சிவபிரகாஷ்
இடம்:- சென்னை, வருடம் :-1990,நேரம் :- காலை 10.00மணி
நகரம் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது ஆட்டோ பஸ், மாருதி, அம்பாசிடர் கார்கள் ரிக்க்ஷாக்கள் என சாலைகளில் அணிவகுப்புடன் ஓடிக்கொண்டிருக்க, நான் வீட்டில் இருந்து புறப்பட்டு பனிரெண்டாம் வகுப்பு படித்திருக்கும் போது எனது அப்பா எனக்கு வாங்கி தந்த அதே ஹெர்குலீஸ் சைக்கிளை மிதித்தபடி பல தெருக்களை கடந்து மெயின் ரோடு வந்ததும், “உணவு பொருள் வழங்கு துறை” அலுவலகத்தை தேடிக்கொண்டிருந்தேன்.
எனக்கு அந்த அலுவலகம் இருக்கும் இடம் தெரியாததால். எதிரே வந்தவரிடம் விசாரிக்கையில்…. அவர் இடது பக்கம் திரும்பி மூன்றாவது வலது பக்கம் திரும்புனீங்கன்னா தெப்பக்குளம் தெரியும் அப்படியே எதிர்புறமாக திரும்புங்கள் நிறைய கடைகள் இருக்கும் , அந்த கட்டடத்தில் தான் இந்த ஆபீஸும் இருக்கு என்றார். சரியென அவருக்கு நன்றி சொல்லி விட்டு அவர் சொன்ன வழியே வந்து பார்க்கையில், பொலிவு இழந்து கட்டிடத்தில் கொட்டை எழுத்து பெயர் பலகை ஒன்று எழுத்தில் சாயம் இழந்து இருப்பதையும் கண்டேன்.
இதோ… வந்தாச்சு என்று நினைத்து, அருகில் இருந்த ஒரு டீக்கடை வாசலில் சைக்கிளை நிறுத்த டீக்கடைக்காரர், நான் “டீ” குடிக்க தான் சைக்கிளை நிறுத்துகிறேன் என நினைத்தார் போலும், நான் அந்த கடையை தாண்டி செல்கையில் சார்.. சார்… என கைதட்டி அழைத்து, இங்கே சைக்கிளை நிறுத்தாதீங்க, கஸ்டமர் வருவாங்க இடைஞ்சலாக இருக்கும், வேறு எங்காவது போய் நிறுத்திக்கீங்க என்றார்.
வேறு வழியில்லாமல்….. சைக்கிளை எடுத்துக் கொண்டு கொஞ்சம் தூரம் தள்ளி சென்றதும் பல சைக்கிள்கள், சில பஜாஜ் ஸ்கூட்டர்களும், டீவி எஸ் 50, வண்டிகளும் வரிசையாய் நிறுத்தப்பட்டிருந்தது. நானும் கிடைத்த இடத்தில் நிறுத்திவிட்டு முன் நோக்கினேன். அங்கே…. ஒரு ஆள் ஏதோ எழுதிக்கொண்டிருக்க அவனை சுற்றி பலர். என்ன ஏதுவென்று பார்க்க விருப்பமில்லாமல் சில அடி தூரம் வந்து சிதிலமடைந்திருந்த சிமெண்ட் படிக்கட்டுகள் ஏறி அலுவலகம் உள்ளே சென்றேன். நான் நினைத்தது போல் இல்லை அங்கே ஆண்களுக்கு ஒரு வரிசையும், பெண்களுக்கு ஒரு வரிசையுமாக ஏகப்பட்ட கூட்டம்.
ச்சே என்னடா இது? இவ்வளவு கூட்டம் என எரிச்சலுடனே…… அப்புறம் வரலாமா? இல்லை…. நாளைக்கு வரலாமா? என குழப்பத்துடன் ஆண்கள் வரிசையில் நின்று கொண்டேன். அதற்குள் என் பின்னாடி இரண்டு பேர் இணைந்து கொண்டனர்.
எனக்கு முன்பாக இருந்த ஒரு முதியவரிடம் என்ன ஐயா இவ்வளவு கூட்டமாக இருக்கே! எப்பவும் இப்படித்தான் கூட்டம் இருக்குமா? இல்லை இன்னிக்கு தானா? என்றேன்.
என்னை ஏற இறங்க பார்த்தவர்…. ஏன்னு கேட்டார்.
இல்ல.. ரொம்ப கூட்டமா இருக்கே,அப்பறமா, இல்ல நாளைக்கோ வரலாமான்னு பார்க்கிறேன் அதுக்கு தான் என்றேன்.
அவர்- சார் “என்னிக்கும்” இந்த கூட்டம் இருக்க தான் செய்யும்., என்னன்னு தெரியல கவர்மென்ட் ஆபிஸ்னாலே அப்படி தான் போல. இங்க புதுசா கார்டு வாங்கிறதுக்கு, புதுசா பேர் சேர்க்குறதுக்கு, அட்ரஸ மாத்துரத்துக்குன்னு ஜனங்க வந்து போயிட்டு இருப்பாங்க. ஆபிஸர் யாரையாவது தெரிஞ்சி வச்சிருந்தா, பணம் கினும்ன்னு கொஞ்சம் கொடுத்தால் வேலை சுலபமா முடியும். இல்லைன்னா வந்த வேலை இழுத்தடிக்கும் – என்றவர்.
ஆமா…. நீங்க எதுக்கு வந்துருக்கீங்க? பெரியவர் கேட்க
வீடு மாறிட்டதால என் ரேஷன் கடையை மாத்திக்கலாம்னு வந்தேன். அதுதான் என்றேன்.
சார்… ரேஷன் கார்டு போட்டாகாப்பி எடுத்து வெச்சுருக்கீங்களா? அப்புறம்… மனு ஒன்னு எழுதி தரணும். நான் இந்த இடத்தில் இருந்து இந்த இடத்துக்கு மாறுதலாகி போறேன். அப்படின்னு விபரமாக எழுதி தரணும்.
இந்த கூட்டம் நகர்ந்து அந்த டேபிள் க்கிட்ட போக இன்னும் ஒரு மணி நேரம் ஆகும். நீங்க போய் இதெல்லாம் ரெடி பண்ணிட்டு வாங்க,
இல்லன்னா….. கொஞ்சம் தள்ளி போனிங்கன்னா, ஒரு ஆள் உட்கார்ந்திருப்பார், அவருகிட்ட விவரத்தை சொன்னா எழுதி க்கொடுத்திடுவார். என்ன! ஐம்பது, ரூபாய் கேட்பார். எது சௌகரியமோ அத செஞ்சுட்டு சீக்கிரம் வாங்க… நான் வரிசையில் சொல்லிக்கிறேன். என்றார்.
“எனக்கும் அப்போது தான் புரிந்தது. நாம… சைக்கிளை நிறுத்திட்டு வந்தப்ப ஒரு ஆள் எதையோ எழுதி க்கொண்டிருந்ததை.”
சரிங்க ஐயா….. பார்த்துக்குங்க இதோ வந்துடறேன்னு சொல்லி ட்டு , எழுதி வாங்க அந்த ஆள் இருக்கும் இடத்தை நோக்கி நடந்தேன்
…..
அந்த ஆளை சுற்றியும் பத்து பேர் நின்று கொண்டு தான் இருந்தனர். கீழே குனிந்து எழுதி கொண்டிருந்ததால் முகம் சரியாக தெரியவில்லை. ஆனால் எங்கோ பார்த்து பழகிய முகம் போல் இருந்தது. மெல்ல நானும் குரல் கொடுத்தேன். வயதில் பெரியவரோ, சிறுவனோ, என்ன சொல்லி கூப்பிடறது? பொது வெளியில் சரியான வார்த்தை
அண்ணே… என்றதும் ஏறிட்டான்.
சந்துரு….. அழைத்தேன்
டேய் பிரபு …. நீயா?
Surprise எத்தனை ஆண்டுகள் ஆகிறது, நாம சந்தித்து.
சின்ன flashback
சந்துருவின் அப்பாவும், பிரபுவின் அப்பாவும் தனியார் கம்பெனியின் அலுவலக நண்பர்கள், பக்கத்து தெருக்காரர்கள், பிரபுவும், சந்துருவும் ஆரம்ப பள்ளியில் ஆரம்பித்து எட்டாம் வகுப்பு வரை ஒன்றாக படித்தவர்கள். ——–சந்துருவின் அப்பா குடிகாரர், குடித்துவிட்டு வேலைக்கு வந்ததால், பணிநீக்கம் செய்யபட்டு வேறு வேலைக்கு சென்று இடம் மாறுதலாகி சென்று விட்டதால், எட்டாம் வகுப்பு தோழமையோடு முடிந்து போனது இவர்களுடைய தொடர்பும்.
நீண்ட வருடங்களுக்கு பின் இந்நிகழ்வு
எழுத கோரியவர்களிடம் எழுதி பணம் பெற்று விட்டு எழுந்தான் சந்துரு…
டேய் பிரபு… எப்படி இருக்கே? உன்னை பார்த்து எத்தனை வருஷமாச்சு என்ன இந்த பக்கம்.?
ஒன்னுமில்லை… ரேஷன் கார்டு கடையை மாத்தலாம்ன்னு எழுதி கொடுக்க வந்தேன். ஆமா… இது தான் நீ செய்யுற வேலையா? நான் நெனச்சு கூட பார்க்கல நான் உன்னை இங்க பார்பேன்னு நீ இந்த வேலை செய்யுறேன்னு?
அதற்குள்… சந்துரு
வாடா. நாம டீ சாப்பிட்டு பேசலாண்டா – என்றான்.
“இல்லேடா” இப்ப தான் சாப்பிட்டு வந்தேன், நீ வேணும்னா சாப்பிடு நான் சும்மா வரேன் என்றேன்
அதெல்லாம் இருக்கட்டும் நாம போய் சாப்பிடலாம் என வலுக்கட்டாயமாக டீக்கடைக்கு அழைத்துச் சென்றான்.
“டீ “–ஆர்டர் கொடுத்து பேச தொடங்கினோம்.
ஏண்டா சந்துரு….. இந்த வேலைக்கு வந்தே?
அப்பா, அம்மா, எப்படி இருக்காங்க, என்ன படிச்சிருக்கே?
அப்பா…. தண்ணீ அடிச்சே ஆள் காலியாயிட்டார்
, நான் நடுவே குறுக்கிட்டு உனக்கும் ஏதாவது பழக்கம் இருக்காடா? என்றதும்,
ச்சே ச்சே சத்தியமா இல்லேடா, அப்பாவின் நிலையை பார்த்து எனக்கு அந்த குடி மேலே வெறுப்பே ஆயிடுச்சிடா அம்மாவுக்கும் வயசாயிடுச்சு,வீட்ல தான் இருக்காங்க, நான் அவங்களை சந்தோஷமாக பார்த்துக்கணும் அது ரொம்ப முக்கியம். என்றதும் என் நண்பனை நினைத்து பெருமைகொண்டேன்
நான் முக்கி முக்கி ஏதோ BA வரைக்கும் படிச்சுட்டேன். வீடு வாடகைக்கு இல்ல ஒத்திக்கு தான் இருக்கோம். இந்த வருமானம் எங்களுக்கு சோறு போடுது. – என்றான்.
கல்யாணம்.?
பண்ணிக்கலடா
ஏண்டா?
என்னத்த சொல்றது——வர வருமானத்தை வெச்சு என்ன பண்ணமுடியும், முக்கியமா எனக்கு எந்த பொண்ணும் கிடைக்கல.
அங்கொரு குரல்…” சார் டீ எடுத்துக்கோங்க”
ஆமா….. நீ என்னடா பண்ணுற என சந்துரு கேட்டான்
நான். B.Com. முடிச்சிட்டு , சுயமா ஸ்க்ரன் பிரிண்டிங் செய்றேன் பெரிய, பெரிய கம்பனிக்காரங்கெல்லாம் என் கஸ்டமர் தான். கடவுள் புண்ணியத்துல நல்லா இருக்கேன். ஆர்டரும் நிறைய வருது, கொஞ்ச நாள் கழிச்சு ஆப்ஸெட் மிஷினும் போடலாம்னு இருக்கேன் அம்மாவும், அப்பாவும் என் கூட தான் இருக்காங்க..
கல்யாணம்…..?
ஆங்… ஆயிடுச்சு, எனக்கு ஒரு பொண்ணும் இருக்கா, 4 th படிக்கிறா, இப்போ தான் புதுசா வீடு வாங்கியிருக்கோம். பழைய வீடு, கொஞ்சம் சீப்பாக வந்தது, மனைவி நகையெல்லாம் வெச்சு, கையில இருந்ததெல்லாம் புரட்டி, பாங்க லோன் போட்டு சமாளிச்சு வாங்கிட்டேன். அதனால தான் இந்த ரேஷன் கார்டு மாத்த வேண்டியதா போச்சு – என்றேன்.
டீ அருந்தி விட்டு…. நான் பணம் நீட்ட, கொண்ணுபுடுவேன் பேசாம இரு இது என் ஏரியா, நான் தான் கொடுப்பேன் என்று சந்துரு தடுத்து விட்டான்.
நடந்து… அலுவலக வாசலில் பேச்சை தொடர்ந்தோம்.
சரி பிரபு…… கவலையை விடு, நான் பார்த்துக்கறேன், ஆபிஸர்கள் எல்லாம் எனக்கு தெரிஞ்சவனுங்க தான். நான் உனக்கு அட்ரஸ் மாத்தி கார்டு வாங்கி தரேன் என்றான்.
நான்… ரொம்ப thanks டா, ஆமா நான் எவ்வளவு தரணும்ன்னு சொல்லுடா என்றேன்
என்ன…. பணமா..? அதெல்லாம் ஒன்னும் வேணாம், நான் பார்த்துக்கிறேன் என்றான்.
வேலை வேற, நட்பு வேற, உன் உழைப்புக்கு ஏதாவது ஊதியம் வாங்கிக்கோ, அப்ப தான் எனக்கு திருப்தி என்றதும்
சரி…. பார்த்துக்கலாம் என்றான்.
என்ன தான் நண்பன் பேசிக்கொண்டிருந்தாலும் என் மனம் ஏனோ ஒரு நெருடலாகவே இருந்தது. ஏன் போயும், போயும் இந்த தொழில எடுத்தான். அவனுக்கு அசிங்கமா தெரியலையா?
சந்திரசேகர் என்னும் முழு பெயரை சந்துரு என சுருக்கி அழைத்த நட்பு எங்களுடையது என்பதால் பொறுக்க முடியாமல் கேட்டு விட்டேன்.
ஏண்டா சந்துரு…..
உனக்கு இந்த வேலை புடிச்சு தான் செய்யுறீயா? BA வரைக்கும் படிச்சிருக்க, ஏன் வேறு வேலை பார்க்க கூடாதா?
புன்னகைத்தான்…
ஏண்டா பிரபு… என்ன பார்த்தால் கேவலமாக இருக்கா?
ச்சே… ச்சே… சும்மா கேட்டேன்.
இல்லடா மனசுல இருக்கிறதாலதான் இந்த கேள்வியே வருது, ரைட்… நீ என் பிரெண்டு. கேளு. நான் பல கம்பெனி ஏறி வேலையும் பார்த்திட்டேன். எந்த வேலையும் திருப்தி படல, ஒன்னு…. இன்னும் நல்லா படிச்சிருந்தா இன்னும் கொஞ்சம் பெரிய வேலையா, தேடி இருந்திருக்கலாம், அது இப்போ முடியாது. அறையும் குறையுமா படிச்சதால எடுபுடி வேலைக்கும், ஒருத்தருக்கு அடிமையா வேலை செய்யறது புடிக்கல. சொந்தமா முதல் போட்டு தொழில் செய்யலாம்னு பார்த்தா, என்ன செய்யறதுன்னு தெரியல, கையில பணமும் இல்லை, Bank ல லோன் ஏதாவது வாங்கி ஆரம்பிக்கலாம்ன்னா கூட என்னை நம்பி எவனும் 10 பைசா கூட தரமாட்டான். அப்புறம் எப்படி?
நான்…. யாரையும் ஏமாத்தல, படிப்பறிவு இல்லாதவங்க, எப்படி மனு எழுதனும்னு தெரியாதவங்க, அவசரத்தில் பேனா, பேப்பர் கொண்டு வராதவங்க இப்படி பல தரப்பட்ட மக்களுக்கு சேவை செய்யுற மாதிரியும் ஆச்சு, அவங்க தரும் ஐம்பது, நூறும் என் வருமானத்துக்கும் ஆச்சு. ஒரு நாளைக்கு தோராயமாகவும், அதிகபட்சமாக ஐநூறு வரைக்கும் சம்பாதிக்கிறேன். என் சுய உழைப்புல இதுக்கு மேலே என்ன வேணும் என்றான்..
இது எனக்கு நியாயமாகவே பட்டது. நான் தான் தெரியாம தப்பாக புரிஞ்சுகிட்டு கேட்டுவிட்டேனா? என்ற குற்றம் செய்த உணர்வோடு, சாரிடா. சந்துரு…. ஏதாவது தப்பாக கேட்டிருந்தால் மன்னிச்சுக்கடா என்றேன்.
அதெல்லாம் ஒன்னுமில்லை…. நீ கிளம்பி இரண்டு நாள் கழித்து வாடா, நான் உனக்கு வேலை முடித்து தரேன்டா என்று நம்பிக்கையோடு சொல்ல,
அதற்குள்… அலுவலக மாடியிலிருந்து ஐயா உங்கள கூப்பிட்றார்ன்னு அங்கிருப்பவர் அழைக்க,
தோ……. வரேன் என படியேறினான்.
நான்….. கீழே இருந்து பார்த்துக்கொண்டு நகர்ந்தேன் அவன் உயர்ந்த லட்சியத்தையும், நம்பிக்கையையும்.