ஒரு கதை ஒரு கருத்து – தி.ஜானகிராமனின் பாயசம்

author
0 minutes, 3 seconds Read
This entry is part 4 of 8 in the series 28 மார்ச் 2021

 

 

 

 

 

அழகியசிங்கர்


           

            ‘பாயசம்’ என்ற கதையைப் படித்தேன்.  சாமநாது என்பவரின் மன வக்கிரம்தான் இந்தக் கதை.  சிறப்பாக எழுதி உள்ளார் தி.ஜானகிராமன். 

 

            ஆரம்பிக்கும்போதே தி.ஜானகிராமன் இப்படிக் குறிப்பிடுகிறார். 

 

            ‘சாமநாது அரசமரத்தடி மேடை முன்னால் நின்றார்.  கல்லுப் பிள்ளையாரைப் பார்த்தார்.  நெற்றி முகட்டில் குட்டிக் கொண்டார். தோப்புக்கரணம் என்று காதைப் பிடித்துக்கொண்டு லேசாக உடம்பை மேலும் கீழும் இழுத்துக்கொண்டார்.’

 

            இதையெல்லாம் செய்துகொண்டு வரும் தன் மனதில் வக்கிரத்தை வளர்த்துக்கொண்டு வருகிறார்.

 

            தன் அண்ணன் பையன் சுப்பராயன் பேரில் அவருக்கு அவ்வளவு ஆத்திரம்.  இந்தக் கதை முழுவதும் அதை வெளிப்படுத்துவதுதான்.  

 

            சாமநாது தன்னையும் தன் அண்ணன் பையன் சுப்பராயனையும் ஒப்பிட்டு மனத்திற்குள்ளே நடத்துகிற நாடகம்தான் இந்தக் கதை.

 

            யாரோ சொல்வதுபோல் மனசாட்சி குரலாக ஒலிக்கிறது. 

 

            உதாரணமாக,  ‘நீ என்ன சுப்பராயன் மாதிரி நித்யகண்டம் பூர்ண ஆயுசா?  சுப்பராயன் மாதிரி மூட்டு வியாதியா, ப்ளட் ப்ரஷரா, மண்டைக் கிறுகிறுப்பா உனக்கு?’ என்று யாரோ சொல்வதுபோல் சாமநாதுவின் மனக்குரல்ஒலிக்கிறது

 

            சாமநாதுவுக்கு எழுபத்தேழு வயது, சுப்பராயனுக்கு ஐம்பத்தாறு வயதுதான்.

 

            ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சாமுநாது சுப்பராயன் மீதுள்ள ஆத்திரத்தை வெளிப்படுத்துகிறார்.  உதாரணமாக நாதஸ்வரம் சத்திரத்திலிருந்து தொடங்குகிறது.  தெருவிலிருந்து தவில் சத்தம் தொடங்குகிறது.  பத்தரை மணிக்குமேல் தான் முகூர்த்தம்.  மணி எட்டு கூட ஆகவில்லை.  ‘சும்மா தட்டுகிறார்கள்.  அவனுக்குப் பொழுது போக வேண்டும்.’  இதை நினைத்துக்கொண்டு வரும்போது ஏன் சாமிநாதுவுக்கு சுப்பராயன் ஞாபகம் வரவேண்டும்?

 

            தவில் தட்டுபவனுக்குப் பொழுது போகவேண்டும்.  சுப்பராயனுக்கும் பொழுது போக வேண்டும்.  சுப்பராயன் பொழுதுபோகாமல்தானே ஏழு பெண்களையும், நாலு பிள்ளைகளைப் பெற்றான் என்ற ரீதியில் சாமுநாது யோசிக்கிறார்.

 

            அவருக்கு சுப்பராயனைப் பற்றி                 யோசிக்க யோசிக்கப் புத்தி பேதலித்துப் போனதுபோல் தோன்றுகிறது. புதுப்பாலத்தில் போகிற வருபவர்களைப் பார்க்கும்போது சுப்பராயன் மாதிரி தெரிகிறது. “

           

            சுப்பராயன் அந்த ஊருக்காக எல்லாம் செய்கிறான். பரோபகாரி.  ஊருக்குள் கரும்புப் பயிரைக் கொண்டு வந்தான்.  எதிரே அக்கரையில் நாலு இடத்தில் புகை, வெல்ல ஆலைப் புகை- எல்லாம் சுப்பராயன்.

 

            அதோ பள்ளிக்கூடம் – சுப்பராயன்தான் கொண்டு வந்தான்.பாலத்துக்கு ஓரமாக கோவாப்பரட்டி – சுப்பராயன்தான் கொண்டு வந்தான்.  சுப்பராயன் மூலம் ஊரே மாற்றமடைகிறது. ஏனோ    இதற்கெல்லாம் 

பெருமைப்பட வேண்டிய சாமிநாது ஆத்திரப்படுகிறார்.  

            ஏழெட்டு வருஷம் முன் இறந்து போன அவர் மனைவி வாலாம்பாள் குரல் கேட்கிறது.

            “சுப்பராயனைப் படிக்க வைக்க உங்களாலேயும் உங்க அண்ணாலேயும் மாசம் நாலு ரூபாய் அனுப்ப முடிந்ததா,” என்கிறாள் வாலாம்பாள்.

படிப்பின் கடைசி வருஷத்தில்

‘போரும் படிக்கதுன்னு’ சுப்பராயனை அழைத்துக்கொண்டு வந்து விடுகிறார் சாமநாது.

 

            படிக்க வைக்க முடியாத சுப்பராயன்.  ஊருக்கு வந்தான்.  ஓடிப்போனான். கோட்டையில் கடையில் உட்கார்ந்து கணக்கு எழுதினான்.  அங்கே சண்டை.  கடை வாடிக்கையாளர் ஒருவரிடமே கடன் வாங்கி பாதிப்பங்கு லாபத்திற்கு அதே மாதிரி மளிகைக்கடை வைத்தான்.  கடை வைத்தவுடன் மளமளவென்று முன்னுக்கு வந்துவிட்டான் சுப்பராயன்  இருபது வருடத்திற்கு முன்னால் இருபது லட்சம் சொத்து சேர்த்து விட்டான்.

 

            உள்ளூரிலேயே கால் பங்கு நிலம் வாங்கி விட்டான். அதையே பாகம் பண்ணி சாமநாதுவுக்கு பாதி கொடுத்தான்.  அதிலும் திருப்தி இல்லை சாமநாதுவுக்கு. அவர் பங்கு ஊருக்குச் சற்று எட்டாக் கையில் விழுந்தது என்று.  அது மட்டுமல்ல ஆற்றுப் படுக்கைக்கும் சற்று எட்டாக்கை.  சண்டை. அப்போதுதான்.   வாலாம்பாள் சொன்னாள்.  “ஒண்டியா நின்னு மன்றாடி சம்பாதிச்சதை, பாவம் சித்தப்பான்னு கொடுக்கிறான்”  என்று கிண்டல் செய்கிறாள்.

 

 

            இந்த இடத்தில் சாமநாது மனைவியைப் பார்த்து துடுக்காகப் பேசுகிறார். “அவனுக்கு  பரிஞ்சுண்டு கூத்தாடறதைப் பார்த்தா, நீ என் அம்படையாளா, எங்க அண்ணா ஆம்படையானான்னே புரியலை,” என்கிறார்.

 

            வாலாம்பாள் ‘தூ’ என்று துப்பிவிட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.  மூன்று நாள் அவளோடு பேசவில்லை.

 

            குளித்துவிட்டு வருகிறார்.  

 

            “சித்தப்பா, எங்கே போயிட்டேள்?” என்கிறான் சுப்பராயன்.  ஜானகிராமன் இந்த இடத்தில் ஒரு வரி எழுதியிருக்கிறார்.  ‘கிராமமே கலியாண பெண்போல் ஜோடித்துக்கொண்டிருக்கிறது’ என்று எழுதியிருக்கிறார்.  

 

            “சித்தப்பா, எங்கே போய்ட்டேள்?”

 

            மாலை மாற்றுகிறார்கள் – பெண்ணும் பிள்ளையும்.  சாமநாதுவிற்கு மூச்சு முட்டிற்று.  மெதுவாக நகர்ந்தார்.  வியர்வை சுடுகிறது.  சாற்றுக்காகக் கொல்லைப்பக்கம் நடந்தார். 

 

            கோட்டையடுப்புக்கு இப்பால் மேடைமீது ஒரு பாரி ஜோட்டுத் தவலை.  இடுப்பளவு – மேல் வயறளவு உயரம் பாயசம் மணக்கிறது.  திராட்சையும் முந்திரியுமாக மிதக்கிறது.  ஐந்நூறு அறுநூறு பேர் குடிக்கிற பாயசம்.

 

            இந்த இடத்தில் விபரீதமான புத்தி தோன்றுகிறது சாமநாதுவுக்கு.  அவர் ஒருத்தரே கவிழ்த்து விடுவதாக நினைக்கிறார். அதுவும் சாத்தியம்தான்.  சாமநாது இரண்டு கைகளையும் கொடுத்து மூச்சை அடக்கி, மேல்பக்கத்தைச் சாய்த்தார், ப்பூ – இவ்வளவுதானே.  அடுத்த நொடி, வயறளவு ஜோட்டி, மானம் பார்க்கிற வாயை, பக்கவாட்டில் சாய்த்துப் படுத்து விட்டது.  பாயசம் சாக்கடையில் ஓடிற்று.

 

            கொட்டிவிட்டு பெரிதாகச் சத்தம் போடுகிறார்.  தன் பயத்தை மறைக்க.  “இத்தனை பெரிய எலியைப்பாயசத்திலெ நீஞ்சவிட்டுவிட்டு இத்தனை பாயசத்தையும் சாக்கடைக்கா படைச்சேள் – கிராதகன்களா”.  என்றெல்லாம் சத்தம் போடுகிறார். 

 

            “எப்படிப்பா இத்தணாம் பெரிய ஜோட்டியை சாச்சேள்”  என்கிறாள்.அவர் பெண்.  பெண்ணை துரத்தி விடுகிறார் அங்கிருந்து.

 

            கதை முடியும்போது வாலாம்பாள் பாடுகிற மாதிரியிருக்கிறது. 

 

            இந்தக் கதையைப் படித்து முடித்தபின் எனக்கு இந்தக் கதையே ஞாபகமாக வந்தது.  சாமநாது மாதிரி நம்மிடம் பலர் நடமாடிக் கொண்டிருக்கிறார் என்று தோன்றியது.  “நாமும் வேற வேற விதமா சாமநாதுவா!”

 

            அற்புதமாய் கொண்டு போய் முடித்திருக்கிறார் தி. ஜானகிராமன். ஒவ்வொருவரும் அவர்களுக்குள்ளே உள்ள சாமநாதுவை வெளியே விரட்ட வேண்டும்.  இப்படிச் சிந்திக்க வைத்த கதையை எழுதிய தி.ஜானகிராமன் வாழ்க.

 

            இலக்கியத் தரமான கதை இப்படித்தான் கட்டப்பட்டிருக்க வேண்டும். யோசிக்க யோசிக்க இந்தக் கதை நம்மை குடைந்து கொண்டிருக்க வேண்டும். கடைசி வரை நம்மால் இதை மறக்க முடியாது ஏனென்றால் நாம் இன்னும் சாமநாதுவாக இருக்கும் வரை. 

 

  

             

           

 

Series Navigation[சென்ற வாரத் தொடர்ச்சி]கடலூர் ரகுவிற்கு அஞ்சலி
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *