தி.ஜானகிராமன் சிறுகதை“பசி ஆறிற்று”

This entry is part 3 of 19 in the series 1 நவம்பர் 2020

                                     

வெளியீடு – காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோயில்  (தி.ஜானகிராமன் கதைகள்-முழுத் தொகுப்பு)

       கதையைச் சொல்வதா? அல்லது எழுதியுள்ள அழகைச் சொல்வதா?

       தோன்றிய கதையினால் அழகு பிறந்ததா…? அல்லது அழகியலைச் சொல்வதற்காக கதையை உருவாக்கினாரா?

        என்னதான் கலாரசனையோடு, காதல் மொழியை, காம உணர்வுகளை விவரித்தாலும்….

       ஒழுக்க சீலங்களை விட்டுக் கொடுப்பதில்லை. காலத்திற்கும் அழியா கலாசார சம்பிரதாயங்களை இகழ்வதில்லை. மனித மேன்மைக்கு உதவும் நல்லியல்புகளைப் புறந்தள்ளுவதில்லை.

       மனித உணர்ச்சிகளின்பாற்பட்ட தடுமாற்றங்களுக்காக, அடிப்படை ஒழுக்கம், பண்பாடு சிதைந்து விடக் கூடாது என்கிற தீர்மானம்…! வியக்க வைக்கிறது எழுத்தின் வன்மை!

       ஒவ்வொரு கணத்திற்கும் மனசு என்னவெல்லாம் நினைக்கும் என்பதை, உடல் மொழியிலும், வார்த்தை விளையாட்டிலும் என்னமாய்  வெளிப்படுத்துகிறார்?

       க்ளாசிக் என்றால், மொத்தக் கதையில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தெறிப்பதல்ல. வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை அப்படி மிளிர வேண்டாமா? இதுதான் க்ளாசிக்…

       வாழ்நாளுக்கெல்லாம் இவர் ஒருத்தர் போதும் போலிருக்கிறதே…!

       திரும்பத் திரும்பப் படித்தே ஆயுள் கழிந்து விடுமே…!

       “பசி ஆறிற்று…”   – என்னமாய் ஒரு தலைப்பு? உள்ளே எத்தனை அர்த்தங்கள்?

       வெறும் வயிற்றுப் பசியா…? இல்லை…சோற்றுப் பசியா…?

       இந்த உணர்ச்சியிலிருந்தே இன்னும் மீளவில்லையே….எப்படி அடுத்த கதைக்குப் போவது?

       அடிப்படை தர்மங்கள் சிதிலமாவதில்லை. மனிதர்கள் தடுமாறலாம். வழுவுவதில்லை. பிறகு நிலைக்கு வரலாம். தவறில்லை. இந்த உணர்வுகளைப் படிப்படியாகச் சொல்லிச் செல்ல என்னவொரு பக்குவம் வேண்டும் இந்தப் படைப்பாளிக்கு?  

       வாழ்க்கை அனுபவங்கள்தான் ஒருவனை இப்படி எழுத வைக்கின்றன என்றால், இவ்வளவு அனுபவங்களும் ஒருவருக்கு எப்படி சாத்தியமாயின? இத்தனையையும் நுணுகிப் பார்க்கும் திறன் எப்படி வாய்த்தது?

       அந்த முதல் பத்தியிலேயே அவர் ஒரு செவிடு என்பதை எப்படி உணர்த்துகிறார் பாருங்கள்.

சொல்ல ஆரம்பித்தால் மொத்தக் கதையையும் வரிக்கு வரி சொல்லித்தான் வாசிப்பனுபவத்தை வெளிப்படுத்தியாக வேண்டும். காரணம் ரசனையின்பாற்பட்ட விஷயமாயிற்றே…இது…!

விமர்சனமா செய்கிறேன்…ஏற்ற இறக்கம் சொல்ல….? நகரும் வரிகள் இதைத்தான் பறைசாற்றுகின்றன.

மணி பன்னிரண்டாகப் போகிறது…சுருக்க வாங்கோ… – கத்தின கத்தில் குரல் விரிந்து விட்டது. போய்க் கொண்டிருந்த சாமிநாதக் குருக்கள், என்ன? என்று திரும்பி நெற்றியைச் சுருக்குகிறார். நாசமாப் போச்சு…..முற்றத்தில் வந்திருந்த வெள்ளை வெயிலையும், நிழலையும் காட்டி ஜாடை செய்கிறாள் அகிலாண்டம். புரிந்து கொள்கிறார் அவர்.

உடனே விட்டாரா பாருங்கள். அடுத்த வரி….

ஏனக்கா…ஏன் இவ்வளவு மெதுவாப் பேசுகிறாள் அடுத்த வீட்டு அம்மாமி? – இந்தக் கிண்டலை உள்வாங்கும் அகிலாண்டம்…

டமாரச் செவிடுக்கு மாலைபோட்டுவிட்டு இதையெல்லாம் சட்டை செய்ய முடியுமா? ஆதங்கம். பேச்சை சட்டை செய்யவில்லைதான்….ஆனால் அந்தக் குரல்….?

“நான் காவேரிக்குப் போய் குளித்து விட்டு வருகிறேன் அக்கா….“

காதில் விழுந்ததும் இருப்புக் கொள்ளாமல்…வாசலுக்கு ஓடுகிறாள் அகிலாண்டம். ஈர்ப்பு எப்படி ஆரம்பிக்கிறது பாருங்கள்….

வாசலுக்கு வந்த அவன் அகிலாண்டம் நிற்பதைப் பார்க்க…வெறுமே பார்க்க அல்ல…தைரியமாய்ப் பார்க்க….

“உடனே உள்ளே ஒருமுறை பார்த்தான். தெருவில் கிழக்கும் மேற்குமாக ஒரு முறை பார்த்தான். குரைக்கக் கூடச் சோம்பல்படும் நாயைத் தவிர வேறு ஈ, காக்காய் இல்லை. தைரியமாய் அவளைப் பார்க்க ஆரம்பித்து விட்டான்…“

நறுக்கென்று அவள் மறைகிறாள். ஆனால் ரேழிக்குப்போனதும் கால்கள் தயங்குகின்றன. காட்சியாய் மனதில் ஓடவிடுங்கள்…ரசனை மேம்படும்.

எல்லாவற்றிற்கும் மனசுதானே காரணம். அதுதானே ஒருவனைப் பாடாய்ப் படுத்துகிறது.

“உள்ளுக்கா, வாசலுக்கா என்று கேட்டுக் கொண்டிருந்த மனத்தைக் கடைசியில் வாசல் பக்கமே திருப்பி விட்டாள்…“ –

மனதைத் திருப்பி விடுகிறாளாம். எழுத்தின் அழகை ரசிக்கத் தவறலாமா?

சோப்புப் பெட்டியை ஆட்டிக் கொண்டு அவன் சென்று கொண்டிருக்க…உள்ளே வந்த இவளுக்கு…தான் செய்தது தப்பு என்று படுகிறது..

“வேறு என்ன செய்வது? பைத்தியக்காரப் பெண் ஜென்மம்…!அந்த சமயத்தில் வேறு என்ன செய்யும்?“

“மேல் வீட்டில் எல்லோருமே  அழகுதான். ருக்மணி மாமிக்கு நாற்பது வயது ஆனாற்போலவே இல்லை…“..என்று எழுதுகிறவர்…மேற்கொண்டு ஒரு வரி சொல்லுகிறார் பாருங்கள்….

கன்னமும் காலும் பட்டுத் துடைத்துவிட்டாற்போல இருக்கின்றன. தம்பியும் அப்படித்தான். ஓடுகிற பாம்புக்கு கால் எண்ணுகிற வயசு…..

அகிலாண்டத்தின் மனது எங்கெங்கோ சஞ்சரிக்கிறது. கல்யாணம் ஆவதற்கு முன் பிறந்த ஊரில் எதிர் வீட்டுக்கு வந்திருந்த ஒரு பையனை நினைக்கிறது.

“அவன் பார்த்த பார்வை…என்ன ஒரு குளுமை…விழுங்கி விழுங்கிப் பார்த்து விட்டு, கடைசியில் ஊருக்குப் போய்விட்டான்…“

உடனே மனம் ஆதங்கப் படுகிறது. பெருமூச்சு எழுகிறது.

இந்த டமாரச் செவிடுக்கு வாழ்க்கைப் பட்டாகி விட்டது. குருக்கள் பெண், குருக்களுக்குத்தான் வாழ்க்கைப்பட வேண்டும் என்றாலும் அப்பாவுக்கு இந்தப் பூ மண்டலத்தில் வேறு ஒரு வரன் கூடவா அகப்படவில்லை?

“கிடைக்கவில்லை“ இல்லை. …அகப்படவில்லை…என்கிறார். ஆதங்கத்தின் ஆழமான வெளிப்பாடு. படைப்பாளிக்கு வார்த்தைகள் எவ்வளவு முக்கியம் என்பதை உணருவதற்கான இடம்.

“கட்டை குட்டையாய் கல்லுமாதிரி உடம்பு. காதிலே கடுக்கன்…எதற்காகவோ தெரியவில்லை….கேட்காத காதுக்குக் கடுக்கன் என்ன? மாட்டல் என்ன?“

காது கேட்கவில்லை என்றால் கடுக்கன் போடக் கூடாதா? அதற்குக் கூடத் தகுதியில்லையாம் செவிட்டுக் காதுகளுக்கு….! அகிலாண்டத்தின் மன ஆதங்கம் அப்படிப் பட்டுத் தெறிக்கிறது.

இவள் குரல் எப்படி இருக்குமென்று அவனுக்குத் தெரியுமோ என்னவோ? அவனிடம் கத்திக் கத்திப் பேசிப் பேசி…தொண்டை பெருகி விட்டது. ஊருக்குச் சென்ற போது தங்கைகள் கேட்கிறார்கள்….ஏண்டீ இப்படிக் கத்தறே எல்லாத்துக்கும்? ஊர் முழுக்கக் கிடுகிடுக்கணுமா?

அங்கேயும் ஆதங்கம் பிடுங்கித் தின்கிறது அவளை.

அத்திம்பேருக்கு நீங்க மாலைபோட்டிருந்தா தெரியும் சேதி…! அவர் காது கிட்டப் பீரங்கி வெடிச்சா…நெருப்புக் குச்சி கிழிச்ச மாதிரி இருக்கு அவருக்கு…. – சிரிக்கிறார்கள் எல்லோரும்.

கச்சேரி கேட்க நட்ட நடுவில் சென்று அமர்ந்திருக்கும் கணவனைப் பார்த்து மனது வெடிக்கிறது….இப்படி….

“போன வருஷம் எதிர்வீட்டில் ராதா கல்யாணத்தின் போது மதுரை மணி சங்கீதக் கச்சேரி நடந்தது. கூட்டத்திற்கு நடுவில் அவள் புருஷனும் உட்கார்ந்திருந்தான். பக்கத்தில் வாயைப் பிளந்தும், ஆகாரம் போட்டும் மெய் மறந்திருந்தவர்களை ஜடம் மாதிரிப் பார்த்துக் கொண்டிருந்தான். நடுநடுவே பெரிய வீட்டு வாயாடி கிட்டுச்சாமி…“கச்சேரி எப்படி?” என்று கண்ணைச் சிமிட்டி அவனிடம் ஜாடை செய்து கொண்டிருந்தான். ஸ்திரீகளுக்கு நடுவே உட்கார்ந்திருந்த அகிலாண்டத்திற்கு வந்த ஆத்திரத்திற்கும் துக்கத்திற்கும் அளவே இல்லை….

“காதுதான் இல்லையே….நடுக் கச்சேரியில் உட்கார்ந்து அசட்டுத் தனத்தை தப்படி அடித்துக் கொள்ளுவானேன்…?”

செவிட்டு ரசனையைப் பாருங்கள்…பாருங்கள்…என்று ஊருக்குச் சொல்வதைத்தான் “தப்படி” என்கிற அந்த ஒரு வார்த்தையில் உரைக்கிறார் தி.ஜா.ரா.

இந்த ஆதங்கம் வேறொரு ஆதங்கத்திற்கு வழி வகுத்து பெருமூச்சை ஏற்படுத்துகிறது.

“அகிலாண்டம் பாடகரைப் பார்க்க பிரம்மப் பிரயத்தனம் செய்து கொண்டிருந்தாள். ஆனால் கண் ராஜத்தின் மேலேயே திரும்பித் திரும்பி விழுந்தது. அவன் பாட்டை ரஸிக்கும் அழகைக் கண்டு வியந்து கொண்டிருந்தாள்”.

பக்கத்து வீட்டு ராஜம் முன் வரிசையில்….

ஸிக்கும் அழகு…… ரசிக்கும் இல்லை…..அந்த எழுத்து மாறக் கூடாது. அதுதான் அழகு….அங்கே.  மனம் என்ன பாடு படுகிறது பாருங்கள்….

“பிறகு இரண்டு நாளைக்கு அகிலாண்டத்திற்கு ஒன்றும் ஓடவில்லை. தேனீ மாதிரி அவன் நினைவே வந்து அவளை ஒட்ட ஒட்ட மொய்த்துக் கொண்டிருந்தது. ஏதாவது ஒரு சாக்கைச் சொல்லி எதிர்வீட்டுக்கு, மணிக்கு ஏழு தடவை போக ஆரம்பித்தாள். ஊஞ்சலில் உட்கார்ந்திருந்த ராஜத்தைப் பார்த்தாள். அப்பொழுதுதான் அவன் கண்ணெடுக்காமல் இத்தனை நாளாக இல்லாத ஒரு பார்வை பார்த்தான். அவளைப் புரிந்து கொண்டுவிட்டதாகச் சொல்வதுபோல் இருந்தது…”

வீட்டுக்கு வந்தபோது…“காபி போட்டாச்சா…?” என்று கூடத்தில் துணியை விரித்துப் படுத்திருந்த அவள் புருஷன் தூக்கம் தெளிந்து கேட்க…அப்போதுதான் அவளுக்கு மறந்து போன காரியங்களெல்லாம் நினைவுக்கு வருகிறது. நினைவுகள் முழுக்க அங்கே பதிந்திருக்க…வீட்டுக் காரியங்கள் மறந்து போகிறது அகிலாண்டத்திற்கு.

ஊருக்குக் கிளம்புகிறான் ராஜம். சர்க்கரை கடன் கேட்கப் போன அகிலாண்டம், ஏக்கம் தாளாமல் திரும்புகிறாள். பார்த்து விடுகிறாள் மாமி. நன்னாத் திரும்பிப் போறாள்…அசடு…வாங்கிண்டு போயேன்….என்கிறாள். நிறையக் கொடுடி…ஒரு கரண்டி என்ன? என்று சகுனம் கழிந்த மகிழ்ச்சியில் வார்த்தைகளை நிறைவாக உதிர்க்கிறார் ராஜத்தின் தகப்பனார். (ஊருக்குக் கிளம்புகையில் சுமங்கலி எதிரே வந்த சகுனம் அவரை மகிழ்ச்சிப் படுத்துகிறது….சொல்ல மாட்டார் தி.ஜா.ரா.   புரிந்து கொள்ள வேண்டும்)

போயிட்டு வரேம்மா….அந்த மாமி கிட்டவும் சொல்லு…என்கிறான் ராஜம்.

போயிட்டு வரேன்னு சொல்லிக்கிராண்டி..என்று அகிலாண்டத்திற்கு அஞ்சல் செய்தாள் தாயார். அஞ்சல்…..வார்த்தையைக் கவனியுங்கள். படைப்பாளி பொறுக்கிப் போடும் வார்த்தைகளில் எப்படி மிளிர்கிறார் பாருங்கள்.

சரி…என்று வேதனையை அடக்கிப் புன் சிரிக்க…உடனேயே வாசலுக்கு வந்து விட… பார்த்தாயா….ஊஞ்சல்ல வச்சிருந்த புஸ்தகத்த மறந்துட்டேன்…என்று ராஜம் உள்ளே போக யத்தனிக்க…நா போய் எடுத்துண்டு வரேண்டா  என்று தகப்பனார் ஓட…அம்மா ஒரு கிராம்பு கொண்டு வாயேன்…என்று அம்மாவையும் ராஜம் திருப்பி விட….அது நல்ல சந்தர்ப்பமாய் அமைகிறது.

போயிட்டு வரட்டுமா? என்கிற பாவனையில் அகிலாண்டத்திடம் பேசுகிறான் ராஜம். தன்னிடம் தனியாகச் சொல்லிக் கொள்ள  அவன் எடுத்துக் கொண்ட பிரயத்தனங்கள் அவளுக்குள் பெருமையை ஏற்படுத்துகிறது. கண்களில் நிறைந்த ஜலத்தைத் விழாமல் தேக்கிக்  கொண்டு தலையாட்டுகிறாள்.

விழாமல் தேக்கிக் கொண்டு தலையாட்டினாள்…என்ற வரிகளில்தான் எவ்வளவு ஆழமான ரசனை.

கிராம்பும் புஸ்தகமும் வந்து விட்டன. சலங்கை ஒலிக்கிறது. ஒரு நிமிடத்தில் இடம் வெறிச்சோடி விடுகிறது. மனது அடித்துக் கொள்கிறது. பித்துப் பிடித்த நிலை. எதுவும்  செய்யவொண்ணாத தவிப்பு….மாலை வேலைக்காரி பற்றுப் பாத்திரம் தேய்க்க வருகிறபோது அவளிடம் பாய்கிறது….

விதியிடம் பட்ட ஆத்திரத்தை அவள் மீது திருப்பி விட்டாள்….என்கிறார் தி.ஜா.ரா. ஒரே வரி…முடிந்து போகிறது….

வேலைக்காரி பதிலுக்குக் கோபப்பட்டு….சர்தாம்மா…கணக்கை முடி…என்றுவிட்டுப் பறந்து விடுகிறாள்.

நடந்ததை நினைத்து அழுகிறாள் அகிலாண்டம். நிம்மதியிலிருந்து நழுவிவிட்ட மனம்…வேதனையில் துடிக்கிறது. ஊரிலிருந்து தகப்பனார் வருகிறார். அவரோடு பிறந்தகம் போய் பத்துப் பதினைந்து நாட்கள் இருந்து விட்டு வந்தபின்புதான் மனம் சமனம் கொள்கிறது.இரண்டு நாள் அவள் கற்பனையில் நாடகம் ஆடிவிட்டுப் போன ராஜத்தை மறந்து விடுகிறாள்.

இப்போது அந்த ஸ்தானத்திற்கு வந்து விட்டான் அடுத்த வீட்டு ருக்மணி அம்மாமியின் தம்பி. அவனுக்குப் பத்துப் பதினைந்து நாள் லீவு. இருந்தால் என்ன? அவள் அதிர்ஷ்டம் தெரிந்ததுதானே? இருந்தும் மனது கேட்கிறதா என்ன?

குளிக்கப்போனவனை மனம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. துடிக்கத் துடிக்கக் காத்திருக்கிறாள்.

 என்ன யோஜனை பலமாயிருக்கு? – குரல் கேட்டு அதிர்கிறாள். அவள் புருஷன் நைவேத்தியப் பாத்திரத்துடன்…புன் சிரிப்போடு….

ரொம்ப நாழி பண்ணி விட்டேனா…? பசி துடிக்கிறதாக்கும் அம்பாளுக்கு…?

செத்தான்யா மனுஷன் இந்த ஒரு வார்த்தைல….“அம்பாளுக்கு…”  – மனைவி மீது என்னவொரு அன்பு? அம்பாளாகவே பார்க்கும் தன்மையா? அல்லது அத்தனை பக்தியோடு, பிரியத்தோடு அவளை எதிர்கொள்ளும் ஆவலா…? தன் மனைவி அம்பாள் மாதிரி என்கிற பெருமிதமா? எப்படியான ஒரு அற்புதமான வெளிப்பாடு?

செவிடனின் சிறுகுரலில் எவ்வளவு பரிவு? எவ்வளவு கனிவு? எவ்வளவு நம்பிக்கை…? என்ன நிர்மாயமான, நிர்மலமான பார்வை…!

ஜன்மத்திலேயே போகத்தை அறியாத கண்ணும் உதடும் வழக்கம் போல் புன்சிரிப்பில்.

இதை விட என்ன வேண்டும்?-உணர்ந்து மயங்கிப் போகிறாள் அகிலாண்டம்.

எப்படிச் சொல்லி முடிக்கிறார் பாருங்கள்.   யாராவது எழுதியிருக்கிறார்களா? எங்கேனும் உணர்ந்திருக்கிறீர்களா? சொந்த வாழ்க்கையில் இப்படியான உணர்ச்சிகளுக்கு நீங்கள் ஆட்பட்டதுண்டா…? அட…படித்தாவது ரசித்திருக்கிறீர்களா…? அந்த பாக்கியமாவது கிட்டியிருக்கிறதா? தி.ஜா.ரா….முடிக்கிறார்…..

“சிரித்துக் கொண்டே நைவேத்தியப் பாத்திரத்தைக் கையில் வைத்துக் கொண்டு அவ்வளவு அன்பைக் காட்டிய விதியை உள்ளே அழைத்துப் போய்க் கதவைத் தாழிட்டு, அதன் உடல் வேர்வையைத் துடைத்தாள். அது, இலையில் உட்கார்ந்து சாப்பிட்டபோது அவளுக்கு…

எல்லாப் பசியும் தீர்ந்து விட்டது……”

எல்லாவற்றிலும் மேன்மையானது கள்ளம் கபடமில்லாத, விகல்பமில்லாத, மெய்மையான அன்பு….! அது அங்கே ஜெயிக்கிறது.

பசி ஆறிற்றா படித்த உங்களுக்கு…? தி.ஜா.ரா….இன்னும் நூற்றாண்டுகளுக்கு நிலைத்திருப்பார் தன் எழுத்தில்…!!!!

                    ——————————————————————

Series Navigationகாலம்சில கவிதைகள்
உஷாதீபன்

உஷாதீபன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *