ஒரு கதை ஒரு கருத்து – ஆறுதல் என்கிற தி.ஜானகிராமன் கதை

author
4 minutes, 20 seconds Read
This entry is part 12 of 19 in the series 1 நவம்பர் 2020

அழகியசிங்கர்

            தி.ஜானகிராமனின் தொகுக்கப்படாத சிறுகதைகளில் எதையாவது எடுத்துப் படித்துப் பார்க்கலாமென்று அகப்பட்ட கதை ஆறுதல

            காதல் என்ற பத்திரிகையின் ஆண்டு மலரில் 1953ல் எழுதப்பட்ட கதை இது. 

            இந்தக் கதை ஆரம்பத்திலேயே மனைவியை விட்டுப் பிரிந்த கணவனைப் பற்றிச் சொல்கிறது.  தனிக்குடித்தனம் போக வேண்டுமென்று நினைக்கிறான் சங்கர்.  ஆனால் அது முடியவில்லை. 6 மாதமாக மனைவியைப் பிரிந்து இருக்கிறான்

.  

            ஒரு வீட்டில் ஒரு அறையில் அவனும் நண்பன் கோபாலுடன் குடியிருக்கிறான்.  அவன் மனைவி பிரசிவித்த முதல் குழந்தையுடன் சென்னையில் தனிக் குடித்தனம் நடத்தத் திட்டமிடுகிறான்.  ஆனால் அவ்வளவு சுலபமாக அது நடக்கவில்லை.  அவளையும் குழந்தையையும் ஊரில் விட்டு வைத்திருக்கிறான்.

            ஒவ்வொரு முறையும் அவளிடமிருந்து கடிதத்தை எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறான்.  குடித்தனம் செய்யும் பெண்ணுக்குக் கடிதம் 

எழுதுவதென்றால் கல்யாணம் செய்கிறதுபோல.  கை ஒழிந்து, குழந்தையைத் தூங்கச் செய்து….

            ஒவ்வொரு கடிதத்திலும் அவள் குழந்தையைப் பற்றி எழுதி வருகிறாள். மூன்று வாரம் முன் அவன் ஊருக்குப் போனபோது  குழந்தை தவழ்ந்துகொண்டிருந்தது.  ஆனால் உட்காரத் தெரியவில்லை.

             அவள் கடிதம் வந்தபோது குழந்தைக்கு உட்கார தெரிந்து விட்டது.  பிடித்துக்கொண்டு நிற்கிறது என்று எழுதியிருந்தாள். குழந்தைகள் எவ்வளவு விரைவாக வளர்கின்றன. 

            புழுக்கமான புழுக்கம்.  கோட்டுக்குள் கசகசவென்று  பனியனும் சட்டையும் முதுகோடு  ஒட்டிக்கொண்டிருந்தது.  ஆபீஸ÷ற்குப் போவதற்கும் வீட்டிற்கு வருவதற்கும் எவ்வளவு வித்தியாசம்.  கதாசிரியர் இதை விவரிக்கும்போது நமக்கும் அந்த உணர்வு ஏற்பட்டு விடும் போல் தோன்றுகிறது.

            இது வழக்கமாக ஆபீஸ் போகும் மனிதனின் கதை.  தினமும் அவன் வரும்போது லெவல் கிராஸிங் மணி அடிக்கும்.  அப்புறம் இப்படியும் அப்படியுமாக தடதடவென்று இரண்டு ரயில்கள் ஓடிப்போகிற வரைக்கும் காத்திருக்க வேண்டும்.

            இன்று வித்தியாசமாகக் கேட் திறந்திருந்தது.  அவசரம் அவசரமாக சங்கர் கேட்டைக் கடந்து வந்து விடுகிறான்.  வீட்டு மாடி ஏறிப் போகும்போது, வீட்டுக்காரன் குழந்தை கூப்பிட்டு சாக்லெட் கேட்கிறது. “யே பேசாமல் இருடா,” என்று குழந்தையின்  தாயார் கூறுகிறாள்.  ஒரு நாளும் அவள் இப்படிச் சொன்னதில்லை. 

            கோட்டுப் பையிலிருந்து  ஒரு சாக்லெட் எடுத்துக் கொடுக்கிறான் சங்கர்.

            மெடிக்கல் காலேஜ்ஜில மாணவனாக இருந்த கோபால் அவனுக்காகக் காத்திருக்கிறான்.  

            “கெட்ட செய்தி வந்திருக்கிறது” என்று ஒரு கடிதத்தை சங்கரிடம் கொடுக்கிறான்.

            அது ஒரு கார்டு.  கையெழுத்து கூட இல்லை.  மேலே தஞ்சாவூர் என்று எழுதியிருந்தது.  பஞ்சாபகேசன் என்ற நண்பன் எழுதியிருந்தான்.  போனவாரம் வந்து சங்கரின் சித்தப்பா வந்திருந்து அவனுடைய மனைவியையும் குழந்தையும் அழைத்துப் போயிருக்கிறார்கள்.  தஞ்சாவூரிலிருந்து திருச்சிக்கு அழைத்துப் போயிருக்கிறார்.  போன இடத்தில் குழந்தைக்கு உக்கிரமான அம்மை போட்டு குழந்தை இறந்து விட்டது.  சங்கரின் அப்பாவிற்கு இந்தத் துக்கத்தைத் தாங்க முடியவில்லை.  குழந்தை இறந்து 5 நாட்கள் ஆகிவிட்டது.  இந்தத் துக்கத்தை அவர்கள் எழுதக்கூடாது என்று பஞ்சாபகேசன் என்ற நண்பன் எழுதியிருக்கிறான்.

            இந்தக் கடிதத்தைப் படித்தவுடன் பெரிய அதிர்ச்சியாக  இருந்தது  சங்கருக்கு.

            கதாசிரியர் இந்த இடத்தில் இப்படி வர்ணிக்கிறார்.  நாலைந்து தடவை வாசித்தான்.  பிறகுதான் புரிந்தது. செய்தி மனதில் பதிந்தது உதட்டைப் பல்லால் படித்தான்.  நெஞ்சை வலித்தது.

            அவன் நண்பன் கோபால் சொல்கிறான்.   சங்கர் சட்டையெல்லாம் கழட்டிப் போட்டுட்டு வாங்க.  தண்ணியிழுத்து விடறேன்.  

            அவன் குளிக்கும்போது சொட்டச் சொட்ட நனைந்து விடுகிற சட்டைத் துணிகளை  அவிழ்த்து விடச் சொல்கிறது ஒரு குரல் ஜன்னலிருந்து . பிழிய வேண்டாமென்று கட்டளை இடுகிறது.  வேறொரு சந்திப்பாக இருந்தால் அவனுக்கு இந்தக் குரல் திகைப்பைக் கொடுத்திருக்கும்.  அறைக் கதவைப் பூட்டிவிட்டு அவனை வெளியே அழைத்துப் போகிறான் கோபால்.

            அவன் மனைவி கமலி சின்னஞ்சிறு பெண்.  எப்படி இந்தத் துக்கத்தைத் தாங்குவாள் என்று கவலைப் படுகிறான்.  

            கிரிபத் ரோடு முழுவதும் அழுதுகொண்டே வருகிறான் சங்கர்.  அவனை கோபால் சமாதானப் படுத்துகிறான்.  அவனை கோபால் உஸ்மான் ரோடில் உள்ள ஒரு ஓட்டலுக்கு அழைத்துப் போகிறான். கோரமான பசி.  எல்லாவற்றையும் வாங்கிச் சாப்பிடுகிறான் சங்கர்.

            சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தவுடன் சங்கரிடம் ஒன்று சொல்கிறான் கோபால் அவனுடைய அம்மா கிணற்றடியில் சறுக்கி விழுந்துவிட்டதால் அவசரமாக ஊருக்குப் போக வேண்டுமென்கிறான் கோபால்.

            கோபால் எவ்வளவு நல்ல மனிதன் இதைச் சொல்ல எவ்வளவு தயங்குகிறான் என்று நினைக்கிறான்.  அவன் மீது அவனுக்கு அன்பு பெறுகிறது.

            அவனைத் தனியே சென்று விட்டு கோபால் சென்று விடுகிறான்.  சங்கர் உடனே அறைக்குச் செல்ல விரும்பவில்லை.  அவன் குழம்பிப் போயிருக்கிறான்.

            ஒன்றும் புரியாமல் கோபதி நாராயணசாமி தெருவில் நடக்கிறான்.  அப்போது யாரோ கூப்பிடுவது கேட்கிறது.  வீட்டுக்காரர்.  அவர் துக்கம் விசாரிக்கிறார்.  என்ன சார் இது, வைசூரியில் யாராவது இறந்து போவார்களா?  பதமா அப்படியே இடிஞ்சு போயிட்டா.  எனக்கு ஒண்ணும் சொல்லத் தோன்றவில்லை என்றார்.

           சங்கர் அவர் பேச்சைக் கேட்டதும் அழுகை பீரிட்டுக் கொண்டு வந்தது. வீட்டுக்காரர் சாப்பிடக் கூப்பிடுகிறார்.  

          சங்கர் முதலில் மறுத்து விடுகிறான்.  வீட்டுக்காரர் ரொம்பவும் தொந்தரவு செய்தவுடன் சரி என்கிறான்.  

          “சார் இப்ப எங்கே போறீங்க?”

          இப்படியே போயிட்டு வருகிறேன் என்கிறான் சங்கர்.

          ஜாக்கிரதையாகப் போகும்படி எச்சரிக்கிறார் வீட்டுக்காரர்.

          பாண்டிபஜார் பக்கம் போக வேண்டாம்.  கூட்டம் அதிகம் என்று எச்சரிக்கிறார்.  

          இந்த இடத்தில் கதாசிரியர் ஒன்றை வெளிப்படுத்துகிறார்.

          மனிதருக்கு எவ்வளவு கவலை.  சோகம் அபூர்வமான ஒரு அனுபவம்.  சோகப்படுகிறவன் மற்ற மனிதர்கள் அனைவரினும் உயர்ந்து விடுகிறான்.  அதன் காலடியில் மற்ற உணர்ச்சிகளும் ரணங்களும் விழுந்து அடிமைப்பட்டு விடுகின்றன.

          இந்த இடத்தில் ஒரு காட்சியை வெளிப்படுத்துகிறார்.  குழந்தை இருக்கும்போது அவன் ஊருக்குப் போகிறான்.  அவன் மனைவி தனியாக இருக்கிறாள்.

          “நீ பூனைக்குட்டி மாதிரி இருக்கே.  அதுக்குள்ளே ஒரு குழந்தை உனக்கு,” என்கிறான்.

          உடனே அவள், ஏன் என்னைப் பார்த்தால் அம்மா மாதிரி இல்லையா? நீங்களும்தான் துளியூண்டு பள்ளிக்கூடத்துப் பையன் மாதிரி இருக்கேள் என்கிறாள்.

          தேனாம்பேட்டை வரை வந்து விடுகிறான் சங்கர்.  அவனுடன் ஓட்டலில் சாப்பிடுகிறவர்,  “என்னசார் எண்ணெய் தேய்ச்சிக் குளிக்சிங்களா?” என்று விசாரிக்கிறார்.  

          தேனாம்பேட்டை வந்ததை உணர்ந்தவுடன் வீட்டிற்குத் திரும்புகிறான் சங்கர்.

          அவன் அப்பா குழந்தை இறந்ததைக் குறித்து பெரிதும் கவலைப்படுவார் என்று நினைக்கிறான் சங்கர்.  சித்தப்பா பதறிப் போயிருப்பார்.

          இருட்டி வெகு நேரமாகிவிட்டது. வாசல் கேட் உள்ளுக்குள் தாளிட்டிருந்தது.

          வீட்டுக்காரரின் மனைவி வந்து கதவைத் திறக்கிறாள்.  வீட்டுக்காரர் டூட்டிக்கு மீனம்பாக்கம் போயிருப்பதாகச் சொல்கிறாள். 

கோபால் கொடுத்த சாவியைக் கொடுக்கிறாள்.

          ஊருக்குப் போக முடியாத நிலையை எண்ணி ஒரு கடிதம் எழுதுகிறான். கடவுளாகப் பார்த்துக் கொடுத்ததை அவரே எடுத்துக் கொண்டு விட்டார் என்று அவனுடைய சித்தப்பாவிற்குக் கடிதம் எழுதுகிறான்.

          கடிதத்தைத் திரும்பத் திரும்பப் படிக்கிறான்.  பிறகு லைட்டை அணைத்துவிட்டு மீண்டும் படுக்கை.

          “சாப்பிட வரவில்லையா?” என்று பத்மா வந்து கேட்கிறாள்.  அவன் திகைக்கிறான்.  

          “யாரு நீஙகளா?” என்று கேட்கிறான்.

          “மணி பன்னிரண்டு ஆகப் போகிறது.  சாப்பிட வரவில்லையா?” என்று கேட்கிறாள்.

          பசியில்லை என்கிறான் சங்கர்

          “எனக்காகக் கொஞ்சம் சாப்பிடுங்களேன்.  எனக்கு மட்டும் வருத்தமில்லையா?” என்கிறாள் பத்மா.

          அவள் விசும்பி விசும்பி அழுகிறாள்.

          அவனும் அழுகிறான்.  அப்படியே படுக்கையில் சாய்ந்து விடுகிறான்.

          பத்மாவிற்கும் அப்படிப்பட்ட ஒரு அனுபவம் இருக்கிறது.  அவளுக்கும் ஒரு குழந்தை பிறந்து வைசூரி கண்டு இறந்து விட்டதாகக் கூறுகிறாள். அதனாலதான் அவளுக்கு இருப்புக் கொள்ளவில்லை என்றும்.  அவனைப் பார்த்து ஆறுதல் படுத்த வேண்டுமென்று நினைக்கிறாள்.

          அவள் அருகே உட்கார்ந்தாள்.  அவள் புடவைத் தலைப்பால் அவன் கண்களைத் துடைத்தாள்.  தலையைக் கோதி விட்டாள்.

          இந்தக் காட்சியின் இறுதியில் கதாசிரியர் இப்படி வர்ணிக்கிறார்.  அவன் கைகளுக்குள் அவள் உடல் துவண்டு விழுந்தது. பிரிக்க முடியாத அழைப்புப் போலிருந்தது  மனத்தின் சூன்யம் சூடு நிரம்பி பால் பாத்திரம் போலப் பொங்கி வழிந்தது.

          திரும்பவும் பதமா சாப்பிட கூப்பிடுகிறாள்.  தனக்கும் பசிக்கிறது என்று சொல்கிறாள்.  “நீ சாப்பிடவில்லையா?  என்று கேட்கிறான். 

          இல்லை உங்களுக்காகக் காத்துக்கொண்டிருந்தேன் என்கிறாள் பத்மா.

          அப்பவே சொல்லக் கூடாதா என்று அவன் எழுந்து கொள்கிறாள். 

          தலையை முடித்துக்கொண்டு எழுந்தாள் அவள். அவனுக்கும் வயிறு பசித்தது. 

          துக்க உணர்வு இரண்டு பேர்களையும் நெருங்கிப் பழக வைக்கிறது.  திருமணமான பெண் இன்னொரு திருமணஆன ஆணுடன் உடல் ரீதியாக தொடர்பு கொள்ளுவதை மிகைப்படுத்தாமல் எழுதப்பட்டிருக்கும் கதை இது.   சாதாரண இயல்பான நிகழ்ச்சியாக இது ஏற்படுவது போல் தோன்றுகிறது. 

               1953 ஆம் ஆண்டு இந்தக் கதையை தி.ஜானகிராமன் எழுதியிருக்கிறார்.   இது உண்மையாக அவர் நண்பருக்கு ஏற்பட்ட சம்பவம் என்று விவரிக்கிறார் ஆசிரியர் குறிப்பு என்ற பெயரில்.  ஆசிரியர் குறிப்பு கதை இறுதியில் சேர்க்கப்பட்டிருக்கிறது.  அது அவசியமாக என்று கேட்கத் தோன்றுகிறது.  இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது ஜானகிராமன் ஆண் பெண் உறவைக் கொஞ்சம் கூட ஆபாசமாக விவரிக்கவில்லை.  காமம் இயல்பாக ஏற்படுவதுபோல் கதையைக் கொண்டு போகிறார்.

          தொகுக்கப்படாத கதைகள் என்ற பெயரில் தி.ஜானகிராமன் கதைகளைக் கண்டறிந்து  கச்சேரி என்ற பெயரில் காலச்சுவடு ஜனவரி 2020ல் ஒரு புத்தகம் கொண்டு வந்துள்ளது. 

Series Navigationஒரு மாற்றத்தின் அறிகுறிஓவியக்கண்காட்சி
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *