நடேசன்
ஹாங்காங்கில், இரண்டு பொமரேனியன் நாய்களில் கோவிட் வைரஸ் காணப்பட்டது என்ற செய்தியை இரு வருடங்களுக்கு முன்பாக பார்த்தேன். அக்காலத்தில் அவுஸ்திரேலியாவில் அதிக நோய் தாக்கமில்லை . ஹாங்கொங்போல் இங்கு அடுக்கு மாடி கட்டிடங்கள் இல்லை. பெரும்பாலானவை தனியான வீடுகளென்பதால் இங்கு நாய்களில் தொற்று ஏற்பட சாத்தியமில்லை என்பது எனது எண்ணமாக இருந்தது.
மெல்பனில், கிழமையில் ஒரு நாள் வேலை செய்தபோதிலும் இரு வருடங்களாகத் தொடர்ந்து வேலை செய்து வந்தேன். எல்லோரும் மாஸ்க்குடன் வருவார்கள் . நானும் மாஸ்க் போட்டிருந்தேன். ஒரு நாள் ஒரு நாயில் இரத்தம் பரிசோதனைக்கு எடுத்தபோது ஊசி எனது கைவிரலில் குத்தி இரத்தம் வந்தது . என்னை அனுதாபத்துடன் பார்த்த அதன் உரிமையாளரிடம் , “ நாய்கள், பூனைகள், மனிதர்களைவிட பாதுகாப்பானவை. அவர்களிடமிருந்து எயிட்ஸ் (AIDS) ஹெப்பரைரிஸ் (Hepatitis) முதலான நோய்கள் தொற்ற வாய்ப்பில்லை “ என்றேன்.
இதேபோல் இளம்வயதான ஓரு ஜோடி ஒரு சிறிய பூடில் ( Poodle) நாயைக் கொண்டு வந்தார்கள். அதை நான் குனிந்து பரிசோதித்தபோது, அது எனது மாஸ்க்கின் மேலாகத் தெரிந்த கன்னம் காது எல்லாவற்றையும் நக்கியது .
அந்தப் பெண், நாயை நக்குவதை நிறுத்தச் சொன்னாள் .
அப்பொழுது நான் சொன்னேன்: “ நாய்கள் முத்தம் கொடுப்பது இக்காலத்தில் பாதுகாப்பு ‘
அந்த இளம் ஜோடி ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு பெண் “ உண்மைதான் “ என்றாள். அந்த ஆண் என்ன நினைத்தானோ !
வயதான மனிதனது கடி ஜோக் என்றிருக்கலாம்? யார் கண்டது ?
சனிக்கிழமை மிகவும் பிசியான நாள். ஒரு இலங்கையைச் சேர்ந்த பெரேரா குடும்பம், ( கணவன் மனைவி மகளான இளம் பெண் ) அவர்களது 16 வயதான ரொக்சி- எழுந்து நிற்க முடியாத ஒரு சிறு நாயைக் கொண்டு வந்து, மேசையில் வைத்தனர். அது ஓலமிட்டபடியிருந்தது . அவர்கள் அதனது தோலில் உள்ள புண்ணுக்கு மருந்து தேவைப்பட்டு வந்தார்கள்
நான் சொன்னேன்: “ ரொக்சியை இதற்குமேல் நீங்கள் வைத்திருப்பது கொடுமையானது . நடக்க முடியாது. ஒரே இடத்தில் கிடப்பதால் இந்தப் புண் வந்துள்ளது. வலியில் ஓலமிடுகிறது . நீங்கள் இதை கருணைக்கொலை செய்வதே ஒரே வழி. இந்த அறையவிட்டு நீங்கள் ரொக்சியை வெளியே கொண்டு செல்வதை என்னால் அனுமதிக்கமுடியாது. அப்படி விட்டால் அது நான் மிருகவதையை அனுமதிப்பது போன்ற செயலாகும். “
அந்த இளம் பெண் “ இது அண்ணனின் நாய். அவன் வர இரண்டு நாட்கள் செல்லும். அது வரையிலுமாவது… “ என பரிதாபமாக சொல்லிவிட்டு , மிகுதியை சொல்லாமல் என்னைப்பார்ததாள்.
“ அப்படியானால் வாட்ஸப்பில் பேஃஸ்ரைமில் போட்டு அனுமதியைக் கேளுங்கள் ரொக்சி இதற்குமேல் தாங்காது. “ என்றேன்.
“ நான் ஒரு மயக்க ஊசி போடுகிறேன் அடுத்த அறையிலிருந்து உங்கள் சகோதரரிடம் பேசுங்கள் “ எனச் சொல்லி அவர்களை அடுத்த அறைக்கு அனுப்பினேன்.
தகவல் அனுப்பிவிட்டு, இன்னுமொரு கறுத்த லபிரடோர் இன நாயை மடியில் வைத்தபடி எனக்காகக் காத்திருந்திருந்தார்கள்.
“ எமது பிளக்கி நாய் நடக்க முடியாதிருக்கிறது. ஆனால் , உணவை உண்ணுகிறது . வலி இல்லை . மூட்டு வியாதியால் நடக்க முடியாதிருக்கிறது “
“ எத்தனை வயது “ எனக்கேட்டபோது
“ 16 வயது “
“ வழமையான லபிரடோரையும் விட இரு வருடங்கள் அதிகமாக வாழ்ந்துவிட்டது. ஆனாலும் உணவுண்பதால், நான் இரண்டு வலி போக்கும் மருந்துகளை ஏற்றுகிறேன். அதன் பின்பு எழுந்து நின்றால் பிளக்கியின் அதிஸ்டம்தான். மருந்துகள், குளிகையால் தரமுடியும். தற்போதைய நிலையில் எக்ஸ்ரே எடுப்பது எல்லாம் விரயமானது “ எனச் சொல்லியபின்பு, அந்த நாயின் தலையைத் தடவி, “ எனக்கும் இப்படி ஒரு லபிரடோர் இருக்கிறது. அதுவும் நொண்டுகிறது “ என அதனது தலையைத் தடவி வெளியே அனுப்பினேன்.
இந்த நேரத்தில் ஒரு மத்திய வயது பெண், ஆறுமாத வயதான கறுப்பு வெள்ளையான அழகான ஆங்கில கோக்கர் ஸ்பனியலை கொண்டு வந்தார்.
இதுவரை காலமும் முகத்தைப் பார்த்து வயதை கணிப்பிடலாம். இப்பொழுது மாஸ்கால் முகம் மறைக்கப்பட்டுள்ளதால் இடை – கழுத்து என மற்றைய அங்கங்களைப் பார்த்து கணிக்கவேண்டும்.
உள்ளே அழைத்ததும் அந்தப் பெண்ணை அடையாளம் கண்டுவிட்டேன். மூன்று வருடங்கள் முன்பு நான் கிளினிக் வைத்திருந்த காலத்திலே அவளது பூனைக்கு சிகிச்சை செய்ததற்குப் பணம் தராத கத்தரீனாவாகும் . அவரது தந்தை மிகவும் நல்ல மனிதர். தொடர்ந்து அவரது, பல ஹங்கேரியன் விசிலர் இன நாய்களுக்கு பல காலமாக சிகிச்சை செய்தேன். பண விடயத்திலும் நேர்மையானவர். ஆனால், மகள் அவருக்கு நேர்மாறு மட்டுமல்லாது, அவள் ஒரு விதமான சுனாமி கிளையன்ட். எப்போதாவது வருவார். வரும்போது அவரது செல்லப்பிராணிகளுக்குப் பெரிதான நோய் இருக்கும் – அப்பொழுது எக்ஸ்ரே, இரத்தப் பரிசோதனை அல்லது ஸ்பெசலிஸ்ட் எனப் பெரிய செலவாகும். பணத்தைக் கொடுப்பதற்கு எங்களுடன் கள்ளன் – பொலிஸ் என ஒளித்து விளையாடுவார். பல தரம் தொலைபேசி எடுத்து பணத்திற்கு நினைவூட்டவேண்டும்.
பழைய விடயங்களை மறந்து “ எப்படி? “ என என்னை அறிமுகப்படுத்தினேன்
“ மிகவும் அழகான ஆண் நாய். என்ன விலை ? “
“ ஐந்தாயிரம் டொலர். “
கூடுதல் பணத்தை கொடுத்து வாங்கிய பலர் மற்றைய விடயங்களை கவனிப்பதில்லை. அழகான நாயைப் பார்த்ததும் வரும் உணர்வு மயமான முடிவின் பின்விளைவுகளை யோசிக்காத பலரை கண்டுள்ளேன். சிலர் பன்னிரண்டாயிரம் டொலர்கள் விலையில் பிரான்ஸ் புல்டோக்குகளை வாங்கி வருவார்கள். வந்தபின்னர் பரிசோதித்துவிட்டு, இடுப்பில் பிரச்சினை உள்ளது என்பேன் – அப்பொழுதுதான் மிகவும் கவலைப்படுவார்கள் – இவ்வளவிற்கும் சாதாரணமான மத்திய தர வகுப்பிலோ அல்லது அதற்கும் குறைந்த வசதி நிலையில் இருப்பார்கள்.
“ என்ன பிரச்சினை ? “
“ நேற்று முழுவதும் இருமலுடன் ஒரே இடத்தில் படுத்துக் கிடந்தது. உணவெதுவும் சாப்பிடவில்லை. “
ஸ்ரெதஸ்கோப்பால் பரிசோதித்தேன். சுவாசத்தில் எதுவித மாற்றமும் இல்லை.
எனது கை விரல்களை நக்கியபோது, அதற்குக் காய்ந்த கல்லீரல் துண்டுகளை கொடுத்தேன். மெதுவாக உண்டது.
காய்ச்சல் அதிகமில்லை. மிதமான சூடு.
தொண்டையைத் தடவியபோது இருமியது – அதாவது தொண்டையில் சிக்கி உள்ளதா என வாயைத் திறந்து பார்த்தபோது எதுவுமில்லை.
இறுதியாக, “ எல்லா தடுப்பூசிகளும் போட்டீர்களா? “ என்று கேட்டுவிட்டு, நானே பழைய பதிவேட்டைப் பார்த்தேன். நாய்களுக்கு தொண்டை நோயை தரும் வைரசுக்கு தடுப்பூசி போடப்பட்டிருந்தது.
“ மற்றைய நாய்களுடன் சேர்ந்திருந்ததா? “ எனக்கேட்டேன்.
“ இல்லை, ஆனால் எங்கள் வீட்டில் எல்லோருக்கும் கொரோனா வந்தது. எனக்குத்தான் இறுதியில் நோய் பீடித்திருந்தது. தொடர்ச்சியாக எனது அறையிலே என்னோடு இருந்தது “ என்றபோது எனக்கு விளங்கியது .
எவ்வளவு முக்கியமான விடயம் ? நான் வெறும் கையோடு பரிசோதிக்கிறேன். எனது கை முகமெல்லாம் நக்குகிறது . மனதில் ஏற்கனவே இருந்த கோபத்தில் அந்தப் பெண்ணை மனதில் கொலை செய்துவிட்டேன். கழுத்திலிருந்து பாய்ந்த இரத்தம், பரிசோதிக்கும் அறையெங்கும் சிதறிப்பாய்ந்து அறையே சிவந்தது .
நான் மிருக வைத்தியர், எனக்குக் கோபம் வரக்கூடாது . கண்களை அடுத்த பக்கம் திருப்பி, சமாளித்துவிட்டு “ கொரோனா இருக்கவேண்டும். எதுவும் செய்யத் தேவையில்லை. இரண்டு நாளில் குணமாகும். உங்களுக்கு வேண்டுமானால் என்னால் அதன் தொண்டையிலிருந்து சுவப் (Swab) எடுக்கலாம். ஆனால் அதற்குப் பணம் செலவாகும்
“ வேண்டாம் “ என அவள் மறுத்தபோது, “ கொரோனா வந்தவர்களிடமிருந்து செல்லப்பிராணிகளை தனிமைப்படுத்தவேண்டும் “ என்றேன்.
அந்தப் பெண்போனபின்னர், எனது முகம் கை எல்லாவற்றையும் கழுவியதுடன் எனக்கு உதவிய நேர்ஸ் மகியிடமும் விடயத்தை சொல்லிக் கழுவச் சொன்னேன்.
குதிரை வெளியேறிய பின்னர் லாயத்தைப் பூட்டுவது போன்றது எனது வார்த்தைகள் மட்டுமல்ல செயல்களுமே.
—0—
- கவிதையும் ரசனையும் – 27 – கானப்ரியன் கவிதைகள்
- காற்றில்லாத கடற்கரை
- அன்பு வழியும் அதிதி – வரத.ராஜமாணிக்கம் நாவல் மதிப்புரை
- தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
- கொரோனோ தொற்றிய நாய்
- அணு ஆயுதப் புளுடோனியம் ஆக்கிய விஞ்ஞானி கெலென் ஸீபோர்க்
- கதிரியக்கம், கதிரியக்க விளைவுகள், கதிரியக்கப் பாதுகாப்பு முறைகள்
- அந்நிய மண்ணில்
- எமிலி டிக்கின்ஸன் கவிதைகள் – 27
- நில்லாதே போ பிணியே …
- அஞ்சுவாசல் கிட்டங்கி…
- புதிய வாழ்க்கையில் புதிய தலைமுறை – அந்நியர்கள் சுப்ரபாரதிமணியன் நாவல்
- பாடம்
- துருக்கி நாட்டில் நடந்த ரஸ்யா – உக்ரைன் பேச்சுவார்த்தையின் அடுத்த கட்ட நகர்வு என்ன?
- எஸ் சாமிநாதன் விருது வழங்கும் விழா