நடேசன்
ஒளிப்படங்களுக்கான வருடம்தான் 2021. இந்த வருடத்தில் எவ்வளவு ஒளிப்படங்கள் எடுக்கப்படும் என்று கணினியை தட்டிப் பார்த்தபோது 1.4 ரில்லியனுக்கு மேல் ஒளிப்படங்கள் எடுப்பார்கள் என்றிருந்தது.
உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறதா?
1.4 ரில்லியன் ஒளிப்படங்களில் பெரும் பகுதி சேமிக்கப்படும் .
பயணம் போகும்போது கமராவும் கையுமாக அலையும் பலரில் நானும் ஒருவன். ஆரம்ப காலத்தில் எடுத்த ஒளிப்படங்களில் குறை கண்டதால் தற்பொழுது கமராவைக் கையாளுதல் மற்றும் அதை எடிட் பண்ணும் திறமையையும் சிறிது பெற்றுள்ளேன் . இதைவிட கைத் தொலைபேசிகளில் எடுக்கும் படங்கள் பல.
எனது பயணங்களில் ஒளிப்படம் எடுக்கும் பலரைக் கண்டுள்ளேன். ஒவ்வொருவரும் விசித்திரமாக நடந்து கொள்வார்கள். அலாஸ்கா சென்றபோது போட்டோகிராஃபிக் சுற்றுலா என கெச்சிக்கான் (Ketchikan) நகரத்தில் ஒழுங்கு பண்ணியபோது, அந்த நகரத்தில் ஒரு பத்திரிகையின் போட்டோகிராஃபர் என்னை முக்கிய இடங்களுக்கு அழைத்துச் சென்றதுடன், எந்த பக்கத்திலிருந்து படம் எடுத்தால் நன்றாக இருக்கும் என்று விளக்கினார்.
அங்குள்ள ஆதி அமெரிக்கர்களது கதைகள் செதுக்கப்பட்ட மரக்கம்பத்தைப் பார்க்கச் சென்றபோது, ஒரு பஞ்சாபிக் குடும்பம் ஒரு கையால் கட்டிப்பிடித்தபடி ஒவ்வொருவராகப்படங்கள் எடுத்தார்கள். பாட்டியிலிருந்து பேரப்பிள்ளைகள் வரை பத்துக்கு மேற்பட்டவர்கள் உள்ள குடும்பம் என்பதால் எல்லோரும் தனித்தனியே கட்டிப் பிடித்து எடுக்க அரைமணி நேரமாகியது.
நாங்கள் அந்தக் கம்பத்தைப் படம் எடுப்பதற்காக தமிழில் அவர்களைத் திட்டியவாறு காத்திருந்தோம். அதேபோன்று சீனர்கள், முக்கியமாக இளம் பெண்கள் ,கைத்தொலைப்பேசி உள்ள செல்பி தடியுடன் ஒற்றைக்கொம்பு காண்டாமிருகமாக நம்மைத் தள்ளியவாறு சென்றார்கள் . ஜப்பானியர் ஆசியாவில் வித்தியாசமானவர்கள் என்பது உண்மைதான். மிகவும் பொறுமையானவர்கள். முக்கியமானது ஒரு கட்டிடம் அல்லது சிலையுடன் அருகே இருக்கும் மரம் கொடி எல்லாவற்றையும் படமெடுப்பார்கள். அந்தப் படங்கள் வந்ததைப் பொறுத்தே, அவர்களது விடுமுறை நல்லதாகவோ கெட்டதாகவோ அவர்களால் கணிக்கப்படும் .
எனது கமரா கையில் வந்ததும் அதனது வியூ ஃபைண்டர் என்ற அதன் துளைக்குள்ளாகவே உலகத்தைப் பார்க்கிறேன். அதாவது சிறிய உலகத்தை மட்டும் பார்க்கிறேன் அப்பொழுது எனது சுற்றம், சூழல் என்னால் புறக்கணிக்கப்படுகிறது. அங்குள்ள மனிதர்கள், மற்றைய காட்சிகள் என் கண்ணிலிருந்து மறைந்துவிடுகிறது. கட்புலன் தவிர்ந்த மற்றைய மனம், தொடுகை, செவி போன்ற மற்றைய புலன்கள் மயக்கநிலைக்குச் சென்று உறங்குகின்றன. இங்கு உண்மையான அனுபவத்தை நான் பெறுகிறேனா என்ற கேள்வி தொக்கி நிற்கிறது.
கமராவால் நாம் நல்ல படத்தை எடுத்துவிட்டால் எமது மனதில் ஒரு திருப்தி வந்து அந்த இடத்தை பார்த்துவிட்டோம் அல்லது எமது கமராவுக்குள் அந்த இடத்தை சிறைப் பிடித்து அடைத்து விட்டோம் என்ற ஆணவ நினைப்பு மனதில் கொடியேற்றம் பெறுகிறது . அதற்கேற்றவாறு குறி வைத்தல் (Aim) சுடுதல் (Shooting ) என்ற போர்க் காலத்துச் சொற்கள் வந்து எமது மனதில் எம்மையறியாது தற்பெருமையை ஏற்படுத்துகிறது.
நான் பிற்காலத்தில் கமராவில் படமெடுத்த இடங்களின் படங்கள் என்னிடமிருக்கின்றன. அதை முகநூலில் பதிவுசெய்கிறேன். ஆனால் அந்த இடங்களில் பார்த்தபோது எனது மனப்பதிவுகள் கமரா இல்லாத காலத்தில் நான் பார்த்தவற்றிலும் குறைவானவை என இப்பொழுது உணர்கிறேன்.
எனது யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி, பேராதனை பல்கலைக்கழகம் பற்றிய நினைவுகள் சமுத்திரம் போன்றவை. அங்கே தொடர்ந்து மீன் பிடிப்பதுபோல் பல கதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளேன் . அதேபோல் இந்தியாவில் தமிழ்நாடு, ஜெய்ப்பூர், புது டில்லி எனத் திரிந்த காலத்தில் அங்கு பார்த்தவர்களது தோற்றம், செவிமடுத்த விடயங்கள் மனத்திரையிலிருந்து அழிக்க முடியாதவை .
நாற்பது வருடங்களுக்கு முன்னர், பதவியாவில் உண்ட முள்ளம்பன்றியின் கறி நாவிலிருந்தும், செட்டிகுளம் காட்டில் கருக்கிய பன்றியின் மணம் நாசியிலிருந்தும் அகலவில்லை. அதுபோன்று 35 வருடங்களுக்கு முன்பு, புது டில்லியில் ஜவஹர்லால் பல்கலைக்கழக உணவு விடுதியில் தொடர்ந்து உண்ட பருப்பு – சப்பாத்தியின் வாசனை நினைவிருக்கிறது . ஐந்து நாட்கள் சப்பாத்தியால் நாக்கு மரத்துவிட, மீன் வாங்குவதற்காக வெளியே சென்றபோது மீன் விற்கும் ஒரு வயதான பெண் வங்காள மொழியில் “ எப்போது கல்கத்தாவிலிருந்து வந்தாய்? “ எனக்கேட்டு எனது சாரத்தை இழுத்தபோது, அந்தச் சாரம் கழன்றது. அதைப் பார்த்துச் சங்கடப்பட்ட அந்த பெண்ணின் முகம் இன்னமும் மனதில் ஊஞ்சலாடுகிறது .
மீனுடன் திரும்பி வரும்வழியில் வலது இடது கையால் மாறி மாறி குழந்தையுடன் பிச்சை கேட்டவாறு தொடர்ச்சியாக காற்றைச் சுவைத்த இளம் பெண்ணின் கண்கள் நினைவை விட்டு மறையவில்லை . மீனைச் சமைத்து உண்டபின் கட்டிலில் படுத்தபோது, டில்லியின் வெப்பத்தைத் தாங்காது, சீமெந்து தரையில் தண்ணீரை ஊற்றி விட்டுத் தூங்கியதால் பட்ட ஈரம் இன்னமும் முதுகில் இருப்பதாகத் தோன்றுகிறது.
இப்படியாக கமரா இல்லாத காலத்தில் விழித்திரை விம்பங்கள் மட்டுமல்ல ஒலிகளாக, தொடுகைகளாக , வாசனையாக மனவோடையில் இன்னமும் வற்றாது சலசலக்கிறது .
தற்போதைய பயணங்களில் கமரா, எனக்கும் மற்றைய புலன்களுக்கும் இடையே ஒரு வேலியாக வந்து அமர்ந்து விடுகிறது எமது புலன்களில் பலவற்றை என்னிடமிருந்து திருடி விடுகிறதாக உணர்கிறேன். அதற்கப்பால் நம்மை நம்மீது காதல் கொள்ள வைக்கிறது. நம்மை மற்றவர்களிடமிருந்து அந்நியப்படுத்துகிறது என எண்ணுகிறேன். ஏற்கனவே சமூகவலைத்தளங்கள் மேற்கூறிய இரண்டையும் செய்துவருகின்றன
எனது தலைமுறையில் இரண்டு பக்கத்தையும் பார்த்ததால் ஓரளவு எச்சரிக்கையுடன் எப்பொழுது, கமராவை வெளியே எடுப்பது , எப்பொழுது பைக்குள் வைத்திருக்கவேண்டும் என்பதை புரிந்து கொள்ளமுடிகிறது . பேனையை பாவிக்காத தலைமுறை தற்பொழுது உள்ளதுபோல் எதிர்காலத்தில் காமரா வியூ ஃபைண்டருக்குள்ளால் மட்டும் உலகைப் பார்ப்பவர்கள் உருவாகுவார்கள்.
மாற்றம் ஒன்றே மாறாதது என மாற்றத்தை நாம் எதிர் கொள்வோம்.
—0—
- தூமலர் தூவித்தொழு
- ஒரு கதை ஒரு கருத்து – அசோகமித்திரனின் குருவிக்கூடு
- அருள்மிகு தெப்பக்குளம்…
- ஒளிப்படங்களும் நாமும்
- கவிதைகள்
- இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா?
- பொக்கிஷம் !
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 250 ஆம் இதழ்
- தி பேர்ட் கேஜ்
- அதுதான் வழி!
- (அனுபவக் கட்டுரை) – கெட்டகனவு தொழிற்சாலை
- ராக்கெட் விமான த்தில் முதன்முதல் விண்வெளி விளிம்புக்குப் பயணம் செய்து மீண்ட தீரர்
- வேட்டை
- மொழிப்பெருங்கருணை
- ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- பார்வதியம்மா
- கீறிக்கீறி உழுகிறோம் உண்கிறோம்
- தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
- என்னை பற்றி
- 7.ஔவையாரும் சிலம்பியும்
- இவர்களின் பார்வையில் முருகபூபதியின் ஏழாவது கதைத் தொகுதி
- தமிழக பெண்களை மது அரக்கனிடமிருந்து விடுவிக்க தமிழ் நாட்டில் முழு மதுவிலக்கை அமுல்படுத்த பரிந்துரைகள்