மலை சாய்ந்து போனால்…

author
0 minutes, 2 seconds Read
This entry is part 6 of 8 in the series 28 மார்ச் 2021

 

 

மஹ்மூது நெய்னா .எஸ் – கீழக்கரை

 

சரியப்போகும் பெரும் மலையை சரியாமல் தடுத்துக் கொண்டிருக்கும் குட்டிச் சுவரை எங்கேயாவது பார்க்க முடியுமா?  நிச்சயமாக எங்களது பள்ளி விடுதியில் பார்க்க முடிந்தது.. மலை அடிவாரத்தில் இருக்கும் விடுதியின் காம்பவுன்டு சுவரை எப்போது நெருங்கினாலும், மலை சரிந்து நமது தலையில் விழுந்து விடும் என்றே தோன்றும், இறைவனின் அளப்பெரும் அருளால் இயற்கையாகவே அமைந்த விந்தை அது..

 

நம்ம பிரதமரும் சீன அதிபரும் பரஸ்பரம் கைகுலுக்கி போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்துக் கொண்ட மகாபலிபுரத்து மலைச் சரிவில் உருண்டுவிடும் தோற்றத்தில் நிலை கொண்டிருக்கும் உருண்டை பாறையை போன்றுதான்…  நினைத்த நேரத்தில் அப்படியே சரிந்து உலகை அழித்துவிடுவேன் என்ற எச்சரிக்கை விடுப்பதற்காக மலை சரியாமல் சரிவது போல் தோற்றம் காட்டிய நாகமலை  அடிவாரத்தில் இருந்தது எங்கள் பள்ளியின் விடுதி.  வடக்கே அரனாக  கிடந்த மேற்கு தொடர்ச்சி மலையின் பேரங்கமான  இந்த நாகமலைக்கு பின்னிருந்து  அப்போதுதான் சூரியன் லேசாக வெளிச்சம் காட்டி வெளியேறிக் கொண்டிருந்தது.

 

 

ஏய்.. மாப்ளே..  இங்கன வந்து குளி…

தண்ணீ ரெம்பி கிடக்குயா இங்கே… என்றான் சிவராமன்..

 

இருளில் வெள்ளை நூல் விட்டுக் கொண்டிருந்த  ஒரு விடிகாலை அது…

கட்டம் கட்டமாக நீண்டு வரிசையாக கட்டப்பட்டிருக்கும் பத்துக்கு மேற்பட்ட சிமெண்ட்  நீர் தொட்டிகளில்  சிவராமன் குறிப்பிட்ட நாலாவது தொட்டியில் நீர் நிரம்பிதான் கிடந்தது .. தொட்டியின் இருபக்கமும் ஜக்கில் நீரை மெண்டு குளிக்கும் விடுதி மாணவர்கள் எண்னிக்கையும் குறைவாக இருந்தது…

 

மலைப்பாம்பு சைஸில் முதல் தொட்டிக்கு மேலே இருக்கும் வாயகன்ற இரும்பு பைப்பில் இருந்து ‘ தட தட” வென மொத்தையாக  வந்து விழுந்த தன்னீர் ஒவ்வொரு தொட்டியாக நிறைந்து, தளும்பி வழிந்தும், தொட்டிக்கு கீழே இருக்கும் துளை வழியாக ஊடுறுவி எல்லாத் தொட்டிகளையும்   நிரப்ப முற்பட்டுக் கொண்டிருந்தது.. எந்த தொட்டியிலும் நீரை நிரம்ப விடாமல் மாணவர்கள் அடித்து பிடித்து  மெண்டு தலையில் ஊற்றிக் கொண்டிருந்தனர்..

 

இந்த குளியல் தொட்டிகளுக்கு  பூமியின் பாதாளத்தில் வற்றாது ஓடிக் கொண்டிருக்கும் நாகலோகத்து பாலாற்றில் இருந்துதான் இந்த மலை”பம்பு” தன்னீரை உறிந்து வெளியில் பாய்ச்சி  குளிக்கத் தருகிறதோ.. என்று சில சமயம் நினைக்கத்தோன்றும்…நீரில் அவ்வளவு தெளிவு…கணம், நிறைவு எல்லாம்…

 

 

 

“ப்ரேயர் பெல் அடிச்சுடுவாய்ங்க.. இப்ப அப்பா சாரு குச்சிய எடுத்துட்டு வந்து விளாசப்போறான் பாரு… சீக்கிரம் எடத்த காலி பன்னு  பாய்… டைம் ஆகுது…

என அவசரப்படுத்தினான் சிவராமன்.

 

ஏய்…இருப்பா.. எண்ணை வழுக்கு இன்னும் போவல… இந்தா வந்துடுறேன்…. என்றேன்..

 

தலைக்கு நல்லெண்ணை தேச்சு குளித்ததால் உடலில் இன்னும் வழுக்கு ஒட்டிக் கொண்டிருந்தது. சிவராமன் தந்த அவசரத்தை

அலட்சியபடுத்திவிட்டு  தண்ணீரை இன்னும் அள்ளி  ஊற்றிக் கொண்டே இருந்தேன்.

 

விடுதியில் வாரந்தோறும் ஞாயிறு அன்று  விருதுநகர்  வி.வி. மில்லில் தயாரிக்கப்பட்டு விடுதிக்கு வந்து சேரும் எள்ளில் கசக்கி எடுத்த சுத்தமான நல்லெண்ணயும் கட்டியான வாசம் கிளப்பும் புலிமார்க் சீகக்காய் பொட்டலமும் தருவது வழக்கம், மதுரை நாடார் மஹாஜனசங்கத்தின் அனுசரனை அது. பழைய  ஹார்லிக்ஸ் பாட்டிலில் வாரா வாரம் சேகரித்து வைத்த எண்ணையை இட்லி பொடியில் குழைத்து காலை டிபன் சாப்பிடவும்,  தலைக்கு தேய்க்கவும் பயன்படுத்துவது  விடுதிவாசிகளின் வழக்கம்.

 

“நீ பச்சப்புள்ளயா இரிக்கும்போது, மீராசா காக்கா கடை நல்லெண்ணயை லேசா சூடுகாட்டி மேலுபூரா தேச்சி மட்டப்பாய்ல வெயில் சுள்ளுன்னு அடிக்கும் போது வெறுந்தரைல வாப்பிச்சா படுக்கப்போடுவாஹா… நீ கைய கால உதறிக்கிட்டு  கிடப்பா.. அப்போ..இஞ்சி இடிக்கிற செம்பு உலக்கைய வச்சி புள்ளைய சுத்தி வெறும் தரையில் நங்.. நங் .. என இடிப்பாஹ…சத்தத்துல  நீ குலறுவா.. அப்படி செஞ்சாதான்..நெஞ்சுக்கு பலம்னு சொல்வாஹா…

என உம்மா சொன்னது என்றோ   நினைவுக்கு வந்தது. கூடவே மீராசா காக்காவின் காளைகள் வட்டமடிக்கும் செக்கு மண்டியும்.. புண்ணாக்கு வாசமும்தான்..

 

வாழ்வில் எதிர்காலத்தில் ஏற்படும் இன்னல்களால் ஏற்படும் இதய பதட்டத்தை சமாளிக்கவும்,  பேரிடியின் சத்தத்தை  பதறாமல் எதிர் கொள்ளவும் உலக்கையை தரையில் இடித்து அதிர்வுகளை ஏற்படுத்தி  வாப்பிச்சா குழந்தையிலேயே இதயத்துக்கு உரம் ஏற்றி இருக்கிறார்கள்.. 

 

நல்லெண்ணக்கும் நெஞ்சுரத்துக்கும் இடையே இருந்த பினைப்பு ஆச்சரியம் தந்தது .. என்ன ஒரு மருத்துவ ஞானம்..இஸ்லாமிய பென்மனிகளின் ஞானங்களை இந்த சமூகம் அவ்வளவாக அங்கீகரிப்பதில்லை.  இஸ்லாமிய ஞான மரபிலிக்கியம் படைத்த கீழக்கரை சூபி ஞானி ஆசியா என்ற உசக்கம்மாவுக்கும், தமிழில்  புனைவிலக்கியம் படைத்த நாகூர் சித்தி ஜுனைதா என்ற ஆச்சிம்மாக்கும் கூட இதே நிலைதான்…

 

நாங்கள்லாம் பெரிய புள்ளையா இரிக்கிம் போது கூதக்காலத்துல செம்மறி ஆட்டுக்கிடாக் கொழுப்ப தனியா எடுத்து  நல்லெண்ண ஊத்தி மன்னு சட்டில வச்சி நல்லா சுருட்டிஉட்டு திம்போம்.. மேலுக்கு  கூத தெரியாது ” என்பார்கள் வாப்பிச்சா… 

 

குளிரில் உடல் கன கனப்புக்கு ஆட்டுக் கொழுப்பு சாப்பிடுவது நல்லது என பின்னொரு நாள் சென்னை மண்ணடி, அங்கப்பன் நாயக்கன் தெருவில் யூனானி மருத்துவ கிளினிக் வைத்திருந்த  டாக்டர் அமீர் ஜான் சொன்னபோது வாப்பிச்சாவின் மருத்துவ ஞானத்தை மெச்சிக்கொண்டேன்.

 

இந்த எண்ணை தேய்த்து குளிக்கும் வழக்கம் எனது  நீண்ட காலம் தொடர்ந்தது, ஒவ்வொரு வெளளிக்கிழமை ஜும்மா அன்று நல்லெண்ணய் தேய்த்து சுடுதன்னீரில் குளிக்க நிர்ப்பந்தம் செய்வதை வாப்பிச்சா மறப்பதே இல்லை..

 

“நல்லெண்ண உட்டு கோழி குஞ்சு ஆக்கி காலை பசியாறுனா “யான” (யானை) பலம் கிடைக்கும்” என்பார்கள் வாப்பிச்சா..

 

என்னை தேய்த்து குளித்த நாளன்று விட்டில் காலை பசியாற தேங்காய்பால் ஊற்றி சுட்ட முறுகலான வெள்ளடையும்,  மத்தியமான பருவத்தில் இருக்கும் கோழி குஞ்சை அறுத்து நல்லெண்ணய் விட்டு ஆக்கிய  கோழிக்கறி ஆணமும் இடம் பெறும். அதெல்லாம் ஒரு காலம்… மெயின் ரோட்டில் இன்று பாமா கோழி சக்கைகளை சோளமாவில் துவைத்தெடுத்து கலப்பட எண்ணையில் பொறித்து கடைபரப்பி விற்றாலே கூட்டம் அலை மோதுகிறது…

 

வழவழப்பு தந்த அசூசையால் .. நான் உடலை தேய்த்த வேகத்தை பார்த்த சிவராமன்.. பாய்… அது விருதுநகர் நாடார் மில்லு நல்லெண்ண.. வழுக்கு கெட்டியா இருந்தா சுத்த நயம்னு அர்த்தம்… நல்லா தேச்சி குளி.. என்றான்…

 

“ஏய் சும்மா இருப்பா நீ “என்றவன்.. இன்னைக்கு எலக்‌ஷன் ரிசல்ட்ல்ல…வில்பர்ட் சார்ட்ட ’கேட்பாஸ” வாங்கிட்டு வெளில போயி டீக் கடைல உக்காந்து  பேப்பர் படிக்கனும் சிவராமா.. என்றேன்..  கேட்பாஸ் என்பது  விடுதி வாசிகளுக்கு வெளியே போய் வர விடுதி நிர்வாகம் தரும் ஒருமனி நேர பரோல் பத்திரம்….

 

நீ.. என்னத்த படிச்சு கிழிக்கப்போறே… வி.பி சிங்குதான் பிரதமரு  .. பாரேன்… சிவராமன் தேர்தல் ஆருடம் சொன்னான்.. அது 1989 பாராளுமன்ற தேர்தல் காலம். வி.பி.சிங் உருவாக்கிய தே.மு.கூ பற்றி பரவலாக பேசிக்கொண்டிருந்தனர்…

 

ஜக்குல  தண்ணீரை மெண்டு கடைசியா தலைக்கு ஊத்தும்போது மலேசியாவில் இருந்த வாப்பாவிடம்  யாராவது வந்தால் கொடுத்து அனுப்பச் சொன்ன கோனிக்கா கேமரா ரோல் நினைவில் தோன்றி சரசரவென  நீராக தலையிலிருந்து கண்னை மறைத்து நழுவி தொடைகளுக்கு இடையை வழிந்தது.

அடுத்த மாதம் போக இருக்கும் அஞ்சு நாள் கேரளா டூருக்கு பிலிம் ரோல் தேவைப்படும்…    இன்னிக்கு கேட்பாஸ வாங்கிட்டு வெளியே போறதோட   என்.ஜி.ஓ காலனி தபால் நிலையத்துக்கு போய் ஒரு இன்லேண்ட் லெட்டர வாங்கி  உம்மாவுக்கு பிலிம் ரோல் பத்தி எழுதிக் கேட்கனும்… என்ற நினைப்பு மேலோங்கியது…

 

குளித்து முடித்து தேங்காய் பூ டவலால் தலையை துடைத்துக் கொண்டிருக்கும்போது “சஷ்டியை நோக்க சரவண பவனா.. எங்கிருந்தோ சூரமங்கலம் சகோரிகளின் கனீர் குரல்கள்   காதில் சன்னமாக வந்து  மோதியது.. வைகறையில் திருப்பரங்குன்றம் மலையிலிருந்து கிளம்பி சமன மலையை கடந்து நாகமலை முகட்டுக்கு பறந்து வரும் கழுகுதான் இரண்டு குன்றுகளுக்கும் இடையில்  அகப்பட்டு கிடக்கும் இந்த மலை அடிவார விடுதியில் இருந்த எனது காதுக்கு  கந்த சஷ்டி கவசத்தை கொண்டு வந்து சேர்ப்பதாக தோன்றியது.

 

எனக்கு குர்ஆன் ஓதித் தந்த குத்பா பள்ளி ஒலக்க லெப்பை சொல்வார்கள். “ரெண்டு  மலைக்கு இடையிலதான் யஹ்ஜூஜு மஹ்ஜூஜு கூட்டம்  அடைஞ்சு கிடக்குது… செம்பு, இரும்புவல உருக்கிதான்  துலுகருனை அந்த கூட்டத்தை அடக்கி வச்சிகிறாஹ….

 

உருக்கிய செம்பு மற்றும் இரும்பு கலவைகளால் மதில் எழுப்பி துல்கர்னைன் என்ற இறை நேசரால் கட்டம் கட்டப்பட்டு  அடக்கப்பட்ட அடாவடி யஹ்ஜுஜ் மஹ்ஜூஜ் கூட்டம் தினம் தினம் அந்த அரனை உடைத்து உலகம் பார்க்க வெளியே வரத் துடிக்கிறதாம். உலக முடிவு நாள் வரை இந்த முயற்சி தொடருமாம்.   அந்த கூட்டம் போலத்தான் நாங்கள் இந்த விடுதிக்குள் ஆட்பட்டதாகவும் , விடுபட விரும்புவதாகவும் தோன்றும்… 

 

சரி எப்படிதான் வெளியேறுவது? நாகமலை முகட்டை நோக்கி ஆகாயத்தில் பறக்கும் கழுகு  அப்படியே அலாக்காக என்னை தூக்கிக் கொண்டு ஜிவ்வென பறந்து மலைக்கு அப்பால் இருக்கும் கீழ மாத்தூருக்கு கொண்டுபோய் சேர்த்தால் திண்டுக்கல் பைபாஸில் பஸ் பிடித்து ஊர் போய் சேரலாம் .. வர வர கற்பனை குதிரைக்கு கடிவாளமே இல்லாமல் போய்விட்டது…

 

 

ஏலே சிவராமா.. எப்போதான் பப்ளிக் எக்ஸாம் வரும்.. இந்த ஹாஸ்ட்டலு வாழ்க்கையை விட்டு வெளியேறி தொலைக்கனும்….ஜெயிலவிட மோசமா இருக்குய்யா… என்றேன்…

முந்திய நாள்தான் சுவரேறி குதித்து கீழக்குயில் குடி ஜெயராம் தியேட்டரில் ” வனமோகினி” படம் பார்த்துட்டு வந்த  நன்பன் ஜெகதீஷ், வசமாக  மாட்டிக் கொண்டு  சீஃப் வார்டன் முத்துப்பாண்டியால் மட்டை உரிக்கப்பட்டிருந்தான்..இடியாக ஜெகதீஷ் நடு முதுகில் இறங்கிய  முரட்டுக் குத்தை பார்த்து மிரண்ட நான்   “இந்த ஹாஸ்டலை விட்டு கிளம்பி சித்தர்கள் சுற்றி அழைந்த அருகிலிருக்கும் சமன மலைப்பகுதிக்கு போய் சேர்ந்தால்  என்ன? என்று தீவிரமாக யோசிக்கத் தொடங்கினேன்.

 

இப்படியான ஒரு விரக்தி சிந்தனைதான் குனங்குடி மஸ்தான் சாகிபுக்கும் ஏற்பட்டு நாகமலை மற்றும் சதுரகிரி மலைகளில் அலைந்து திரிந்து

 ” பரமுத்தன் குனங்குடி, தெருவில் வருவான் பவனி, பார்த்து வருவோம், வாருங்கள் கானோம்”

 

என ஞானத்தின் உச்சியில் நின்று கும்மி அடித்திருக்க வேண்டும். மஸ்தான் சாகிபு இறையை மலைகளிலும், அடர்ந்த காடுகளிலும் தேடி ஓடிப்போயிருக்கிறார்… திரும்பி வரும்போது சடை சடையாக மயிற் கற்றைகள் பாதம் வரை தொங்கிய நிலையில் சொந்த ஊரான தொண்டிக்கு போய் சேந்தாராம்…

 

நீ …வேறென்ன  மயித்துக்கு ஹாஸ்ட்டல்ல வந்து சேர்ந்தே… அதான் இப்பல்லாம் நீ கேட்ட உடனேயே வெளிய போக  ” கேட் பாஸ்” தர்ராங்யள்ள… வேறென்னா…என்றான் சிவராமன்…

 

உண்மைதான்…விளவங்கோடு வில்பர்ட் சார் டெபுட்டி வார்டனாக வந்த பிறகுதான் காலையில் ஒரு மனி நேரம் விடுதியின் மெயின் கேட்டுக்கு வெளியில் சென்று கடையில் டீ குடிக்க  எப்போது கேட்டாலும்  “கேட் பாஸ்” தருகிறார். அதுவும் வாப்பாவின் மகிமைதான்… சமீபத்தில் வாப்பா  கோலாலம்பூர் செல்வதற்கு முன்பு திடீரென  ஹாஸ்டலுக்கு வந்து போன பின்புதான்  இந்த அதிசயமெல்லாம் நடக்க துவங்கி இருக்கிறது.

.

டிப் டாப்பாக வந்த கலாரசிகரான வாப்பாவின் பாவணையில்  எம்.ஜி.ஆரை கண்டு கொன்ட  புரட்சித்தலைவரின்  அதிதீவிர ரசிகரான விளவங்கோடு வில்பட் சார் அன்றிலிருந்து  என்னிடம் கேட்பாஸ் விசயத்துல கரிசனம் காட்டத் தொடங்கியது அப்பட்டமாக தெரிந்தது…

 

மதராஸ் வால் டாக்கிஸ் ரோட்டில் இருந்த ஒற்றவாடை தியேட்டரில் நடந்த   நாடகங்களில் வாப்பா போட்ட என்னற்ற வேஷங்கள் எம்.ஜி.ஆரின் பாவனையில் வில்பர்ட் சாரை ஈர்க்க உதவியிருக்க கூடும்.

 

பள்ளிக்கூட காலத்திலேயே  நாடகத்தில் ” அலெக்‌ஷாண்டர்” வேஷம் போட்டு பரிசுளை வாங்குனவரு உங்க வாப்பா…தெரியுமா தம்பி…  அப்போ.. அவரின் ரசனையை புரிஞ்சிக்கிட்டவங்க யாருமே இல்லை..

என பின்னொரு நாள் அந்த விழாவில் அசோக சக்கரவர்த்தியாக வேஷம் போட்ட  பெரிய காக்கா  ஆதங்கத்துடன் சொன்னபோது வாப்பாவின் நாடக மோகத்தினை புரிந்து கொள்ள முடிந்தது. கூத்து பார்க்குறவனுவ ல்லாம் கூத்தாடிவொ… அதுலாம் ஹராமு” என்று முக்குக்கு முக்கு நீட்டி முழக்கும்  தரக்குடி ஆலிம்ஷாவை வைத்து ஊரில் கூட்டம் போட்ட காலம் அது…வாப்பாவை எவர் புரிந்து கொள்ள முடியும்?

 

என்னை தேய்த்து குளித்ததால் காலையிலேயே  கண்ணில் கசிந்துகொண்டிருக்கும் தூக்கத்தை, காலை டிபனுக்கு அழைக்கும் பெல் சத்தம் …ட்ர்ர்ர்ர்ர்.. என காதை கிழித்து  கலைத்தது.

 

அவசர அவசரமாக டைனிங் ஹாலுக்குள் சில்வர் தட்டை தூக்கிக் கொண்டு நெரிசலில் சிக்கி ஒரு வழியாக நுழைந்தேன். எனக்கு பின்னால் சிவராமன் பிதுங்கி கொண்டு முதல் பேட்ச் பந்திக்கு  எப்படியாவது நுழைந்துவிடும் முயற்சியில் அல்லாடிக் கொண்டிருந்தான். படைக்கு முந்தி, பந்திக்கு பிந்தும் பண்பாட்டு பிண்ணி கொண்ட குடும்பத்தை சேர்ந்தவன் அந்த முதற் பந்தி முயற்சியில் தோற்றுத்தான் போனான்.

 

சூப்பர் ஸ்டார் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும்போது  முதல் காட்சிக்கு ஆசியாவில் மிகப்பெரிய திரையரங்கான மதுரை தங்கம் தியேட்டர் டிக்கட் கவுண்ட்டரை நோக்கி வெறியுடன் ஒடும் ரசிகர்கள் கூட்டத்தை கண்டு எரிச்சலடைந்தவர்கள் .. ஒவ்வொரு நாளும் எங்கள் விடுதி டைனிங் ஹாலில் நடக்கும் அதே  முதல் காட்சி முண்டியடிப்பை பார்த்தால் உத்திரத்தில் தூக்குப் போட்டுத் தொங்கும் மன நிலைக்கு சென்று விடுவது நிச்ச்சயம்..  எங்கும்  நெரிசல்.. நெரிசல்.. நெரிசல்.. 

 

விடுதி டைனிங் ஹாலும் கூட மதுரை  தங்கம் தியேட்டர் போன்ற பிரமாண்ட அரங்காகவே எனக்கு தோன்றும். பரந்து விரிந்து, ஆட்கள் குறைவாக இருந்தால் சற்றே பயம் தரும் தங்கம் திரை அரங்கில் இடையில் நட்டி வைக்கப்பட்டிருக்கும்.  ஆல மரம் போன்ற சுற்று பெருத்த அகல தூண்கள் மட்டும் விடுதி டைனிங் ஹாலில் மிஸ்ஸாகி இருப்பதை தவிர இரண்டு அரங்கமும் ஒன்றுபோலத்தான் தோன்றும்.

 

விடுதி டைனிங் ஹாலும் கூட  15 நாளைக்கு ஒரு முறை நிஜ திரையரங்கமாகவே உறுமாறும். அன்று மட்டும் விடுதி கம்பவுண்டர்  சின்னராஜ் புரஜக்ட் ஆப்பரேட்டராகி  ஆகி ரீல் சுற்றுவார்.  கண்டிப்பாக  ஒரு தமிழ் சினிமா ஓட்டுவார்கள்.. பெரும்பாலும் ராமராஜனோ அல்லது விஜயகாந்தோ நடித்த திரைப்படங்களே திரையிடப்படும்,  பட ரீல் பெட்டி கூட மதுரை கீழச்சித்திரை வீதியில் இருக்கும் சினிமா விநியோகஸ்தர்  செல்லப்பாண்டியன் நாடார் அண்ட் கோ அனுசரனையுடன் இலவசமாகவே விடுதிக்கு வந்து சேரும். 

 

ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் ஒரு முறை ரீலை மாட்டி , கழட்டுவது பெண்ட் நிமிரும் வேலை .. ஊசி போடும் போது காட்டும் அதே நயிச்சியம் ரீலை மாட்டி, கழட்டுவதிலும் கம்பவுண்டர்  சின்னராஜிடம் தென்படும். பிரிதிவ்ராஜ் நடித்த செல்லுலாய்ட் மலையாள சினிமாவின் ஹீரோ கதாபாத்திரம் கொண்டிருந்த அதே சினிமா  தாகத்தை , நாகமலை அடிவாரத்துக்கு காலத்தால் விசிறி எறியப்பட்ட  இந்த கம்பவுண்ட்டர் சின்னராஜும் கூட வறுமையால் தொலைத்திருக்கலாம். நாடகங்களில் ஈடுபாடு கொன்டிருந்த வாப்பாவின் இலக்கும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும்.

 

அப்பொழுதுதான் கவனித்தேன்.. சூடான  வென் பொங்கல் நிரப்பட்ட  பெரிய சில்வர் பாத்திரத்தை வைத்துக் கொண்டு தரையில் சம்மனம் கூட்டி வரிசையாக அமர்ந்தவர்களுக்கு பொங்கல் பரிமாற ரெடியாக  இருந்த கோபன்னா, டைனிங் ஹாலின் ஒரு ஓரத்தில் என்னை கவனிக்காதது போல முறைப்பாக நின்று கொண்டிருந்தார்.

 

கேட்பாஸ் வாங்கிக் கொண்டு பள்ளியின் எதிரில் இருந்த  என்.ஜி.ஓ காலனி தபால் நிலையத்துக்கு சென்றிருந்த போது இந்த முறைப்பு கோபன்னாவும் வந்திருந்தார், பாலமேட்டில் இருக்கும் தனது மகளுக்கு மனியார்டரில் பனம் அனுப்ப வந்தவர்

” என்ன பாய் கவனிப்பே இல்லெ… இந்த மாசம் மாமுல் எப்பத்தருவே? என உரிமையுடன் கேட்டார்… அப்பா இந்தவாரம் அனுப்பிடுவாறு.. கொண்டாந்து தாறேன் கோபன்னா என்றேன்..  அலட்சியாமாக என் மீது பார்வைய வீசிவிட்டு தான் வந்த வேலையை பார்க்க தொடங்கினார்.

 

கோபன்னா..  அந்த விடுதியில் உணவு பரிமாறும் சப்ளையர்,  எப்பொழுதும் துவைத்து சுத்தமாக இருக்கும்  வெள்ளை முண்டா பனியனும், நாலு முழ வேட்டியுமாக வலைய வரும் மனிதர்.

அவருக்கு மாதாமாதம் தவறாமல் நான் கொடுக்கும் மாமூல் முறை தப்பியதால்  வந்த கேள்வியும் கோபமும்தான் அது .. கோபன்னாவால் கழிவறை கூடங்களில் பெறப்படும் கையூட்டு சாப்பாட்டு கூடத்தில் எதிரொலிக்கும்..

 

வாப்பா மலேசியாவில் இருந்து அனுப்பும் லக்ஸ் சோப்பும், கோடாரி தைலமும், ஓடிகுலானும்தான் கோபன்னாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் நெய் கரண்டியின் எண்ணிக்கையும்,வென் பொங்கலுக்கு ஊற்றும் தேங்காய் சட்னியின் அளவையும், புதன் கிழமை இரவு மட்டும் தரும் அவித்த கோழி முட்டையையும் இரட்டிப்பாக்கும் வல்லமை கொண்டது

 

கோபன்னா பரிமாறிக்கொடிருக்கும் போதே ஒரு முட்டையை கையிலும், லக்ஸ் சோப்பு மாமுலுக்கு பரிகாரமாக தரும் லஞ்ச முட்டையை யாரும் அறியாமல் தனக்கு மாமுல் தருபவர்களின்  தட்டில் போட்டு சோற்றால் மூடிவிடும்  வித்தையை அறிந்திருந்தார்.  சாப்பிட வரிசையாக உட்கார்ந்திருக்கும் மாணவர்களுக்கு ஒவ்வொரு கரண்டியாக நெய் விட்டுக் கொண்டே வருபவர் எனது தட்டுக்கு நேரே வரும் போது ஒரு கரண்டி நெய்யை  விட்டுக்கொண்டே நொடியில் நெய் கோப்பையை மொத்தமாக கவிழ்த்தி 200 மில்லி நயம் நெய்யை நயிச்சியமாக எனது தட்டில் இருக்கும் சோற்றில் யாரும்.அறியாமல் ஊற்றி மேஜிக் செய்யும் வித்தைக்காரர்.

 

வாப்பா அனுப்பும் மலேசியா சாமான்கள் கோபன்னாவின் வெளி நாட்டு பொருட்கள் மீதான மோகத்துக்கு தனித்தது,,, அப்படியே எனக்கும்தான்  தீனி போட்டு ஊணையும், உயிரையும் இரட்டிப்பாக   வளர்த்து வந்தது…

 

கோனிக்கா பிலிம் ரோலுடன் சேர்ந்து கோபன்னாவுக்காக  மலேசியாவிலிருந்து  லக்ஸ் சோப்பும், பச்சை மற்றும் கோடாரி தைல பாட்டில்களை வர வழைக்க வேண்டும் என்பதை ஏனோ இந்த மாதம் மறந்து விட்டிருந்தேன். இனி ஒருமாதம் ராமன்ணாவின் கைகள் நூல் பிடித்தது போல வேலை செய்யும், துளி அளவும் எக்ஸ்ட்ரா நெய் நம் தட்டில் விழப்போவதில்லை.

 

என்ன  வாப்பா சங்கதி…உனக்கு எதுக்கு இம்புட்டு தைலக்குத்தி… வெசைக்கு வெசை மண்ட இடிக்கிதாக்கும்… என தைலபாட்டில்களை பெட்டியில் போட்டு எடுத்துக் கொண்டு மதுரைக்கு நான் பஸ் ஏறும் போதெல்லாம் உம்மா பலமுறை கேட்பதுண்டு..அந்தக் கேள்வியில் உம்மாவின் துடிப்பையும், பதட்டத்தையும் உணர்ந்து கொள்ள முடியும், அப்படி கேட்கும் நேரத்தில் எல்லாம் ” ஒரு சங்கதியும் இல்லமா…கூட்டாளிமாருவளுக்கு கொண்டுக்குட்டு போறேன்.. என்று சொல்லிவிட்டு நடையை கட்டுவேன்…

 

அன்று மதியம், பருப்பு குழம்பும், பாயாசமும் வரப்பிரசாதமாக அமைந்தது, என்றாவது ஒரு நாள்தான்  இப்படியான நல்ல சாப்பாடு விடுதியில் பரிமாறப்படும். அவசரமாக மதிய சாப்பாட்டை முடித்துக் கொண்டு வகுப்புக்கு செல்லும் முனைப்பில் பெட்டியில் இருந்து  புத்தகங்களை எடுத்தபோது  கோபால் சார் அன்பளிப்பாக தந்த மேலாண்மை பொன்னுசாமி எழுதிய  “முன்னேற மூன்று வழிகள்” நூல் கண்ணில் தென்பட்டது.

 

வகுப்பாசிரியர் கோபால் சார் ஒரு சாந்த சொரூபி, கணிவும் கரிசனமும் கொண்ட மனிதர், மதுரை விளக்குத்தூன் பகுதியில் ஒன்றிக் குடித்தனம். அவ்வப்போது இது போன்ற பெர்சனாலிட்டி டெவலப்மெண்ட் புத்தகங்களை எனக்கு தந்து ஊக்குவிப்பவர். வெள்ளை நிற  சட்டைகளை விரும்பி அனியும் கோபால் சாருக்கு  மலேசியாவிலிருந்து  மார்ட்டின் வெள்ளை சட்டை ஒன்றை தரிவித்து  அன்பளிப்பாக அளிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை.  அடுத்த வாரம் பினாங்கில் இருந்து ஊர் வர இருக்கும் அசனா புள்ளை மூலம் கண்டிப்பாக வாப்பா மார்ட்டின் சட்டையும், புரூட் செண்ட்டும் அனுப்பி வைப்பார்கள் என உம்மா செய்தி சொல்லி இருந்தது நினைவுக்கு வந்தது.

 

பாய்… வில்பர்ட் உன்னை கூப்பிடுறாரு.. என்னான்னு போய் கேளு என்றான் சிவராமன்.. இப்போ எதுக்கு கூப்பிடுறாங்க .. என்ற நினைப்புடனே வார்டன் அறைக்குள் நுழைந்த போது நெற்றியில் விபூதியும் குங்குமப் பொட்டுமாக வி நாயகம் அண்ணன் வில்பர்ட் சாரை நோக்கியாவாறு ஸ்டூலில் அமர்ந்திருந்தார். மதுரை மேலச்சித்திரை வீதியில் இருந்த அவர் அன்று காலையில்  மீணாட்சி அம்மனை தரிசித்திருக்க வேண்டும்.. ஆனால் எப்போதும் தெய்வீக அமைதி கொண்டிருக்கும் அவரது முகத்தில் ஏன் இவ்வளவு பதட்டம் ? வில்பர்ட் சாரின் முகமும் லேசாக வெளிறித்தான் போயிருந்தது

 

என்ன விநாயகம் அன்னே.. என்ன விஷயம் என்றேன்…திடீர்னு வந்திருக்கியலே.. என்றேன் தம்பி …  உன்னை ஊருக்கு உடனே கூட்டுட்டு வர சொன்னாங்க…. ஏதோ அவசரம் போல… இப்பதான் டெலிபோன் வந்துச்சு… என்றார்

 

யாருக்கு என்ன ஆச்சு .. என பதறினேன்.. அதெல்லாம் ஒன்னும் இல்லை … பேக்கை எடுத்துட்டு புறப்படு.. என்றார். வில்பட்சாரும் ..ஒன்னுமில்லைப்பா..

ஏதோ அவசரம் போல்…  நீ உடனே ஊருக்கு கிளம்பு.. சீப் வார்டனிடம் நான் சொல்லிக்கறேன்  … இவ்வளவு எளிதான அனுமதிக்கு பின்பு ஏதோ சீரியஸான விஷயம் இருப்பதாக மனம் அடித்துச் சொன்னது.

 

ரத்தக் கொதிப்பில் அவதிப்பட்டு வந்த வாப்பிச்சாவின் உயிரும்,  உம்மாவின் இருப்பும் கேள்விக்குறியாகி என முன் ஊசலாடிக் கொண்டிருந்தது.. அல்லாவே… யாருக்கும் ஒன்னும் ஆயிடக்கூடாது என மனம் வேண்டியது….

 

“யாருக்கும் ஒன்னுமில்லை ” என்ற ஒற்றை வாக்கியத்துடனேயே மருது பாண்டியர் போக்குவரத்துக் கழக பஸ்ஸில் என்னை நாகமலையிலிருந்து நாலு மனி நேரம் பயணித்து ஊருக்கு கொண்டு வந்து சேர்த்தார் விநாயகம் அண்ணன். நீண்ட காலத்திற்கு பிறகு வேறொரு மருதுபாண்டியரில் பயனித்த விநாயகம் அண்ணன் ஆள் ஆரவாரமற்ற திண்டுக்கல்- செம்பட்டி ரோட்டில் ஓரமாக இருந்த ஆலமரத்தில் பஸ் மோதி, மண்டை பிளந்து தனது  உயிரை இழப்போம் என்று அன்று நினைத்திருக்க மாட்டார். காலம் பொல்லாதது..

 

விடை தெரியாத புதிருடன் ஊர் வந்து சேர்ந்த நான், பஸ்ஸை விட்டு கீழே இறங்கிய போது..  மஹ்ரிப் தொழுகைக்கு பாங்கு சொல்லிக் கொண்டிருந்தார்கள், அவசர அவசரமாக தொழுகைக்கு சென்று கொண்டிருந்த ஹாஜியார் மாமா  நான் பஸ்ஸில் இருந்து இறங்கியதை பார்த்ததும் என்னை  நோக்கி விரைந்து வந்து .. இப்பதான் வர்ரியாக்கும்.. என்றார்.. 

ஆமாம் மாமா … என்ன விஷயம் என்றேன்… 

வாப்பா  மலேசியாவுல  மவுத்தா போச்சே – விநாயகம் சொல்லலையா.. என்றார்கள் ஹாஜியார் மாமா.

அந்த நொடியில்  சரிவது போல் போக்கு காட்டிக் கொண்டிருந்த நாகமலை அப்படியே சரிந்து விழுந்து  தாங்கி நின்ற குட்டிச் சுவரை மொத்தமாக இடித்து வீழ்த்தியது.
———————————————————————————

மஹ்மூது நெய்னா .எஸ் – கீழக்கரை

மின்னஞ்சல் : naina1973@gmail.com

Series Navigationகடலூர் ரகுவிற்கு அஞ்சலிஅதிர்ச்சி
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *