கவிதையும் ரசனையும் – 22

author
0 minutes, 1 second Read
This entry is part 5 of 15 in the series 17 அக்டோபர் 2021

 

அழகியசிங்கர்

            ஒரு கவிதைப் புத்தகத்திலிருந்து இரண்டு கவிதைகளை எடுத்து ஆராய வேண்டுமென்று நினைக்கிறேன். கடற்கரையின் ‘காஃப்காவின் கரப்பான் பூச்சி.’

            பிப்ரவரி 2021 அன்று வெளிவந்த புத்தகம்.  காஃப்காவின் கரப்பான் பூச்சி என்று ஏன் தலைப்பு வைத்தார் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

 

            சமீபத்தில் கடற்கரை எழுதிய கவிதைத் தொகுப்பு இது. ‘தேவதைகள் அல்லர்’ என்ற கவிதையை எடுத்துக்கொள்வோம். பொதுவாக ஒரு கவிதையை எடுத்து எழுதினால் போதும் எல்லா வரிகளும் நமக்குப் புரிந்து விடும்.  அதன்பின் அதற்கு விளக்கத்தைத் தர வேண்டுமென்பதில்லை.

 

            ‘தேவதைகள் அல்லர்’ என்ற கவிதையை இங்குத் தருகிறேன். 

 

                        தேவதைகள் அல்லர்

 

எனது பிள்ளைகளை 

நான் தேவதைகள் எனச் சொல்ல மாட்டேன். ஏனெனில்; 

தேவதையை எனக்குத் தெரியாது.

 

என் பிள்ளைகளை

ராஜா என்று நான் கொஞ்ச மாட்டேன். 

ஏனெனில் 

மன்னர்கள் மக்களுடன் இருப்பதில்லை .

 

என் பிள்ளைகளை நான் 

வைரம் என்று ஒப்பிட மாட்டேன் 

ஏனெனில் அதைப் பாமரர்கள் பார்த்ததில்லை 

.

என் பிள்ளைகள் 

எப்போதும் என் பிள்ளைகள்தான். 

பிறப்பால், பின் தங்கியவர்கள். 

வரலாற்றால், ஒடுக்கப்பட்டவர்கள். 

காலத்தால், சபிக்கப்பட்டவர்கள். 

ஆகவே அவர்கள் தேவதைகள் இல்லை. 

அவர்கள் அசிங்கம்;

 

 

வாழ்க்கையால் அவர்கள் அவலட்சணம் 

தரத்தால் அவர்கள் தறுதலைகள்: 

பணத்தால் அவர்கள் மூடர்கள்: 

பசியால் அவர்கள் திருடர்கள்: 

பாசத்தால் அவர்கள் கொலைகாரர்கள்:

 சான்றிதழால் அவர்கள் அந்நியர்கள்:

 

ஆகவே 

ராஜாக்கள் அல்லர் 

வைரங்கள் அல்லர் 

கவிதைகளில் மட்டுமே 

இடம்பெற்ற பொய் அவர்கள்.

 

ஆகவே 

என் பிள்ளைகளை 

நான் தேவைகள் எனக் கூறமாட்டேன். 

என்னைப் போலவே 

இந்தத் தேசத்தில் நடமாடும் பிணங்கள் அவர்கள்

 

            இந்தக் கவிதையை எடுத்துக்கொள்வோம்.  கடற்கரை முன் வைப்பது என்ன?  இக் கவிதையைப் படிக்கும்போதே புரிவதால் இதை மேலும் விளக்க வேண்டாம்.  ஆனால் இக் கவிதையின் உள் அர்த்தம் என்ன?  கவிகுரலோன் கூறுவது என்ன?  யார் மீது கவிகுரலோனுக்குக் கோபம்?

 

            யாருமே பிள்ளைகளை தேவதைகள் என்று கூற மாட்டார்கள்.  யாரும் தன் பிள்ளைகளை அப்படி வளர்க்க மாட்டார்கள்.  கவிகுரலோனுக்கு மட்டும் அப்படித் தோன்றுகிறது.

 

என் பிள்ளைகள் 

எப்போதும் என் பிள்ளைகள்தான். 

பிறப்பால், பின் தங்கியவர்கள். 

வரலாற்றால், ஒடுக்கப்பட்டவர்கள். 

காலத்தால், சபிக்கப்பட்டவர்கள். 

ஆகவே அவர்கள் தேவதைகள் இல்லை. 

அவர்கள் அசிங்கம்

 

            பிறப்பால் யார் எப்படிப் பிறப்பார்கள் என்பது யாருக்கும் தெரியாது. பிறந்தபின்னால்தான் பிறப்பால் பின் தங்கியவர்கள், வரலாற்றால் ஒடுக்கப்பட்டவர்கள், காலத்தால், சபிக்கப்பட்டவர்கள். 

 

       கவிகுரலோனுடைய இந்தக் குரல் சற்று மிகைப் படுத்தப்பட்ட ஒன்றாக இருக்கிறது.  இப்படியே தொடர்ந்து தேவதைகள் என்ற குறிப்பை வைத்துக்கொண்டு எழுதிக்கொண்டே போகிறார். 

 

            கடைசி வரியில் என்னைப் போலவே இந்தத் தேசத்தில் நடமாடும் பிணங்கள் என்று குறிப்பிடுகிறார்.  கவிகுரலோன் தனக்குள் ஏற்படுத்திக்கொள்கிற தாழ்வு மனப்பான்மைதான் இந்தக் கவிதை.

 

            நேருமாமா என்ற அட்டகாசமான கவிதை ஒன்றையும் இங்குக் கொடுத்திருக்கிறார்.  நாம் அந்தக் கவிதையையும் கொஞ்சம் பார்க்க வேண்டும்.

 

                                    நேரு மாமா

 

நேருவைப் பார்த்ததில்லை நான் 

அவர் தொப்பியை ரசித்திருக்கிறேன்; 

பள்ளியில் எனக்கு 

அவர் மாமாவாக அறிமுகமானார். 

அதட்டலான 

ஆசிரியர்கள் இடையில் 

ஒரு அன்பான மாமாவை 

அழைத்துக்கொண்டு 

அன்று மாலை வீட்டிற்கு ஏகினேன். 

வீட்டிற்கு 

என்னுடன் மாமா வந்ததை 

யாரும் கவனிக்கவில்லை. 

மாமா ஒரு மறைபொருளாக மாறினார் 

மறுநாள் 

ஒரு விளையாட்டுப் பொழுதில் 

என்னுடன் வகுப்பறையைவிட்டு வெளியேறி

பிள்ளைகள் ஒன்று கூடிப் பாடினோம்: 

இது யாரு தைத்த சட்டை 

எங்க மாமா தைத்த சட்டை.

இது யாரு போட்ட ரோடு 

எங்க மாமா போட்ட ரோடு.

நேரு என்ன சொன்னாரு 

வண்டியை நேரா ஓட்டச் சொன்னாரு 

பாடல் முடிந்ததும் பள்ளி, 

பள்ளி முடிந்ததும் பாடல் என்றானது 

பால்யம். 

எத்தனை விநோதம் பாருங்கள், 

ஒரு தேசத்தந்தையைத் தந்த பள்ளிதான் 

நமக்கு மாமாவைத் தந்தது. 

ஒரு மாமாவைத் தந்த பள்ளிதான் 

எங்களுக்குப் பாடலைத் தந்தது.

.

            முந்தைய கவிதைக்கும் இதற்கும் பெரிய வித்தியாசம்.  இது ஒரு மேஜிக்கல் ரியஙூஸ கவிதை.  இக் கவிதையில் எந்தக் கோபமும் இல்லை.  ஒரே உற்சாகம்தான்.  மாமா ஒரு மறைபொருளாக மாறினார் என்ற வரி வருகிறது.  ஆழமாகச் சிந்திக்கத் தூண்டும் வரி.

 

            இந்த இரண்டு கவிதைகளையும் எழுதியவர் கடற்கரை.  இரண்டாவது வகைக் கவிதையைத்தான் எழுத வேண்டுமென்று விரும்புகிறேன்.

           (12.10.2021)

Series Navigationசன்னல்விடாது கருப்பு…!
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *