போட்டு உழப்பிக் கொண்டு தடுமாறுகிறார்’ என்று வாலாம்பா நினைத்தாள். 

அன்று சாயங்காலம் ராமய்யர் குழந்தையையும் வாலாம்பாவையும் கூட்டிக் கொண்டு வெளியே சென்றார். மந்த்ரி மாலில் கால் வலிக்கும் வரை கடை கடையாய்ப் பார்த்து சலித்து எடுத்தாள் புஜ்ஜி. “எமன். என்னமா அட்டகாசம் பண்ணறது !” என்று வாலாம்பா பெண்ணைத் திட்டியதை பார்த்து ராமய்யர் சிரித்தார்.

“உனக்குக் கல்யாணப் புடவை எடுக்கக் கூட நான் இவ்வளவு கஷ்டப்படலை” என்றார் பெண்ணிடம். பேத்தி அவரது கழுத்தைக் கட்டிக் கொண்டு முத்தம் கொடுத்தது.

ராமய்யர் குழந்தைக்கு நான்கு டிரஸ்கள் வாங்கிக் கொடுத்தார். “எதுக்குப்பா இப்ப இவ்வளவு? தீபாவளிக்கு ஒரு டிரஸ் போறுமே” என்றாள் வாலாம்பா.

“நீ சும்மா இரு. நான் இருக்கற வரைக்கும்தானே பண்ண முடியும் “என்று அவளை அடக்கினார். பிறகு வாலாம்பாளுக்கு இரண்டு பட்டுப் புடவைகளும், கோபாலுக்கு இரண்டு செட் சில்க் குர்த்தாவும் மேலணியும்   வாங்கினார்.

இரு தினங்கள் கழித்து வந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் பத்து மணிக்கு வெளியில் போய்விட்டு வருவதாகக் கூறி விட்டு ராமய்யர் சென்றார். ஒரு மணி வாக்கில் மூன்று பெரிய அட்டை பெட்டிகளுடன் வீட்டுக்குள் வந்தார். ஒரு பெட்டியைப் பிரித்ததும் “ஹையா பட்டாசு!” என்று புஜ்ஜி கத்திக் கொண்டே வந்தாள்.

மூன்று பெட்டிகளையும் பிரித்து எடுத்து வைத்ததும் கோபால் அவரிடம் “என்ன சிவகாசியையே வாங்கிண்டு வந்துட்டேளா?” என்று கேட்டான்.

“காசை கரியாக்கறதுன்னு அப்பா தீர்மானிச்சாச்சு போல” என்றாள் வாலாம்பா. “எல்லாம் இந்த தடிச்சி பண்ணற வேல.”

“ஏய்! குழந்தையை திட்டாதே” என்றார் ராமய்யர். “அது மூஞ்சில பாரேன் என்ன குதியாட்டம்ன்னு.”

“நான் ஏரோப்ளேன் விடுவேன்” என்று அந்த வெடியை கையில் எடுத்துக் கொண்டது புஜ்ஜி.

“ஏய் நீ அதெல்லாம் வெடிக்கக் கூடாது. கைல கால்ல  சுட்டுண்டுருவே ” என்றாள் வாலாம்பா.

“நீ பொய் சொல்றே” என்றது புஜ்ஜி. ராமய்யரைப்  பார்த்து “இதெல்லாம் நேக்குத்தானே தாத்தா?” என்று கேட்டது.

அவர் தலையை ஆட்டியபடியே குழந்தையை எடுத்துக் கட்டிக் கொண்டார். புஜ்ஜி அம்மாவைப் பார்த்து வலிப்புக் காட்டினாள்.

தீபாவளி அன்று அவர் பக்கத்தில் நின்று கொஞ்சம் கூடப் பயமில்லாமல் சிறு வெடிகளை வெடித்துத் தீர்த்தாள். “இந்தக் குட்டி, பசங்களையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டுடும்” என்றார் ராமய்யர் வாலாம்பாவிடம்

அதன் பின் சென்ற நாட்களில் தாத்தாவும் பேத்தியும் இழைந்து திரிந்தார்கள். ஸ்கூலுக்கு போவது வருவது தவிர மாலையில் அவர் அவளைத் தினமும் பார்க்குக்கு அழைத்துச் சென்று விளையாட விடுவார். திரும்பியதும் அவளோடு சேர்ந்து கார்ட்டூன் படம் பார்ப்பார். ‘இது என்ன கீக்கீன்னு எலிக் குஞ்சு மாதிரி கத்தற சத்தம்?’ என்ற வாலாம்பாளின் எரிச்சலைப் பார்த்துச் சிரிப்பார்கள். இரவு சாப்பிட்டு விட்டு புஜ்ஜி படுக்கப் போகும் முன் அவர் அவளுக்குக் குறைந்தது இரண்டு கதைகளாவது சொல்ல வேண்டும்.

ஒரு நாள் சாமியிடமிருந்து போன் வந்தது. வாலாம்பாதான் எடுத்தாள்.. வழக்கமான விசாரிப்புகளுக்கு பிறகு அவன் தங்கையிடம் அப்பாவை அனுப்பி வை என்றான். தேதி சொன்னால் அவனே வந்து கூட்டிக் கொண்டு போவதாகவும் தெரிவித்தான்.

ராமய்யர் வந்ததும் வாலாம்பா போன் செய்தியைக் கூறினாள். அவர் காதில் விழாத மாதிரி உள்ளே சென்றார். சற்றுக் கழித்து அவரைத் தேடிச்சென்று பார்த்த போது படுக்கையில் சாய்ந்திருந்தார். அவர் களைப்பாக இருப்பது போல் காணப்பட்டார்.”அப்பா, ரொம்ப டயர்டா இருக்கேளே? கொஞ்சம் காபி இல்லாட்டா ஜூஸ் கொண்டு வரட்டா?” என்று கேட்டாள்.

“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்மா” என்று எழுந்து உட்கார்ந்தார். “நாளைக்கிக் கிளம்பிப் போறேன்.”

அவள் ஆதூரத்துடன் அவர் கையைப் பற்றிக் கொண்டாள்.

“ஆசையோட கூப்பிடறான்னா நினைக்கிறே?” என்றார். அவள் பதிலை எதிர்பார்க்காமல் “மூணு மாசமா என் பென்ஷன் பணத்தை எடுக்கலையே. அதுக்குத்தான் கூப்பிடறான். ரெண்டு பேரும் கை நிறைய  சம்பாதிக்கறான்னு பேரு” என்றார்.

மறுநாள் ஊருக்குக் கிளம்பிச்சென்றார்.

கிறிஸ்துமஸ் என்று ஸ்கூலை மூடி விட்டார்கள். லீவு ஆரம்பிக்கும்  முன்னேயே புஜ்ஜி சென்னைக்குப் போய் தாத்தாவுடன் இருப்பேன் என்று சொல்ல ஆரம்பித்து விட்டாள். வேலை விஷயமாக சென்னைக்குக்  காரில் சென்ற கோபால் அவளை மாமனாரின் வீட்டில் விட்டு விட்டு வந்தான்.

அவள் வந்த அன்று மாலையில் பேரனையும் பேத்தியையும் பீச்சுக்கு அழைத்துச் சென்றார். நீரருகே சென்று விளையாடினார்கள்.

திரும்பி வரும் போது “உங்க ஊர்ல இந்த மாதிரி பீச் இருக்கா?’ என்று ஜிம்கி புஜ்ஜியை வம்புக்கு இழுத்தான்.

புஜ்ஜி பதில் சொல்லத் தெரியாமல் முழித்தாள்.

“இந்த தண்ணிய குடிப்பியாடா?’ என்று தாத்தா கேட்டார்.

“ஐயோ, உப்பு கரிக்கும்” என்றான் ஜிம்கி.

“அவ ஊர்ல திதிக்கிற தண்ணிய வச்சுண்டு இருக்காளேடா”என்று சிரித்தார்.. தாத்தா

புஜ்ஜி அவரது கழுத்தைக் கட்டிக் கொண்டாள். பேரன் தாத்தாவை சற்று விரோதமாகப் பார்த்தான்.

“ஜிம்கி, நீ அவளை விட பெரியவன்தானேடா? அவளுக்கு செஸ் விளையாடச் சொல்லிக் கொடேன்” என்றார்.

சமாதானமடைந்த ஜிம்கி புஜ்ஜியைப் பார்த்து “அது கொஞ்சம் கஷ்டமான விளையாட்டு. நீ ஊருக்கு போறதுக்குள்ள கத்துக் குடுத்துடறேன்” என்றான்.

“புஜ்ஜி, ஜிம்கி அண்ணா ரொம்ப கெட்டிக்காரன். அவனுக்கு ஸ்லோகம்லாம் தெரியும். பாட்டு கத்துக்கறான்” என்றார் ராமய்யர்.

ஜிம்கி கர்வத்துடன் அவளைப் பார்த்தான்.

“நேக்கும் அயிகிரி நந்தினி தெரியுமே” என்றாள் புஜ்ஜி.

“தாத்தா, ஐஸ் க்ரீம் வாங்கித் தாங்கோ” என்றான் ஜிம்கி.

அன்று மத்தியானம்தான் அவர்கள் சாப்பிட்ட பின் ஜிம்கியின் அம்மா எல்லோருக்கும் கிண்ணத்தில் ஐஸ் க்ரீம் போட்டுத் தந்தாள். அதனால் இப்போது தாத்தா மறுப்பார் என்று புஜ்ஜி நினைத்தாள்.பெங்களூரில் ஒரு நாள் அவளிடம் ஐஸ் க்ரீம் நிறைய சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது இல்லை என்று அவர் கண்டித்திருக்கிறார்.

“சரி, போய் ஐஸ் க்ரீம் வாங்கலாம்” என்று கூட்டிக் கொண்டு போனார் ராமய்யர்.

மறுநாள் புஜ்ஜி படுக்கையில் இருந்து எழுந்த போது ரொம்ப நேரமாகி விட்டது. இரவு படுக்கும் போது அவளுடன்  தாத்தாவும் ஜிம்கியும் அவரவர் படுக்கையில் இருந்தார்கள். இப்போது இருவரையும் காணவில்லை. ஜன்னல் பக்கமிருந்து சத்தம் வந்ததே என்று எட்டிப் பார்த்தாள். அங்கே  இருந்த தோட்டத்தில் தாத்தாவும் ஜிம்கியும் ஒரு நாய்க் குட்டியுடன் விளையாடிக் கொண்டிருந்தார்கள். புஜ்ஜிக்கு கோபம் கோபமாய் வந்தது. தாத்தா அவளையும் எழுப்பி விட்டு ஏன் கூட்டிக் கொண்டு போகவில்லை?

அவள் பல் தேய்த்து முகம் அலம்பிக் கொண்டு மாமி கொடுத்த பாலை சோபாவில் உட்கார்ந்து குடித்துக் கொண்டிருந்த போது தாத்தாவும் ஜிம்கியும் தோட்டத்திலிருந்து வந்தார்கள். தாத்தா அவளைப் பார்த்து ” புஜ்ஜி இன்னிக்கு நீ ஏன் லேட்டு?’என்று கேட்டபடி வந்தார்.  அவள் பதில் சொல்லாமல் அவரைப் பார்க்காமல் இருந்தாள்.

“கோவமா?” என்று கேட்டு அவள் கன்னத்தை நிமிண்டினார்.

“நீங்க ஏன் எழுப்பலே? அவனை மட்டும் கூட்டிண்டு போய் விளையாடினேளே?’

“நீ எழுந்துக்காம தூங்கிண்டு இருந்தே” என்றபடி அவர் உள்ளே போனார். அவளுக்கு சமாதானமாகவில்லை.

டிபன் சாப்பிட்டதற்கு அப்புறம் ஜிம்கி அவளிடம் வந்து “கேரம் விளையாடலாமா?” என்று கேட்டான்.

“வேண்டாம்” என்றாள் அவள். அதுதான் அவள் அவனுக்குத் தரும் தண்டனை !

“ஏண்டி, அவன் கூப்படறப்போ மாட்டேங்கிறே?” என்று மாமி அவளைக் கேட்டாள்.
 

“அப்பிடில்லாம் சொல்லப் படாது. அவன் பாவமில்லையா?’ என்று தாத்தா புஜ்ஜியிடம் சொன்னார்.

இரண்டு மூன்று நாள்கள் கழிந்தன. அவள் இரவு அவரிடம் கதை சொல்லச்  சொல்லுவாள்.

முதல் நாள் அவர் கம்சன் கிருஷ்ணனைக் கொல்ல சதி பண்ணியது பற்றி சொல்லத் தொடங்கினார் .

“போர் தாத்தா” என்றான் அவன்.

“சரி, நாளைக்கி யோசிச்சு ஒரு புது கதை சொல்றேன்” என்றார் தாத்தா புஜ்ஜியிடம். அப்புறம் படுத்துக் கொண்டு விட்டார்.

புஜ்ஜி வந்த ஐந்தாவது தினம் அவளும் ஜிம்கியும் எதிர்த்த வீட்டுக் குழந்தைகளுடன் விளையாடி விட்டு வீட்டுக்குள் வருகையில் ஹாலில் பெரிய சத்தம் கேட்டது. குழந்தைகள் இருவரும் வாசலிலேயே நின்று விட்டார்கள். புஜ்ஜி கொஞ்சம் நகர்ந்து மறைவாக நின்று எட்டிப் பார்த்தாள். சாமி மாமா, தாத்தாவைப் பார்த்து கையை வீசியபடி சத்தம் போட்டுக் கொண்டிருந்தார். மாமியும் கூடவே இரைந்து கொண்டிருந்தாள். புஜ்ஜி தாத்தாவைப் பார்த்தாள். அவர் ஒன்றும் பேசாமல் நின்று கொண்டிருந்தார். அவரைப் பார்ப்பதற்கே பாவமாக இருந்தது. 

அன்றிரவு தாத்தா அவளுடனும் ஜிம்கியுடனும் பேசவில்லை. மறு  நாள் காலையிலும் அவர் வீட்டில் இல்லை. வெளியே போயிருப்பதாக ஜிம்கி கேட்ட போது சாமி மாமா சொன்னார். பதினோரு மணிக்கு அவர் திரும்பி வந்த போது புஜ்ஜி டி.வி பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் அவரைப் பார்த்த போது சிரித்து விட்டு உள்ளே போனார்.

அன்று மத்தியானம் சாப்பிடும் போது புஜ்ஜி மாமியிடம் “நான் பெங்களூர் போணும்” என்றாள்.

“ஏண்டி?” என்று மாமி கேட்டாள்.

“ஆமா. இப்பவே போணும்” என்றாள். குரலையும் முகத்தையும் பார்த்தால் அழுது விடுவாள் போலிருந்தது.

“அடக் கண்ராவி ! சரி சரி மாமா வரட்டும். கொண்டு போய் விடச் சொல்றேன்” என்றாள் மாமி. “உங்கம்மாக்கும் போன் பண்ணிடறேன்.”

மறுநாள் புஜ்ஜியைக் கொண்டு வந்து விட்டு விட்டு சாமி ஊருக்குப் போனான். அவன் போனதற்குப் பின் வாலாம்பா 

“ஏண்டா கண்ணம்மா, தாத்தாவோட போய் இருக்கேன்னு சொல்லிட்டு இப்படி ஓடி வந்துட்டே?” என்று கேட்டாள்.

“மம்மி, நேக்குத் தாத்தாவோடஇங்க இருக்கறதுதான் ரொம்பப் பிடிச்சிருக்கு” என்றாள் புஜ்ஜி.

———————–

Series Navigationஒப்பீடு ஏது?எஸ் பி பாலசுப்ரமணியம்
author

ஸிந்துஜா

Similar Posts

2 Comments

  1. Avatar
    jananesan says:

    புஜ்ஜியின் உலகம் குழந்தமையின் உறவுரிமை பற்றி சொல்லுகிறது , சிந்துஜா அவர்களுக்கு பாராட்டுகள்.

  2. Avatar
    Dr J Bhaskaran says:

    மாமா வீட்டில் தாத்தாவின் அன்பைப் பங்கு போட்டுக்கொள்ள பேரன் இருக்கிறான் ! தாத்தாவுக்கே சுதந்திரம் குறைவு – புஜ்ஜிக்கு பிடிக்கததில் வியப்பில்லை. நல்ல கதை, அருமையான நடை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *