தம்பியுடையான் படைக்கு அஞ்சான்
என்ற பழமொழி இவனாலேயே ஏற்பட்டது. இணை பிரியாமல் இருப்பவர்களை இராம லக்ஷ்மணன் போல் என்று சொல்வார்கள்.
இந்தத் தம்பி இல்லாவிட்டால் அந்த ராமனே இல்லை என்று கூடச் சொல்லலாம்! இராமகைங்கர்யத்தில் தன்னையே கரைததுக் கொண்ட அன்புத் தம்பி இலக்குவன்! 14 வருடங்கள் வனவாசத்தில் தூக்கத்தைத் துறந்து காவல் காத்தவன் இவன்! அண்ணனுடன் வனவாசம் செய்ய உத்தரவு தரும்படி அன்னை சுமித்திரையிடம் வேண்டுகிறான் இலக்குவன். அன்னை சொல்கிறாள்,
மகனே!இவன் பின் செல்லும் தம்பி
என்னும் படி அன்று, அடியாரினில் ஏவல் செய்தி
மன்னும் மா நகர்க்கு இவன் வந்திடின் வா அது அன்றேல்
முன்னம் முடி
(அயோத்யாகாண்டம்) (நகர்நீங்கு படலம் 147)
இந்த வார்த்தைகளை சிரமேற் கொண்டு 14 ஆண்டுகளையும் கழிக்கிறான். சமயம் வந்த போது அன்னை சொல்படி தன்னுயி ரையும் கொடுக்கத் தயங்கவில்லை இந்தத் தம்பி! இவன் தோள் வலியைப் பார்ப்போம்
விசுவாமித்திரமுனிவர் தன் யாகம் காக்க இராமனைத் தன்னுடன் அனுப்பும்படி தயரதனிடம் கேட் கிறார். முதலில் தயங்கினாலும் வசிட்ட முனிவன் அறிவுரைப்படி சம்மதிக்கிறான். இராமனைப் பிரியாத இலக்குவனும் இராம னுடன் யாகம் காக்கச் செல்கிறான். பின்னால் 14 ஆண்டுகள் வனவாசம் செல்ல ஒத்திகையோ? முனிவர் யாகம் செய்கிறார்
எண்ணுதற்கு, ஆக்க, அரிது இரண்டு மூன்று நாள்
விண்ணவர்க்கு ஆக்கிய முனிவன் வேள்வியை,
மண்ணினைக் காக்கின்ற மன்னன் மைந்தர்கள்
கண்ணினைக் காக்கின்ற இமையின் காத்தனர்
(பால காண்டம்) (வேள்விப் படலம் 40)
இராம இலக்குவர்கள், கண்ணை இமை காப்பதுபோல ஆறு நாட்களும் யாகத்தைக் காத்தனர்.
இரு தோள் எனச் சோம்பி ஓங்கும் கல்
நிச்சயிக்கப் பட்ட இராம னுடைய முடிசூட்டு விழா தடைபட்டதை அறிந்ததும் இலக்குவன் ஆவேசத் தோடு பொங்கி எழுகிறான். இராமன், அவனுக்குப் பல் வேறு நியாயங்களை எடுத்துக் காட்டி சமாதானப் படுத்துகிறான். இது விதியின் பிழை என்பதையும் உணர்த்துகிறான். ஒருவாறு சமா தானம் அடைந்தது போல் தோன்றினாலும் இலக்குவன் நீறுபூத்த நெருப்பாகவே விளங்குகிறான்.
செல்லும் சொல்வல்லான் எதிர்,
தம்பியும், ‘தெவ்வர் சொல்லும்
சொல்லும் சுமந்தேன்; இரு
தோள் எனச் சோம்பி ஓங்கும்
கல்லும் சுமந்தேன்; என்றான்.
அயோத்தியாகாண்டம்) (நகர் நீங்கு படலம் 135)
தூண் தகு திரள் புயம்
இராமனுடன் தானும் வனம் வர அனுமதி தரவேண்டும் என்று மன்றாடு
இலக்குவனை எவ்வளவோ சமாதானம் செய்கிறான் இராமன்.ஆனால் இலக்குவன் கேட்பதாயில்லை.
தூண் தகு திரள் புயம் துண்ணெனா,
மீண்டது ஓர் உயிர் இடை விம்ம விம்முவான்,
ஈண்டு உனக்கு அடியனேன் பிழைத்தது யாது? என்றான்
[நகர் நீங்கு படலம் 151] 1756
வரைத் தடந் தோள்
. தானும் உடன் வர அனுமதி தர வேண்டும் என்கிறான். இலக்குவன் கேள்வியிலிருந்த நியாயத்தை புரிந்து கொண்டான் இராமன்.
வரைத்தடந் தோளினான் வதனம் நோக்கினான்;
(அயோத்தியா காண்டம்) (நகர் நீங்கு படலம்
குவவிய தோள்
இலக்குவன் சொல்லையும் செயலையும்
உணர்ந்து, இலக்குவனையும் உடன் வரச் சம்மதிக்கிறான்.வன வாச காலத்தில் தாயின் சொல்லை இம்மியும் பிசகாமல் கடைப் பிடிக்கிறான் இலக்குவன். இருவருக்கும் தனித்தனியே பர்ணசாலை அமைக்க, அவற்றின்அமைப்பையும் நேர்த்தி யையும் கண்டு , ‘இரு
குன்று போலக் குவவிய தோளினாய்!
என்று கற்றனை நீ இது போல்’? என்றான்
(அயோத்தியா காண்டம்) (சித்திரகூடப் படலம் 51)
கேகய நாட்டிலிருந்து திரும்பிய பரதன் அயோத்தியில் நடந்த விஷயங்களைக் கேட்டு அதிர்ச்சி அடை கிறான். இராமனை அழைத்து வந்து முடிசூட்டி மன்னனாக்குவேன் என்று சபதம் செய்து. அயோத்தி மக்கள், தாயர்களுடன் வனம் செல்கிறான்.
உலத்திரளொடும் பொருத தோள்
பரதன் கூட்டத்தோடு வருவதை மலை
மேலிருந்து பார்த்த இலக்குவன், பரதன் படையெடுத்து வருவதாக நினைக்கிறான்.” இலக்குவா நான் சொல்வதைக் கவனமாகக் கேள்,
, யாவரே
தம் குலத்து ஒருவ அரும் தருமம் நீங்கினர்?-
பொங்கு உலத் திரளொடும் பொருத தோளினாய்!
(அயோத்தியா காண்டம்) (திருவடி சூட்டு படலம் 43) பரதன்மேல் தவறான எண்ணம் கொண்ட இலக்குவனுக்குப் பரதனின் தூய உள்ளத்தைப் புரிய வைக்கிறான்
வனத்தில் இராமன்மேல்மோகம் கொண்ட சூர்ப்பணகை தன் விருப்பத்தைத் தெரிவிக்கிறாள். ஆனால் அவன் மறுக்கவே அவள் சீதையைக் கவர முயற்சி செய்ய, இலக்குவன் அவள் கூந்தலைப் பற்றி.
மூக்கும், காதும், வெம் முரண்
முலைக் கண்களும், முறையால்
போக்கி, விட்டான்.
(ஆரணிய காண்டம்) (சூர்ப்பணகைப் படலம் 94]
தோள் பார்த்தல்
பங்கப்பட்ட சூர்ப்பணகை
மூக்கரிந்த
நரன் இருந்து தோள்பார்க்க, நான் கிடந்து புலம்புவதோ?
(ஆரணிய காண்டம்) (சூர்ப்பணகைப் படலம் 109)
கயிலை மலையையேயெடுத்த இராவணனும் கரனும் இருந்தும் தனக்கு இந்த அவமானம் வரலாமா? என்று பரி தவிக்கிறாள். நேராகக் கரனிடம் சென்று முறை யிடுகிறாள். கரன் தன் படைகளோடு வந்து போர்செய்கிறான்.
திரள் தோள் கரனும் படைகளும் அழிந்ததைக் கண்ட சூர்ப்பணகை நேராக இலங்கை சென்று. இராவணனி டம் முறையிட.,உன்னை இக் கோலம் செய்தவர்கள் யார் என்று கேட்கிறான்.
மன்மதனை ஒப்பர் மணிமேனி; வடமேருத்
தன் எழில் அழிப்பர், திரள் தோளின் வலி தன்னால்;
என் அதனை இப்பொழுது இசைப்பது?
(ஆரணிய காண்டம்) (சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம் 52)
இராம இலக்குவர்களின் அழகு வலிமை இரண்டையும் பாராட்டுகிறாள். இதன் பிறகு சீதையின் அழகைப் பற்றி விரிவாகச் சொல்லி சீதையை அபகரித்து வரும் படி தூண்டுகிறாள்.மாரீசனை மாயமானாக ஏவி வஞ்சனையாக சீதையை அபகரித்துச் செல்கிறான் இராவணன்.
சீதையைத் தேடித் தேடிக் களைத்துப் போன இராமனுக்கு நீர் கொண்டுவர இலக்குவன் செல்கிறான்
எழு என மலையென இயைந்த தோள்
சீதையைத் தேடித் தேடிக் களைத்துப் போன இராமனுக்கு நீர் கொண்டுவர இலக்குவன் செல்கிறான்
அவனைக் கண்ட அயோமுகி என்ற அரக்கி அவன்மேல் மோகம் கொண்டு அவனைத் தூக்கிச் செல்ல முயற்சி செய்கிறாள். அவளி டமிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட இலக்குவன் அயோமுகி யின் மூக்கை அறுக்க. அவளுடைய அலறலைக்கேட்ட இராமன் அங்கு செல்கிறான். அண்ணனைக் கண்ட இலக்குவன் ஓடிவந்து அண்ணன் திருவடிகளில் விழ
தழுவினன் பலமுறை; தாரைக் கண்ணின் நீர்
கழுவினன், ஆண்டு அவன் கனகமேனியை;
வழுவினையாம் என மனக்கொடு ஏங்கினேன்;
எழு என, மலை என, இயைந்த தோளினாய்!
(ஆரணிய காண்டம்) (அயோமுகிப் படலம் 85)
என்று ஆரத் தழுவுகிறான்
வில் ஆர் தோள்
பிராட்டியைத் தேடி வரும் பொழுது இராம இலக்குவர்கள். தன் சுய உருவத்தை மறைத்து ஒரு பிரும்மச்சாரி வடிவில் இருக்கும் அனுமனை சந்திக்கிறாஅர்கள். தன்னை சுக்கிரீவனுக்கு ஏவல் செய்பவன் என்று அறிமுகம் செய்து கொள்கிறான். அனுமனுடைய பேச்சையும் அறிவையும் கல்வி அமைதியையும் புரிந்து கொண்ட இராமன்
யார் கொல் இச் சொல்லின் செல்வன்?
வில் ஆர் தோள் இளைய வீர! விரிஞ்சனோ?
விடைவலானோ?
கிஷ்கிந்தா காண்டம்) (அனுமப் படலம் 18)
என்று அனுமனைப் பாராட்டுகிறான்.
இராமன்அறிவுரைப்படிசுக்கிரீவன் வாலியைப் போருக்கு அழைக்க, அந்த அறைகூவலைக் கேட்டு வந்த வாலி குன்றின்மேல் நிற்கிறான். நரசிங்கமோ என்று வியக்கும் வண்ணம் தோன்றிய வாலியைக் கண்ட இலக்குவன். உடன் பிறந்த அண்ணனையே கொல்ல நினைக்கும் சுக்கிரீவனை எவ்வளவு தூரம் நம்பலாம் என்ற சந்தேகத்தை இராமனிடம் கேட்கிறான். ஆனால் இராமனோ, “எல் லோருமே பரதனைப்போல் இருப்பார் களா?”
வில் தாங்கு வெற்பு அன்ன விலங்கு எழில் தோள!
”மெய்மை
உற்றார் சிலர்; அல்லவரே பலர்” என்பது உண்மை.
(கிஷ்கிந்தா காண்டம்) (வாலி வதைப் படலம் 44)
என்று இலக்குவன் வாயை அடைத்து விடுகிறான்.
பனையினும் பெரிய தோள்
வாலிவதம் முடித்து ,சுக்கிரீவனைக் கார்காலம் கழிந்ததும் வரும்படி சொல்லியனுப்புகிறான் இராமன். சொன்னபடி வராததால் கோபத்துடன் இலக்குவனைஅனுப்புகிறான். சீற்றத்தோடு இலக்குவன் வருவதையறிந்த தாரை தன் தோழிகளு டன் இலக்குவனை எதிர்கொள்கிறாள்.
ஒதுங்கிற்று அல்லால்
பார்க்கவும் அஞ்சினான், அப் பனையினும் பெரிய தோளன்
(கிட்கிந்தா காண்டம்) (கிட்கிந்தை படலம் 47) [4315]
மலைபுரை வயிரத் தோளான்
. தன் இனிய சொற்களால் சாதுரிய மாகப்பேசி இலக்குவன் கோபத்தைத் தணிக்கிறாள் தாரை அனுமனும்,எங்கள் மன்னர், வானரப் படைகளுக்குச் சொல்லி அனுப்பியிருக்கிறார்..விரைவில் வானரப்படைகள் வரும் என்று உறுதியளிக்கிறான்.
மாருதி மாற்றம் கேட்ட, மலை புரை
வயிரத்தோளான்
தீர்வினை சென்று நின்ற
சீற்றத்தான் சிந்தனை செய்தான்
[கிட்கிந்தா காண்டம்] கிட்கிந்தைப்படலம் 68] 4336
பின்னர் அரிக்குலத்தவனை நோக்கி
வனை கழல் வயிரத் திண் தோள் மன் இளங்
குமரன் சொல்வான்
[கிட்கிந்தைப் படலம் 69] 4337
மயக்கம் தெளிந்த சுக்கிரீவன்,. இலக்குவனைக் காண வருகிறான். சுக்கிரீவனைக் கண்டதும் சீற்றமடைந்த இலக்குவன் தன் தெளிந்த சிந்தையால் சீற்றத்தை அடக்கிக் கொள்கிறான்.
எழுவினும், மலையினும் எழுந்த தோள்களால்
இருவரும் தழுவிக் கொள்கிறார்கள்.
வில்படி திரள் தோள்
வானரவீரகளின் உதவியோடு கடலைத் தூர்த்து அணைகட்டி, இராம இலக்குவர்கள் இலங்கையை அடைந்து விடுகிறார்கள். இராமன், இலக்குவனுக்கு இலங்கை மாநகரின் வளத்தையும் அழகையும் அமைப்பையும்
வில்படி திரள் தோள் வீர! நோக்குதி—
என்று காட்டுகிறான்
(யுத்த காண்டம்) (இலங்கை காண் படலம் 12)
மல்லல் அம் தோள்
கும்பகருணன் வீழ்ந்தபின் இராவணன் மகனான அதிகாயன் போர் செய்ய வருகிறான். அவனை இலக்கு வன் கொன்ற தால் அதற்குப் பழி தீர்க்க இந்திரஜித் வருகிறான். வருபவன் யார் என்று வீடணனிடம் இலக்குவன் கேட்க
இந்திரன்
ஒல்லையின் உடைந்தனன்,உயிர் கொண்டு உய்ந்துளான்
மல்லல் அம் தோளினாய்!—அமுதின் வன்மையால்
(யுத்தகண்டம்) [நாகபாசப்படலம் 31]
என்று இந்திரசித்தின் வீரத்தைப் பாராட்டுகிறான் வீடணன். மாயப் போரில் வல்லவனான இந்திரஜித் வானில் மறைந்து,
, காகுத்தற்கு இளைய காளை
வட்ட வான் வயிரத் திண் தோள் மலைகளை உளைய வாங்கி
(யுத்த காண்டம்) (நாகபாசப் படலம் 189)
விடுகிறான்
ஆடகத்தோள்
நாகபாசத்தால் அனைவருக் கட்டுண்டு மயங்கிய நிலையில் வானர வீரர்கள் மிகவும் துன்பமடை கிறார்கள்,வீடணனிடம் ”இதற்கு ஏதாவது பரிகாரம் உண்டா?
என்று கேட்கிறார்கள்
ஏந்தல் ஆடகத்தோளை நோக்கி நகை செய்வர்; விழுவர்,அஞ்சார்
]யுத்தகாண்டம்] [நாகபாசப்படலம்194] 8195
தங்கள் கண் எதிரிலேயே இலக்குவனுக்கு இப்படி ஆகிவிட்டதே என்று விதியை இகழ்ந்து சிரிக்கிறார்கள் ஆனால் அவர்கள் அச்ச மடைய வில்லை என்கிறான் கவிஞன்!
வெற்பு அன்ன விசயத் தோள்
நாகபாசத்தால் இலக்குவன் மயங்கிக் கிடக்கும் நிலையைக் கண்ட இராமன் கதறுகிறான்,
இளைய வீரன் வெற்பு அன்ன விசயத் தோளைப்
பூட்டுறு பாசம்தன்னைப் பல் முறை புரிந்து நோக்கி
வீட்டியது என்னின், பின்னை வீவென் என்று எண்ணும்—
(யுத்த காண்டம்) (நாகபாசப் படலம் 242)
இராமனின் துயரத்தைக் கண்ட
கருடாழ்வான் தன் சிறகுகளை விரித்துப் பறந்துவர அவன் காற்றுப் பட்டதும் நாகபாசத்தின் வீரியம் குறைய அனைவரும் மயக்கம் தெளிந்து எழுந்து ஆர வாரம் செய்கிறார்கள்.
மல்கொள் தோள்
நாகபாசம் பயனற்றுப் போனதால் சீற்றம் அடைந்த இந்திரஜித் , இலக்குவனுடன் மிக உக்கிரமாகப் போர் செய்கிறான். ஒரு கட்டத்தில் இலக்குவன் பிரும்மாஸ்திரம்விட எண்ணும் போது, அதனால் மிகவும் தீங்குவிளையும்என்று இராமன் தடுத்து விடுகிறான். ஆனால் இந்திரசித் மறைந்து அந்த அஸ்திரத்தை விடச் செல்கிறான். இந்தக் கபடத்தை
மல்கொள் தோளவர் உணர்ந்திலர்
[யுத்தகாண்டம்] [பிரமாத்திரப்படலம் 85] 8525
வீடணன் உதவியால் நிகும்பலை யாகத்தை அழிக்க இலக்குவன் செல்கிறான் சிவபெருமானின் பாசுபத அஸ்திரத்தை இந்திரஜித் ஏவ அதையும் அநாயாசமாக இலக்குவன் எதிர் கொள்கிறான். இதைக் கண்டு திகைத்து
மொய் வித்தகன் தடந் தோளினும் நுதற் சூட்டினும் மூழ்க.
(யுத்த காண்டம்) (நிகும்பலை யாகப் படலம் 161
ஏவுகிறான்
நிகும்பலை யாகமும் பாழ்பட்டுப் போனதால் மிகுந்த ஆத்திரத்தோடு போர் செய்ய வருகிறான்
இந்திரஜித். அவனை வீழ்த்த வழி சொல்கிறான் வீடணன்.
புகழ் அழியாத பொன் தோள்
அந்தணன் அருளின் ஈந்த
தேர் அழியாத போதும், சிலை கரத்து இருந்த போதும்
போர் அழியான், இவ்வெய்யோன்; புகழ் அழியாத பொன் தோள்
வீர! இது ஆணை’ என்றனன்—-வீடணன்,
(யுத்த காண்டம்) (இந்திரஜித் வதைப் படலம் 36)
எவ்வளவு காலம் தான் போர் செய்வது என்று சீற்றம் அடைந்த இலக்குவன் இந்திரஜித்தின் கையை வில்லோடு தரையில் விழும்படி அறுத்துத் தள்ளுகிறான். பின் பிறைச் சந்திர வடிவம் கொண்ட ஓர் அம்பால் இந்திர ஜித்தின் தலையைக் கொய்து கீழே தள்ளுகிறான். அந்தத் தலையை அண்ணன் இராமன் திருவடி களில் சமர்ப்பிக்கிறான்.
”வீடணன் தந்த வெற்றி ஈது” என்று வீடணனைப் பாராட்டியதோடு அம
தம்பி உடையான் பகை அஞ்சான்” என்னும்
மாற்றம் தந்தனையால்”
(யுத்த காண்டம்) (இந்திரஜித் வதைப் படலம்)
ஆடவர் திலக! என்று அன்போடு இலக்குவனைத் தழுவி அவன் புண்களை ஒற்றி ஆற்றுகிறான் இராமன்.
இராவணவதம் நிகழ்ந்தபின் இராமன் சொன்னபடி சீரோடு சீதையை அழைத்து வருகிறான் வீடணன். இராமனைக் கண்ணாரக் காணப் போகிறோம் என்ற மகிழ்ச்சி யோடு வந்த பிராட்டியை
பெண்மையும், பெருமையும், பிறப்பும், கற்பு எனும்
திண்மையும், ஒழுக்கமும், தெளிவும், சீர்மையும்,
உண்மையும், நீ எனும் ஒருத்தி தோன்றலால்
வண்மை இல் மன்னவன் புகழின் மாய்ந்தவால்
சாதியால், அன்று எனின், தக்கது ஓர் நெறிலறியது
போதியால்’ என்றனன் —-புலவர் புந்தியான்.
இச்சுடு சொற்களைக் கேட்டு உலகமே அதிர்ந்தது
”மாருதி வந்து, எனைக்கண்டு,
யாரினும் மேன்மையான் இசைத்தது இல்லையோ?
சோரும் எந் நிலை? அவன் தூதும் அல்லனோ?
“ஆதலின், புறத்து இனி யாருக்காக என்
தீதறு தவத்தினைக் கூறிக் காட்டுகேன்?
சாதலின் சிறந்தது ஒன்று இல்லை; தக்கதே
என்று தீர்மானித்து
இளையவன் தனை அழைத்து “இடுதி தீ என்று கூறுகிறாள். மாய மானைத் தொடர்ந்து சென்ற இராமனுக்கு ஏதோ ஆபத்து ஏற்பட்டு விட்டது என்று தவறாக எண்ணி, அன்று இலக்குவன் இராமனைத்தேடிப் போகாவிட்டால் காட்டுத்தீயில் விழுந்து மாண்டு போவேன் என்று எந்த இலக்குவனிடம் கூறி னாளோ அந்த இலக்குவனிடமே, இன்று இடுதி தீ என்கிறாள்
, என்ன செய்வதென்று திகைத்துப்போன இலக்குவன், அண்ணனைப் பார்க்க அவன் கண்களால் அனுமதி
அளிக்க
ஏங்கிய பொருமலின் இழி கண்ணீரினன்
வாங்கிய உயிரினன் அனைய மைந்தனும்
ஆங்கு எரி விதி முறை அமைவித்தான்,
வனவாச காலத்தில் சீதைக்காக நேர்த்தியான பர்ணசாலை அமைத்த இலக்குவன் பிராட்டி இன்று தீக்குளிக்க எரி மூட்டு கிறான்! தீயில் புகுந்த பிராட்டியை,”இவ்வன்னை கற்பு எனும்
பொங்கு வெந்தீச் சுடப் பொறுக்கிலேன்” என்று தீக்கடவுள்
பிராட்டியை இராமனிடம் ஒப்படைக்கிறான்
சிவ பெருமான் சொன்னபடி சுவர்க்கலோகத் திலிருந்த தயரதன் இராமனைக்காண யுத்த களம் வருகிறான். இராம சீதைக்கு ஆசி கூறியபின்
பரந்து உயர்ந்ததோள்
புரந்தரன் பெரும் பகைஞனைப் போர் வென்ற உன் தன்
பரந்து உயர்ந்த தோள் ஆற்றலே தேவரும் பலரும்
நிரந்தரம் புகல்கின்றது; நீ இந்த உலகின்
அரந்தை வெம்பகை துடைத்து அறம் நிறுத்தினை—ஐய!
[மீட்சிப் படலம் 126] 10077
என்று இலக்குவனைப் பாராட்டுகிறான் தயரதன்.
”இன்றோடு பதினான்கு ஆண்டுகள் முடிவடைந்தது என்று தேவர்கள் சொல்ல பரதனைக்காண விரைந்து செல்ல, புட்பக விமானம் கொண்டு வருகிறான் வீடணன்
அனைவரும் அயோத்தி அடைந்தபின் ஒரு நல்ல நாளில்
அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடைவாள் ஏந்த
பரதன் வெண்குடை கவிக்க, இருவரும் கவரி பற்ற,
விரை செறி குழலி ஓங்க, வசிட்டனே புனைந்தான் மௌலி.
பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னர் அண்ணனுக்கு மகுடம் சூட்ட வில்லை எனக் கனன்று, அண்ணனுடன் வனவாசம் செய்யப் போன தம்பி இலக்குவன்தாய் சுமித்திரை சொன்னபடி அவனுக்குப் பணிவிடை செய்து மன்னும் மா நகர்க்கு அவன் திரும்பி வந்தபோது அவனுடன் அயோத்தி வந்து முடி சூட்டு விழாவில் கவரி வீசுகிறான்! இராமனுடன் இணை பிரியாமல்
விளங்குகிறான்’
=======================================================================
- சுவேதா
- தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 22 – பாரிமுனை டு பட்ணபாக்கம்
- ஆல்- இன் – வொன் அலமேலு
- ஒரு கதை ஒரு கருத்து – பாரதியாரின் ஸ்வர்ண குமாரி
- வரலாற்றில் வளவனூர்
- இஸுரு சாமர சோமவீர – ‘திருமதி. பெரேரா’ எனும் மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு
- எழுத்தின் உரசல்களும் பழுதின் காரணங்களும் – ப.க.பொன்னுசாமி அவர்களின் எழுத்து
- வார்த்தை தவறிவிட்டாய் ட..டீ..ய்..!
- என் செல்லக்குட்டி கண்ணணுக்கு..!
- தோள்வலியும் தோளழகும் – இலக்குவன்
- சொல்வனம் இணைய இதழின் 236 ஆம் இதழ்
- பதிவுகள்
- அனார் கவிதைகள்- ஒரு சுருக்கமான அறிமுகம்
- அமரர் “கலைஞன்” மாசிலாமணி – கலைஞன் பதிப்பகம்
- மொழிபெயர்ப்புக் கவிதைகள்