அழகியசிங்கர்
இங்கு இப்போது விக்ரமாதித்யன் என்ற கவிஞரின் கவிதையை எடுத்துக்கொண்டு பேசலாமென்று நினைக்கிறேன். ஒரு கவிஞருடைய ஒரு கவிதையை எடுத்துக்கொண்டு அதன் மேன்மையைப் பேசுவதுதான் இக் கட்டுரையின் நோக்கம்.
ஒரு காலத்தில் விக்ரமாதித்யனும் பிரம்மராஜனும் தமிழில் கவிதைகள் எழுதிக் குவித்தவர்கள். இதில் விக்ரமாதித்யன் கவிதைகள் எல்லோருக்கும் புரியும். இலக்கியத்தரமான ஜனரஞ்சகமான கவிதைகள். ஆனால் பிரம்மராஜன் கவிதைகளை யாரும் நெருங்க முடியாது. புரியவும் புரியாது. ஆனால் விக்ரமாதித்யன் அப்படி இல்லை.
அவர் தன் வாழ்க்கை சம்பவங்களை தன் மனம் போனபடி எழுதிக்கொண்டு போவார். ஒளிவு மறைவு இருக்காது. இன்னதுதான் சொல்ல வேண்டும், இதெல்லாம் சொல்லக் கூடாது என்பதெல்லாம் தெரியாது.
எல்லாப் பத்திரிகைகளிலும் அவர் கவிதைகள் வந்திருக்கின்றன. அதற்குக் காரணம் அவருடைய கவிதைகளில் காணப்படும் எளிமை. யாரும் படித்தவுடன் புரிந்துகொள்ள முடியும்.
நான் இப்போது பேசப்போவது ஆழித்தேர் என்ற தொகுப்பில் உள்ள கவிதையை. விக்ரமாதித்யன் கவிதைகள் வெவ்வேறு கட்டத்தில் பல கவிதைத் தொகுதிகள் வெளிவந்திருக்கின்றன. அவருடைய எழுதுகிற வேகத்திற்கு அவர் கவிதைத் தொகுதிகள் வந்திருக்கின்றன.
அவர் கவிதைகள் படிக்க எளிமையாக இருந்தாலும் இலக்கியத் தரமானவை.
நக்கீரன் பதிப்பகம் மூலமாக ஆழித்தேர் என்ற கவிதைத் தொகுதி 2014ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. அத் தொகுப்பில் உள்ள எதுவானாலும் என்ற கவிதையைப் பார்ப்போம்.
எதுவானாலும்
குழந்தைப் பருவம்
கழிந்ததே தெரியாது
சிறுவனாயிருந்த காலம்
சீக்கிரமே கடந்துவிட்டது
பதின்பருவம் வேகவேகமாகவே
போயிற்று
வாலிபகாலம்
வந்துபோனதே தெரியவில்லை
நடுத்தரவயசும்
நிற்காமல்நிலைக்காமல் சென்றுவிட்டது
இப்பொழுது
முதுமையின் தலைவாசல்
காலத்தின் அருமை
தெரிகிறது
எனில் உடம்பு
ஓய்வுகொள்ளவே விழைகிறது
மனசின் வேகத்துக்கு
ஈடுகொடுக்கமுடியாமல் தத்தளிக்கிறது
ஆடிய ஆட்டத்துக்கு
அதிகம்தான் வாழ்வதே
ஆனாலும் எழுதவேண்டியவை
இன்னமும் இருக்கின்றன
குடும்பப்பொறுப்புகள்/கடமைகள்
குறைந்தபாடில்லை
இன்னும் செல்லவேண்டிய
பாடல்பெற்ற ஸ்தலங்கள் நிறையவே
சிறிது காலம் இருக்கமுடிந்தால்
சந்தோஷம்
நிரம்ப காலம் இருந்தால்
பேரும் புகழோடும் போய்ச் சேரலாம்
எதுவானாலும்
காலசம்ஹாரமூர்த்தி மனசுப்படியே
இக்கவிதை புரிவதற்கு ஒன்றுமே இல்லை. சற்று உற்றுப் பார்த்தால் கவிஞரின் வெகுளியான மனம் வெளிப்படுகிறது. நகைச்சுவை உணர்வுடன் எழுதப்பட்ட கவிதை. இவர் கவிதையின் முக்கியமான அம்சம் வெளிப்படையான மனம். இதை நகுலனிடமும் பார்க்க முடியும்.
ஒவ்வொரு பருவத்தையும் இக்கவிதையில் விளக்குகிறார் யாருக்குமே குழந்தைப் பருவம் எப்படிப் போனது என்பது தெரியாது. ஆனால் சிறுவனாயிருந்த காலம் பிடித்து வைத்துக்கொள்ளாமல் சீக்கிரமாகவே கழிந்து விடுகிறது.
வாலிப காலமோ வந்ததும் போனதும் தெரியவில்லை என்கிறார். அடுத்தது நடுத்தர வயதும் நிற்காமல் நிலைக்காமல் சென்று விட்டது. முதுமையின் தலைவாசலில் காலத்தின் அருமை புரிகிறது. மனசின் வேகத்திற்கு ஈடு கொடுக்காமல் உடம்பு தத்தளிக்கிறது.
விக்கிரமாதித்யன் தன்னை முன்னிலைப் படுத்தி கவிதை எழுதுவார். கவிதை முழுவதும் அவர் தான். தன்னையே தன் நிலையையே ஒரு பாடுபொருளாக எடுத்துக் கொண்டு விடுவார்.
ஆடிய ஆட்டத்துக்கு அதிகம்தான் வாழ்வதே என்கிறபோது அவர் சொல்கிற நிலையை எண்ணி சிரிக்காமலிருக்க முடியவில்லை.
அவருக்கு இதுவரை அவர் எழுதியது திருப்தியைத் தரவில்லை. இன்னும் அதிகமாக எழுத வேண்டி உள்ளதாகக் கூறுகிறார். ஆனால் சிறிது காலமாவது உயிரோடு இருக்க வேண்டுமே.
நிரம்பக் காலம் உயிரோடு இருந்தால் பேரும்புகழோடும் போய்ச் சேரலாம் என்கிறார். இதுவரை கிடைக்காத பேரும் புகழும் இன்னும் சில காலம் இருந்தால் கிடைத்து விடுமா என்பது கேள்விக்குறி.
இப்படி தன்னைப் பற்றிப் பறை சாற்றுகிற தன் விளக்கக் கவிதையாக எழுதி உள்ளார் விக்கிரமாதித்யன்.
கடைசியில் முடிக்கும்போது எதுவானாலும் காலசம்ஹாரமூர்த்தியின் மனசுப்படியே என்கிறார்.
தான் அதிக காலம் வாழ வேண்டுமென்றும் அதற்கு காலசம்ஹாரமூர்த்தியின் கருணை வேண்டுமென்றும் அதிக காலம் வாழ்ந்தால் பேரும் புகழும் கிடைக்குமென்று நினைத்துக் கொள்வது ஒரு வேடிக்கையான மனநிலை.
இப்படித்தான் இத்தொகுப்பில் பெரும்பாலான கவிதைகளை எழுதியிருக்கிறார். விக்ரமாதித்யன் கவிதைகளைப் படிக்கும்போது கவிதையையும் அவரையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்க முடியவில்லை என்றே தோன்றுகிறது.
இந்த இட்லிகள்
இந்த இட்லிகளை இரவு முடிவதற்குள்
இவன் சாப்பிட்டுவிடலாம்
சாப்பிடாமலும்
இருக்கலாம்
தேடி வரும் சிநேகிதனையே
சாப்பிடச் சொல்லிவிடலாம்
சாப்பிடாமல்போனாலோ யாருமே வரவில்லையென்றாலோ காலையில்
கழிவிரக்கத்துடன்
காகங்களுக்கோ நாய்களுக்கோ போடலாம் குப்பைத்தொட்டியில்
வீசியெறிய நேரலாம்
என்ன செய்தாலும்
இட்லிகளுக்கு ஒன்றுமில்லை
இட்லிகளைப்பற்றி யோசித்தபடியே
எப்படியோ உறங்கிப்போனவன்
சிறுநீர் முட்ட எழுந்த சமயம்
வயிறு பசிக்கிறமாதிரி இருக்கவே
பொட்டலத்தைப் பிரிக்கையில்
இட்லிகள் சிரிப்பதாகவே பட்டன ஏனோ
எந்தச் சிறிய அனுபவத்தையும் கவிதையாக்காமல் இருக்க மாட்டார் விக்ரமாதித்யன். எளிமையான வரிகள் கொண்ட இக் கவிதைக்கு தனி விளக்கம் தேவையில்லை. இட்லிகளை இரவுக்குள் சாப்பிட வேண்டுமென்று நினைக்கிறார். ஆனால் அந்தத் தருணத்தில் சாப்பிடப் பிடிக்கவில்லை.
இட்லிகளை என்ன செய்வது என்று யோசிப்பதுதான் இந்தக் கவிதை.
இட்லியை குறித்து யோசித்தபடியே தூங்கியும் விடுகிறார். தன் சிறிய அனுபவத்தைக் கூட விடாமல் கவிதை ஆக்கிவிடுகிற மந்திரக்காரர்தான் விக்ரமாதித்யன்.
இப்படியாகத் தன்னைப் பற்றியே தன்னைச் சுற்றும் உலகம் பற்றியே சுலபமாகக் கவிதை எழுதும் விக்ரமாதித்யன், பல ஆண்டுகளாக இதைச் செய்து கொண்டு வருகிறார்.
05.11.2020
- மிஸ்டர் மாதவன்
- வரிக்குதிரையான புத்தகம்
- கவிதையும் ரசனையும் – 4
- குருகுலத்தில் பூத்த இலக்கிய மலர் ஒன்று – பத்மா சோமகாந்தன்
- நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்
- தக்கயாகப்பரணி [தொடர்ச்சி] 191–200
- கலந்த கேண்மையும் கடவுள் நம்பிக்கையும்
- திருவாலி, வயலாளி மணவாளன்
- அவசியம்
- ஒதுக்கீடு
- மதுராந்தகன் கவிதைகள்
- நல்ல தமிழும் இல்லை ஆங்கிலமும் இல்லை
- சாம் என்ற சாமிநாதன் – ஐம்பதாண்டு கால நட்புறவு