(20.10.1968 ஆனந்த விகடனில் வெளிவந்த கதை. ‘கோபுரமும் பொம்மைகளும்’ எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ் சிறுகதைத் தொகுதியில் இடம் பெற்றுள்ளது.)
அலுவலகப் பணியாள் மேசை நாள்காட்டியில் முந்தின நாள்
தேதியைப் புரட்டிச் சரியான தேதியை வைத்துச் சென்றான். சுழலும் நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்திருந்த தியாகராஜன் அந்தத் தேதியைப் பார்த்ததும் நிமிர்ந்து உட்கார்ந்தான்.
ஜனவரி ஒன்பது!
‘இன்று மாலை வழக்கம் போல் சுகந்தாவுக்கு ஏதாவது பரிசுப்பொருள் வாங்கிச் செல்லவேண்டும்.’
சுகந்தாவுக்கும் தனக்கும் திருமணமாகிப் பதினேழு ஆண்டுகள் ஆகிவிட்டன என்பதை அவனால் நம்பவே முடியவில்லை. நாள்கள் ‘கிடுகிடு’ வென நகர்பவை போல் ஒருவனுக்குத் தோன்றினால், அவன் வாழ்க்கை மகிழ்ச்சியாகக் கழிந்து கொண்டிருப்பதாகத்தானே பொருள்?’ என்று அந்த நினைப்பைத் தொடர்ந்து தன்னைத்தானே கேட்டுக்கொண்டான். அன்பு நிறைந்த கெட்டிக்கார மனைவி. ஆணும் பெண்ணுமாக இரண்டே குழந்தைகள். “அயாம் எ வெரி லக்கி மேன்” என்று அவன் உதடுகள் ஆங்கிலத்தில் முனகின.
“சார்! விஜயான்னு ஒரு பொண்ணு உங்களைப் பார்க்கணும்னு சொல்லுது,” என்று தன் முன் வந்து நின்று அறிவித்த வேலையாளிடம், “வரச் சொல்,” என்று கூறிவிட்டு அந்தப் பெண்ணை வரவேற்கத் தயாரானான் தியாகராஜன்.
சுமார் இருபது வயது மதிக்கத்தக்க ஒரு பெண் தள்ளு-கதவைத் திறந்துகொண்டு வந்து அவன் முன் நின்று கை கூப்பினாள்.
ஒரு சிறு தலையசைப்பின் மூலம் அவள் வணக்கத்தை ஏற்றுக்கொண்ட அவன், “உட்காருங்கள்,” என்று நாற்காலியைச் சுட்டிக்காட்டினான். நாற்காலியின் முன்னடியில் அவள் உட்கார்ந்தாள். சில விநாடிகள் அவள் பேசாமல் இருந்தாள். பிறகு தொண்டையைச் செருமிச் சரிசெய்துகொண்டு கேட்டாள்.
“உங்கள் கம்பெனியிலே எனக்கு ஒரு வேலை கொடுக்க முடியுமா? நான் ’ஷார்ட்ஹேண்ட்’, ‘டைப்ரைட்டிங் ரெண்டிலேயும் ஹையர் பாஸ் பண்ணியிருக்கிறேன்.”
“தற்சமயம் வேலை ஒண்ணும் காலியில்லை. உங்களைப் பத்தின விவரங்களை ஒரு காகிதத்தில் எழுதிக் கொடுத்துட்டுப் போங்க. வேலை காலியாகும் போது உங்களைக் கூப்பிடறோம்.”
அறைக்குள் நுழைந்த போது அவள் முகத்தில் இருந்த மலர்ச்சி குன்றிப்போய், அவள் களையிழந்த முகத்தினளாய் மாறிப்போனாள். எனினும் பல இடங்களிலும் இம்மாதிரி பதிலைக் கேட்டுக்கேட்டு அலுத்துப் போன அனுபவத்தின் விளைவாக, இந்த இடத்திலும் இப்படி ஒரு பதில் வருமென்று ஓரளவு எதிர்பார்த்தே வந்திருந்தவளைப் போல, தன்னைப்பற்றிய விவரக் குறிப்புகள் அடங்கிய ஓர் அட்டவணையை அவள் தன் கைப்பையினின்று எடுத்து அவனிடம் கொடுத்தாள். அதை வாங்கிப் படித்துப் பார்த்த அவன் அதை மேசை மீது வைத்துவிட்டு நிமிர்ந்தான்.
அவள் எழுந்து நின்று மறுபடியும் கை கூப்பினாள். அவள் முகத்தில் கப்பியிருந்த ஏமற்றம் தியாகராஜனை வருத்தமுறச் செய்தது. ஆறுதலாக ஏதாவது சொல்ல விரும்பிய அவன், “வேலை காலியானால் கண்டிப்பாய்க் கூப்பிடறோம்,” என்றான் புன்சிரிப்போடு. அவளும் பற்கள் தெரியாமல் புன்னகை செய்துவிட்டு விடைபெற்றுச் சென்றாள்.
அவள் அறையிலிருந்து வெளியேறியதைப் பார்த்தவாறு இருந்த தியாகராஜன், ஒரு காலத்தில் வீட்டு வாசற்படியை விட்டு இறங்காமலிருந்த பெண்கள், இப்படி வேலை தேடிப் பல அலுவலகங்களின் வாசற்படிகளில் ஏறி இறங்க வேண்டி வந்துவிட்டதே என்று தனக்குள் வியந்துகொண்டான்.
அந்த நினைப்பைப் பின்பற்றி, தன் மனைவி சுகந்தா பதினேழு ஆண்டுகளுக்கு முன்னால் – தன் வாழ்க்கைத் துணைவியாக அவள் ஆவதற்கு முன்னால் – வேலை பார்ப்பதற்கு அவளுடைய உறவினர்களிடமிருந்தும், ஊராரிடமிருந்து கிளம்பிய எதிர்ப்புகளையும், அவளை மணந்து கொள்ளுவதற்கு இருந்த அவளுடைய அத்தை மகன், வேலை பார்த்த பெண்ணை மணக்கத் தனக்கு விருப்பமில்லாத போதிலும், தன் தாயின் வற்புறுத்தலுக்காகவே அவளை மணக்க இணங்கியதாகவும் கூறியதையும் பற்றி அவள் சொன்னதை யெல்லாம் நினைவு கூர்ந்த அவன், ‘காலம் எப்படி மாறிப் போகிறது!’ என்று எண்ணியவனாய்ப் பெருமூச்சு விட்டான்.
அதற்குப் பிறகு இரண்டு மாதங்கள் கழித்து அவனது அலுவலகத்தில் சுருக்கெழுத்தாளர் பதவி ஒன்று புதிதாய்த் தோற்றுவிக்கப்பட்ட போது அவனுக்குச் சட்டென்று அந்தப் பெண்ணின் நினைவுதான் வந்தது. அவன் அவளுக்கு ஒரு கடிதத்தை அனுப்பி வைத்தான்.
குறிப்பிட்ட நாளில் அவள் தன் நற்சான்றிதழ்களோடு நேர்முகத்தேர்வுக்கு வந்துசேர்ந்தாள். தேர்வு முடிந்ததும் மறு நாளே அவள் வேலையை ஒப்புக்கொள்ளலாம் என்பதை அவன் தெரிவித்த போது, அவள் முகம் மலர்ந்தது. அவள் அவனுக்கு நன்றி கூறிவிட்டு எழுந்து சென்று, வெளியே தேர்வின் முடிவுக்காகக் கவலையோடும் ஆவலோடும் காத்துக்கொண்டிருந்த தன் தந்தையைக் கூட்டிவந்தாள்.
“குட் மார்னிங், சார்! ஞாபகம் வெச்சுக்கிட்டு இண்டர்வியூவுக்குக் கூப்பிட்டு வேலையும் கொடுத்ததற்கு உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல்லே. நீங்க செய்திருக்கிறது மிகப் பெரிய உபகாரம்..” என்று அவர் வாயெல்லாம் பல்லாக அவனை நோக்கிக் கைகுவித்தார்.
“நோ… நோ,” என்று அவரது நன்றி கூறலை வலுவாக மறுத்த அவன், “உட்காருங்கள்,” என்றான். இருவரும் உட்கார்ந்தனர்.
சிறிது நேரம் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்ததில், வெளியான சில உண்மைகளும் தகவல்களும் அவனை வியாப்பிலாழ்த்தின. ஆனால், அவன் தனக்கு எதுவும் தெரிந்ததாய்க் காட்டிக்கொள்ளாமல் அவர்களுக்கு விடை கொடுத்தனுப்பினான்.
அலுவலகத்திலிருந்து வந்ததும் வராததுமாகத் தியாகராஜன் கூறிய செய்தி சுகந்தாவைச் சொல்லி மாளாத பரபரப்பில் ஆழ்த்தியது. அவள் மனம் இருபது ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சிகளை அசை போடத் தொடங்கிற்று.
சுகந்தாவை அவள் அத்தை மகனுக்கு மணம் முடித்துக் கொடுப்பதைப் பற்றிய பேச்சு அவள் பத்து வயதுச் சிறுமியாக இருந்ததிலிருந்தே அடிபட்டு வந்தது. அழகு நிறைந்த சுகந்தாவை மணந்து கொள்ளுவதைப் பெரும் பேறாகக் கருதிய அவள் அத்தான் கிருஷ்ணன் ஆண்டுதோறும் பள்ளி விமுறையைக் கழிக்கத் தன் மாமா வீட்டுக்கு வருவதுண்டு. ஆனால், திருமணப் பேச்சு அடிபடத் தொடங்கியதற்குப் பிறகு சுகந்தா – கிராமத்துப் பெண்களுக்கே உரிய கூச்சத்தினால் – அவனுடன் பேசுவதை நிறுத்திவிட்டாள். ஆனால், அவனை மணந்து கொள்ள அவளுக்கு முழு இணக்கம் இருந்தது.
கிராமிய வழக்கப்படி சுகந்தாவின் படிப்பு ஒன்பது வகுப்புகளோடு நிறுத்தப்பட்டது. சுகந்தாவுக்குப் பதினேழு வயது ஆகிக்கொண்டிருந்த போது அவள் தந்தை ஏராளாமாகப் பணம் போட்டு வைத்திருந்த பாங்கி முழுகிப் போயிற்று. சிறு வீடு ஒன்று நீங்கலாக மற்றவற்றை யெல்லாம் பணமாக்கி அவர் பாங்கியில் போட்டு வைத்திருந்ததால் ஒரே நாளில் அவர் ஏழையானார்.
சுகந்தாவின் தந்தை அதிகம் படிக்காதவரா யிருந்தாலும், தம் செல்வத்தை நம்பி எந்த வேலைக்கும் போகாதவராக இருந்து விட்டதாலும், அவர் கண் பார்வை வேறு மங்கத் தொடங்கி யிருந்ததாலும், இனி அவருக்கு எந்த வேலையும் கிடைக்காது என்கிற நிலையில், குடும்பப் பொறுப்பைத் தானே ஏற்றுக்கொண்டால் என்ன என்று அவள் சிந்திக்கலானாள். ஒன்பது வகுப்புகள் வரை படித்திருந்த அவள் தொடக்கப்பள்ளி ஆசிரியைக்குரிய பயிற்சி பெறத் தீர்மானித்திருந்த போது, அந்த முடிவை ஏற்றுக்கொள்ளுவதைத் தவிர வேறு வழியற்ற நிலையில் இருந்த அவள் தந்தை அதற்குச் சம்மதித்தார். சுகந்தா பள்ளி ஆசிரியை ஆனாள்.
அவள் ஆசிரியையாகி ஓராண்டு கழித்து, அவள் ஊரில் நடந்த தங்கள் குடும்ப நண்பர் ஒருவரின் வீட்டுத் திருமணத்துக்கு வந்திருந்த அவள் அத்தையும், அத்தை மகன் கிருஷ்ணனும் திருமணம் முடிந்த மறு நாள் அவள் வீட்டுக்கு வந்தார்கள். வந்த அன்று பிற்பகல் அவள் அத்தை மெதுவாகத் தன் மகனின் திருமணப் பேச்சை எடுத்தாள்.
“இந்த வருஷம் கிருஷ்ணனின் கல்யாணத்தை நடத்திவிடலாம்னு இருக்கேன். போன வருஷமே நீ வந்து சம்பிரதாயப்படி உன் அத்திம்பேர்கிட்ட கேட்பேன்னு எதிர்பார்த்தேன். ஆனா நீ வரல்லே,”என்று அவள் சுகந்தாவின் தந்தையைப் பார்த்துக் குறை சொல்லும் குரலில்கூறினாள்.
“அக்கா! என் பணமெல்லாம் போயிட்டுது, தெரியுமில்லையா?”
அத்தையிடமிருந்து ஒரு பெருமூச்சு வந்தது.
“….‘உங்க பிள்ளைக்கு என் பெண்ணைப் பண்ணிக்கொள்ளுங்கோ’ன்னு அத்திம்பேர் கிட்ட வந்து கேட்கறதுக்கு எனக்கும் ஒரு தகுதி இருக்கணுமில்லையா, அக்கா? அந்தத் தகுதியை இழந்துட்ட நிலையில் – உன் அந்தஸ்துக்கும் என் அந்தஸ்துக்கும் எட்டு ஏணி வெச்சாலும் எட்டாதுங்கிற கதிக்கு வந்து விட்ட பிற்பாடு – நான் எந்த மூஞ்சியோடு அத்திம்பேர் கிட்ட வந்து, ‘என்பெண்ணைக் கிருஷ்ணனுக்குப் பண்ணிக்க முடியுமா’ன்னு கேட்பேன்?”
அத்தை சற்று மௌனமாயிருந்து விட்டுச் சொன்னாள்:
“உண்மைதான். அத்திம்பேர் பெரிய இடத்துச் சம்பந்தத்துக்காக ஆசைப்படறவர்தான். ஆனாலும் நான் அவரைச் சரிக்கட்டிவிடுவேன். குழந்தைகளுடைய சின்ன வயதிலிருந்து பேசின பேச்சுப் பாரு. அதனாலே வாக்குத் தவற எனக்கு விருப்பமில்லை. நான் அப்படி நடந்தால், ‘ இன்னைக்குக் கை இளைச்சுப் போயிட்டோம். அதனாலேதான் அக்கா நம்ம பெண்ணை மருமகளாக்கிக்கொள்ள விரும்பவில்லை’ன்னு நீ என்னைப்பத்தி மட்டமா நினைக்க மாட்டியா?” என்று அத்தை நற்பண்பு வெளிப்படப் பேசிய போது சுகந்தா அகமகிழ்ந்து போனாள்.
தந்தையின் கண்பார்வை மங்கத் தொடங்கி யிருந்ததாலும் எஞ்சி நிற்கும் ஒரே வீட்டை விற்றுத் தன் திருமணத்தை முடித்த பிறகு அவர் தம்மைக் கவனிப்பாரின்றித் தெருவில் நிற்க நேருமென்பதாலும் – அத்தை இனித் தங்கள் உறவை விரும்பமாட்டாள் என்று அவள் உலக வழக்கத்தை யொட்டித் தப்புக் கணக்குப் போட்டிருந்ததாலும் கூடத்தான் – திருமணம் செய்துகொள்ளும் எண்ணத்தைக் கிட்டத்தட்டக் கைவிட்டுவிட்ட நிலையில் இருந்த சுகந்தாவை அத்தையின் செருக்கற்ற பரந்த மனப்போக்கு களிப்பில் ஆழ்த்திற்று.
சுகந்தாவின் தந்தை தம் அக்காவின் நேர்மையான மனப்போக்கால் உள்ளம் நெகிழ்ந்தார்.
“அக்கா! நீ ஆயிரத்தில் ஒருத்திதான். நீ இவ்வளவு பெரிய மனசோட கல்யாணப் பேச்சை எடுப்பேன்னு நான் நினைக்கவே இல்லை. … அடுத்த மாசம் நான் வந்து அத்திம்பேரைப் பார்த்துப் பேசறேன் …” என்று பதில் சொன்ன போது அவர் குரல் தழுதழுத்தது.
மனிதர்களிடம் பொதுவாகக் காணப்படும் உலகாயிதத் தன்மையற்று, சராசரிக்கு மிகவும் மேலான ஒரு நல்ல மனிதனின் நாகரிகம் நிறைந்த மன நெகிழ்ச்சிகளைத் தங்களுக்குச் சாதகமாய்ப் பயன்படுத்திக் கொள்ளுகிற உலகியல்புக்கு விதிவிலக்கா யில்லாத சுகந்தா தன் அத்தையின் இனிய சுபாவத்தைத் தனக்கு அனுகூலமாக்கிக்கொள்ள விழைந்தாள்.
அன்று பிற்பகல், அப்பா இல்லாத நேரமாகப் பார்த்து, சுகந்தா தன் தீர்மானத்தின்படி, அத்தையோடு பேசினாள். அத்தான் கிருஷ்ணனும் அப்போது உடனிருந்தான். அத்தையை மட்டும் தனியாகப் பார்த்தும் வாய்ப்புக்காகக் காத்திருந்தாள். அது கிடைக்காமலே போய்விடலாமென்கிற காரணத்தால் அவள் தன் அத்தானின் முன்னிலையிலேயே அதைப்பற்றிப் பேச வேண்டியதாயிற்று.
“அத்தை! உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்.”
“சொல்லேன்.”
“அப்பாவுக்கு இப்பவெல்லாம் கண் சரியாகத் தெரிகிறதில்லை.”
“கவனிச்சேன்.”
“கல்யாணமாகி நான் புறப்பட்டுப் போயிட்டா அப்பாவைக் கவனிக்க நாதி கிடையாது.”
சட்டென்று அத்தையும் அவள் மகனும் பொருள் பொதிந்த பார்வைகளைப் பரிமாறிக்கொண்டார்கள். சாய்வு நாற்காலியில் தளர்வாய்ப் படுத்துக்கொண்டிருந்த கிருஷ்ணன் நிமிர்ந்து உட்கார்ந்தான். மகனின் பார்வையைச் சந்தித்துவிட்டுத் தலையைத் திருப்பிய அத்தை, ‘சொல்லு’ என்பது போல் சுகந்தாவை நோக்கினாள்.
“அப்பாவை நம்மோடு வெச்சுக்க நீங்க அனுமதிச்சா ரொம்ப உபகாரமா யிருக்கும். வயசான காலத்திலே அவர் அநாதை மாதிரி அல்லாடணுமேங்கிறதை நினைச்சாலே மனசை என்னமோ பண்றது…”
அத்தை இதற்கு உடனே பதில் சொல்லாமல் மறுபடியும் கிருஷ்ணனைப் பார்த்தாள். அவன் தன் தாயைப் பார்த்த பார்வையில் இணக்கமின்மை புலப்பட்டதாக அவளுக்குத் தோன்றிற்று. இருந்தாலும், அவள் நம்பிக்கை இழக்காமல், தன் அத்தையின் முகத்தையே பார்த்தபடி நின்றாள்.
“உன் அப்பா எனக்குத் தம்பிதான். ஆனாலும் கூட நிரந்தரமா அவனை எங்களோடு வெச்சுக்கொள்றது நடக்காத காரியம். கிருஷ்ணனின் அப்பா ஒருகாலும் அதுக்கெல்லாம் சம்மதிக்க மாட்டார். உன்னைக் கிருஷ்ணனுக்குப் பண்ணிக்கொள்றதுக்கு அவர் கிட்ட சம்மதம் வாங்கறதுக்குள்ளேயே எனக்குப் போறும் போறும்னு ஆயிடுத்து.”
சுகந்தாவின் முகம் கூம்பிப் போயிற்று. திடீரென்று தன்
குரல்வளையைப் பற்றிய ஏமாற்றத்திலும் துக்கத்திலும் பேச வாயெழாமல் அவள் தலை குனிந்தபடி நின்றாள். அவள் கண்கள் கலங்கிப் போயின..
“மூணு வயசிலே உன்னைத் தாயில்லாக் குழந்தையாக்கி விட்டு அந்த மகராஜி – உன் அம்மா – போய்ச் சேர்ந்தப்போ, உங்கப்பா கிட்ட நான் முட்டிண்டேன். ‘உடனே இல்லாவிட்டாலும் கொஞ்ச நாள் கழிச்சாவது ஒரு கல்யாணத்தைப் பண்ணிண்டுதான் ஆகணும்’னு. கேட்டானா? இந்த மாதிரி ஒரு நிலைமை வரும்னு எனக்கு அப்பவே தெரியும். அதனாலதான், கிளிப்பிள்ளைக்குச் சொல்றமாதிரி படிச்சுப் படிச்சுச் சொன்னேன். ஒரே பிடிவாதமா முடியவே முடியாதுன்னுட்டான். இப்ப பாரு!” என்று அத்தை அங்கலாய்த்துக் கொண்டபோது, அந்த முறையீட்டில் வேதனை இழையோடிய தென்னவோ உண்மைதான். தம்பிக்காக வேதனைப்படுகிற அதே நேரத்தில், தான் செய்யக் கூடியது எதுவுமில்லை என்கிற கண்டிப்பும் அவள் குரல் ஒலித்த தோரணையில் வெளியாயிற்று.
சற்று நேரம் அங்கே பொருள் பொதிந்த மௌனம் நிலவிற்று. சுகந்தாதான் அந்த மௌனத்தைக் கலைத்தாள்.
“கல்யாணத்துக்கு அப்புறம் நான் வேலை பார்த்து எங்கப்பாவைக் காப்பாத்தறேனே! அதனாலே உங்களுக்கு எந்த விதமான செலவோ தொந்தரவோ இல்லாம நான் பார்த்துக்கறேனே. அவருக்குக் கண்பார்வை மங்க ஆரம்பிச்சிருக்கிறதுனாலதான் இவ்வளவு தூரம் பேசறேன்.”
இந்தத் தடவை அத்தை பதில் சொல்லுவதற்கு முன்னால், அவளுடன் பேசிப் பழக்கமில்லாத கிருஷ்ணனே முந்திக்கொண்டான்.
“அதெல்லாம் சரிப்பட்டு வராது. மேலும் பெண்கள் வேலை பார்க்கிறது எனக்குப் பிடிக்காத காரியம்.”
“அவசியத்துக்காகக் கூடவா?” என்று அவள் அவனை நேரடியாகப் பார்த்துக் கேட்ட போது, அவன் தன் தலையைத் திருப்பிக்கொண்டு பதில் சொன்னான்.
“ஆமாம்,. நீ ரெண்டு வருஷமா வேலை பர்த்ததாலே நீ
வேண்டாம்னே நான் அம்மகிட்ட சொன்னேன். அம்மாதான்
பிடிவாதமா என்னைச் சம்மதிக்கப்பண்ணி என்னைக் கூட்டிண்டு
வந்தா. இப்படிச் சொல்றதுக்காக என்னை மன்னிச்சுக்கோ.”
‘அந்த ஆண்டவன் தான் உங்களை மன்னிக்கணும்,’ என்று மனத்துள் குமுறிய சுகந்தா, “பெண்கள் வேலை பார்க்கிறது தப்பா?” என்று தன் மனக்கொதிப்பு குரலில் வெளிப்படாத வண்ணம் அமைதியாகவே கேட்டாள்.
“என்னைப் பொறுத்த வரை சரியில்லைதான். நம் நாட்டுப் பண்பாட்டுக்கு ஒத்து வராது.”
“வயித்தைக் கழுவுறதுக்கு வேற வழி இல்லைங்கிற நிலையிலே கூட, பெண்கள் வேலை செய்யிறதை நீங்க தப்புன்னா சொல்றீங்க?”
“அவசியத்துக்கோ, அநாவசியத்துக்கோ, காரணம் எதுவாக இருந்தாலும் பெண்கள் வீட்டு வாசற்படியை விட்டு இறங்கித் தெருவுக்கு வர்றதே தப்பு!.”
சுகந்தாவின் இரத்தம் சூடேறிக் கொதித்தது. படித்த ஓர் இளைஞனின் மனப்போக்குக்கு ஒவ்வாத முறையில் – படிக்காதவனுக்குக் கூட விளங்கிவிடக் கூடிய, கண்கூடான ஒரு நியாயத்தைப் புரிந்துகொள்ள மறுக்கிற பத்தாம் பசலித்தனத்தோடு – அவன் சொன்ன சொற்களின் விளைவாகத் தன் மதிப்பில் மிகவும் சரிந்துவிட்ட அவனை ஏறிட்டு நோக்கியபடி, “நீங்க ஒரு பெண்ணாய்ப் பிறந்திருந்து என்னோட நிலைக்கு ஆளாகியிருந்தா, வயித்துலே ஈரத்துணியைப் போட்டுண்டு வீட்டிலேயெ இருந்து பட்டினி கிடச்து உயிரை விட்டுடுவீங்களா?” என அவள் தன் ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு அமைதியாகவே கேட்டாள். அவன் முகம் மாறிப் போயிற்று.
சொற்பரிமாற்றத்தில் ஊடுருவி நின்ற கசப்பைப் புரிந்துகொண்ட அத்தை பேச்சினூடே புகுந்து நிலைமையைச் சரிப்படுத்த முனைந்தாள்.
“பெண்கள் அவசியத்துக்காக வேலைக்குப் போறதிலே தப்பில்லை. ஆனா, கல்யாணத்துக்கு அப்புறம் நீ வேலை செய்யிறது நம்ம குடும்பத்துக்கு ஒத்துவராது. கிருஷ்ணனுக்கு ‘நான் நீ’ ன்னு போட்டி போட்டுண்டு எத்தனையோ பேர் பெண் கொடுக்கத் தயாரா இருக்கா. சின்ன வயசிலேர்ந்து உங்க கல்யாணப் பேச்சு அடிபட்றதாலே, ‘தம்பி ஏழையாய்ப் போயிட்டான். அதனாலேதான் அக்காக்காரி தன் பிள்ளைக்குப் பணக்கார இடமாத் தேடிண்டுட்டாள்’னு நாலு பேர் சொல்லக் கூடாதுன்னுதான் நானாகவே கல்யாணப் பேச்சை எடுத்தேன்.”
“அம்மா! மாமா நம்ம கூட இருக்கிறதுக்கு இல்லைங்கிறதையும், அவள் வேலைக்குப் போறதுக்கில்லைங்கிறதையும் கண்டிப்பாய்ச் சொல்லிடு,” என்ற கிருஷ்ணனின் குரல் அவள் செவிகளில் நாராசமாய் ஒலித்தது.
அவர்கள் புறப்பட்டுச் சென்றதன் பிறகு ஒரு வாரம் கழித்து சுகந்தாவின் தந்தை தம் தமக்கையின் ஊருக்குக் பயணிக்க ஆயத்தமானபோது, கிருஷ்ணனை மணக்கத் தனக்குச் சிறிதும் விருப்[பமில்லை என்று சுகந்தா ஒரு வெடிகுண்டைத் தூக்கிப் போட்டாள். நடந்த எதையும் அறியாத அவர் காரணம் கேட்ட போது, “இஷ்டமில்லைன்னா, இஷமில்லை. விடுங்க!” என்று அவள் குரலை உயர்த்திக் கத்தினாள்.
அவர் பிடிவாதமாக இருக்கவே, “என் பேச்சை மீறிண்டு போனேள்னா, நீங்க திரும்பி வரும்போது என் பிணத்தைத்தான் பார்க்கலாம்!” என்று அவள் ஓங்கிய குரலில் அடித்துப் பேசவுமே, தம் ஒரே மகளின் மேல் உயிரையே வைத்திருந்த அவள் தந்தை வெலவெலத்துப் போனார். தந்தையின் பயணத்தைத் தடுத்து நிறுத்திய பிறகு, கிருஷ்ணனை மனந்து கொள்ளத் தனக்கு விருப்பமில்லை என்பதைத் தெரிவித்துத் தன் அத்தைக்கு அவளே ஒரு கடிதம் எழுதினாள்.
மறு மாதத்திலேயே கிருஷ்ணனின் திருமணம் நிகழ்ந்தது. அழைப்பிதழ் வந்தும் சுகந்தாவின் தந்தை அவமானப்பட்டுக்கொண்டு திருமணத்துக்குப் போகாமல் இருந்துவிட்டார்.
கிருஷ்ணனின் திருமணம் நடந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், சுகந்தாவுக்கும் தியாகராஜனுல்க்கும் பழக்கம் ஏற்பட்டு அது திருமணப் பேச்சில் வந்து நின்ற போது, அந்தப் புதிய உறவினால்தான் தன் மகள் கிருஷ்ணனை வேண்டாம் என்று மறுத்து விட்டாளோ என்கிற ஐயம் அவள் தந்தைக்கு
ஏற்பட்டது. ஆனால் கிருஷ்ணனின் திருமணம் முடிந்த பிறகு ஓர் ஆண்டு சென்ற பின்னரே அவ்வூருக்குத் தியாகராஜன் வந்தான் என்பது தெரிந்த போது அவர் தம் ஐயம் ஆதாரமற்றது என்பதை உணர்ந்து கொண்டார்.
தியாகராஜனுக்கும் சுகந்தாவுக்கும் எளிய முறையில் – தியாகராஜனின் செலவிலேயே – திருமணம் நடந்த பிறகு தன் தந்தையைத் தன்னுடனேயே வைத்துக் கொண்ட சுகந்தா, அந்த ஏற்பாட்டுக்கு இணங்காததாலேயே கிருஷ்ணனை மணக்கும் எண்ணத்தைக் கைவிட்டதாய்க் கூறி, அவரை நீண்ட நாள்களாக உறுத்திக் கொண்டிருந்த ஐயத்தைத் தீர்த்து வைத்தபோது, தம் மகள் தம்மீது கொண்டிருந்த பாசத்தைக்கண்டு அவர் அகமகிழ்ந்து போனார். …
இந்தப் பழைய கதையை நினைவு கூர்ந்த சுகந்தா, ‘பெண்கள் வீட்டு வாசற்படியை விட்டிறங்கித் தெருவுக்கு வர்றதே தப்பு’ என்று சொன்ன கிருஷ்ணன் இன்று தன் மகளை வேலைக்கனுப்பி, அவள் கொண்டுவரும் ஊதியத்தில் வயிறு வளர்க்கும்படியான ஒரு நிலைக்கு ஆளானதை எண்ணி எண்ணி வியந்தாள்.
“என்ன யோசனை?” என்று கேட்டுக்கொண்டு தன் முன் வந்து நின்ற கணவனை நிமிர்ந்து பார்த்துப் புன்னகை செய்தாள் சுகந்தா.
“வேறே ஒண்ணுமில்லை. என் அத்தானைப் பத்தித்தான் யோசிச்சுண்டிருக்கேன். எதற்காக நாம் ஒருத்தரைப் பழிக்கிறோமோ அதை நாமே செய்ய வேண்டி வந்துட்றது, பாந்த்தீங்களா?”
“ஓ! கல்யாணத்துக்கு அப்புறம் நீ வேலை பார்க்கக் கூடாதுன்னு அவன் சொன்னானே உங்கிட்ட, அதைச் சொல்றியா?”
“அதுமட்டுமில்லே. அதை வேணுமானா அவனோட சொந்த அபிப்பிராம்னு வெச்சுக்கலாம். அவசியத்துக்காகக் கூட ஒரு பெண் வாசற்படியை விட்டு இறங்கித் தெருவுக்கு வரக்கூடாதுன்னு இருபது வருஷத்துக்கு முன்னாலே சட்டம் பேசினானே, இப்ப என்ன ஆச்சு பார்த்தீங்களா? நம்ம சொத்து சுகங்களெல்லாம் என்றைக்குமே நிலைச்சிருக்கும்கிற அகந்தையிலே மனுஷன் என்னவெல்லாம் பேசிவிடறான்! அப்படிப் பேசுறவங்களுக்கு இந்த மாதிரி ஒரு கதியைக் கொடுக்கிறான் பார்த்தீங்களா ஆண்டவன்?”
“ …. ‘நான் நல்ல நிலைமையிலே இருந்தேன், சார். பெண்ணை வேலைக்கு அனுப்பும்படியான ஒரு நிலைமை ஏற்பட்டுப்போச்சு’ ன்னு அவன் சொன்ன போது எனக்குப் பரிதாபமாய் இருந்தது. கூடவே, ‘பெண்கள் அவசியத்துக்காகக் கூட வாசற்படியை விட்டுக் கீழே இறங்கக்கூடாது’ன்னு அவன் சொன்னதாக நீ சொல்லியிருந்ததும் ஞாபகம் வந்தது. நான் யார் என்பதை வெளிப்படுத்தி, ‘அன்னிக்கு அப்படிச் சொன்னீரே! இப்ப உம்ம பெண்ணை நீரே வேலைக்கு அனுப்பலாமா?’ ன்னு சுடச்சுடக் கேட்டுடலாமான்னு துடிச்சுது. நாகரிகத்துக்குக் கட்டுப்பட்டுப் பேசாமல் இருந்தேன்,” என்றான் தியாகராஜன்.
“அது மட்டுமா சொன்னான்? ‘நீ ரெண்டு வருஷமா வேலை பார்க்கிறதாலே நீ வேண்டாம்னு நான் அம்மாகிட்ட சொன்னேன். அம்மாதான் பிடிவாதமா என்னைச் சம்மதிக்கப் பண்ணிக் கூட்டிண்டு வந்தா’ ன்னு கூடச் சொல்லி என் மனசைப் புண்படுத்தினான்,” என்று அங்கலாய்த்துக்கொண்ட சுகந்தா, “காலம் எப்படி மாறிப் போயிட்டது, பார்த்தீங்களா?” என்று கேட்டுப் புன்னகை செய்தாள்.
…….
- திருநறையூர் நம்பி
- தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 16 -23இ பேருந்தில்
- திரைப்பட வாழ்க்கை
- பாதி முடிந்த கவிதை
- படித்தோம் சொல்கின்றோம்: நூலகர் நடராஜா செல்வராஜா தொகுத்திருக்கும் ஈழத்தின் தமிழ் நாவலியல் கையேடு
- தேடல் !
- கவிதைகள்
- மறு பிறப்பு
- கொ பி
- ப.தனஞ்ஜெயன் கவிதைகள்
- நேர்மையின் தரிசனம் கண்டேன்
- காலம் மாறிய போது …
- மரணத்தின் நிழல்
- ஒரு கதை, ஒரு கருத்து – சா.கந்தசாமியின் ‘பிற்பகல்’ என்ற கதை…..
- புதுப்புது சகுனிகள்…
- ராசி. அழகப்பன் கவிதைகள் – ‘ கும்மிருட்டு ‘ தொகுப்பை முன் வைத்து …
- காந்தி பிறந்த ஊர்