பெரியப்பாவின் உயில்

This entry is part 11 of 17 in the series 12 டிசம்பர் 2021

ஜோதிர்லதா கிரிஜா            

(ஏப்ரல் 1988  “தமிழரசு” இதழில் வெளிவந்தது. கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன்  ‘மகளுக்காக’தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.)                                                                             

   

   “என்னங்க! இங்க கொஞ்சம் வாங்களேன்!” என்று லல்லி கூவிய கூவல் எட்டு வீடுகளுக்குக் கேட்கக்கூடியது போல் அவ்வளவு இரைச்சலாக இருந்தது. சதாசிவமூர்த்தி சற்றே எரிச்சல்பட்டுத் தலையை மட்டும் திருப்பி அடுக்களைப் பக்கம் பார்வையைச் செலுத்தினானேயன்றி, மனைவிக்குப் பதில் குரல் கொடுக்கவில்லை.

       “உங்களைத்தானே! கொஞ்சம் எந்திரிச்சுத்தான் வரக்கூடாதா? நான் அடுப்பில கைக்காரியமா இருக்குறனில்ல?”

       படித்துக்கொண்டிருந்த நாளிதழை மடித்து மேசை மீது கிடத்திவிட்டு அவன் எழுந்து நடந்து அடுக்களை வாசற்படிக்கு இந்தப்பக்கம் ஒரு காலும் அந்தப் பக்கம் ஒரு காலுமாய் நின்று, “என்ன?” என்றான். குரல் அவனது எரிச்சலைத் துல்லியமாய் வெளிப்படுத்தியதை உணர்ந்து, அதைப் பொறுத்துக்கொள்ள மாட்டாத ஆத்திரத்துடன், “அடியம்மா! பேப்பர் படிக்கிறப்ப கூப்பிட்டுடக் கூடாதே! ஆனா நீங்க மட்டும் நான் அடுப்பில பால் காய்ச்சிக்கிட்டிருக்குறப்ப கூட அடுப்பை நிறுத்திட்டு வரச் சொல்லுவீங்க. … இந்தாங்க. இந்தப் பத்திரிகையில உங்க அருமைப் பெரியப்பா ஒரு கதை எழுதியிருக்காரு. படிச்சுப்பாருங்க…” என்றாள். வலக்கை அடுப்பில் இருந்த எதையோ கிளறிக்கொண்டிருக்க, இடக்கை அருகே கவிழ்த்து வைக்கப்பட்டிருந்த ‘இளமதி’ என்கிற வார இதழை அவன் புறமாக நகர்த்தியது.

       “அதுக்கா இம்புட்டு அவசரமா எவனோ திருடன் வீட்டுக்குள்ள புகுந்துட்ட மாதிரி கூச்சல் போட்டே? சர்த்தான், போ. எங்க பெரியப்பா எழுதின கதையை நான் என்னிக்குப் படிச்சிருக்கேன்? பெரிய எழுத்தாளர்னு பேரு வாங்கினவரு. அப்பப்ப எழுதிச் சம்பாதிக்கிறாரு. உக்காந்த வாக்குல பென்ஷன் வாங்குறாரு. கிட்டத்தட்ட ரெண்டு லச்சம் போல பேங்க்ல பணம் போட்டு வச்சிருக்குறாரு. ஒரு சொந்த வீடு வச்சிருக்குறாரு. பேங்க்ல இருக்குற பணத்தைத் தன்னோட தம்பி பிள்ளையான அடியேனும் தங்கச்சி மகளான பரமேசுவரியும் ஆளுக்குப் பாதியாப் பங்கு போட்டுக்குறணும்னு என்னிக்கோ உயில் எழுதி வெச்சுட்டாரு. இதுக்கு மேல பெரியப்பா மேல எனக்கு எந்த ஆர்வமும்      கிடையாது. கதை படிக்கிறதாம், கதை! கதை படிச்சு நேரத்தை வீணடிக்கிற காரியமெல்லாம் எனக்கு என்னிக்குமே பிடிக்காது. பெரியப்பாவும் – இத்தனை கதைகளும் நாவல்களும் எழுதி இருக்காரே – படிச்சியாடா, என்ன நினைக்கிறேன்னு வாயைத் திறந்து என்னை ஒரு தரம் கூடக் கேட்டதே கிடையாது …”

       “நீளமாப் பேசிக்கிட்டே போகாதீங்க. இந்தக் கதையை நீங்க படிச்சுத்தான் தீரணும்,” என்ற லல்லி எரிதழலை நிறுத்திப் பாத்திரத்தையும் இறக்கி வைத்துவிட்டு அந்த வார இதழை எடுத்துப் பெரியப்பாவின் சிறுகதை வெளிவந்திருந்த குறிப்பிட்ட பக்கத்தைப் பிரித்து அவனிடம் நீட்டினாள்.

       “இந்தக் கதையை நான் படிச்சே தீரணும்கிற அளவுக்கு இதிலே என்ன விசேஷம்? நீதான் கொஞ்சம் கதையைச் சொல்லிட்றது,” என்று முணுமுணுத்துக்கொண்டே சதாசிவமூர்த்தி அந்த வார இதழைப் பெற்றுக்கொண்டான்.

       “இது வரைக்கும் உங்க பெரியப்பா எழுதின எத்தனையோ கதைகளையும் நாவல்களையும் நான்  விழுந்து விழுந்து படிச்சிருக்குறேனே ஒழிய, நீங்க படிங்கன்னு உங்க கிட்ட வந்து சொல்லி இருக்குறேனா? நீங்களே சொல்லுங்க. இதைப் படிங்கன்னு குறிப்பா நான் சொன்னேன்னா, அதுல ஒரு அர்த்தம் இருக்கும்கிறதைக் கூடவா உங்களால புரிஞ்சுக்க முடியாது?”

       “புரியாம இல்லே, லல்லி….நீயே சுருக்கமா விஷயத்தைச் சொல்லிடக் கூடாதா? நீ என்னடான்னா தினமணியை வச்சுட்டு இதைப் படின்னு கழுத்தை அறுக்குறே!”

       “இது கழுத்து அறுபடப்போற சமாசாரந்தாங்க! அதனாலதான் இதைப் படிங்கன்னு அவசரப்படுத்தறேன்…. சரி… நீங்க கதையைப் படிக்கத் தொடங்குறதுக்கு முந்தி ஒரு கேள்வி.”

       “என்ன?”

       “உங்க பெரியப்பா அவரு கட்டி இருக்குற வீட்டைப் பத்தி உயில்ல என்னன்னு எழுதி வெச்சிருக்காரு?”                            

      “வீட்டை வித்து அதுல கிடைக்கிற தொகையையும் பரமேசுவரியும் நானும் சரிசமமாப் பங்கு போட்டு எடுத்துக்குறணும்னு உயில்ல குறிப்பிடப் போறதாத்தான் சொல்லிக்கிட்டிருந்தாரு.”

       “அவரு எழுதின உயிலை ஒரு தரமாச்சும் உங்க கண்ணுல காட்டி இருக்குறாரா?”

       “இல்லே.”

       “சரி. நீங்க கதையைப் படிங்க, முதல்ல.”

       சதாசிவமூர்த்தியினுள் ஒரு  வியப்புப் பரவி அவன் புருவங்களை உயர்த்தியது. அவரது உயில் பற்றிய ஏதோ  ரகசியமான செய்தி அதில் அடங்கி இருத்தல் வேண்டும் என்கிற அளவுக்கு அவன் விளங்கிக்கொண்டான். எனவே ஆவலுடன்  அதை எடுத்துக்கொண்டு தனது நாற்காலிக்குப் போய் உட்கார்ந்து அந்தக் கதையைக் கவனமாய்ப் படிக்கத் தொடங்கினான். …

       சிறுவயதில் மனைவியை இழந்த பிறகு மறுமணம் செய்துகொள்ளாமல் கடைசிவரையில் காலம் கழித்துவிட்ட ஒரு பெரியவர் பற்றிய கதை அது. மனைவியின் மரணத்துக்குப் பின்னர் அவர் நிறையப் பொறுப்புகளைத் தாமாக ஏற்றுக்கொள்ளுகிறார். தம்பியின் குடும்பத்தைப் பெரும் அளவுக்குப் பராமரிக்கிறார். தம்பியின் சம்பளப் பற்றாக் குறையைத் தம் நான்கிலக்கச் சம்பளத்தால் ஈடுகட்டுகிறார். தம்பியின் மகனை நன்றாய்ப் படிக்க வைக்கிறார். தங்கைக்குத் தம் செலவிலேயே திருமணம் செய்துவைக்கிறார். பற்றாக்குறை நிறைந்த தம்பியிடமிருந்து ஒரு காசு கூடத் தங்கையின் திருமணச் செலவுகளுக்கென்று பங்கு கேட்கவில்லை. தங்கையின் மகள் திருமணத்துக்குக் கூடப் பண உதவி செய்கிறார்.

       பணியில் இருக்கும் போதே தம் கவலைகளை மறக்க ஓர் எழுத்தாளனாக உருப்பெறுகிறார். நாளடைவில் பிரபல  எழுத்தாளராகித் தம் படைப்புகளுக்காகவும் சம்பாதிக்கிறார். சொந்த வீடு கட்டுகிறார். இதனிடையே தம்பி காலமாகிறார்.

       ஒரு காலகட்டத்தில் தம்மைச் சுற்றிலும் நிலவும் ஏழைமை, பிணி, ஏற்றத்தாழ்வுகள் ஆகியவை அவரைப் பெரிய அளவில் பாதிக்கின்றன. அவரை ஆழமாய்ச் சிந்திக்கவும் வைக்கின்றன.  ‘தம்பியின் குடும்பத்துக்கு மிகப் பெரிய அளவில் உதவி செய்தாகிவிட்டது. தங்கைக்கு மணம் செய்வித்தாகிவிட்டது. ஏன்? அவள் மகளின் திருமணச் செலவில் கூடக் கணிசமான பங்கேற்றாகிவிட்டது. தம்பியின் மகன் படித்து முடித்தது என்னால்தான். இப்போது நல்ல வேலையில் இருக்கிறான். வேலையும் எனது செல்வாக்கால்தான் அவனுக்குக் கிடைத்தது. என்னிடமுள்ள பணத்தையும் என் வீட்டையும் என் தம்பி மகனும் தம்பி மகளும் பங்கு போட்டுக்கொள்ளும் விதமாக நான் எழுதியுள்ள உயிலைக் கிழித்துப் போட்டுவிட்டு, மாற்று உயில் எழுதும் நேரம் வந்துவிட்டது. இந்த வீடு யாரும் சந்தாக் கட்டாமல் படிக்கும் வாசகசாலையாக உருவாக வேண்டும். இந்தப் பணத்தின் மூலம் வரும் வட்டியில் பத்திரிகைகளும் புத்தகங்களும் வாங்கிப் போடப்பட  வேண்டும். மிகவும் ஏழைமை நிறைந்த குடும்பத்துப் பையன் ஒருவனும் பெண் ஒருத்தியும் படிக்கவைக்கப்பட வேண்டும். இந்தப் பணமும் வீடும் இந்த நோக்கங்களுக்குத்தான் பயன்பட வேண்டும் …. – இப்படி யெல்லாம் ஒரு திடீர் யொசனைக்கு ஆட்படும் பெரியவர் உயிலை அவ்வண்ணமே மாற்றி எழுதிவிட்டு நிம்மதியுடன் புன்னகை செய்வதாய்க் கதை முடிகிறது….                                                                                            “கிழவனுக்குப் புத்தி பேதலிச்சுப் போயிறுச்சுன்னு தோணுது …” என்று ஆற்றாமையுடன் கத்தியவாறு சதாசிவமூர்த்தி அந்த வார இதழைத் தூக்கி எறிந்தான்.

       அடுக்களையிலிருந்து வெளிப்பட்ட லல்லி, “பாத்தீங்களா? அதுக்குத்தான் படிச்சுப் பாருங்கன்னேன்… நீங்க சொல்றாப்ல கிழவருக்கு வயசு காலத்துல கிறுக்குப் பிடிச்சிறுச்சுன்னுதான் நினைக்கத் தோணுது. தம்பி குடும்பமும், தங்கச்சி குடும்பமும் கிழங்கு கிழங்கா இருக்குறப்ப எவங்களுக்கோ பொதுச் சொத்தாக்குறதாமே?” என்று பொருமினாள்.

       “உங்க பெரியப்பாவுக்கு எம்புட்டு வயசு இருக்கும்?”

       “அறுபதுக்கு மேல இருக்கும்.”

       “அவரைத் தனியா இருக்கவிட்டது தப்பு. கூடவே வச்சுக்கிட்டிருந்தா ஒரு வேளை இப்படியெல்லாம் புத்தி போயிருக்காது. மனுசங்க மேல ஒரு பாசம் ஏற்பட்டிருக்கும். அப்ப வேற யாருக்கும் சொத்தை எழுதி வைக்கத் தோணாது.”

       “அவரு ஆரம்பத்துலேருந்தே தனியாத்தானே சமைச்சு சாப்பிட்டுக்கிட்டு இருந்திருக்காரு? தன்னோட தம்பி வீட்டில கூட அவரு தங்கலியே? அவரு ஒரு டைப், லல்லி. நாம கூப்பிட்டிருந்தாக் கூட வந்திருக்க மாட்டாரு.”

        “இருக்கலாம்.  ஆனா, அவரைக் கூப்பிட்டுக் கூட வச்சுக்கிட்டு அன்பு காட்டணும்கிறது நம்மள்ள யாருக்குமே இல்லாம போயிறுச்சே – தம்பிக்கும் சரி, தங்கச்சிக்கும் சரி. மனுசங்க எப்பவுமே ஒட்டுதலாக் கூட இருந்தாத்தான் பிரியம் கொடுக்கும்.”

       “உண்மைதான். நாம கூடத்தான் கூப்பிட்டிருக்கலாம். ஏன்? பரமேசுவரி கூடக் கூப்பிட்டிருக்கலாம். யாருமே செய்யலியே! வயசான ஒரு உறவுக்காரர் – குடும்பத்துக்கு எக்கச் சக்கமாப் பண உதவி செய்தவரு – தனியா சமைச்சுச் சாப்பிட்டுக்கிட்டு ஒண்டியா இருக்காரே, பாவம்கிற கரிசனை நம்ம யாருக்குமே வரல்லியே!”

       “ஆனாலும், அதுக்குன்னு இப்படி – சொந்தக்காரங்க கட்டை கட்பையா இருக்கிறப்ப – அநாதை இல்லத்துக்கும் இன்னொண்ணுக்குமா சொத்தைக் கொடுப்பாங்க? கொஞ்சங்கூட நியாயமே தெரியல்ல உங்க பெரியப்பாவுக்கு. சே. எல்லாம் போச்சு. அந்தப் பணம் வந்தா நாமே ஒரு வீடு கட்டிறலாம்னு நெனச்சிருந்தேன். எல்லாத்துலயும் மண்ணு!”

       “எங்க அத்தைக்கும் இது அதிர்ச்சியாத்தான் இருக்கும். ஆனா பெரியப்பா கதையை அவங்க படிச்சாங்களோ, இல்லியோ?”

       “படிக்காம என்ன? அண்ணன் கதைன்னா ஒத்தை வரியைக்கூட ஒதுக்காம சோடாபுட்டிக் கண்ணாடியை மாட்டிக்கிட்டு தெவச மந்திரம் ஓதுற கணக்கா ரேழி நடையில குந்திக்கிட்டுப் படிப்பாங்களே உங்க அத்தை! ஏன்? உங்க அத்தை மக பரமேசுவரியும்தான் விழுந்து விழுந்து படிக்கும். எதுக்கும் பெரியாப்பா இப்படி ஒரு கதை எழுதி இருக்கிறதைப் பத்தி நாசூக்கா அவங்களுக்குத் தெரிவிக்கலாமா?”

       “எழுதி?”

       “உங்க தலை! …உங்க அத்தை தன் அண்ணனுக்கு எழுதிக் கேட்டாலும் கேக்கும்…”

       “சரி. இன்னைக்கே எழுதறேன்.”

        சைக்கிள் மணியோசை கேட்டு ஆவலுடன் பொன்னம்பலம் வாசலுக்கு விரைந்தார். சில அழைப்பிதழ்கள், இரண்டு பத்திரிகைகள் தவிர, ஒரு கடிதமும் வந்திருந்தது. பொன்னம்பலம் முதலில் கடித உறையைப் பிரித்தார். அவருடைய தங்கைதான் எழுதி இருந்தாள்.  வழக்கமான சேமலாபங்கள் பற்றிய விசாரணைக்குப் பின்னர், அவர் எழுதியிருந்த “உயில்” எனும் கதையைத் தான் படித்தது பற்றி!  கதை நன்றாக இருந்ததென்றும், ஆனால் தம் சொத்துகளை ஏழைகள் பயனுறும் வண்ணம் அவர் உயில் எழுதியது தனக்குச் சம்மதமாக இல்லை என்றும் தங்கை வெளிப்படையாக எழுதி இருந்ததோடு,  ‘ஒரு வேளை நீயே அப்படிச் செய்ய எண்ணுகிறாயோ – அல்லது உயிலை மாற்றி ஏற்கெனவே எழுதிவிட்டாயோ – என்கிற சந்தேகம் வந்தது. அப்படி எதுவும் செய்துவிடாதே. உன்னை நம்பி எங்கள் இரண்டு குடும்பங்களும் எத்தனையோ ஆசைக் கனவுகள் கண்டுவருகின்றன. மேலும், உன் சொத்துகளை வேண்டாமென்று சொல்லுகிற அளவுக்கு நாங்கள் செயலுள்ளவர்களாக இல்லை என்பதும் உனக்குத் தெரியும். உன் கதை சதாசிவமூர்த்தியையும் என்னையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி விட்டது. அப்படி ஏதும் அசட்டுத்தனமாய்ச் செய்துவிடாதே. செய்திருப்பின், உயிலை மாற்றி எழுதிவிடு.’ என்று எந்த ஒளிவுமறைவும் இல்லாமல் எழுதி இருந்தாள்.

       பொன்னம்பலம் சிந்தனை வசப்பட்டார். ஓர் எழுத்தாளர் என்கிற முறையில் மனித மனங்களின் செயல்முறையை அவர் அறிந்தே இருந்தார். அந்தக் கதையைப் படிக்க நேர்ந்தால் அதிர்ச்சிக்கும் ஏமாற்றத்துக்கும் அவர்கள் உட்படுவார்கள் என்பது அவர் எதிர்பார்த்ததுதான். ஆனால், வெட்கம் என்கிற உணர்ச்சியே அற்றுப் போய் இவ்வளவு பட்டவர்த்தனமாய் ஒரு கடிதத்தைத்

தம் தங்கை எழுதுவாள் என்று அவருக்குத் தோன்றவில்லை. பண ஆசை என்று வந்துவிட்டால், மனிதர்களுக்கு நாகரிகமும் மானவெட்கங்களும் அறவே போய்விடுகின்றன என்பதை அதிக அளவில் இப்போது உணர்ந்து கசப்படைந்து போனார்.

      கடிதத்தின் தொனி தங்கையின் குடும்பமும், தம்பியின் குடும்பமும் ஒருங்கிணைந்துதான் அதை எழுதியிருந்திருக்க வேண்டும் என்பதாக அவரை ஊகிக்க வைத்தது. கசப்பையும் கடந்து அவருள் சிரிப்புப் பொங்கியது.            

      என்ன மனிதர்கள்! தம்பியின் குடும்பத்தைத் தாங்கு தாங்கென்று தாங்கியாகிவிட்டது. அவரது சம்பளமெல்லாம் அவனுக்காகவே செலவிடப்பட்டது. தம்பி மகனின் படிப்பையும் ஏற்றார். தங்கையின் திருமணத்தை ஏற்றார். தங்கை மகளின் திருமணச் செலவுக்குப் பெருந்தொகையைத் தங்கையிடம் அளித்தார். சொந்தக் கால்களில் நிற்பதற்கான அனைத்தையும் அவர் அந்த இரு குடும்பங்களுக்கும் செய்து முடித்திருந்த நிலையில், அதற்கு மேலும் ஆசைப்படுகிறார்களே என்கிற எண்ணத்தால் கொஞ்சம் ஆத்திரம் கூட அவருள் கிளர்ந்தது. அந்தக் கடிதத்துக்குப் பதில் போடக்கூடாது என்று தீர்மானித்தார். தமது உயில் பற்றிய எந்தக் கேள்விக்கும் பதில் சொல்ல அவர்களில் யாரும் தம்மைக் கட்டுப்படுத்த முடியாது என்று கோபப்பட்டார். தாம் யார் என்பதை அவர்களுக்குக் காட்டிவிட வேண்டும் என்கிற வீம்பு வந்தது. தம்மைத் தப்பாகப் புரிந்துகொண்டுள்ள அவர்களால் தமக்கு இறுதிக்கால உதவிகள் கிடைக்காமல் போகுமோ என்கிற சாத்தியக்கூற்றை நினைத்துப் பார்த்த பிறகும் தமது உயில் பற்றி மூச்சு விடுவதில்லை என்கிற முடிவை மாற்றிக்கொள்ள அவர் தயாராக இல்லை.

      இரண்டு வாரங்கள் கழித்து அவர் தம் தங்கைக்குக் கடிதம் எழுதினார் – அதில் உயில் பற்றி எதுவுமே சொல்லாமல், வயோதிகத்தால் தாம் உடல் நலமிழந்துள்ளதாகவும் தம் கடைசி நாள்களை அவர்களுடன் கழிக்க விரும்புவதாகவும் மட்டும் எழுதினார். எனினும் அவள் கடிதம் தமக்குக் கிடைத்ததை மறக்காமல் அதில் குறிப்பிட்டார். கைநடுக்கம் வந்துள்ளதாகவும், இனித் தம்மால் எழுத முடியாது என்றும் பொய்யாகத் தெரிவித்தார். தங்கைக்கு எழுதிய கையோடு தம்பி மகனுக்கும் எழுதினார். இரண்டு வாரங்கள் வரையில் இருவரிடமிருந்தும் பதில் வரவில்லை.

      ஒருவேளை தம்பி உயிருடன் இருந்திருந்தால் நிலைமை வேறு மாதிரி இருக்குமோ என்கிற எண்ணம் வந்தது. ஆனால், தம்பியைக்காட்டிலும் ஒரு தங்கைக்குப் பிரியம் அதிகமாயிற்றே என்கிற பொதுவான நடைமுறை ஞாபகத்துக்கு வர, தங்கையே இப்படி நடந்து கொள்ளுகையில் தம்பியா சரியாக நடந்து கொண்டிருக்கப் போகிறான் என்கிற எண்ணத்தில் அவருக்குச் சிரிப்பு வந்தது.

      இரட்டைப் பட்டதாரியாக்கப்பட்டு, தம்மால் நல்ல வேலையிலும் அமர்த்தப்பட்ட தம்பி மகனும் மவுனம் சாதிக்கிறான். தங்கை மகளுக்கும் அடுத்து ஒரு கடிதம் எழுதினார். தமது “உயில்” கதையை அவளும் படித்திருந்தாள் என்பதை அவளது மவுனமும் உணர்த்த, அவரது சிரிப்பு அதிகமாயிற்று.

      தமது காசு-பணம், வீடு ஆகியவை தங்களுக்கு இல்லை என்று ஆன பிற்பாடு தாம் அவர்களுக்கு வேண்டாதவராகிப் போன நிலை அவரை அதிர்ச்சிக்கு உட்படுத்திய போதிலும்,  ‘கேவலம் மனிதர்கள்தானே! இறைவனின் படைப்புகளிலேயே மோசமான படைப்பல்லவா?’ என்கிற ஞானமும் அந்த அதிர்ச்சியைத் தொடர்ந்தது.

      மறுபடியும் ஒரு கடிதத்தை மூவருக்கும் எழுதி வேடிக்கை பார்க்கலாமா என்கிற எண்ணம் வர, அவர் சிரிப்புடன் தமது கடிதத்தாளேட்டை எடுத்து மடியில் கிடத்திக்கொண்டு பேனாவைத் திறந்த கணத்தில் வாயிற் கதவு தட்டப்பட்டது. எழுந்து போய்த் திறந்தார். அயலூர் சென்றிருந்த அவர் நண்பர் தீர்த்தகிரி புன்சிரிப்புடன் உள்ளே வந்தார்.

      நண்பரைக் கண்டதும் மனத்தில் இருப்பதையெல்லாம் அவரிடம் கொட்டிவிட வேண்டும் என்று பொன்னம்பலம் தீர்மானித்தார். அவரை உட்கார்த்திவிட்டுச் சமையற்கட்டுக்குப் போய் இருவருக்கும் காப்பி கலந்து எடுத்து வந்து நண்பருக்கு எதிரே உட்கார்ந்துகொண்டார். காப்பியைப் பருகிய பின், வழக்கமான விசாரிப்புகளுக்குப் பிறகு, தாம் எழுதிய உயில் கதையைப் பற்றித் தீர்த்தகிரியிடம் அவர் கூறினார்.

      கதையைக் கேட்டுவிட்டு, “நிஜமாவே அப்படித்தான்  செய்யறதா இருக்கியா?” என்று அவர் கேட்டார்.

       “நீ என்ன நினக்கிறே, தீர்த்தகிரி? அது ஒரு நல்ல ஏற்பாடுதானே? புத்தகம் வாங்கிப் படிக்கிற வசதி இல்லாதவங்களுக்கு ஒரு இலவச வாசகசாலை கிடைக்கும். ஒரு ஏழைப் பையனும் ஒரு ஏழைப் பொண்ணும் பட்டப்படிப்புப் படிக்க முடியும். இவங்களுக்கெல்லாம் தான் நான் வேண்டியது செஞ்சாச்சே, தீர்த்தகிரி? ஒரு மனுஷனுடைய எல்லாச் சொத்துமே சொந்தக்காரங்களுக்குத்தான் பயன்படணுமா? இப்ப தெரிஞ்சு போச்சு பாரு, என்னோட சொந்தக்காரங்கல்லாம் நன்றி கெட்டவங்கன்னு! அவங்க லச்சணம் இவ்வளவு பச்சையாத் தெரிஞ்சு போயிட்ட பிறகும் என் சொத்துகளை நான் அவங்களுக்கே தரணுமா? நீயே சொல்லு…உண்மையிலே நான் உயிலை மாத்தி எழுத நினைக்கவே இல்லே. அது வெறுங்கதைதான்!”

       “நீ எது செய்தாலும் சரியாத்தான் செய்வே, பொன்னம்பலம்! இதுல என்னை எதுக்கு யோசனை கேக்குறே?  

“நீ என்ன சொல்றேன்னு பாத்தேன். வேற ஒண்ணுமில்லே, தீர்த்தகிரி! யாருக்குமே இப்ப நான் வேண்டாதவானாயிட்டேன், பாத்தியா? ‘எனக்குக் கையும் காலும் நல்லாத்தான் இருக்குது. உங்களுக்கெல்லாம் ஒரு பரீட்சை வெச்சேன். எல்லாரும் தோத்துட்டீங்க’ அப்படின்னு எழுதணும் போல கை நமைக்குதுடா!”

       “எழுது. அதுக்கு பதில் வராது… ஆனா, உயிலை மாத்தலைன்னும் அவங்க பேர்லயேதான் எல்லாமே இருக்குன்னும் எழுதிப்போட்டேன்னு வச்சுக்க. மறு தபால்ல பதில் எழுதிடுவாங்க…”

       “தீர்த்தகிரி! நீ இப்ப சொன்னதைக் கேட்டதும் எனக்கு ஒரு புது யோசனை வருதுடா!”

       “என்ன?”

       “நீ இப்ப சொன்னபடியே ஒரு கடிதம் எழுதிப் போட்டுடறேன். கதைக்கும் உயிலுக்கும்  சம்பந்தமே இல்லைன்னும், அவங்க தப்பா எடுத்துக்கிட்டு எழுதி கேட்டதும் அப்படி ஒரு பொய்யைச் சொல்லிப் பாத்தா மனுஷாளுடைய சுயரூபத்தைத் தெரிஞ்சுக்க முடியுமேங்குறதுக்காக வேணும்னே பொய்யா அப்படி ஒரு கடிதத்தை எழுதினதாகவும், இப்ப அவங்க எல்லாரும் எங்கிட்ட தோத்துட்டதாகவும் ஒரு கடிதம் எழுதிப் போட்றேன். என்ன எதிரொலி வருதுன்னு வேடிக்கை பார்ப்போம்!”

        “உனக்கு எழுத்தாளன் மூளையாச்சே! என்னமோ செய்யி!” என்று சிரித்தார், தீர்த்தகிரி,

       … அவர் எதிர்பார்த்தவாறே மறு அஞ்சலில் அவருக்குக் கடிதங்கள் வந்தன. தமக்கு உடம்பு சரியில்லை என்று சொன்ன முதல் கடிதத்துக்குத்தான் பதில் எழுதுவது போல் ஒரு நடிப்பை அதில் அவர்கள் காட்டி இருந்தார்கள். தங்கை தனக்கு உடம்பு சரியில்லாததால் உடனே பதில் போடவில்லை என்றும், அதற்குள் அவர் தன்னைப் பற்றிக் கேவலமாக நினைத்து விட்டதைச் சுட்டிக்காட்டி வருந்தியும் எழுதியிருந்தாள். தம்பி மகன் அவரது கடிதம் வந்த அன்று தான் ஊரிலேயே இல்லை என்றும், அலுவலக வேலையாக நெடிய பயணத்தில் இருந்த பின், அன்றுதான் திரும்பியதாகவும், அதற்குள் அவர் அவசரப்பட்டுத் தன்னை இழிவாக மதிப்பிட்டு விட்டது பற்றி வேதனைப்பட்டும் எழுதி இருந்தான். இருவருமே அவரைத் தங்களுடன் வந்திருக்க அழைத்திருந்தார்கள்.  இரண்டு கடிதங்களையும் எடுத்துக்கொண்டு அவர் தீர்த்தகிரியைப் பார்த்து வரக் கிளம்பினார்.

       …. “பாருடா, தீர்த்தகிரி! ரெண்டு பேரும் எப்படிப் பொய் சொல்றாங்க, பாரு. … இன்னும் தங்கச்சி மக கிட்டேருந்து பதில் வரலை. அவளும் ஏதானும் பொய்க்காரணத்தை எழுதுவா… என்ன சொல்றே? உம்? … இப்ப நான் இன்னொரு வேடிக்கை காட்டப் போறேன் அவங்களுக்கு!” என்று சிரித்த பொன்னம்பலத்தைத் திகைப்புடன் பார்த்தார், தீர்த்தகிரி.

        “இப்ப ரெண்டு பேருமே என்னை வரச் சொல்றாங்க.  தங்கச்சி மகளும் அப்படித்தான் எழுதப் போகுது. ஆனா நான் யார்கிட்டவும் போகப் போறதில்லே. வயித்தியம் பாத்துக்கிட்டதுல உடம்பு சரியாப் போச்சுன்னு சொல்லப் போறேன். ஆனா உயிலை என் கதையில வர்ற மாதிரி மாத்தி எழுதி வச்சுடப் போறேன். உயில் அவங்க பேர்ல இருக்கிறதா ஒரு பிரமையிலயே அவங்க வாழட்டும். ஒருவேளை நான் உன்னைச் சாவில முந்திக்கிட்டா நீயே எனக்குக் கொள்ளி வெச்சிடு, தீர்த்தகிரி. அதுக்கும் நான் தனியா ஒரு கடிதம் எழுதி உன்னண்டயே குடுத்துடறேன். என்ன சொல்றே?”

                  “நீதான்  பிடிவாதக்காரனாச்சே! எப்படி வேணுமோ  செய்டா!” என்றார் தீர்த்தகிரி.

       “ஒரு மனுஷன் உதவி செய்ய ஆரம்பிச்சுட்டா, அவன் தொடர்ந்து தங்களுக்கு உதவிக்கிட்டே இருக்கணும்னுல்ல மனுசங்க எதிர்பார்க்கிறாங்க! உதவியை நிறுத்தினதும், இத்தினி நாளும் செய்த உதவியெல்லாம் மறந்தே இல்ல போயிடுது மனுசங்களுகு! சீ!. தமிழ்ல ஒரு பழமொழி சொல்லுவங்களே – ‘நிதமும் குடுக்கிற மூதேவி இன்னிக்குக் குடுக்கல்லே; ஒரு நாளும் குடுக்காத மகராரசி என்னைக் கூப்பிட்டுக் குடுத்தா’ அப்படின்னு ஒரு பிச்சைக்காரன் சொன்னதா! அதுதான் எனக்கு நெனப்பு வருது, தீர்த்தகிரி! … ஒரு வேளை நீ முந்திக்கிட்டா, உன் மகன் கிட்ட எனக்குக் கொள்ளி வாங்கிக்கறேன் – உன் சம்மதத்தோட. சரியா?”           

       “நீ எது செய்தாலும் சரிதாண்டா!” என்றர், தீர்த்தகிரி.                                                …….

Series Navigationமெல்பனில்  மல்லிகை ஜீவா   நினைவரங்கில் முருகபூபதியின்     மூன்று   நூல்களின்  வெளியீடு  பாரதி தரிசனம் பிறமொழிகளில் பாரதியை அறிமுகப்படுத்துவதில் எதிர்நோக்கப்படும் சவால்கள் !
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *