குணா
நல்ல தரமான செருப்பு வாங்கிப் போட வேண்டும் என்று வெகு நாள் ஆசை. சிறு வயதில் கடுக்கன் தைத்துக் கொடுத்த தோல் செருப்பு தான். அதையே சந்தோஷமாய் அணிந்த இளம் வயது காலம்.
அழுக்கு வேட்டியை வரிந்து கட்டி உட்கார்ந்து தைக்கும் கடுக்கன் இப்போது உயிரோடு இல்லை. வேறு ஒன்றுக்கு மாற வேண்டிய கட்டாயம். வயது ஏறியதோடு காலும் வளர்ந்து விட்டது. அதற்கேற்றாற் போல் செருப்பு தேடுவதில் அத்தனை சிரமம் இருக்குமென்று நினைத்திருக்கவில்லை.
பல கடையேறி, இருக்கும் செருப்பும் தேய்வது தான் மிச்சம். கடுக்கன் செருப்பு போல் நின்று நிலைக்கும் செருப்பை இன்னும் கண்டபாடில்லை. போன போகிக்கு ஒழிக்க வீட்டு மச்சியில் ஏறிய போது பார்த்தது. கடிக்க முற்பட்ட எலியின் பற்பதிவு. இருந்தும் நான் இருக்கேன் என்று சின்ன வயதில் என் காலை பத்திரமாய் பார்த்துக் கொண்ட கடுக்கன் செருப்பு இன்னமும் பத்திரமாய் இருக்கிறது. அளவு ஒன்று தான் குறை. அந்த அளவுக்கு கால் உள்ளவர் எனக்கு அடுத்து வீட்டில் யாருமில்லை.
அந்த செருப்பு போட்டிருந்த காலங்களில், கால் பாதம் சற்று காய்ச்சிப் போயிருக்கும். எந்த காலத்திலும் முள்ளோ, கல்லோ காலை பதம் பார்த்ததில்லை. அப்படியொரு பாதுகாப்பு. வயல் வரப்பு, காடு மேடு, பட்டணப் பயணம் எல்லாவற்றிற்கும் அது ஒன்று தான்.
பள்ளி முடிந்து கல்லூரியில் காலெடுத்து வைத்த போது, எல்லோருக்கும் வரும் இள வயது கிலேசம். புது செருப்பு வேண்டுமென்று. அலங்காரமாய் இருந்த காஷ்மீரி செருப்பு. எண்ணி இரண்டு மாதம். இளித்து, தேய்ந்து, பிதுங்கி, பிய்ந்து தொங்கி என்னவெல்லாமோ ஆகிப்போனது. அது இந்த ஊருக்கு ஒத்து வராது என்று ஆறுதல் கொண்டு அடுத்ததை நாடிப் போனேன்.
கல்லூரியில் ஓடியாட நடை பயணிக்க என்று ஒன்று வேண்டியிருந்தது. நல்ல தரம், நம் நாட்டில் தயாரித்தது என்று பேசிக் கொண்டார்கள். நம்பி, தேடிப்பிடித்து, ஒரு ஷூவை வாங்கி போட்டேன். ஆடி ஓடல்களுக்கு ஆறு மாதம் தாக்கு பிடித்தது. பாதத்தில் பிளந்து கொண்டது. இருந்தும் ஒருவித சொகுசை உணர்ந்தாற் போலிருந்தது. செப்பனிட்டு ஓட்டலாம் என்று அந்த ஆண்டு ஓடிப்போனது.
அந்த ஆண்டு என்.சி.சி யென்று வாங்கிய ஷூ கடுக்கனை நினைவு படுத்தியது.
அதற்குள் வீட்டில் திட்டி தீர்த்து விட்டார்கள். எத்தனை ஒருத்தருக்கென்று. அவர்களைச் சொல்லி குற்றமில்லை. ஒரு வீட்டில் படிக்கும் பருவத்தில் மூன்று பேரிருந்தால் தெரியும் அந்த கஷ்டம். அதுவும் ஒருவர் போட்டது அடுத்தவருக்கு ஒத்துப் போகாமல் வித்தியாசமாயிருந்தால்.
ஒரு கதை சொல்வார்கள். நம்மூர்க்காரன் பொருள் வாங்க கடைக்குப் போனான். ஒவ்வொரு கடையாய் ஏறி இறங்கினான். எதுவும் வாங்கின பாடில்லை. பின்னால் ஒரு சீனாக்காரன் அவனைத் தொடர்ந்து போனான். அவனைப் பார்த்தவன் கேட்டான், என்ன செய்கிறாயென்று. அதற்கு சீனாக்காரன் சொன்னான்… முன்னால் போனவன் எதையும் வாங்கவில்லை, என்ன செய்தால் அவனை வாங்க வைக்க முடியுமென்று பார்த்துக் கொண்டு போகிறேன் என்றான்.
அப்படியாய் விலை குறைவாய், அழகாய் உழைக்கும் போலிருந்த ஒரு சீனாக்காரன் செருப்பு கிடைத்தது. அதற்கப்புறம் தொந்தரவு கொடுக்காமல் படித்து முடித்து விட்டேன். அந்த செருப்பும் இளித்துக் கொண்டது. செப்பனிட எந்த வழியுமில்லை. போனால் போனது தான், அடுத்ததைத் தேட வேண்டும். அதுதான் சீனாக்காரன்.
நல்ல வேளை, எனக்கு ஒரு வேலை கிடைத்து விட்டது. எனக்கானதை வாங்கிக் கொள்ளலாம் என்ற நிலை. எனக்கு வேலை கிடைத்ததோ மாநகரில். ஷூவும், டையும் இட வேண்டிய வேலை. இத்தாலியிலிருந்து வருபவை தாங்கும் என்று யாரோ சொன்னது கேட்டு வாங்கினேன். உண்மை தான் போலும். இலகுவாய், கடினமாய்… மேம்பட்ட கடுக்கன்கள் அங்கு இருக்கிறார்கள் போலும் என்று எண்ணத் தோன்றியது. நாள்பட அதுவும் இல்லையென்று சொன்னது. சீனாக்காரன் போல் மோசமில்லை, ஒரளவுக்கு பழுது பார்த்து ஓட்டலாம், திரும்பவும் வாங்கத் தோன்றும் ஒரு சொகுசு.
இதற்குள் அநேகம் வளர்ந்திருந்தது. எல்லாவற்றையும் இங்கேயே தயாரிப்போம் என்று தொழில்நுட்பம் போட்டி போட்டது. ‘இந்தியாவில் தயாரிப்போம்’ சூடு பிடித்திருந்தது.
இந்த முறை ஷூ வாங்கப் போனேன். இத்தாலி, சீனா என்று வித விதமாய் இருக்கும் எதுவும் கண்ணில் தென்படவில்லை. சுற்றும் முற்றும் பார்த்த என்னை சீனாக்காரன் போல் பார்த்து அந்த சிப்பந்தி சொன்னார். “இது உழைக்கும் சார். விலையும் குறைவு. வாங்கிப் பாருங்கள்” என்றார்.
பார்க்க இத்தாலியது போல், சீனாக்காரன் விலையில்… திருப்பிப் பார்த்தேன். “மேக் இன் இந்தியா”. யோசனையோடு வாங்கினேன்.
வாங்கி ஒரு மாதமிருக்கும். எங்கு போனாலும் அந்த ஷூவோடு போனதைப் பார்த்து என் இல்லாள் கேலி செய்தாள். “இது என்ன சின்ன பிள்ளை மாதிரி. ஆபீஸ் போடறதையா வெளியிலேயும் போடுவாங்க. இருந்தாலும் இது ரொம்ப ஜாஸ்தி.”
அடுத்த முறை அந்த வணிக வளாகம் போன போது, தானாக என் கால்கள் அந்த கடையை நோக்கி.
“வாங்க சார். எப்படி இருக்கு ஷூ…” அந்த சிப்பந்தி கேட்டதும் எனக்குள் கூச்சம் கலந்த மகிழ்ச்சி.
“செருப்பு வேணும்”.
“கட்டாயமா சார்” சொல்லிக் கொண்டே எடுத்துக் கொடுத்தார். “இதை போட்டுப் பாருங்க. பெர்கின்ஸ்டாக் மாதிரி. நம்மூர் செருப்பு”.
போட்டுப் பார்த்தேன். அப்படியொரு சுகம். காலோடு ஒட்டி… இதமாய்… கடுக்கன் சற்றே மேம்பட்டது போல்… மிதமாய்.
கழற்றி திருப்பி லேசாய் விலையை பார்க்காதது போல் பார்த்தேன். “கட்டுப்படியாகும்”. மனதுக்குள் சொல்லிக் கொண்டேன்.
அந்த செருப்பை காலில் போட்டுக் கொண்டு… “இந்த ஷூவை அதில் பேக் பண்ணிடுங்க”
“கட்டாயம் சார்” அவர் முறுவலித்துக் கொண்டார்.
போட்டு நடந்த எனக்குள், இத்தாலிக்குப் போய் வந்த கடுக்கன் பேண்ட் சர்ட் போட்டு கூடவே வந்த உணர்வு.
- (எ) குணசேகரன்
- ஒரு தலைவன் என்பவன்
- திருவழுந்தூர் ஆமருவியப்பன்
- காலம்
- தி.ஜானகிராமன் சிறுகதை“பசி ஆறிற்று”
- சில கவிதைகள்
- நினைவுகளால் வருடி வருடி
- பயணக் குறிப்புகள் – காசி , சாரநாத்
- பாவேந்தரின் கவிதைகளில் உயிரி நேயம்
- திருமாலை இயற்கையாய் கண்ட கோதையார்
- முகநூலில்…
- ஓடுகிறீர்கள்
- ஒரு மாற்றத்தின் அறிகுறி
- ஒரு கதை ஒரு கருத்து – ஆறுதல் என்கிற தி.ஜானகிராமன் கதை
- ஓவியக்கண்காட்சி
- மண்ணில் உப்பானவர்கள் – நூல் விமர்சனம்
- ஹமாம் விளம்பரமும் அப்பாவி சிறுமிகளும்
- வாக்குமூலம்
- கொரோனா காலம்
- ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்