Skip to content

தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Menu
  • கவிதைகள்
  • இலக்கியக்கட்டுரைகள்
  • அரசியல் சமூகம்
  • கதைகள்
  • கடிதங்கள் அறிவிப்புகள்
  • அறிவியல் தொழில்நுட்பம்
  • கலைகள். சமையல்
  • நகைச்சுவையும் வித்தியாசமானவையும்
Menu

“அப்பா! இனி என்னுடைய முறை!”

Posted on December 28, 2020December 28, 2020 by ஜோதிர்லதா கிரிஜா
This entry is part 5 of 12 in the series 27 டிசம்பர் 2020

(மங்கை ஆகஸ்ட், 1988 இதழில் வெளியானது. கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் “மகளுக்காக” எனும் சிறுகதைத் தொகுப்பில் உள்ளது.)

      ”லலிதா! ஏ, லலிதா! சீப்பைக் காணோமே?” என்று இரண்டு நிமிடங்கள் போல் சீப்புக்காக அது இருக்கக்கூடிய  இடங்களையெல்லாம் ஆராய்ந்து, பிறகு சோர்ந்து போய்க் கூச்சல் போட்ட ஜனகராஜனுக்குப் பதில் கிடைக்கவில்லை. சீப்பைத் தேடி எடுக்க முடியாததால் தாமதம் விளைந்து கொண்டிருந்தது என்பதைக் காட்டிலும், லலிதாவிடமிருந்து தனது கூச்சலுக்குப் பதிலேதும் வரவில்லை என்பது அவனை அதிகப்படியான எரிச்சலுக்கு உட்படுத்தியது.

       திண்ணையில் உட்கார்ந்து செய்தித்தாள் வாசித்துக்கொண்டிருந்த அவனுடைய அப்பா ராமகிருஷ்ணனுக்குச் சரியாய்க் காது கேட்காது. ஆனால் கண்பார்வை படு கூர்மை. ஏதோ  இந்த மட்டும் கண் பார்வையாவது சரியாக இருக்கிறதே என்று சீப்புக்காகத் தன்னறையை விட்டு வெளியே வந்த அவன் நினைத்துக் கொண்டான்.

       “என்னத்தைக் காணோம்?” என்று தலை உயர்த்தி அவர் அவனை வினவியதும் அவனுக்குத் தன் கூச்சல் அப்பாவுக்குக் கேட்டுவிட்டது என்பதில் வியப்பு உண்டாயிற்று.

       அவனது வியப்பைப் புரிந்துகொண்டவர் போல், “திடீர்னு கொஞ்ச நாளாக் காது கேக்கறதுடா, ஜனகா. எப்படின்னு தெரியல்லே. என்னத்தைக் காணோம்?” ஏன்று மறுபடியும் கேட்டார்.

       “சீப்புப்பா,” என்று சொல்லிவிட்டு, அவசரமாய் அடுக்களைக்குப் போய், “ஏய், லலிதா? காதென்ன செவிடா? அப்பாவுடைய செவிட்டுக் காதுக்கே நான் கத்தினது கேட்டுடுத்து… சீப்பை எங்க வச்சுத் தொலைச்சே?” என்று கத்தினான்.

       “நான் வைக்கவும் இல்லே. தொலைக்கவும் இல்லே. வாரிக்கிற இடத்துல எது இருக்கோ அதும் மேல போட்டுட்டுப் போயிட்றது. நேத்துத் தலை வாரிண்டு எங்க வச்சீங்களோ அங்கதான் இருக்கும். நான் தான் தனிச் சீப்பு வச்சிண்டிருக்கேனே? உங்கப்பாவுக்கோ வழுக்கைத் தலை!” என்று சாவதானமாய்ப் பதில் சொன்னபடி அடுப்பில் இருந்த எதையோ சுருட்டிச் சுருட்டிக் கிளறிய மனைவியைப் பார்த்து அவனுள் எரிச்சல் மண்டியது.

       “சரி. நான் கை தவறி எங்கேயோ வச்சுட்டதா இருக்கட்டும். அதுக்குன்னு ஒரு மனுஷன் கத்தோ கத்துனு கத்தறேனே. பதில் கூடவா சொல்லக்கூடாது?”

       “எனக்குத் தெரியாதுன்னு நான் சொன்ன பதில் உங்க காதுல விழலைன்னா அதுக்கு நான் என்ன செய்ய முடியும்?” என்று மறுபடியும் அதே சாவதானத்துடன் அவளிடமிருந்து எதிர்க்கேள்வி கிளம்பியதும், அவளை ஓர் அறை விடவேண்டும் போல் அவனுள் ஆத்திரம் பொங்கியது. பதில் சொல்ல வாயே திறவாதிருந்து விட்டு இப்போது அவள் பொய் சொல்லுவதாகவே அவனுக்குப் பட்டது. அவள் பதில் சொல்லியிருப்பின், தன் காதில் எப்படி விழாமற்போகும் என்று அவன் சினமுற்றான். அற்ப விஷயங்களுக்கெல்லாம் அவள் பொய் சொல்லுகிற வழக்கமுடையவள் என்பதைப் பல முறை அனுபவத்தின் வாயிலாகத் தெரிந்துகொண்டிருந்தவனுக்கு இப்போதும் அவள் பொய்தான் சொல்லுகிறாள்  என்று தோன்றியது. இருப்பினும் சுறுசுறுப்பான காலை நேரத்தில் அவளுடன் வாக்குவாதம் செய்துகொண்டிருக்க இயலாது.

       “சரி, சரி. உன் சீப்பைக் கொடு.”

       “கண்ணாடி ஸ்டாண்ட்ல இருக்கும், பாருங்கோ.”

       அவன் ஓடிப் போய்க் கண்ணாடியில் முகம் பார்த்து உடனே தலை வாரிக்கொண்டான்.

       “சாப்பிட வரலாமா?”

       “வரலாம்.”

       அவன், அவள் தட்டு வைப்பாள் என்று எதிர்பார்த்து, வைக்காததால், தானே அதை எடுத்து வைத்துக்கொண்டு உட்கார்ந்தான். அவன் குரல் கொடுத்ததும், அவள் கையில் கூட்டுடன் வந்தாள்.

       கூட்டைத் தட்டில் பரிமாறிக்கொண்டே, “குடிக்கத் தண்ணி எடுத்து வச்சுக்கல்லையாக்கும்!” என்றாள், கடுப்புடன்.

       “ஏன்? நீதான் வைக்கிறது. தேஞ்சு போயிடுவியோ? ஓரொரு பொம்மனாட்டிகள் ஆஃபீஸ்லயும்  உழைச்சுட்டு வீட்டிலயும் மாடா உழைக்கிறாங்க. தெரியுமோல்லியோ? நீ என்னடான்னா, ஆம்படையானுக்குத் தட்டு கூட எடுத்து வைக்க மாட்டேங்கறே.”

       “அப்படி உழைச்சுக்கொட்ற பொம்மனாட்டிகள்ளாம் வடிகட்டின அசடுகள்னு அர்த்தம்.  உழைச்சு உழைச்சுத் தேஞ்சு போறதுல எந்தப் பெருமையும் இல்லே.  உழைப்புங்கிறதை ஒரு குடும்பத்தில இருக்கிற எல்லாருமே தரணும். நான் எதனால வேலையை விட்டேன்? வீட்டிலயும் உழைச்சு வெளியிலேயும் உழைச்சா ஹெல்த் போயிடும்னுதான்! அப்புறம் நானே எனக்குப் பிரச்சினையாயிடுவேன். உங்களுக்கும் பிரச்சினையாயிடுவேன். மனுஷா ஏதாவது ஒரு இடத்துலதான் உழைக்கணும். இல்லைன்னா, புருஷனும் பெண்சாதியும் வீட்டு வேலைகளைப் பங்கு போட்டுக்கணும். நேத்து ஈவ்ஸ் வீக்லியில ஒரு கட்டுரை வந்திருக்கு… அதுல ஒருத்தி என்ன எழுதியிருக்கான்னா,  …”

       “சரி, சரி. ஆரம்பிச்சுடாதே உன் பிரசங்கத்தை! எனக்கு ஆஃபீசுக்கு நாழியாச்சு ..”

        “நீங்கதானே இப்ப ஆரம்பிச்சீங்க? நான் பதில் சொன்னா, அது பிரசங்கமா?”

       “சரி. எம்மேலதான் தப்பு. சோத்தைப் போடு…. அப்பாவையும் கூபிட்றேன்…கையோட அவருக்கும் பரிமாறிடேன். ஒரே வேலையாப் போயிடும்.”

       “இப்ப ஒண்ணும் அவரைக் கூப்பிட வேண்டாம். அவருக்கு விறுவிறுன்னு சாப்பிடத் தெரியாது.  நீட்டி நெளிப்பார். அதனால அவருக்குன்னு ஒண்ணொண்ணையும் தனியாத்தான் பரிமாறும்படி இருக்கும். தவிர, அவருக்கென்ன கொள்ளை இப்ப? வீட்டிலதானே இருக்கார்? அப்புறம் சாவகாசமாய்ப் பத்து மணிக்கு மேல உக்காந்து நிதானமாச் சாப்பிடட்டும்.”

       லலிதாவின் அகராதியே தனி. ‘கொள்ளை, நொள்ளை, கேடு, ஆங்காரம், தண்டம்’ என்றெல்லாம் அவள் வாயிலிருந்து விழுகிற வார்த்தைகளில் நிறைய நெருப்புத் துண்டங்கள் தெறிக்கும். அவள் பேச்சே ஒரு தினுசு. மென்மையான சொற்களே கிடையா. அவள் வாயைத் திறந்து பேசினாலே மனிதர்கள் காத தூரத்துக்கு அப்பால் நகர்ந்து விடுவார்கள். அதிலும் தன் மாமனார் என்றால் அவளுக்குக் கிள்ளுக்கீரைதான்.  என்றைக்கு அவர் வேலையிலிருந்து ஓய்வு பெற்று வீட்டில் இருக்கத் தொடங்கினாரோ, அன்றிலிருந்தே அந்த வார்த்தைச் சாடல் ஆரம்பமாகிவிட்டது.  அது என்று ஆரம்பித்தது என்று துல்லியமாய்ச் சொல்ல முடியாவிட்டாலும்,  வெறுப்பின் வித்து விதைக்கப்பட்டது அன்றுதான் என்று ஜனகராஜன் நினைத்தான்.

       அலுவலகத்துக்குப் போய்ப் பழக்கமான அவருக்கு, வீட்டில் இருக்கத் தொடங்கியதன் பிறகும், சரியாக எட்டே முக்கால் மணிக்கெல்லாம் பசிக்கலாயிற்று.  அவன் சாப்பிட உட்கார்ந்த போது அவரும் வந்து உட்கார்ந்து கொண்டுதான் இருந்தார். ஆனால், கணவனின் இலையில் பரிமாறும் லலிதா அவர் உட்கார்ந்திருப்பதைப் பொருட்படுத்தாமல் போவாள். அதுகாறும் அவருக்கும் தட்டை எடுத்துக் கழுவி வைத்துக்கொண்டிருந்தவன் அந்த வழக்கத்தை நிறுத்தினான்.

       ஒரு நாள் தன் தட்டிலேயே அயிட்டங்கள் வந்து விழுவதையும் அப்பாவுக்கு அவள் தட்டெடுத்து வைக்கவில்லை என்பதையும் கவனித்த அவனுக்கு என்னவோ போல் இருக்கவே, தானே எழுந்து போய் அவரது தட்டைக் கழுவி வைத்தான். அப்போதும் அவள் பரிமாறவில்லை.

       சாம்பாரை அவள் ஊற்றியதும் சாதத்தைப் பிசையத் தொடங்கிய அவன், “அப்பாவுக்கும் கையோட பரிமாறிடேன், லலிதா. வந்து உக்காந்திருக்கார், பாரு. …” என்றான். குரலில் மென்மை இருக்கும்படி பார்த்துக்கொண்டான்.

       “நான் என்ன அவர் உக்காந்ததைப் பார்க்கலியா, இல்லே நீங்க அவருக்குத் தட்டு கழுவி வெச்சதைத்தான் பார்க்கலியா? உங்களுக்குத்தான் அவசரம். அவருக்கென்னெ கேடு? உங்களை விரட்டிட்டு அவருக்குப் போடறேன்.”

      கறுத்துப் போன முகத்துடன் எழுந்து சென்ற தகப்பனாரை அவன் தொடர்ச்சியாகச் சில வினாடிகள் வரையில்  பார்த்துக்கொண்டே உட்கார்ந்திருந்தான்.

      அந்த முதல் நிகழ்ச்சிக்குப் பிறகு அவர் அவனோடு அமர்ந்து உணவருந்த வந்ததே இல்லை. இன்று அவன் அவரைக் கூப்பிடலாம் என்று சொன்னதற்குக் காரணம், முதல் நாள் இருந்த உபவாசத்தால் அவர் இரவில் வெறும் பழம் மட்டுமே சாப்பிட்டிருந்தார் என்பதால் வயிறு காந்துமே என்பதுதான்.

       “நேத்து ராத்திரி வெறும் வாழைப்பழந்தானே சாப்பிட்டார்? வயிறு காந்தாதா, லலிதா? இரக்கமே இல்லாம பேசறியே?”

       “இத பாருங்கோ. வாய்க்கு வந்ததைக் கன்னா பின்னான்னு பேசாதீங்கோ.  நானென்ன அவரைப் பட்டினியா போடறேன்? உத்தியோகத்துல இருந்தப்ப நடந்தது மாதிரி இப்பவும் நடக்கணும்னா முடியுமா?”

       ஜனகராஜான் வாயை மூடிக்கொண்டுவிட்டான். அதற்குப் பிறகு சாப்பிடுவதற்கு மட்டு,ம் வாயை மூடித் திறந்து, மூடித் திறந்து எழுந்து போனான்.  …

      … அன்று மாலை வீடு திரும்பிய அவன் அப்பாவைத் திண்ணையில் காணாமல் திகைத்தான்.

       லலிதா கொடுத்த சிற்றுண்டியைப் பெற்றுக்கொண்டே, “அப்பா எங்கே?” என்றான்.

       “காக்கா தூக்கிண்டு போயிடுத்து. என்ன அப்படிப் பார்க்கறீங்க? உங்கப்பா என்ன கொழந்தையா? காலார நடந்துட்டு வறேன்னு போயிருக்கார். …”

       “இன்னிக்கு என்ன விசேஷம்? மைசூர்ப்ப்பாகு பண்ணி இருக்கியே?”

       “உங்க பிறந்த நாள் இல்லியா இன்னிக்கு? அது கூட நான் ஞாபகப்படுத்தணும்.”

       “தாங்க்யூ, தாங்க்யூ! பார்த்தியா? போன வருஷம் உன்னோட பிறந்த நாளை நான் ஞாபகம் வச்சுக்கலைங்கிறதுக்காக என்னைக் கோவிச்சுண்டியே. இப்ப என்னோட பிறந்த நாளே எனக்கு ஞாபகம் இல்லே, பாரு.”

       “தன்னோட பிறந்த நாள் ஞாபகம் இல்லாட்டாலும் பரவாயில்லே. நமக்குப் பிரியமானவா பிறந்த நாளை ஞாபகம் வச்சுக்கிறவாதான் மனுஷா!”

       “வச்சுக்கல்லைன்னா மிருகமா?”

       “அதை நான் சொல்ல மாட்டேன்.”

       “மைசூர்ப்பாகுக்கு அப்பா என்ன சொன்னார்?”

       ”அப்படின்னா?”

       “பிரமாதமா இருக்குன்னு சொல்லி இருப்பாரே?”

       “அவருக்கு யார் இங்கே குடுத்தா?”

       வாயருகே கொண்டு சென்ற விள்ளலைப் பாதி வழியில் நிறுத்திக்கொண்டு, “என்னது! அவருக்குக் குடுக்கல்லையா! நீ சர்க்கரையும் நெய்யும் மணக்க வீட்டில இதைப் பண்ணினப்ப அப்பா இங்க இல்லியா?”

       “இருந்தாரே! நான் தான் அவர் கண்ணுல காட்டலை. வயசானவங்க ஸ்வீட்டெல்லாம் சாப்பிடக் கூடாது. படிப்படியா வேண்டாத விஷயங்களை யெல்லாம் நிறுத்தணும். அப்பத்தான் உடம்பு நன்னாருக்கும்.”

       கையில் இருந்த மைசூர்ப்பாகு விள்ளலை அவள் மூஞ்சியில் விட்டடிக்க வேண்டும் போல் அவனுள் ஆத்திரம் பெருகியது. கட்டுப்படுத்திக்கொண்டான்.

       “ஒரு துண்டு கூடவா அவர் கண்ணுல காட்டலை? அவருக்குச் சர்க்கரை வியாதி கூட இல்லியே?”

       “ஒண்ணு குடுத்தா இன்னொண்ணு கேக்கச் சொல்லும். வயசானவா நாக்கைக் கட்டினாத்தான் ஆரோக்கியத்தோட, நாலு பேருக்குத் தொல்லை இல்லாம இருந்துட்டுக் கண்ணை மூட முடியும்.”

       அவன் வாயை மூடிக்கொண்டான்.

      … சற்றுப் பொறுத்து லலிதா பக்கத்து வீட்டுத் தோழியுடன் கோயிலுக்குப் புறப்பட்டுப் போனாள். அவள் மறைந்ததும் எழுந்த ஜனகராஜன் வாசற்கதவைச் சாத்தித் தாழிட்டான். சாய்வு நாற்காலியில் சரிந்த அவனை அளவு கடந்த வேதனை பிடுங்கித் தின்னலாயிற்று. தன் பழைய வாழ்க்கை அவனுக்கு ஞாபகம் வந்தது. அவன் அம்மா அவனது நான்காம் வயதில் இறந்து போனாள். அவனுக்கு ஐந்து வயது ஆன போது அவன் அப்பா மறுமணம் செய்துகொண்டார். சித்தி அவனுக்கு அனுசரணையாக இல்லை. வயிற்றுக்கு வஞ்சனை செய்தாள். சோற்றுக்கு நெய் ஊற்ற மாட்டாள். இரவில் பால் தர மாட்டாள். அவன் அப்பா ஏதாவது கேட்டால், ‘பாலா? அப்பவே குடிச்சுட்டானே!’ என்று பொய் சொல்லுவாள்.  திருமணம் ஆன கையோடு தன்னுடன் அழைத்து வந்திருந்த தன் சிறு வயதுத் தம்பிக்கே எல்லாவற்றையும் தருவாள். அன்பாக அவள் அவனை நடத்தியதே இல்லை. குழந்தை ஜனகராஜன் முக மலர்ச்சியுடன் இல்லை என்பதைக் கவனித்து இரண்டாம் மனைவி அவனை எவ்வாறு நடத்தினாள் என்பதை அவர் ஆராயத் தொடங்கினார். இளைய மனைவி அறியாது, அவள் அவனைக் கொடுமைப்படுத்தியதை அறிந்த அன்று அவர் அவனை வெளியே கூட்டிக்கொண்டு போனார்.

        ‘ஜனகா! சித்தி உங்கிட்ட பிரியமா இல்லையா?’ என்று கேட்டார்,

        ‘அவங்க தம்பிக்குத்தாம்ப்பா எல்லாம் தருது. அவனுக்கும் எனக்கும் சண்டை வந்தா என்னைத்தான் அடிக்கிறாங்க.’

       அப்போது அவனுக்கு ஏழு வயசு இருக்கலாம். பக்கத்தில் யாரும் இல்லாத அந்தப் பூங்காவில் அவர் அவனை மடியில் கிடத்திக் கொண்டு  எப்படி அழுதார்!

       ‘ஜனகா! நான் தப்புப் பண்ணிட்டேண்டா. எனக்கு என்னோட சுகம் பெரிசாப் போயிடுத்து… கண் கலங்காம குழந்தையை வச்சுக்குங்கன்னு உங்க அம்மா சொன்னதை நான் நிறைவேத்தல்லே…’ – அவர் அப்போது சொன்னதெல்லாம் அவனுக்கு முற்றாக விளங்கவில்லை. ஆனால் அப்போதைய அவரது முகமும், அதில் அப்பிக்கிடந்த வேதனையும், அவரது கண்ணீரும், அவர் சொன்ன சொற்களும் நன்றாக நினைவில் இருந்தன.

       … லலிதாவை அடக்கி அப்பாவுக்கு மரியாதை காட்டச் செய்வது என்பது யாராலும் இயலாத காரியம்.

       அவன் மெல்ல எழுந்தான். அடுக்களைக்குப் போய் மைசூர்ப்பாகுக் கட்டிகளில் இரண்டை எடுத்து ஒரு பிளாஸ்டிக் பையில் சுருட்டிவைத்தான். ..

       அன்றிரவு மனைவி தூங்கியதும் மொட்டை மாடியில் உட்கார்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்த அப்பாவைத் தேடிப் போனான்.

       காலடியோசை கேட்டுத் திரும்பிய் ராமகிருஷ்ணன், “என்னப்பா?” என்றார்.

       வாடி இருந்த அவரது முகத்தைப் பார்த்ததும் அவனுள் உணர்ச்சி பொங்கியது.

       குரலில் தழுதழுப்பு இல்லாதபடிச் செய்துகொண்ட பிறகு, “இந்தாங்கப்பா மைசூர்ப்பாகு. சாப்பிடுங்க …” என்று பொட்டலத்தை நீட்டினான்.

       அவர் சின்னக் குழந்தை மாதிரி ஆவலுடன் அதை வாங்கிக்கொண்டார். ஒரு விள்ளலை வாயில் போட்டுக்கொண்டு மென்றவாறு, “நம்ம லலிதாவுக்குக் கைமணம் ஜாஸ்தி,” என்று புகழ்ந்தார்.

       அவன் பதில் சொல்லாது சில கணங்களைக் கடத்திய பிறகு, “கைமணம் இருந்து என்னப்பா பிரயோசனம்? மனசுல மணமே இல்லியே?” என்றான்.

       “அவளுக்குத் தெரியாமலா எடுத்துண்டு வந்தே?”

       “ஆமாம்ப்பா. சித்திக்குத் தெரியாம என்னை வெளியே கூட்டிட்டுப் போய்  எத்தனை தரம் ஸ்வீட் வாங்கித் தந்திருக்கீங்க? இப்ப அவளுக்குத் தெரியாம உங்களுக்கு ஸ்வீட் எடுத்துண்டு வந்து குடுக்கிறது என்னோட முறை – என்னோட டர்ன்!” என்று பதில் சொன்ன ஜனகராஜன் உடைந்து அழத் தொடங்கினான்.

…….

Series Navigation“வெறும் நாய்” – கு. அழகிரிசாமி. (சிறுகதை பற்றிய பார்வை)ஒரு கதை ஒரு கருத்து – கு.அழகிரிசாமியின் கல்யாண கிருஷ்ணன்

27 டிசம்பர் 2020
  • கைக்கட்டு வித்தை
  • இந்தியாவில் ‘முப்பெரும் விழா’ நிகழ்வில் இலங்கை எழுத்தாளருக்கு விருது
  • ‘ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
  • ஒரு துளி காற்று
  • “வெறும் நாய்” – கு. அழகிரிசாமி. (சிறுகதை பற்றிய பார்வை)
  • “அப்பா! இனி என்னுடைய முறை!”
  • ஒரு கதை ஒரு கருத்து – கு.அழகிரிசாமியின் கல்யாண கிருஷ்ணன்
  • மேரியின் நாய்
  • தோள்வலியும் தோளழகும் – இராமன்
  • தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 24 – தூரப் பிரயாணம்
  • தோள்வலியும் தோளழகும் – இராவணன்
  • ”அரங்குகளில் பூத்த அரிய மலர்கள்” – வல்லம் தாஜ்பால் கவிதைகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

இதழ்கள்



Other posts in series:

  • கைக்கட்டு வித்தை
  • இந்தியாவில் ‘முப்பெரும் விழா’ நிகழ்வில் இலங்கை எழுத்தாளருக்கு விருது
  • ‘ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
  • ஒரு துளி காற்று
  • “வெறும் நாய்” – கு. அழகிரிசாமி. (சிறுகதை பற்றிய பார்வை)
  • “அப்பா! இனி என்னுடைய முறை!”
  • ஒரு கதை ஒரு கருத்து – கு.அழகிரிசாமியின் கல்யாண கிருஷ்ணன்
  • மேரியின் நாய்
  • தோள்வலியும் தோளழகும் – இராமன்
  • தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 24 – தூரப் பிரயாணம்
  • தோள்வலியும் தோளழகும் – இராவணன்
  • ”அரங்குகளில் பூத்த அரிய மலர்கள்” – வல்லம் தாஜ்பால் கவிதைகள்

திண்ணை பற்றி

திண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை
உங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள். அல்லது editor.thinnai@gmail.com
ஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.

பழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.

இந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif

சமஸ்கிருதம் தொடர் முழுவதும்

  • அரசியல் சமூகம்
  • அறிவியல் தொழில்நுட்பம்
  • இலக்கியக்கட்டுரைகள்
  • கடிதங்கள் அறிவிப்புகள்
  • கதைகள்
  • கலைகள். சமையல்
  • கவிதைகள்
  • நகைச்சுவையும் வித்தியாசமானவையும்
  1. Avatar
    R.jayanandan on அசோகமித்திரன் சிறுகதைகள் – 19September 9, 2025

    ஆழமான பார்வையுடன் கட்டுரை செல்கின்றது. அ.மி.யின் பெண்கள் என்றே ஒரு தனிக்கட்டுரை எழுதுங்கள். தண்ணீர் நாவலில் வரும் இரண்டு பெண்களின் வாழ்க்கை சித்திரத்தை அ.மி. மத்திய தர…

  2. Avatar
    Roshan Ramesh on ”ஓவியந்தீட்டும் அனுபவம் விலைமதிப்பற்றது!” – ஓவியர் ரஞ்ஜனா ரமேஷுடன் ஒரு நேர்காணல்September 4, 2025

    Wonderful paintings! Keep up the good work 🤩🤩 Keep Inspiring.

  3. Avatar
    Ragavapriyan on வண்டிSeptember 4, 2025

    Superb short story with different theme and tone...Vandi...will run to greater heights...

  4. Avatar
    Kaleeswaran on திருக்குறள் காட்டும் மேலாண்மைSeptember 3, 2025

    திருக்குறள் காட்டும் மேலாண்மை பேச்சு போட்டி

  5. Avatar
    Radha chandrasekhar on ”ஓவியந்தீட்டும் அனுபவம் விலைமதிப்பற்றது!” – ஓவியர் ரஞ்ஜனா ரமேஷுடன் ஒரு நேர்காணல்August 25, 2025

    ஓவியர் ரஞ்சனா ரமேஷின் ஓவியங்கள் மனதை கவர்கின்றன.வரைவதில் அவருடைய ஆர்வமும் முயற்சியும் பாராட்டுக்குரியன.மேலும் மேலும் அவருடைய முயற்சி தொடர வாழ்த்துக்கள்

©2025 தி ண் ணை | Design: Newspaperly WordPress Theme