தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

17 ஜனவரி 2021

பசி வகை!

சபீர்

Spread the love

பத்து மணி யிலிருந்து
பல மணி நேரம்
போராட்டம் செய்த
பட்டினி வயிறு
பாதையோரக் கடையின்
பரோட்டா சால்னாவுடனான
பேச்சு வார்த்தையில்
சமாதானமானது

வயிற்றுக்கு ஈயப்பட்டபின்
செவிப் பசிக்கு
என்பதுகளின்
இரைச்சலற்ற இசை
வாகனத்தில் விரவ
தூக்கம் தொந்தரவானது

இராப் பயணங்களில்
இரவின் இருப்பை
இசையே நிரப்பும்

வழுக்கும் தார் சாலை விடுத்து
உலுக்கும் கற்சாலை தொடங்க
உறக்கமும் கிறக்கமும்
சட்டென கலைந்தது

மேற்சென்ற வழியெல்லாம்
மற்றுமொரு பசிக்கான
பரிவர்த்தனை காட்சிகள்

பொதி உண்ட
கனரக வாகனங்கள்
சாலையோரம் நிற்க
புளுதித் திரை வழியே
வயிற்றுப் பசி தீர
ஒப்பனைப் பெண்டிரும்
அப்பிய உதட்டுச் சாய
அரவாணி அழைப்புகளும்
உடற்பசி தீர
ஓட்டுநர்களும்
என
நெடுஞ்சாலை நிகழ்வுகள்
நியாயங்களாக்கப்பட்டு…

வயிற்றுப் பசிக்கும்
வாலிபப் பசிக்கும்
ஒரே இரையாக அவர்கள்

முதற் பசி
முடிவுறா விடில்
தொடர்ப் பசி இடரும்

எல்லாப் பசியையும்
ஜீரனித்துக் கொண்டிருந்தது
இரவு!

Series Navigationகடவுளிடம் டிஷ்யூம்-டிஷ்யூம்கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் உள்ள போது (மெக்காவை நோக்கி) (கவிதை -49)

2 Comments for “பசி வகை!”

  • ஒ.நூருல் அமீன் says:

    எல்லாப் பசியையும்
    ஜீரனித்துக் கொண்டிருந்தது
    இரவு- அருமையான வரிகள்.

  • yasir says:

    ஊரில் இருந்து சென்னைக்கு பயணம் செய்த இரவு பொழுதுகளை நினைவில் வ்ந்து கொண்டு நிறுத்தியது உங்கள் கவிதை….பயணங்களையும் இவ்வளவு பக்குவுமாக கவிதையில் வடிக்கமுடியுமா ??


Leave a Comment

Archives