தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

17 ஜனவரி 2021

சமனில்லாத வாழ்க்கை

க.உதயகுமார்

Spread the love


நான் நெருங்கிப்போகிறேன்

அவர்கள்

என்னை மதிப்பதில்லை

 

என்னை நெருங்கியவர்களை

நான்

நினைப்பதேயில்லை   …..

 

வலியின் அலைகற்றை

சுமந்து வந்த  என் குரலை

சலனமில்லாமல்

வீசி எறிகிறார்கள் அவர்கள் .

அவர்களை பின்தொடர்கிறேன் ..

காயங்களை விசிறிவிட

என்னை பின்தொடர்கிறவர்களை

பொருட்படுத்தாமல்….

 

என்னிடம்

ஏங்கி தவிப்பவர்களுக்கு

ஏமாற்றத்தை அளித்தபடி ,

யாரோ சிலரின்

தாழிடப்பட்ட கதவுகளின்

வெளியமர்ந்து யாசிக்கிறேன் ,

பிச்சையாய் பெற அவர்களிடம்

ஏதுமில்லை  என தெரிந்திருந்தும் …

 

நிரம்ப  தளும்பும்

என் அன்பின் கோப்பையை

போட்டுடைக்கிறார்கள் சிலர் ,

சில்லுகளை பொறுக்கியபடி

மீண்டும் ஒரு கோப்பையை நீட்டுகிறேன் ,

எனக்கு நீட்டப்படும்

கோப்பையை நிராகரித்தபடி …

 

இப்படி இப்படியாக

சமனில்லாத வாழ்க்கை

தள்ளாடி பயணிக்கிறது

ஒரு மலை உச்சியை நோக்கி …..

 

–க.உதயகுமார்

 

Series Navigationஇரண்டு கூட்டங்கள்கண்ணீரின் மேல் பாதம் பதிக்கும் வடக்கின் இராணுவ பலாத்காரம்

One Comment for “சமனில்லாத வாழ்க்கை”

 • வெஙகடேசன். செ. says:

  வலிக்க வலிக்க ஓர் உண்மையைச் சொல்லும் கவிதை.
  தேடுதல் என்பது வாழ்வில் ஒர் அங்கம்தான்.
  **தள்ளாடி பயணிக்கிறது
  ஒரு மலை உச்சியை நோக்கி**
  எனக்கென்னமோ மலை உச்சி எப்போதும் எட்டாக்கனிதான்.
  ”கிட்டாதாயின் வெட்டென மற” க்கத்தெரியும் வரை சமனில்லா வாழ்வுதான்.
  என் செல்பேசி அழைக்கும் நண்பனின் குரலை வெறித்தபடி, என் செய்திப்பெட்டியில் திறக்காமல் இருக்கும் பெயரை இமைக்காமல் பார்த்தபடி இருக்கும் நாட்களில் திடுமென ஒரு கணம் சூனியமாகிவிடும் வாழ்வு. அன்று மாலையே தலைகீழாக யாருக்கோ விடாமல் போன் செய்வதும், செய்தி அனுப்புவதுமாக அகன்ற பாலைவனத்தின் நடுவில் நின்றிருப்பேன்.
  விரும்புவரை உதாசீனம் செய்வதும், விடாமல் எதையோ துரத்துவதும் ..ச்சே என்ன வாழ்க்கைதான் இது..

  **எனக்கு நீட்டப்படும்
  கோப்பையை நிராகரித்தபடி ** கவிதையை சிலாகிக்க முடியாமல் கனத்துப்போகிறது மனது.

  யதார்த்தமே ஒரு கவிதையாய்..


Leave a Comment

Archives