வடக்கிருந்த காதல் – மூன்றாம் பாகம்

author
0 minutes, 0 seconds Read
This entry is part 11 of 15 in the series 7 மார்ச் 2021

 

அழகர்சாமி சக்திவேல் 

 

ஆயர் டேனியல் – திண்டுக்கல்.

 

முத்தொழிலோனே, நமஸ்காரம்

மூன்றிலொன்றோனே, நமஸ்காரம்

கர்த்தாதி கர்த்தா, கருணாசமுத்திரா,

நித்திய திரியேகா, நமஸ்காரம்.

சருவ லோகாதிபா, நமஸ்காரம்

சருவ சிருஷ்டிகனே, நமஸ்காரம்

தரை, கடல், உயிர்,

வான், சகலமும் படைத்த

தயாபர பிதாவே, நமஸ்காரம்

 

சங்கராபரணம் ராகத்தில்,  ஆதிதாளத்தில் அமைந்திருந்த அந்த இனிமையான பாடலை,  புழைக்கடையில் இருந்து ரோஸி சந்திரன் பாடுவது எனக்குக் கேட்டது. பாடல் என்னவோ, நான் எப்போதும் கேட்கும், கீர்த்தனைப் பாடல்தான். ஆனால், அதற்குள், ரோஸி சந்திரன் இணைக்கும் அந்தப் புதுப்புது சங்கதிகள், ஆஹா, இறைவன் எனக்குக் கொடுத்த வரம்தான் ரோஸி. படுத்திருந்த படுக்கையை விட்டு எழுந்திருக்காமலேயே, ரோஸியைக் குறித்த எனது சிந்தனைகள், எங்கெங்கோ ஓடியது.

 

நான், இன்று நன்றாக,  நிறைய நேரம் தூங்கிவிட்டேன். இன்று நான், தேவாலயத்துக்கும் செல்லவில்லை. நேற்று இரவில் இருந்து,  எனக்குக் கொஞ்சம் காய்ச்சலும்,  இருமலுமாக இருந்ததால்,  என் கீழ் இருந்த,  ஆயர் ஜேம்ஸினை, இன்று திருச்சபை நடத்தப் பணித்துவிட்டு,  நான் வீட்டில், ஓய்வு எடுத்துக்கொண்டு இருந்தேன்.

 

நான், தூக்கத்தில் இருந்து விழித்துக்கொண்டேனே தவிர,  படுக்கையை விட்டு, இன்னும் எழுந்திருக்கவில்லை.

 

ஆனால், மறுபடியும், அதே இனிமையான பாடல். ஆனால், இந்த முறை பாடியது ரோஸி சந்திரன் அல்ல. இன்னொரு இனிமையான பெண் குரல். எனக்கு, அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. நான்,  புழைக்கடைக்கு விரைந்தேன். அங்கே..

 

அங்கே.. அண்ணன் பீட்டரும், டயானாவும், ரோஸி சந்திரனோடு உட்கார்ந்து இருந்தார்கள். டயானாதான், இப்போது பாட்டுப் பாடிக்கொண்டு இருப்பவள். எனக்கு, அவர்கள் இருவரின் வருகை, ஆச்சரியமாக இருந்தது,

 

“வாங்கண்ணே.. வா டயானா.. நான் இருவரையும் வரவேற்றேன். என்ன டயானா நலமா?”

 

நான், டயானாவைப் பார்த்தேன். டயானா, முற்றிலும் வெள்ளை உடையில் வந்து இருந்தாள். ஐம்பது வயது என்று அவளை இன்னும் யாராலும் சொல்லிவிட முடியாது.

 

ஆனால், வெள்ளைச் சேலை.. வெள்ளை ரவிக்கை, வெள்ளை முக்காடு.. அந்த உடையில், அவள் என்னைப் பார்த்த பார்வை.. எனக்கு ஒரு மாதிரி இருந்தது. நான், அந்தப் பார்வையைத் தவிர்க்க நினைத்தேன்.

 

“இரு டயானா, நான் குளித்துவிட்டு வந்துவிடுகிறேன்” நான், கழிப்பறைக்கு விரைந்தேன். அப்புறம் குளியல் அறைக்குள் புகுந்து கொண்டேன். நான் குளிக்கும்போது, எனது மனது முழுவதும், டயானாதான் இருந்தாள்.

 

டயானா,  சென்னையில் எங்கள் வீட்டின், பக்கத்துக்கு வீட்டுக்காரி. நான், கல்லூரி படிக்கும் காலங்களில், என் உற்ற தோழி அவள்தான். எவ்வளவோ விசயங்களை நாங்கள் பேசி இருக்கிறோம்.

 

டயானாவுக்கு என் மேல் கொள்ளை ஆசை. எனக்கும் அது புரிந்து இருந்தது. ஆனால்,  அவள் ஆசையை,  நான் ஒரு போதும் தூண்டியது இல்லை. அதுகுறித்து நான் யோசித்ததும் இல்லை.

 

வேதாகமக் கல்லூரியில், நான் விருப்பப்பட்டுத்தான் சேர்ந்தேன். அதுவும் இறையியல் படிக்க ஆரம்பித்த பிறகு, தேவனாகிய கர்த்தரின் மகிமை என் ஆழ்மனதுக்குள் போய்,  எனது வாழ்க்கைத் தடத்தை,  முற்றிலுமாய் மாற்றிப் போட்டது.

 

ஆண்டவர் குறித்த ஆத்மசக்தி,  என்னுள் பொங்கிப் பெருக்கேடுத்தது. இறைப்பணி மட்டுமே என் முழுக்குறிக்கோள் ஆக ஆனபோது. நான் என் குடும்பத்தை முற்றிலுமாக மறந்தேன்.

 

டயானா இன்னொருவனைக் கலயாணைமும் செய்து கொண்டாள். அதுவும் கொஞ்ச காலம்தான். இன்பமாய்த் தொடங்கிய அவள் வாழக்கை, விவாகரத்தில் முடிய,  டயானா,  தேவனின் இறைப்பணிக்குள்,  தன்னை முற்றிலுமாய், ஈடுபடுத்திக்கொண்டாள். எனக்கு,  அவள் நிலை குறித்து, மிகவும் வருத்தம் ஆக இருந்தது

 

அப்பா இறந்த பிறகு, ரொம்பகாலம் கழித்து, அண்ணன் பீட்டர், என்னைத் தேடிவந்து இருக்கிறார்.

 

எல்லோரும், அமைதியாகச் சாப்பிட்டோம். ரோஸி சந்திரன்தான், சாப்பாடு பரிமாறினாள்.

 

சாப்பிட்டு முடித்த கையோடு,  ரோஸியும்,  டயானாவும்,  முன் வாசலுக்குச் சென்றார்கள்., நான் எனது படுக்கையறைக்குச் சென்றேன்.

 

அண்ணன் பீட்டர், என்னைப் பின்தொடர்ந்து வந்தார். என் அருகில், கட்டிலில் உட்கார்ந்தார்.

 

“தம்பி டேனியல்.. அன்னைக்கு கல்யாணம் பண்ணிக்கோ பண்ணிக்கோ டேனியல் அப்படின்னு, நான் எவ்வளவோ சொன்னேன். அப்ப எல்லாம், ஓரேயடியா மறுத்துட்டே”

 

“ஆனா.. இன்னிக்கு, நீ ஒரு திருநங்கையை வைச்சு இருக்கறது”

 

“அண்ணா,  என்ன இது, இப்படியெல்லாம் பேசிக்கிட்டு.. என் இறைப்பணியைக் கேவலப்படுத்தாதீர்கள் ப்ளீஸ்” நான் குமுறினேன்.

 

அண்ணன் பீட்டர், அதற்குமேல் அது குறித்துப் பேசவில்லை. ஆனாலும், எனது மனது மட்டும்,  கவலைப்பட்டுக்கொண்டே இருந்தது.

 

அண்ணன் பீட்டரும், டயானாவும் கொஞ்ச நேரத்தில், கிளம்பிப்போய் விட்டார்கள்.

 

நான் ரோஸி சந்திரனைக் கூப்பிட்டேன்.

 

“ரோஸி.. நீ சந்திரன் ஆகப் பிறந்த ஊர் எந்த ஊர்?  சொல்,  நான் உன்னை, அங்கே கொண்டுபோய் விட்டுவிட்டு வருகிறேன்”

 

நான்,  இப்படிச் சொன்னவுடன்,  ரோஸி சந்திரன் கதறிக்கதறி அழுதாள். அவளுக்குக் கோபம் வந்து விட்டது என்பதை நான் உணர்ந்துகொண்டேன். ச்சே… இன்று காலையில், ரோஸி ஒரு வரம் என்று நினைத்தேன். ஆனால், இப்போதோ அவளை, வீட்டை விட்டு, வெளியே அனுப்பத் துடிக்கிறேன். கர்த்தர், ஏன் இப்படி, என்னைச் சோதிக்கிறார்?

 

பாரதிதாசன் சின்னப்பன் – ராசக்கா பட்டி.

தாய்லாந்துவின், அந்த இந்திய ஹோட்டலைச் சுற்றிச் சுற்றி, மசாஜ் விடுதிகள்தான். அதுவும், அந்த இந்திய ஹோட்டலை ஒட்டி இருந்த, . அந்தக் குறிப்பிட்ட மசாஜ் தெருவில்,  இந்தியர்கள் நிறையவே குடி இருந்தார்கள். தெருவின்,  இந்தப் பக்கமும்,  அந்தப் பக்கமும், நிறைய இந்திய உணவகங்கள். “ஆவோ ஆவோ..” என்று கூக்குரல்கள். சப்ஜி,  புலாவ்,  சப்பாத்தி,  தந்தூரிச் சிக்கன்,  பாலக் பன்னீர் என்று விதவிதமான இந்திய உணவுகள்.

 

சந்திரனையும், குமாரையும் கூட்டி வந்த அந்த தாய்லாந்து இந்திக்காரி, இங்கேதான் எங்கோ பக்கத்தில் குடி இருக்கிறாள். நான்,  அந்த பாஸ்போர்ட் நகல் விலாசத்தை வைத்து, அந்த தாய்லாந்துக்காரியின் வீட்டைக் கண்டுபிடிக்க முயற்சித்தேன். ஆனால், .வழி தெரியாமல், திக்கு முக்காடினேன்.

 

போனமாதம், சென்னையில் இருந்து ராசக்காபட்டி வந்ததும்,  நான் முதலில் பார்த்தது,  அரண்மனையாரைத்தான். அந்த. இற்றுபோன பாஸ்போர்ட் நகலை,  அரண்மனையிடம் காட்டினேன்.

 

“தாய்லாந்து போய் எல்லாம், நம்மால் எப்படித் தேடமுடியும் அரண்மனை? எல்லாத்தையும் மறந்துட்டு,  உடம்பு தேறுவதைப் பாருங்கள் அரண்மனை” என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன்.

 

ஆனால், அரண்மனையோ விடுவதாக இல்லை. .

 

அந்த. இற்றுபோன பாஸ்போர்ட் நகலையே,  பார்த்துப்பார்த்து சந்தோசப்பட்டுக்கொண்டு இருந்தார் அரண்மனையார். என்னமோ சந்திரனையே, பார்த்துவிட்டது போல இருந்தது அவர் சந்தோசம். எனக்கு, உள்ளே குபீர் என்று சிரிப்பு வந்தது. கஷ்டப்பட்டு அடக்கினேன்.

 

கட்டிலுக்கடியில் இருந்து, நாலு பணக்கட்டுக்களை எடுத்து, என் முன்னால் போட்டார் அரண்மனையார். அப்புறம்,  கை எடுத்துக் கும்பிட்டார்.

 

“நண்பா.. உன்னால்தான்,  இன்னைக்கு நான், சந்தோசமாக இருக்கிறேன். ரொம்ப ரொம்ப நன்றி நண்பா. நிச்சயம் எனது சந்திரன், எனக்குக் கிடைப்பான். அவன் வந்த பின்னால்தான் எனது உயிர் போகும். தயவுசெய்து,  நம்பிக்கையைத் தளரவிடாமல்,  தாய்லாந்துவில் போய்த் தேடு.. கணக்கப்பிள்ளைக் கிட்டே சொல்லி,  நான் உனக்கு பாஸ்போர்ட் ரெடி பண்ணச்சொல்றேன்”

 

அரண்மனையாரின் பிடிவாதமே,  என்னைத் தாய்லாந்து வரவைத்து விட்டது. “எப்படியும், இந்த முறை,  நான் சந்திரனோடுதான் நான் போவேன்” நான்,  எனக்குள் பேசிக்கொண்டேன்.

 

எப்படியோ,  அங்கேயும்,  இங்கேயும் அலைந்து,  ஒரு தமிழ் உணவகத்தைக் கண்டு பிடித்துவிட்டேன். அங்கிருந்த, ஒரு வாலிபப் பையனிடம்,  கையோடு கொண்டு வந்து இருந்த,  அந்த இந்திக்காரியின் பாஸ்போர்ட் நகலைக் காட்டினேன்.

 

“தம்பி.. இந்த விலாசத்துக்கு, நான் எப்படியும் போகணும்ப்பா”. தமிழ், பேசுகிற ஒருவரைப் பார்த்த சந்தோசத்தில்,  அந்தத் தம்பி,  என்னை அந்த விலாசம் இருந்த இடத்துக்குக் கூட்டிக்கொண்டு போனான்.

 

பங்களா மாதிரி இருந்த வீட்டின்,  கிட்டத்தட்ட எல்லாப் பகுதியிலும்,  மசாஜ் பார்லர்கள் இருந்தன. “மசாஜ்.. மசாஜ் என்று கூவும் தாய்லாந்துப் பெண்கள் ஒருபுறம்,  அரைகுறை ஆடையில்,  இந்தியில் கத்தும்,  இந்திப் பெண்கள் ஒருபுறம்.. .கூடவே, அந்தப் பெண்களைக் காவல் காத்த,  சில ரவடி ஆண்கள் ஒருபுறம்.

 

எனக்கு, அங்கு உள்ள சூழ்நிலை புரிந்து போனது. “சந்திரனைக் கூட்டிக்கொண்டு போக வந்து இருக்கிறேன்” என்று நான்,  அவர்களிடம் சொன்னால்,  நிச்சயம், எனக்கு அடியும் உதையும்தான் கிடைக்கும். நான், மிகவும், எச்சரிக்கையாய் இருந்தேன். மனது, திக் திக் என்று அடித்துக்கொண்டது.

 

நான்,  அந்த,  அரைகுறை ஆடை இந்திப் பெண்கள் பக்கம் நடந்து போனேன். வாயெல்லாம், பல்லாக ஒருத்தி என்னை,  மாடியில் இருந்த ஒரு அறைக்குக் கூப்பிட்டுப் போனாள்.

 

“ஆஃப் அவர் ஹண்ட்ரட் பாட்.. ஒன் அவர் டூ ஹண்ட்ரட் பாட்… பாடி மசாஜ்.. ஆயில் மசாஜ்..” என அந்த இந்திக்காரி, சொல்லிக்கொண்டே போனாள்.

 

நான் நிறைய நேரம் அங்கே இருந்தால்தான், சந்திரனைக் கண்டு பிடிக்க முடியும். எனவே,  மசாஜ் நேரத்தை முடிந்த வரை,  அதிகமாகக் கூட்டினேன். அங்கு இருந்த, பெண்கள் களுக் எனச் சிரித்தார்கள். எனக்கு அப்போது, அந்தச் சிரிப்பிற்கு, அர்த்தம் விளங்கவில்லை. அப்புறம்தான் புரிந்தது. நேரத்தைக் கூடினால்,  மசாஜ் உடன்,  மற்ற பலான, இத்தியாதி விசயங்களும் கிடைக்கும் என்று.

 

மஸாஜ் ஆரம்பித்த நேரத்தில் இருந்தே,  நான், “குமார் டிரான்ஸ் ஜென்டர்.. சந்திரன் ட்ரான்ஸ் ஜென்டர்..”  என்று புலம்பிக்கொண்டே இருந்தேன். நான் புலம்பியதைக் கேட்ட அந்த மசாஜ் பெண்கள், ஆரம்பத்தில்,  சிரித்துக் கொண்டே இருந்தார்கள். ஆனால், நேரம் ஆக ஆக,  நான் விடாது, “குமார் டிரான்ஸ் ஜென்டர்.. சந்திரன் ட்ரான்ஸ் ஜென்டர்..” என்று புலம்பிக் கொண்டே இருந்தது,  அந்த இந்திப் பெண்களுக்கு, கோபத்தை வரவழைத்துவிட்டது போலும். அவர்கள், கோபம், எனக்கு பயத்தை வரவழைத்தது.

 

கொஞ்சம் தடிமனாக இருந்த பெண்,  ஏதோ இந்தியில் கத்தினாள். அவள் கத்திய அடுத்த கணம்,  எல்லாப்பெண்களும்,  என்னை விடடு,  அகன்றார்கள். எனக்கு,  என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. ஏற்கனவே, எனது ஆடைகளை எல்லாம் அவர்கள் கழற்றிவிட்டபடியால், நான் ஒரு சின்னத் துண்டுடன், கிட்டத்தட்ட,  அம்மணமாய்த்தான் படுத்து இருந்தேன்.

 

கடைசியில் வேறு ஒரு அழகிய பெண் வந்தாள். என் அருகே வந்த,  அவள் மட்டும்,  எனக்குத் தனியாக மசாஜ் செய்தாள். அந்த ஸ்பெஷல் மசாஜ், என்னை என்னெனவோ செய்தது.

 

“வெரி குட்? வெரி குட்?” என்று,  அவள் என்னிடம் ஆர்வமாக வினவிய போது,  எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. அவள் குரல் மட்டும்,  பெண் குரல் அல்ல. அவள் குரல் ஒரு ஆண்குரல். அப்போதுதான்,  அவள் ஒரு திருநங்கை என்பதை நான் புரிந்துகொண்டேன். “ஓ .. நான் டிரான்ஸ் ஜென்டர், டிரான்ஸ் ஜென்டர் என்று புலம்பியதும், அந்த இந்திப் பெண்கள், இந்தத் திருநங்கையை அனுப்பி விட்டார்கள்.

 

இது வரை,  நான் எந்தத் திருநங்கையையும் தொட்டதில்லை. அவர்கள், கிட்ட வந்தாலே,  காறிக்காறி,  உமிழத்தான் செய்து இருக்கிறேன். ஆனால், இன்றோ நிலைமை வேறு.

 

ஒரு தேர்ந்த பெண்ணைப் போல,  அவள் எனது உடலைப் பிசைந்து எடுத்தாள். அவள் கைகளில்தான் என்னே ஒரு மென்மை!… என் உடல், அவள் கைகளின் அசைவில்,  கிறங்கியது.

 

கொஞ்சம் கொஞ்சமாய்க் கீழிறங்கிய அவள் கைகள்,  இப்போது என் அந்தரங்கப் பகுதிக்குள் இருந்தது. நானோ,  அவளைத் தடுக்கும் நிலையிலேயே இல்லை. அவள், என்னெனவோ செய்ய ஆரம்பித்தாள்.

 

உண்மையைச் சொன்னால்,  செக்ஸ் விஷயத்தில் நான் ஒன்றும் ராமன் இல்லை. என் வாழ்க்கையில்,  இதுவரை நான் எத்தனையோ பெண்களை,  படுக்கையில் பார்த்துவிட்டேன். நான்,  தாழ்த்தப்பட்டவன்தான். ஆனால், இந்த பெண்கள் விஷயத்தில் மட்டும்,  கிராமத்தில்,  எந்த ஆணும்,  மேல்சாதி, கீழ்சாதி என்று பார்க்க விரும்புவதில்லை.

 

மேல்சாதிக்காரன்,  கீழ்சாதிக்காரப் பெண்களை மடக்குவதும்,  ‘தண்டனை கடுமையாக இருக்கும், உயிரே போய்விடும்’ என்ற, பின்விளைவுகள் தெரிந்தும்,  என்னைப்போன்ற ஆண்கள்,  மேல்சாதிப் பெண்களை,  மடக்குவதும், கிராமங்களில்,  இன்றும் நடப்பவைதான். இந்த, மடக்கும் திறமையில்,  நானும் சளைத்தவனல்ல.

 

ஆனாலும், அந்தப் பெண்கள் கொடுக்க மறுக்கும்,  இந்த சுகத்தை,  என் அருகில் இருந்த மசாஜ் திருநங்கை,  வாய் கூசாமல், வழங்கிக்கொண்டு இருந்தாள். நான், சொர்க்கத்திற்கு,  போவதும்,  வருவதுமாய்,  கொஞ்ச நேரம் இருந்தேன். ஒரு கட்டத்துக்கு மேல், என்னால் தாங்க முடியவில்லை.

 

கம்பும்,  கேழ்வரகும்,  சோளமுமாயத் தின்று தின்று,  தினவெடுத்த எனது கிராமத்து உடல், இப்போது, அளவுகடந்து துடித்தது. நான்,  அவளுக்கு, கையால் சைகை காட்டினேன். அவள்,  உடைகளை ஒவ்வொன்றாகக் களையலானாள்.

 

“இவள் உடை களைந்த பின் எப்படி இருப்பாள்?” உடனே,  எனக்கு சைதாப்பேட்டை குப்பம்மா சொன்ன,  கொல்லன் பட்டறையும்,  பழுத்த இரும்புக் கம்பியும்,  ஒருமுறை, நினைவில் வந்து போனது. எதுவானாலும், பரவாயில்லை. இதற்கு மேல், என் உடல் தாங்காது. எல்லாவற்றிற்கும் நான் தயார் ஆகி விட்டேன்.

 

ஆனால், அவள் அப்படி இல்லை. அறுவை சிகிச்சை செய்து,  ஒரு பெண் போலத்தான் அந்தரங்க அமைப்பில் இருந்தாள். எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

 

எல்லாம், முடிந்தது. நான்,  அந்தத் திருநங்கைக்கு,  அரண்மனையார் பணத்தை,  வாரிக் கொடுத்தேன். அவள் ரொம்பவும் மகிழ்ந்து போனாள்.

 

இப்போதுதான்,  எனக்கு சந்திரன்,  நினைவில் வந்தான். நான் மறுபடியும் “குமார் ட்ரான்ஸ் ஜென்டர்.. நீ எங்கே இருக்க” என்று புலம்ப ஆரம்பித்தேன்.

 

“ஓ உங்களுக்குக் குமாரி வேண்டுமா?” என்று அவள் தமிழில் கேட்டபோது, நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. “ஆம்” என,  மாடு போலத் தலை ஆட்டினேன். கடைசியில், நான் குமாரைக் கண்டுபிடித்து விட்டேன்.

 

குமார் என்ற குமாரி,  வீட்டின் கீழே பார்த்த, அந்த இந்திக்காரப் பெண்கள் போலவே,  உடை அணிந்து இருந்தாள். “என்ன வேணும்.. யார் நீங்க?” என்று அவள் கேட்டபோது,  நான் மடை திறந்த வெள்ளமானேன்.

 

அரண்மைனையார்,  சந்திரன் என்று ஒன்று விடாமல்,  எல்லாக் கதையையும், அவளிடம் சொன்னேன். அவள் கண்கள் வியப்பால் விரிந்தது. அவளால்,  அவள் கிராமத்தில் இருந்து ஒருவர் வந்து இருக்கிறார் என்பதை, முதலில் நம்பவே முடியவில்லை. ரொம்ப நேரம் கழித்துத்தான் நம்பினாள்.

 

நான், பொறுமையாய் இருந்தேன். “சந்திரன் இப்ப எங்கம்மா இருக்கான்?”. எனக்கு மூச்சு வாங்கியது.

 

“நானும் சந்திரனும், தாய்லாந்துக்கு, சேர்ந்துதான் வந்தோம் மாமா. ஆனால், வந்தவுடனேயே,  எஜமானி அம்மா,  என்னை இங்கேயும், சந்திரனை இன்னொரு இடத்துக்கும் அனுப்பி விட்டாள். எஜமானி ஏற்பாடு செய்தபடி, எனக்கு அறுவைச்சிகிச்சை நடந்தது. நிச்சயம்,  சந்திரனுக்கும், அறுவைச் சிகிச்சை நடந்து இருக்கவேண்டும். ஆனால் அதன்  பிறகு..”

 

“என்ன அதன் பிறகு..” நான் அவசரப்பட்டேன்.

 

“மூணு மாசம் கழிச்சுத்தான் எனக்குத் தெரியும். சந்திரனை,  இந்தியாவிற்கே திருப்பி அனுப்பி விட்டார்களாம்.. சந்திரன்,  எஜமானி சொன்ன, செக்ஸ் தொழிலுக்கு ஒத்துழைக்கவில்லையாம். கடைசியில், ‘செலவழித்த பணம், போனாலும் போகிறது’ என்று,  எஜமானி,  அவளை, இந்தியாவிற்கே அனுப்பி விட்டாளாம். நான் மட்டும், இங்கேயே  தங்கி விட்டேன். இங்கே, பணத்திற்குப் பணம்,  சுகத்திற்கு சுகம்.” குமாரி,  பேச்சை நிறுத்தினாள்.

 

நான், ஒன்றும் பேசவில்லை. பேசும் நிலையிலும் நான் இல்லை.

 

என் உடல் மட்டுமல்ல.. மனமும் சோர்வடைந்து இருந்தது. தங்கியிருந்த ஓட்டலுக்கு நடந்து வந்து,  கட்டிலில் ‘பொத்’ என்று விழுந்தேன்.

 

“அரண்மனை… என் நண்பனே. உனக்கு ராசியில்லை போலும்.. நான் எவ்வளவுதான் முயற்சிக்க முடியும் நண்பா?”

 

எனது கண்களில், கண்ணீர் என்னையும் அறியாமல் வந்தது. “இனி, இந்த நாட்டில் இருந்து பிரயோசனம் இல்லை. ஊருக்குக் கிளம்ப வேண்டியதுதான்.” நான் அப்படியே தூங்கிப் போனேன்..

 

ஆயர் டேனியல் – திண்டுக்கல்.

ரோஸி சந்திரன் எந்தப் பாவமும் அறியாதவள். அவளை, “வீட்டை விட்டு வெளியே போ” என்று, உண்மையிலேயே, நான் வேதனைப்படுத்தி விட்டேன். .

 

நான் சென்னையில் திருப்பணி செய்த போதும் சரி, சுமார் ஒரு வருடத்துக்கு முன், திண்டுக்கல்லுக்கு மாற்றலாகி, இந்தத் திருச்சபைக்கு வந்த போதும் சரி, “டேனியல் ஒரு நல்ல ஆயர்” என்றே பெயர் வாங்கி இருக்கிறேன். அந்தப் பெயர், ரோஸி சந்திரனால் கெட்டு விடுமோ, என்ற எனது சுயநலமே, என்னை அவ்வாறு, அவள் முன்னால், பேச வைத்துவிட்டது.

 

“ஓ கர்த்தரே.. சாத்தான் என்னுள் புகுந்துகொண்டான். அவனை, அப்புறப்படுத்தும். ஒன்றும் அறியாத ஒரு அப்பாவியை நான் கடிந்து கொண்டேன் சுவாமி.. என்னை மன்னியும்”. நான், கர்த்தரிடம் மன்றாடினேன்.

 

அப்போதுதான், எனக்கு நினைவில் வந்தது. நாளை, சென்னையில் இருந்து, தலைமை ஆயர் வருகிறார். அவர் வருகை நிமித்தம், நிறைய நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து இருந்தோம். அதில் ஒரு நிகழ்ச்சியில், ரோஸி சந்திரன் சுமார் ஒரு மணிநேரம். பேருரை ஆற்ற இருக்கிறாள். இது அவளுடைய, முதல் சுவிசேஷச் சொற்பொழிவு. “ச்சே, இந்த முக்கியமான நேரத்தில், நான் அவளைக் கடிந்து கொண்டேனே”. என்னை நானே, நான் நொந்து கொண்டேன்.

 

நள்ளிரவு ஆகிவிட்டது. நான் ரோஸி சந்திரனைக் கவனித்தேன். அவள் ஏற்கனவே தூங்கப் போய் விட்டாள். நான், சாப்பாட்டுக்கூடம் சென்றேன். ரோஸி எனக்காக, சாப்பாடு எடுத்து வைத்து இருந்தாள். “என்ன ஒரு நல்ல இதயம்?” நான், அந்த சுவையான உணவை, ஏனோ தானோவென்று சாப்பிட்டு முடித்துவிட்டுப் படுக்கப்போனேன்.

 

அடுத்த நாள், அதிகாலைத் திருப்பலியை, தலைமை ஆயரே நடத்தி வைத்தார். மற்ற ஆயர்கள் யாவரும், அவர் பின்னால் நின்று கொண்டோம்.

 

அப்புறம், விழா மேடைக்கு வந்தார் தலைமை ஆயர். தலைமை ஆயர் வந்து இருக்கிறார் என்பதால், கூட்டம்,  என்றுமில்லாத அளவிற்குப் பெருந்திரளாக வந்து இருந்தது. அலைகடலேனத் திரண்டிருந்த அந்தக்கூட்டத்தை, ஏற்கனவே ஏற்பாடு செய்து இருந்த, திருச்சபைச் சேவகர்கள், அங்கங்கே கட்டுப்படுத்திக்கொண்டு இருந்தார்கள்.

 

பின்னர், தலைமை ஆயர் வருகையை ஒட்டி, ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு நிகழ்ச்சிகள், ஒன்றொன்றாய் நடந்து முடிந்தன. நான், ரோஸி சந்திரன் எப்போது பேசுவாள் என்று, ஆவலாகக் காத்து இருந்தேன்..

 

ரோஸி பேசும் நிகழ்ச்சி வந்தது. ரோஸி மேடை ஏறினாள். முதலில், எல்லாம் வல்ல ஆண்டவரைத் தோத்திரம் செய்தாள். “ஜீவ அப்பம்” இதுதான் அவள் தலைப்பு..

 

ஆஹா.. என்ன அருமையான பேச்சு, அவள் பேச்சு தெரியுமா! உண்மையைச் சொன்னால், அவள் பேசவில்லை. இறைவன்தான், அவளில், புகுந்து கொண்டு பேசினான். .

 

ஜீவ அப்பம் குறித்து, எத்தனை எத்தனை மேற்கோள்கள். இதுவரை யாரும் சிந்தித்திராத, எத்தனை, எத்தனை புதிய சிநதனைகள். விவிலியத்திற்குள், புகுந்து புகுந்து அவள் விளையாடிய, ஆன்மீக விளையாட்டில், எல்லோரும் அசந்து போனார்கள். ..

 

பேரருவி ஒன்று, உயரமான மலையிலிருந்து, கொட்டும் ‘சோ’ வென்ற சத்தத்தைப் போன்ற ரோஸியின் பேச்சு. அப்படிக் கொட்டிய அருவி நீரில் இருந்து கிளம்பும் நீர்த்திவலைகள், உடலுக்குத் தரும், குளிர்ச்சியைப் போன்ற ரோஸியின், கீர்த்தனை கானமழை. பேச்சைக் கேட்டுக்கொண்டு இருந்த கூட்டம், ஒரு பரவசத்தின் எல்லைக்கே போய், மெய்சிலிர்த்து நின்றது. எனக்கு, என்னையும் அறியாமல், கண்ணீர் வந்தது. ரோஸி, வென்று விட்டாள்..

 

இதோ, ரோஸி, பேச்சை முடித்து விட்டாள். உடனே கிளம்பிய, கைதட்டல் ஆரவாரம். “அல்லேலுயா” என்ற பெருஞ்சத்தம். இரண்டும், முடிய ரொம்ப நேரம் ஆனது.

 

கடைசியில், தலைமை ஆயர் பேசினார். “ரோஸி சந்திரன் என்ற இந்தத் திருநங்கை, தேவனின் ஒரு ஆன்மீக யாழ். இனி, இந்த யாழ், இந்தத் திண்டுக்கல் திருச்சபைக்கு மட்டுமே சொந்தமல்ல. தமிழகம் முழுவதற்கும், இந்த யாழ் சொந்தம். இந்த யாழின் இசை, தமிழகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் ஒலிக்க வேண்டும். நம், திருச்சபையின் தலைமைப்பீடம், அதற்கு ஏற்பாடு செய்யும்.” என்று தலைமை ஆயர் கூறியதுதான் தாமதம். கரகோஷம், விண்ணைப் பிளந்தது.

 

இதோ ரோஸியின் வாழ்க்கைத் தடம் மாறிப்போனது. ரோஸி சந்திரன், இப்போது என்னோடு வசிக்கவில்லை. ஆனால், என் இதயத்தில் அவள் இன்னும் இருக்கிறாள். திண்டுக்கல் அண்ணா நகரில் வசிக்கும் அவள், இப்போது தமிழகம் முழுவதும், சுவிசேஷப் பிரசங்கம் செய்கிறாள். அவள் செல்லும் கூட்டங்களுக்கு எல்லாம், கிறித்தவர் கூட்டம், பெருந்திரளாகப் போகிறது.

 

திண்டுக்கல் நகரம் மட்டுமல்ல. தமிழகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம், “திருநங்கை ரோஸி சந்திரன் அழைக்கிறார்’ என்ற, பெரிய, பெரிய போஸ்டர்கள். கிறித்தவ உலகத்தின், ஒரு புதிய தேவதை என்ற பாராட்டு வேறு.

 

அவள் ஆன்மீகச் சாதனையின் முன்னால், என் ஆன்மீகச் சாதனை, இப்போது, மலையின் முன், மடு போல ஆகவிட்டது. ஆனாலும், அதில், எனக்கு, என்றும் பெருமைதான்.

தொடரும்

Series Navigationஅருணாசலக் கவிராயரின் ராம நாடகம்என் அடையாள அட்டைகளைக் காணவில்லை
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *