அய்யனார் ஈடாடி
ஓடிப் பிடித்த இரயில்
நின்றுவிட்டது ஒருநாள்
தடம் மாற்றம்…
தலை நிறைய
மாவுக் கோலங்கள்
மந்தையில் சாமியாட்டம்…
காத்துக்கிடந்தன எருவுகள்
கொள்ளிவைக்க வரும்
தல மகனுக்காக…
வத்துக் கிணற்றின்
மடி சுரக்கிறது
புயல் மழை…
கதிர் அறுப்பில்
ருசிபார்க்கிறது நாக்கு
காயம்பட்ட கைவிரல்களை…
———
இரத்தத் திட்டுக்களில்
இடம் பிடித்தன ஈக்கள்
கருப்பணசாமி படிவாசல்…
சந்தைக்கு போயிட்டு
வீடு திரும்புகையில்
கூடவே வந்தது கருவாட்டு வாசம்…
கரிசல் காட்டின்
தலை நிறைய விபூதிப் பூக்கள்
வெடிக்கும் பருத்தி…
———-
எழுது கோல்
கக்கி யெடுக்கும்
வண்ண மைகளில்
எழுந்து வரும்
விதைச் சொற்கள்
புரட்சியை விதைக்கின்றன
காகித தாளினை
புரட்டியெடுக்கும்
விரல் நுனிகள்
கொஞ்சமள்ளி ஏந்துகின்றன
தாகப் பசியில்…
———–
சேருமிடம் ஒன்று தான்
இனம் பிரித்தன
கிராமத்து சுடுகாடுகள்…
தண்ட வாளத்தில்
மலக் குவியல்கள்
பருகும் வண்டுகள்…
கொடிசுத்தி பிறந்தன
இரட்டைக் குழந்தைகள்
பெயர்வைத்தன அறிவுக்கொடிகளென்று…
சாணிப் பாலை
வற்றக் குடித்தன
சுரை விதைகள்…
வேட்டியை பறிகொடுத்தான்
குளத்து மீன்களிடம்
மீன்பிடி திருவிழா…
————–
நின்றபோது ஆடிய மூங்கிமரம்
உறங்கி விட்டது
கூரை வேய்ந்த பிறகு…
ஒத்த வீட்டினை
நிதம் தட்டுகிறது
தூது அஞ்சல்…
கண்ணீர் விட்டன
திருஷ்டி பொம்மைகள்
மிளகாய் அரவை கடைமுன்…
குடிசையில் நுழைகிறது
புயல் மழை
முள்படுக்கையில் தலக்கொங்காணி…
——–
பட்டமரத்தின் ஆலம் விழுதினை
பற்றிக் கொண்டது செந்நெருப்பூ
பாவம் இங்கே
பச்சைக் கிளிகள்
படபடவென பறந்து செல்ல
இட்ட முட்டை
பொட்டு பொட்டவென
சிதறிய உடைய
வா னிலத்தில்
வேட்டுச் சத்தம்
எங்கும் பரவ
கூடிக் கலைந்தன
காக்கைக் கூட்டங்கள்
மோதிப் பொழிந்தன
மேகக் கூட்டங்கள்
மிஞ்சிக் கிடைத்ததோ
எஞ்சிய சாம்பல்
மிதிபட்டு கிடந்ததோ
செவந்த வண்டல்
வாரிறைத்த காற்று
வசைபாடி சென்று விட்டது
வந்தவர் வந்தோர்
போனவர் போனோர்
கன்னத்திலோர் அடிபோட்டு
கும்பிட்டோர் கையெழுப்பி
பாண்டிச் சீமையிலே
பாதி ரெண்டும் போகயிலே
நாதியத்துக் கிடந்த மரம்
நாலுதிச கிளை பரப்ப
நாகம் வந்து குடியேறி
நாலு நாளு ஆகயிலே
நட்டுவச்ச நல்லகருப்பன்
நடுத்தெருவுல ஒறங்கயில
நாசமா போன தீ
நமத்து வந்து பிடிச்சிருச்சே…
————
அய்யனார் ஈடாடி