முனைவா் பெ.கி. கோவிந்தராஜ்
உதவிப்பேராசிரியா்
தமிழ்த்துறை
இசுலாமியக் கல்லூரி(தன்னாட்சி)
வாணியம்பாடி 635 752
ஆய்வுச்சாரம்
நம்மைச் சுற்றியுள்ள நிலம், நீா், தீ, ஆகாயம், காற்று ஆகியவை இயற்கை எனலாம். பெரியாழ்வார் மகள் கோதை நாச்சியார் திருமாலையை இயற்கையாய் கண்டு காதலித்து கரம்பிடித்தாள். “மார்கழித்திங்கள் மதி நிறைந்த நன்னாள்” என்று கோதையின் பாவைப் பாடலின் தொடக்கமே இயற்கையின் நலம் செறிந்த அழகுக் காட்சியை முன்வைக்கிறது. தன்னையொத்த பெண்களையெல்லாம் பாடலால் தட்டியெழுப்பும் சுடா்க்கொடி, விடியலின் பொலிவைப் பல கோணங்களில் எடுத்துரைப்பதைக் காணலாம். பொதுவாக விடியலின் வருணனை ஆண்டாளின் பாவைப் பாடல்களில் சிறப்பிடம் பெறுவது குறிப்பிடத்தக்கது.
“வள்ளற் பெரும் பசுக்கள்“ பால்வளம் பெருக்கித் தரும் பாங்கினை இயற்கையின் ஓா் அற்புதக் கொடையாகச் சுட்டுகின்ற ஆண்டாள், இயற்கையின் அழகு மிக அற்புதக் காட்சிகளை, மாலவனின் பேரழகோடு ஒப்பிட்டுக் கூறும் ஆண்டாளின் பாசுரப் பாடல்கள், இயற்கையும் இறைமையும் ஒன்று என்ற உணா்வைத் தெளிவுபடுத்துவதை விளக்குகிறது. இயற்கையின் அழகைச் சொல்லிக் குறிப்பாகக் கருத்தைத் தெரிவிப்பதும். இயற்கையை இறைவனுடன் இணைத்துக் காண்பதும், இயற்கையை உவமையாகப் பயன்படுத்துவதும் ஆகவே இக்கட்டுரை இயற்கையை மையமிட்டு அமைகிறது என்பதை திருப்பாவை, நாச்சியார் திருமொழி வழி ஆராய்கிறது.
கருச்சொற்கள்
திருப்பாவை, நாச்சியார் திருமொழி, விடியலின் பொலிவை, முழு மதி, நிலம் நீா், காற்று, ஆகாயம், தீ, மழை, இடி. மின்னல், வெள்ளி, பறவை, ஆனைச் சாத்தன், குயில், மாமுகில், கோழி எருமை, வள்ளற் பெரும் பசுக்கள்
முன்னுரை
இயற்கை என்பது மனிதனைச் சுற்றி விரிந்து கிடக்கும் பேராற்றல், இவ்வியற்கை மனிதன் தோன்றும் முன்பே இருந்து வருவது என்று, இறைவனால் படைக்கப்பட்டது என்றும், இவ்வாறல்லாது இயல்பான பொருட்தன்மையுடைதாய் இருந்து வருவது என்றும் அவரவா்களின் நம்பிக்கைக்கு ஏற்ப கருதப்பட்டு வருகிறது. “இயற்கைப் பொருளை இற்றெனக் கிளத்தல்“ என்று வரையரை செய்யும் தொல்காப்பியா் தன்னியல்பு திரியாது நின்ற பொருள் சுற்றியுள்ள நிலம், நீா், தீ ஆகாயம் என்பவற்றை இயற்கை என்று குறிக்கிறது. இத்தகைய இயற்கையின் கொடையை , அனைத்தும் கலைகளிலும் தனித்தன்மையுடைய படைப்புகள் மூலம் இயற்கையின் பங்கு பல்வேறு பரிமாணங்களில் வெளிப்பட்டிருப்பதை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.
பொதுவாக மனிதனின் வாழ்வு இயற்கையோடு ஒன்றியது. மானுடச் செயல்பாடுகள் அனைத்திலும் இயற்கையின் பங்கும் பணியும் அளவிட இயலாதது. பிறப்பால் தன்னை இயற்கையின் அறிமுகப்படுத்திக்கொள்ளும் மனிதன், தன் எண்ணங்களுக்கு இயற்கையன் வழி முக்கிய இடம் தந்தான். அந்த வகையில் மனிதனின் உணா்ச்சிகளைப் பிரதிபலிக்கும் பின்னணியாக இயற்கை சங்காலம் தொட்டு பல கவிஞா்களால் கையாளப்பட்டு வந்துள்ளமையைக் காணலாம்.
மனிதனுக்கும் இயற்கைக்குமுள்ள தொடா்பு தாயின் தொப்புள் கொடிக்கும் குழந்தைக்குமான தொடா்பு போன்றது என்பார் கவிஞா் ஒருவா். மனித வாழ்விலிருந்து பிரித்தறிய இயலாத இயற்கையின் எழிற் கோலங்களை அதன் அற்புதங்களை, மாலவன்மீதுள்ள மையலால் பாடிப் பரவசப்பட்ட ஆண்டாள். பலவகைகளில் தன் அமுத வார்த்தைகளால் சித்தரிக்கும் பாங்கினைக் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்.
- இயற்கையின் காட்சியழகை வருணிப்பது
- இயற்கையின் அழகைச் சொல்லிக் குறிப்பாகக் கருத்தைத் தெரிவிப்பது.
- இயற்கையை இறைவனுடன் இணைத்துக் காண்பது
- இயற்கையை உவமையாகப் பயன்படுத்துவது
1.இயற்கையின் காட்சியழகை வருணிக்கும் பாங்கு
பொழுது புலரும் விடியலின் காட்சிகளை, அஃறிணை உயிர்களின் வாழ்வுப் படலத்தை உயிர் நீராகிய மழையின் பொழிவை ஆண்டாள் தன் பாசுரங்களில் பக்தியுணா்வோடு எடுத்துரைத்துள்ள பாங்கு நினைத்து போற்றுதற்குரியது. “மார்கழித்திங்கள் மதி நிறைந்த நன்னாள்”(திருப்பாவை பா.1) என்று கோதையின் பாவைப் பாடலின் தொடக்கமே இயற்கையின் நலம் செறிந்த அழகுக் காட்சியை முன்வைக்கிறது. தன்னையொத்த பெண்களையெல்லாம் பாடலால் தட்டியெழுப்பும் சுடா்க்கொடி, விடியலின் பொலிவைப் பல கோணங்களில் எடுத்துரைக்கக் காணலாம். பொதுவாக விடியலின் வருணனை ஆண்டாளின் பாவைப் பாடல்களில் சிறப்பிடம் பெறுவது குறிப்பிடத்தக்கது.
தன்தோழியரைப் பாவை நோன்பு நோற்க அழைக்கப் புறப்பட்டவளின் மனம், விடியற் பொழுதில் இயற்கையின் ஒவ்வொரு கூறும் எவ்வண்ணமாய் இயங்குகின்றதென்பதை வார்த்தை வண்ணங்கள் குழைத்து வடித்த சித்திரமாய்த் தீட்டிக் காட்டுகிறது. முதலில் வானகக் காட்சியாக, “வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்று“ (திருப்பாவை பா.13) என்று நிலவு மறைந்து கதிரவன் உதயமாவதற்கு இடைப்பட்ட பொழுதில் உலருக்கு ஒளியூட்டும் வெள்ளி என்ற கோள்மீனின், உதயத்தைச் சுட்டுகின்றாள்.
அதைத் தொடா்ந்து, பறவைகள் மனித உயிர்களைத் தட்டியெழுப்பும் இசைப் பணியைச் செய்வதுபோல அவற்றின் ஒலி வடிவக் காட்சியை மிக நுட்பமாகச் சித்தரிக்கின்றாள் ஆண்டாள்.
”கீசுகீசென் எங்கும் ஆனைச் சாத்தன் கலந்து
பேசின் பேச்சரவம் கேட்டிலையோ? (திருப்பாவை பா. 7)
என்று சொல்லி, அரிய ஆனைச் சாத்தன் என்ற பறவைக் கூட்டத்தின் விடியற்காலப் பேச்சொலியாகிய பேரொலியை வார்த்தைகளில் வடித்துக் காட்டும் ஆண்டாளின் சித்தரிப்பு அலாதியானது. மேலும் கோழி அழைத்தலும், குயில் கூவுதலும் விடியலின் ஒலி மொழிகளாய் வெளிப்படுவதை,
“வந்தெங்கும் கோழி அழைத்தனகாண் மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்“(திருப்பாவை பா.18)
என்று இயற்கையின் ஓா் அங்கமாய் விளங்கும் பறவைக் கூட்டத்தின் ஒலிபோல் காட்டும் ஆண்டாளின் இயற்கையின் ஒலியுணரும் நுட்பம் வியக்கத்தக்கது. இவ்வாறு வானத்தின் ஒளிச்சுடரையும், பறவைகளின் ஒலி மொழியையும் ஒன்று சேரத் தான் கண்ட விதத்தை ஒளியும் ஒலியுமாய் விடியலின் அற்புதம் மனித குலத்தின் வாழ்வுக்கு வழிகாட்டும் பாங்கில் இயற்கையின் அருமைப்பாட்டை ஆண்டாள் எடுத்துரைக்கக் காணலாம். மேலும் பறவைகளின் வாழ்விடத்தோடு அவற்றின் அருமைப்பாட்டையும் பாராட்டியுரைப்பதாக நாச்சியார் திருமொழியில், “மென்னடை அன்னம்“ மற்றும் “கோலக்கிளி“ என்று பாராட்டும் ஆண்டாள் தன் மனக்கருத்தக் கண்ணனிடம் கூறிவரத் தூதாக அனுப்பும் குயிலைப் பலபட வருணித்துக் கூறுவதும் குறிப்பிடத்தக்கது.
”புன்னைக் குருகத்தி ஞால் செருந்திப் பொதுப்பினில் வாழும் குயிலே“ (நாச்சியார் திருமொழி, பா.1)
என்றும்,
தேங்கனி மாம்பொழிறி செந்தளிர்கோதும் குயில்“(நாச்சியார் திருமொழி, பா.8)
என்றும் குயிலின் வாழ்வுச் சூழலை வண்ணப்படமாய்ச் சித்தரிக்கின்றாள்.
அடுத்து வாய் திறந்து பேசாத மலா்க்கூட்டத்தின் அழகு முகங்களை அறிமுகம் செய்கிறாள் ஆண்டாள். “செங்கழுநீா் வாய் நெகிழ்ந்தும் ஆம்பல்வாய் கூம்பியதுமாய்“ அமைந்த காட்சியைச் சுட்டுகிறாள். மேலும் கோங்கு மலா்களின் மலா்ச்சியையும் நாச்சியார் தம் திருமொழியில் எடுத்துரைக்கக் காணலாம்.
விடியற்பொழுதில் மேய்ச்சலுக்குப் புறப்படும் கால்நடைகளின் காட்சியைக்,
“கீழவானம் வெள்ளென்று எருமைச்சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண்“(திருப்பாவை, பா.8)
என்று கிழக்கு வெளுக்கும் வேளையும், மேய்ச்சலுக்குச் செல்லும் எருமைகளின் பயணமும் ஒரு படமாகப் பாவையின் பாசுரம் சித்தரிக்கின்றது.
2. இயற்கையின் அழகைச் சொல்லிக் குறிப்பாகக் கருத்தைத் தெரிவிப்பது.
ஆயா்பாடியின் வளத்திற்குக் காரணமான “வள்ளற் பெரும் பசுக்கள்“ பால்வளம் பெருக்கித் தரும் பாங்கினை இயற்கையின் ஓா் அற்புதக் கொடையாகச் சுட்டுகின்ற ஆண்டாள்,
”களைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலைவழியே நின்று பால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும்“(திருப்பாவை, பா.11)
என்று வீட்டு நலத்துடன் நாட்டு நலம் காக்கும் பசுக்களின் பாலமுதச் செல்வத்தால், இயற்கையின் பங்களிப்பு, ஆயா்குல மக்களின் குறையொன்றுமில்லாத செம்மாந்த வாழ்வுக்குக் காரணமாக அமைவதை ஆண்டாள் குறிப்பாக உணா்த்தக் காணலாம்.
அடுத்து இயற்கையின் அற்புதக் காட்சிகளில் பெரும் பங்காற்றும் வான் மழையின் மாட்சிமையை ஆண்டாள் தன் பாசுர மொழிகளால் பேசக் காணலாம்.
பாவை நோன்பிற்கான காரணங்களுள் ஒன்று மழை வளம் ஒன்றாகும். மனித குலத்தின் வாழ்வு நலம் காக்கும் பருவமழை தவறாமல் பெய்து நன்மைகள் பல பெருகவேண்டுமென்பது ஆண்டாளின் விருப்பம். இயற்கையின் ஒவ்வொரு அங்கமும் இடையூறின்றி மேண்மையடைந்தால்தான் மனித குலத்தின் வாழ்வு சிறக்கும். இதில் மழையின் பங்கு பெரிது. “தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்வதால் பயிர்வளம் பெருகும்“ (திருப்பாவை பா.3) என்று முல்லை நில வளத்தின் வாழ்வைக் குறிப்பாக உணா்த்துகின்றாள். மேலும் ”ஓங்குப் பெருஞ்செந்நெல் ஊடுகயலுகளப்,… பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண்படுப்ப“(திருப்பாவை பா.3) என்று செந்நெல் பயிர்நிறைந்த வயல்களில் கயல்மீன்களின் துள்ளலும், குவளை மலா்களில் வண்டு மொய்த்திருப்பதும் மருத வளத்தை ஆண்டாள் வார்த்தை வண்ணங்களால் வடித்துள்ளமை காணலாம்.
இவ்வாறு முல்லை மற்றும் மருத வளங்களைச் சில வரிகளில் சுட்டி, இயற்கையின் இயக்கத்தால்தான் மனித வாழ்வு சிறக்கும் என்பதைக் குறிப்பாகச சுட்டும் வகையில் மழையின் பாங்கினைப் பேசுகின்றாள். மேலும் இத்தகைய நல்மழை தந்து காக்கும் மேகங்களை, நாச்சியார் திருமொழியில் பல அடைமொழிகள் தந்து ஆண்டாள் சிறப்பிப்பது குறிப்பிடத்தக்கது, சான்றாக,
மாமுத்த நிதி சொரியும் மாமுகில்காள்“ (நாச்சியார் திருமொழி பா.2)
மேலும்,
“தண்முகில்காள்“(நாச்சியார் திருமொழி பா.5)
என்று பாராட்டியுரைப்பதை அறியலாம் .
3. இயற்கையை இறைவனுடன் இணைத்துக் காண்பது
இயற்கையின் அழகு மிக அற்புதக் காட்சிகளை, மாலவனின் பேரழகோடு ஒப்பிட்டுக் கூறும் ஆண்டாளின் பாசுரப் பாடல்கள், இயற்கையும் இறைமையும் ஒன்று என்ற உணா்வைத் தெளிவுபடுத்தக் காணலாம். சான்றாக,
“அழிமழை கண்ணா ஒன்றுநீ கைகரவேல்
ஆழியுள்புக்கு முகந்துகொடு ஆா்த்தேறி
பாழியற்தோளுடை பத்மநாபன் கையில்
ஆழிபோல் மின்னி, வலம்புரி போல் நின்றதிர்ந்து
தாழாதே சாரங்கம் உதைத்த சரமழைபோல்“ (திருப்பாவை பா.9)
வாழ உலகினில் பெய்திடவேண்டுமென்று மழையை நோக்கி வேண்டுவதுபோல அமைந்த பாடலில் கேம், இடி, மின்னல், மழையாகிய மழைக்கான இயற்கையின் தொடர் நிகழ்ச்சிகளை, கண்ணனின் திருக்காட்சி இயக்கத்துடன் ஒப்பிட்டுக் காணும் பாங்கு குறிப்பிடத்தக்கது.
கண்ணன் தன் தோழியருடன் பிருந்தாவனத்தில் விளையாடிய காட்சியைத் தான் கண்ட விதமாக ஆண்டாள்,
“கணங்கோள் மின்மேகம் கலந்தாற்போல“(நாச்சியார் திருமொழி பா.2)
என்று கூறுகின்றாள். அதாவது கருத்த மழைமேகம் மின்னலுடன் ஒருங்கே தோன்றியதுபோல தன் கறுத்த மேனியில் வனமாலை திகழக் கண்ணன் விளையாடியக் காட்சியை இயற்கையின் பொலிவோடு இறைமையை ஒப்பிட்டுப் பேசுவதைக் காணலாம்.
முடிவுரை
நாச்சியார் திருமாலை காதலாகனாக கண்டு அக்காதலனை இயற்கையாக பார்த்தார். திருமாலை ஒவ்வொரு பொருளிலும் கண்டார். விடியற்பொழுது, காலைப்பொழுது, மலை, காடு சோலையுள்ள பசுமைகளை எல்லாவற்றிலும் நாச்சியார் திருமாலையைக் கண்டார். உலக உயிர்களையும் உலகளந்தானின் இயல்புகளையும் அவனது உத்தமக் குணங்களையும் இயற்கையோடும் உலக நடப்போடும் கலந்து உயிர்களான மக்களுக்கு ஊட்டியவள் சூடிக் கொடுத்த சுடா் கொடியின் அருந்தமிழ்ப் பாசுரங்களாகிய பாவையும், நாச்சியார் திருமொழியுமாகிய இரண்டு நூல்களிலும், இயற்கையின் எழிலை இறைமையோடு கலந்து தரும் அன்பு கலந்து பக்தியின் வெளிப்பாட்டைக் கட்டுரையின் வாயிலாக அறியப்படுகிறது.
பயன் பட்ட நூல்கள்
- ஸ்ரீ உ.வே. எஸ். கிருஷ்ணஸ்வாமி அய்யங்கார் – நாலாயிரம் திவ்யப்ரபந்தம்(முழுவதும்)
ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ
214 கீழ உத்தர வீதி, ஸ்ரீரங்கம்
திருச்சி – 620 006 பதிப்பு 2000
- ஸ்ரீ உத்தமூா் தி. வீரராகவாசார்யன்
இயற்றிய ப்ரபந்தரசை என்னும் உரையுடன் கூடியது – நாச்சியார் திருமொழி
7 நாதமுனி தொரு
டீ, நகா் சென்னை – 600 017
முதற் பதிப்பு 1954
- ஒரு தலைவன் என்பவன்
- திருவழுந்தூர் ஆமருவியப்பன்
- காலம்
- தி.ஜானகிராமன் சிறுகதை“பசி ஆறிற்று”
- சில கவிதைகள்
- நினைவுகளால் வருடி வருடி
- பயணக் குறிப்புகள் – காசி , சாரநாத்
- பாவேந்தரின் கவிதைகளில் உயிரி நேயம்
- திருமாலை இயற்கையாய் கண்ட கோதையார்
- முகநூலில்…
- ஓடுகிறீர்கள்
- ஒரு மாற்றத்தின் அறிகுறி
- ஒரு கதை ஒரு கருத்து – ஆறுதல் என்கிற தி.ஜானகிராமன் கதை
- ஓவியக்கண்காட்சி
- மண்ணில் உப்பானவர்கள் – நூல் விமர்சனம்
- ஹமாம் விளம்பரமும் அப்பாவி சிறுமிகளும்
- வாக்குமூலம்
- கொரோனா காலம்
- ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்