முனைவர் ம இராமச்சந்திரன்
உதவிப் பேராசிரியர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்
ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பிரிவு-தமிழ்
ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) ஊத்தங்கரை கிருஷ்ணகிரி மாவட்டம்.
மதுரை மாவட்டம் வைகை ஆற்றின் கரையிலிருந்து வடக்கே 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது கீழடி. மத்திய தொல்லியல் துறையின் பெங்களூரு பிரிவைச் சேர்ந்தவர்கள் 2014 தொடங்கி 2017 வரையில் மூன்று கட்டங்களாக அகழாய்வு மேற்கொண்டனர். பலவகை அரிய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. ஆனால் அவை திராவிடப் பண்பாட்டை மேலும் செழுமைப்படுத்துவதாக இருந்தமையால் இவ்வாய்வு மேலும் தொடர பலத் தடைகள் உருவாக்கப்பட்டன. இந்தச் சூழ்நிலையில் தமிழ்நாடு தொல்லியல் துறை இதைக் கையில் எடுத்து 2017 இல் தனது நான்காவது கட்ட ஆய்வை மேற்கொண்டது. அதேபோல 2018 இல் ஐந்தாம் கட்ட ஆய்வும் செம்மையாகச் செய்து முடிக்கப்பட்டது.
கீழடி அகழாய்வில் 5000 திற்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இவை சங்க கால மக்களின் வாழ்வில் பண்பாட்டை வெளிக்கொணர்வதாக இருக்கின்றன. அவை செங்கற் கட்டுமானங்கள், சுடுமண் உறைக் கிணறுகள், கூரை ஓடுகள், அணிகலன்கள், இரும்புக் கருவி பாகங்கள், வட்டச் சில்லுகள், சுடுமண் காதணிகள், கண்ணாடி, செம்பு பொருட்கள், சுடுமண் சொக்கட்டான் காய்கள், மட்பாண்ட ஓடுகள், ரெளலட்டட் மட்பாண்டங்கள், அரட்டைன் ஓடுகள், தமிழி என்றழைக்கப்படும் தமிழ் பிராமி எழுத்துக்கள் கொண்ட மட்கல துண்டுகள், கீறல்கள், குறியீடுகள், வடிவங்கள் போன்றவையாகும்.
இவற்றின் மூலம் தமிழ்நாட்டின் தொடக்க வரலாற்றுக் காலக் கணிப்பில் பல மாற்றங்களும் புதிய அவதானிப்புகளும் ஏற்பட்டுள்ளன. கீழடியில் சேகரிக்கப்பட்ட ஆறு கரிம மாதிரிகள் அமெரிக்காவில் உள்ள பீட்டா பகுப்பாய்வு சோதனை ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இவ்வாய்வு முடிவுகள் கீழடி மக்கள் பண்பாட்டின் காலம் கி.மு 6 முதல் கி.மு 1 ஆம் நூற்றாண்டிற்கு இடைப்பட்டது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இரண்டாம் நகரமயமாதல் ஏற்படவில்லை என்ற கருத்தை மறுக்கும் விதமாகக் கீழடிச் சான்றுகள் கிடைத்துள்ளன. மேலும் தமிழ் பிராமி எழுத்து வடிவத்தின் காலம் கி.மு.5 என்ற காலக்கணிப்பு கீழடி மூலம் கி.மு.6 என்று மாற்றமடைந்துள்ளது.
கீழடி பல தடைகளையும் இருட்டடிப்புகளையும் தாண்டி இன்று பொதுவெளிக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. மத்திய தொல்லியல் துறை நீண்ட காலமாகத் தென்னகத்தின் வரலாற்று உண்மைகளை ஏற்றுக் கொள்வதில் வரட்டுத்தனமாக மறுத்தே வந்துள்ளது. இந்திய வரலாறு வடக்கு, தெற்கு என்ற பார்வையும் இதில் வடக்கு தெற்கை விட தொன்மையான ஆரிய மரபுக் கொண்டது என்ற கருத்து நிலைத்து விட்டது. இந்தச் சிந்தனை மரபு உண்மையை ஏற்றுக்கொள்ள பெரும் தடையாக இருந்து வருகிறது. இதன் விளைவே கீழடி முடிவுகளை வெளிப்படுத்தவோ ஏற்றுக் கொள்ளவோ மத்திய தொல்லியல் துறை தயக்கம் காட்டி வருகிறது அல்லது ஏற்றுக்கொள்ள மறுத்து வருகிறது. ஆனால் இந்த சிந்தனை மரபு கீழடி அகழாய்வின் செயல்பாடுகள் அரசியலாக்கப்பட்டதன் விளைவாக மாற்றமடைந்துள்ளதைக் காண முடிகிறது. இந்தப் பின்புலத்தில் கீழடி ஆவணப் பதிப்பின் முக்கியத்துவமும் சிக்கல்களும் சிந்திக்கப்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை கீழடி வைகை நதிக்கரையில் சங்க கால நகர நாகரிகம் என்ற தலைப்பில் ஆவணமாக (பதிப்பு 2019) வெளியிட்டுள்ளது. த.உதயச்சந்திரன் இ.ஆ.ப அவர்கள் தொல்லியல் துறை ஆணையராகச் செயல்பட்டு வருகிறார். பதிப்பாசிரியர்களாக முனைவர் இரா. சிவானந்தம், துணை இயக்குநர், மு.சேரன் தொல்லியல் ஆய்வாளர், சென்னை பல்கலைக்கழகம் ஆகியோர் செயல்பட்டுள்ளனர். இந்த நூல் ஐம்பத்தெட்டுப் பக்கங்களைக் கொண்டது.
இதில் பத்மஸ்ரீ பேராசிரியர் திலீப் கே.சக்ரவர்த்தி அணிந்துரை வழங்கியுள்ளார். அதில் முக்கியமான தகவல்களைப் பதிவு செய்த நிலையில் அகழாய்வு என்ற சொல்லை அகழ்வாய்வுகள் என்று பதிவு செய்துள்ளனர். “கா.ராஜன் மேற்கொண்ட அகழ்வாய்வுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மேற்கொண்ட அகழ்வாய்வுகளின் மூலமாகப் பெறப்பட்ட பல கரிம காலக்கணிப்புகளின் முடிவுகள்” என்று வந்துள்ளது. இதனை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். மேலும் அடுத்தப் பக்கத்தில் பி.ஜெ.செரியன் அவர்களின் அணிந்துரையிலும் இதே தவறு (அகழ்வாய்வு) நிகழ்ந்துள்ளதைக் காணமுடிகிறது. இது மொழிபெயர்ப்பில் ஏற்பட்டுள்ள போதாமையைக் காட்டுகிறது. ஆனால் இதைப் பதிப்பித்தவர்கள் எப்படி இதுபோன்ற அடிப்படை தொழிற்சார் சொற்களில் கவனமில்லாமல் போனார்கள் என்று தெரியவில்லை.
நூலின் பிற்சேர்க்கை பல மொழிப்பிழைகளோடு பதிப்பிக்கப்பட்டுள்ளது. அகழாய்வுக் குழிகளின் அமைவிடம் என்ற பகுதியின் அறிமுகத்தில் ஒருமை பன்மை மயக்கம் பல இடங்களில் காணப்படுகிறது. ஒரு வாக்கியம் ஊர்களும், கண்மாய்களும், எல்லைகளும் என்று எழுவாய் பன்மையிலிருக்க வினைச் சொல்லோ கருதப்படுகின்றது என்று ஒருமையில் அமைந்துள்ளது. இதேபோல “2017-2018 ஆம் ஆண்டு முதல் தொடர் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது” என்று இருப்பதைக் காண முடிகிறது. இது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று இருத்தல் வேண்டும். மேலும் இப்பிழை பக். 25, 27, 47, 50 ஆகிய பக்கங்களில் காணப்படுகின்றது.
ஒற்றுப் பிழையும் மலிந்து காணப்படுகிறது. எழுத்துப்பிழையும் காணப்படுகிறது. பக்கம் 28 இல் ‘மண்ணாணது’ என்ற சொல் வந்துள்ளது. இது மண்+ ஆனது என்று கூட்டுச்சொல்லாக மாறும் போது மண்ணானது என்று வர வேண்டும். மேலும் இதேபோன்ற எழுத்துப்பிழை ‘தோண்றும்’ என்று பக்கம் 50 இல் காணப்படுகிறது. பக்கம் 25 இல் ‘முதலாவது இடஅமைவில்’ என்று வந்துள்ளது. தமிழில் உயிரெழுத்துகள் மொழியின் இடையில் வரும்போது உயிர்மெய் எழுத்துக்களாக மாற்றம் பெற்றே வரவேண்டும் அந்தவகையில் இச்சொல் இடவமைவில் என்றோ அல்லது இட அமைவில் என்றோ வருதல் வேண்டும் அவ்வாறில்லாமல் வந்துள்ளது பிழையாகும்.
அரிய கண்டுபிடிப்புகள் என்ற தலைப்பில் “இரண்டு உறைக் கிணறுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன” என்ற வாக்கியம் இடம்பெற்றுள்ளது. இதில் உறைக்கிணறுகள் என்ற எழுவாய்க்கு பொருத்தமான வினைச் சொல்லாகக் கண்டெடுத்தல் அமையவில்லை. எடுத்தல் என்ற செயல் உறைக் கிணறுக்குப் பொருந்தாது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கண்டுபிடிப்புகள் என்ற தலைப்பில் “பானை ஓடுகள் ஆகியவைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன” என்று வந்துள்ளது. இதில் வந்துள்ள ‘ஆகியவைகள்’ என்ற சொல் பெரும் வியப்பில் ஆழ்த்துகிறது. இதில் ஆகியவை என்பதே பன்மை உணர்த்தி நிற்கும்போது ‘கள்’ விகுதி அவசியமில்லை என்ற மொழி புரிதல் இல்லாதவர்கள் எப்படி இதுபோன்ற ஆவணப் பணியில் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள் என்பதே பெரும் வியப்பாக இருக்கிறது.
கடைசி பக்கத்தில் பிபிலியோ கிராஃபி (Bibiliography) இடம் பெற்றுள்ளது. இதில் ஆங்கிலத்தில் வெளிவந்த நூல்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. இதனைக் காணும்போது தமிழ்த் தொல்லியல் ஆய்வாளர்கள் தமிழில் நூல்கள் வெளியிடவில்லையா அல்லது கடமைக்காக இது சேர்க்கப்பட்டுள்ளதா என்ற எண்ணம் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.
தமிழ்ப் பதிப்புப் பண்பாட்டில் முன்னோடி டாக்டர் உ.வே.சா. இன்று பல செம்பதிப்புகளை ஆ இரா.வேங்கடாசலபதி , பெருமாள் முருகன் போன்றோர் வெளியிட்டு வருகின்ற இன்றைய சூழ்நிலையில் வரலாற்று முக்கியத்துவம் வந்த கீழடி அகழாய்வு முடிவுகளை ஆவணப்படுத்தும் இதுபோன்ற பணிகளில் இவர்களின் பதிப்பு அனுபவங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் தொல்லியல் துறை சார்ந்த ஆய்வாளர்களுக்குத் தமிழ்த்துறை சார்ந்த ஆய்வாளர்களின் தனித்துவத்தை ஏற்றுக் கொள்வதில் பல மனத்தடைகள் ஏற்படுவதைக் காண முடிகிறது. இதன் விளைவுதான் இத்தகைய பிழைகளோடு ஒரு வரலாற்று ஆவணத்தைப் பதிப்பித்தது. அதுவும் இரண்டாவது பதிப்பிலும் இத்தகைய பிழைகள் கண்டு கொள்ளப்படவில்லை என்பது வியப்பாக உள்ளது. அடுத்தப் பதிப்பில் இவை சரி செய்யப்படும் என்று முழுமையாக நம்புகிறேன்.
- தமிழர் உரிமை செயற்பாடுகளில் பெண்களின் வகிபாகமும், எதிர்நோக்கும் பிரச்சினைகளும் – இணைய வழிக் கலந்துரையாடல்
- இத்தாலியத் தென்முனை சிசிலி தீவில் எட்னா மலை மேல் பூத எரிமலை வாய் பிளந்து பேருயரத் தீப்பிழம்பு பொழிகிறது
- மறந்து விடச்சொல்கிறார்கள்
- எனக்கான வெளி – குறுங்கதை
- உப்பு வடை
- ஆசாரப் பூசைப்பெட்டி
- ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜியின் கொலை – நடந்தது என்ன
- கதவு திறந்திருந்தும் …
- ஒரு கதை ஒரு கருத்து – ஸ்டெல்லா புரூஸ்ஸின் ஐ லவ் எவ்ரிதிங் அண்டர் த ஸன்
- அருணாசலக் கவிராயரின் ராம நாடகம்
- வடக்கிருந்த காதல் – மூன்றாம் பாகம்
- என் அடையாள அட்டைகளைக் காணவில்லை
- கீழடி அகழாய்வு : பதிப்பும் பதிப்புச் சிக்கலும்
- ஈழத்து மூத்த படைப்பாளி செ. கணேசலிங்கனுக்கு இன்று 93 ஆவது பிறந்த தினம்
- உறக்கம் துரத்தும் கவிதை