திரெளபதி அக்னியிலிருந்து பிறந்தவள். திரெளபதியை முன்னிருத்தியே பாரதம் மிகப்பெரிய போரைச் சந்தித்தது. காளி ரூபமாக சிவனை மிதிப்பது திரெளபதியின் இன்னொரு முகம். பெண் தன்னை உடலாக பார்க்கும் ஆடவர்களுக்கு பாடம் புகட்டவே நினைக்கிறாள். வாழ்க்கை ஓடத்தை கரை சேர்ப்பதும் மூழ்கடிப்பதும் அவள் கையில் தான் உள்ளது. எத்தனை வயதானாலும் ஆண்களுக்கு தாய்மையின் கதகதப்பு தேவையாய் இருக்கிறது. தாய்மையின் அருள்மழை பெய்வதாலேயே இந்தப் பூமி பசுமை நிறம் மாறாமல் இருக்கிறது. நீங்கள் இப்போது அண்ணாந்து பார்க்கும் நிலவை முதலில் சுட்டிக் காட்டியது அவள் தானே. தவம் கிடக்கும் சிப்பி அவள் விழும் மழைத்துளியை முத்தாக்குவதற்கு அரும்பாடுபடுகிறாள். நீங்கள் எங்கே சென்றாலும் கடலலை போல அவளது நினைவலைகள் வந்து வந்து மோதிக் கொண்டிருக்கும். இந்த உலகமே அவளது கருப்பை தானே. இடது மார்பைத் திருகி மதுரையை எரித்த கண்ணகியை கற்புக்கரசி என்று இன்றும் நாம் போற்றுகிறோம் அல்லவா.
சுயம்வரத்தில் பரதவம்ச ராஜகுமாரர்களால் இலட்சியத்தை அடைய முடியவில்லை. துரியோதனனும், கர்ணனும் கூட செய்வதறியாது உட்கார்ந்திருந்தனர். பிராமண வடிவில் வந்த அர்ச்சுனன் இலக்கினை அடைந்து திரெளபதியின் கரம் பிடித்தான். கடவுள் ஒருவனின் வாழ்க்கையை உருப்படாமல் செய்ய வேண்டுமென்றால்தான் அழகிய மனைவியைக் கொடுப்பான். அந்த ஆடவனால் பூமிக்கு அப்பாற்பட்ட காரியத்தை சிறிதும் சிந்திக்க முடியாது. பெண்ணின் அழகு மாயை என்றுணர அவன் பல பிறவிகள் எடுக்க வேண்டியுள்ளது. அர்ச்சுனன் திரெளபதியை குமுறும் எரிமலை என்று எண்ணிப் பார்த்திருக்க மாட்டான். குந்தியிடம் ஆசிபெற திரெளபதியை அழைத்துச் செல்கிறான் அர்ச்சுனன். திரெளபதியின் அழகு மற்ற நான்கு சகோதரர்களின் மனத்திலும் காமநெருப்பைக் கிளறிவிடுவதை குந்தி அறிகிறாள். பாண்டவர்களின் உறவில் விரிசல் வந்துவிடக் கூடாதென்பதற்காக குந்தி பாஞ்சாலியை ஐவரும் பகிர்ந்து கொள்ளுங்கள் என்கிறாள். தன் விருப்பத்தைக் கேட்காமல் குந்தி முடிவெடுத்தது திரெளபதிக்கு வேதனையைத் தந்தது.
அடைய முடியாத ஒன்றைப் பற்றி மனம் கோட்டை கட்டத் துவங்கும். திரெளபதியை வெல்லும் வாய்ப்பை இழந்த துரியோதனன் அவளை தன் காலடியில் விழவைக்க தக்க சமயம் பார்த்து காத்திருந்தான். மயன்மாளிகை முற்றத்தில் தண்ணீர் என்று நினைத்து மெதுவாக கால் வைத்தபோது அதைக் கண்டு திரெளபதி சிரித்த கேலிச் சிரிபொலி இன்னும் துரியோதனன் மனத்தில் ஒலித்துக் கொண்டிருந்தது. பெண்கள் தன் அழகை முதன்மைப்படுத்தாமல் இருந்தாலே வாழ்க்கை சிக்க்ல் இல்லாமல் இருக்கும். பெண்கள் உடலைப் பிரதானப்படுத்துவதன் மூலம் தான் ஆடவர்கள் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்துகின்றனர். பெண்கள் பக்தி செலுத்துவது போல் தெரிந்தாலும் அவர்களின் இலக்கு கடவுளை அடைவதாக இருக்காது. மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையேயான திரைச்சீலையை அவள் அகற்றமாட்டேன் என பிடிவாதம் பிடிக்கிறாள். அதனால்தான் பெண்களால் கடவுளை அடைய முடியாதென்று சமணமதம் சொல்கிறது. தன் வனப்பைவிட ஆன்மிகத்தேடல் பெரிதா என்பது தான் அவள் வினாவாக இருக்கிறது. அவள் பின்னிய சிலந்தி வலையிலிருந்து ஆடவர்கள் யாரும் தப்பித்துவிடக் கூடாதென்று விழிப்புடன் இருக்கிறாள்.
அஸ்தினாபுரத்தில் மாளிகை கட்டி இருக்கிறோம் பாண்டவர்கள் காண வரவேண்டும் என்று அழைக்க சகுனி விதுரரை அனுப்புகிறான். தருமனுக்கு சூதாட்டத்தில் உள்ள ஆசையை சகுனி பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறான். சகுனி வெட்டி வைத்த குழியில் தருமன் விழுகிறான். மணிகள், ஊர்கள், நகரங்கள் என பணயம் வைத்தவன் தனது சகோதரர்களையும் இழக்கிறான். திரெளபதியை பணயம் வைத்து ஆடு இழந்ததை மீட்டுவிடலாம் என்று சகுனி ஆசை காட்டுகிறான். திரெளபதியை இழந்த பின்பே தருமன் தன்னிலை உணருகிறான். துரியோதனனின் உத்தரவுக்கிணங்க திரெளபதி சபைக்கு இழுத்து வரப்படுகிறாள். அவையோரிடம் நியாயம் கேட்கும் திரெளபதி தருமர் முதலில் தன்னை வைத்து இழந்தாரா இல்லை என்னை வைத்து இழந்தாரா என்று கேட்கிறாள். தன்னை வைத்து இழந்தவருக்கு என்னை வைத்து இழக்க என்ன உரிமை இருக்கிறது என்கிறாள்.
பீஷ்மர் திரெளபதிக்கு பதிலளிக்கும் விதமாக என்ன தான் தருமன் முதலில் தன்னை வைத்து இழந்திருந்தாலும் நீ அவனது மனைவி என்று இல்லாமல் ஆகிவிடுமா? அடிமையின் மனைவியும் அடிமைதானே என்கிறார். பெண்ணின் அழகு எப்போதும் தீச்சுடர் போலத்தான் மனிதர்கள் விட்டில் பூச்சிகளாகத்தான் அதை அடையத் துடிக்கிறார்கள். திரெளபதியை இந்தச் சிக்கலுக்கு உள்ளாக்கியதே அவள் சிரித்த கேலிச் சிரிப்புதான். ஆடவர்கள் தான் பெண்ணால் அவமானப்படுத்தப்படுவதை விரும்பமாட்டார்கள். விதையாய் விழுந்த பாஞ்சாலியின் மீதிருந்த கோபம் இன்று துரியோதனன் நெஞ்சில் விருட்சமாய் வளர்ந்து நிற்கிறது. ஓராடை உடுத்தியவளை மானபங்க படுத்தினார்கள் கெளரவர்கள் என்றாலும், அவளுக்கான இந்த நிலைக்கு அவளே காரணமாகிறாள். விதியோ, கெளரவர்களோ இந்த இழிநிலைக்கு காரணமல்ல தான் எல்லோரைவிடப் பேரழகு என்று திரெளபதி எண்ணியதே காரணம். வசுதேவ கிருஷ்ணன் காப்பாற்றினான் என்று சொல்லப்பட்டாலும் வார்த்தைகளை வீசும் போதும், கேலிப்பார்வை பார்க்கும்போதும் பெண்கள் நிதானத்துடன் நடந்து கொள்ள வேண்டியதாய் இருக்கிறது. திரெளபதியின் கேலிச் சிரிப்பு தான் பாரதப் போருக்கு காரணமாக அமைந்தது. துச்சாதனனின் குருதியில் தோய்த்து கூந்தலை முடிய எவ்வளவு உயிரிகள் பலியாக நேர்ந்தது. பாண்டவர்களுக்காக வசுதேவ கிருஷ்ணன் எத்தனை முறை யுத்ததர்மம் மீறினான். இதற்கு மூலகாரணம் பாஞ்சாலிதான்.
- மெக்சிக்கோ தென்மேற்கு கடற்கரை அகபுல்கோவில் நேர்ந்த M 7.1 ஆற்றல் பூகம்பம்
- பிழை(ப்பு)
- வாசிப்பு அனுபவம்: முருகபூபதியின் புதிய நூல் நடந்தாய் வாழி களனி கங்கை…… ஒரு பார்வை
- பன்முக நோக்கில் பாரதியாரின் படைப்புகள் !
- எம்.ரிஷான் ஷெரீப்பின் நூலுக்கு ‘இலங்கை அரச சாகித்திய இலக்கிய விருது’
- ஒரு கதை ஒரு கருத்து – கே.பாரதி, ஏ.எஸ். ராகவன்
- ஐஸ்லாந்து
- குருட்ஷேத்திரம் 12 (கர்ணனின் முடிவுக்கு குந்தியே காரணம்)
- குருட்ஷேத்திரம் 11 (பாரதப் போருக்கு வித்திட்ட பாஞ்சாலியின் சபதம்)
- முன்மாதிரி ஆசிரியை அஸ்வினியும் மாண்டிசோரி கல்விமுறையும்!
- கதிர் அரிவாள்
- உப்பு பிஸ்கட்