நல்ல தமிழும் இல்லை ஆங்கிலமும் இல்லை

This entry is part 12 of 13 in the series 8 நவம்பர் 2020

தமிழ் மாநிலத்தில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு எத்தனை முயற்சிகள் எடுத்துக்கொண்டிருக்கிறோம். அதன் சாதனை என்ன என்று கணக்குப்போட்டுப்பார்த்து இருக்கிறோமா ? நமது.  அரசுத்துறை தமிழ் வளர்ச்சியில் சாதித்தது என்ன என்று கணக்குக்கொடுக்கமுடியுமா ?

அரசு நூலத்துறைக்கு புது ப்புத்தகங்கள் வாங்குவதை ஆராய்ந்து பார்த்தது உண்டா என்ன ? சம்பந்தப்பட்டவர்கள் தம் மனசாட்சியைத் தொட்டு  நூலகத்திற்குப்புத்தகங்கள் வாங்குவதில் எத்தனை நேர்மையாக அவர்கள் நடந்துகொண்டார்கள் என்பதை வெளியில் சொல்ல வாய்க்குமா ? அப்படி இப்படி சில நூல்கள்  அரசு நூலகத்துக்குத் தேர்வானால்  அந்தந்தந்த மாவட்டங்களிலிருந்து  நியாயமாக ச்சேரவெண்டிய காசு பெறுவது ஒன்றும் லேசான சமாச்சாரமுமில்லையே  நூலக ஆணை கிடைக்கப்பெற அப்படி இப்படி என்றால் அது என்ன என்ன என்பது எல்லோருக்கும் தெரிந்துதான் இருக்கிறது.

விவசாயி என்று  பச்சைப்பொய் பொய்சொல்லி  மத்திய அரசு வழங்கிய ஆண்டுக்கு ஆறாயிரம் இனாம் தொகையை கோடி கோடியாய் கொள்ளை அடித்த பூதாகாரமான ஒரு சமாச்சாரம்  வேறு  தமிழகத்தை இப்போது கலக்கிக்கொண்டிருக்கிறது.

நூலகர் என அரசு நூலகங்களில் பணி செய்பவர்கள் வாசிப்புத்தரம் எப்படி,? வருகின்ற  வாசகர்கள்  படித்து நிறைவடைகிறார்களா? எந்த நூலகத்திலாவது தரையிலிருந்து  மேலாக மூன்று தட்டுக்களில்  அடுக்கி உள்ள நூல்களை யாராவது தொட்டுப்பார்க்க வசதிப்படுமா ? தரையில் உட்கார்ந்துகொண்டா வருகின்ற வாசகர்கள் புத்தகங்களைத்தேடுவது  அப்[படித்தேடுகையில் எழும் புழுதியை  வாசகர்களால் எதிர்கொள்ளத்தான் முடியுமா?

 சென்னை  அண்ணா பெரு நூலகப் பராமரிப்பு எப்படியெல்லாம் சென்னை உயர் நீதிமன்றம் வரை சென்று சென்று  நொண்டியும் முண்டியும் அடித்தது. நுங்கம்பாக்கம் வள்ளுவர்  திருக்கோட்டமும் பூம்புகார் கலைக் கட்டமைப்பும்  எத்தனை நிராகரிப்பு மனோபாவத்தோடு அணுகப்பட்டது  இவை நாம் அறிய மாட்டோ,மா ?

அரசு விருதுகள்  கொடுக்கப்பட   தொடங்கும் அறிவிப்பிலிருந்து  விருது வழங்கும் அந்த விழா நிகழ்வு வரை அனுசரிக்கப்படும் நடைமுறைகள் நடு நிலையாளர்க்கு எப்போதேனும் மன நிறைவு தந்ததுண்டா

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த நிலமை என்ன ? தமிழ் ஆசிரியர்கள்  சமுதாயத்தில் எத்தனைக்கம்பீரமான மனிதர்களாக இருந்தார்கள். சிதம்பரம் ராமசாமி செட்டியார் உயர் நிலைப்பள்ளியின் புலவர் தங்க.முருகேசனார்  போன்ற ஒரு ஆளுமையை இனி எங்கே காண்பது ? கட்டுக்குடுமி கடுக்கன் மூலகச்சம் கட்டிக்கொண்டு விஷ்ணுபுரம் ஜார்ஜ் பள்ளியின் தமிழ் ஆகிருதியாயிருந்த புலவர் கந்தசாமி சிவாச்சாரியாருக்கு இணையாக யாரேனும் இனிப்பார்க்கத்தான் முடியுமா ? தமிழாசான்  திருக்குறள் ராஜாராம் திருப்பதிரிப்புலியூர் நகர் வாழ்ந்து குறளுக்கு ஆழ்ந்த விளக்கம் தந்ததை தமிழன்பர்கள் மறக்க இயலுமா ? அவர்களை ஒத்த  தமிழ்ஆசிரியர்களை எங்கேயாவது இப்போது கண்ணால் பார்க்கமுடிகிறதா ? ஏன் இல்லை.  இதற்கெல்லாம் காரணம்  எது என்று/ நாம் அறியமாட்டோமா ?

உதாரணத்திற்கு  மேலும் ஒரு விஷயம் சொல்லவேண்டும்.  எண்ணிக்கையில் ஆயிரத்துக்கு மேற்பட்ட வாழும்  தமிழ் படைப்பாளிகளுக்கு மலாயா ப்பல்கலைக்கழகத்தோடு இணைந்து அண்ணாமலைப்பல்கலைக்கழகம் அவர்தம் வாழ்க்கை  வரலாறு மற்றும் சாதனைக்குறிப்பு நூல் வெளியிட்டதே அந்த அழகைத்தான் பார்த்தோமே. எத்தனை பொறுப்பின்மை. எத்தனை  அலட்சியம் .எவ்வளவு பொருளும் காலமும் வியர்த்தம்.

கேரள  மாநிலத்திலிருந்து  கிடைத்த  பேர் சொல்லும் இந்திய ஆங்கிலக்கவிஞர்கள் ஏராளம் உண்டு. கர்நாடகத்திலிருந்து எத்தனையோ ஆங்கில ப்படைப்பாளிகள் வெளிப்பட்டுப் புகழ்பெற்று இருக்கிறார்கள். மும்பை கொல்கத்தா டில்லி ஹைதராபாத் என்னும் நகரங்கள்  இந்திய ஆங்கிலப்படைப்பபாளிகளை அனேகம் தந்திருக்கின்றன.

ரவீந்திரர் அம்பேத்கர் சரோஜினி நாயுடு ராஜா ராவ்  ஆர் கே நாரயனான் அரவிந்த் அடிகா நிசிம்எசிகல் என்று புகழ் பெற்ற  ஆங்கில எழுத்தாளர்ள் வரிசையில் தமிழ் நாட்டிலிருந்து ஏன்  ஒரு முகத்தையும் பார்க்கமுடிவதில்லை.

தமிழ்ச் செம்மொழி என்று அறிவிக்க மத்திய அரசுக்கு எழுபதாண்டுகள் ஆயிற்று.பாராளுமன்றத்தில் காங்கிரசின் உறுப்பினர்  எண்ணிக்கைச்சரியவும் காரியார்த்தமான தலைவர் கலைஞர் தமிழகத்தில் ஆட்சியில் இருக்கவும் அது சாத்தியப்பட்டது

 கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் செம்மொழிகளே என த்தொடர்ந்து அறிவிக்கப்பட்டன. அவர்களுக்கே அது ஆச்சரியமாக இருந்திருக்கும். தமிழர்கள் நாங்கள் எழுபதாண்டுகள் முட்டிக்கொண்ட ஒன்று. சில மணி நேரங்களீலேயே அடுத்தடுத்த  மா நிலத்தவருக்கு  அந்தச்செம்மொழி அந்தஸ்து எப்படிச்சாத்தியம் என்று நியாயம் கேட்டு ஒருவர் சென்னை உயர் நீதி மன்றம் போனார்.  நீதிமன்றமோ ’ ‘அதனால் உனக்கென்னப்பா கஷ்டம் வந்தது நீ  பொறுப்பாக உன் வேலையைப்பார்’ என்கிறபடிக்கு ஒரு மாதிரியாய்த் தீர்ப்பை த்தந்தது. அத்தோடு போயிற்று செம்மொழிக்கதை.

தமிழில் நாம் தடுமாறுகிறோம். ஆங்கிலம் கலவா வாழ்க்கை தமிழகத்தில் இல்லை . ஆண்டிற்கு  ஒரே ஒரு நாள் ஆங்கிலச்சொல் என்று ஒன்றுகூடக் கலவாமல் நம்மால் வாழத்தான்முடியுமா ?

 அது கிடக்கட்டும் காலம் காலமாய்ப்பிடித்துத்தொங்கிய  அந்த ஆங்கிலத்தில்தான்  உலகறிய என்ன கிழித்தோம் என்றால் அதுவும் ஒன்றுமில்லை  இதுவே தமிழ் நிலத்தின் இன்றைய யதார்த்தம். யார்  இதையெல்லாம் பேசினால்  காதுகொடுத்துக்கேட்கப்போகிறார்கள்.

————————————————

Series Navigationமதுராந்தகன் கவிதைகள்சாம் என்ற சாமிநாதன் – ஐம்பதாண்டு கால நட்புறவு
author

எஸ்ஸார்சி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *