வேலை

author
0 minutes, 4 seconds Read
This entry is part 7 of 8 in the series 31 ஜூலை 2022

 

 கடல்புத்திரன்


ஒவ்வொரு மாதத்திலும் காயத்திரி தேவதையாகிப் போன நாளில் பிள்ளையார் கோவிலுக்கு போய் வாரதை வழக்ககமாகக் கொண்டிருக்கிறான் . முகத்தில் மஞ்சள் பூசி கட்டிலில் படுத்திருந்ததை மறக்க முடியவில்லை . அன்று அவள் அதிகமாக சோர்ந்திருந்தது போல தெரிந்தது . நித்திரையிலிருந்து தானாக எழட்டும் என வீட்டை துப்பரவாக்குவதில் ஏடுபட்டான் .இடையிடையே வந்து எட்டிப் பார்த்துக் கொண்டுமிருந்தான் . எழுவதைக் காணவில்லை . வழக்கத்திற்கு மாறாக தூங்குறாளோ? …புன்சிரிப்பு சந்தேகத்தை ஏற்படுத்த மூக்கில் கையை வைத்துப் பார்த்தான் . அனுங்கலையும் காணவில்லை .எப்படியும் அவளிடமிருந்து சிறு சத்தம் வந்து கொண்டிருக்கும் . மூச்சு நின்று விட்டதை உறுதிப்படுத்தவே சிறிது நேரம் எடுத்தது .” என்னடி ஒரேயடியாய் போய் விட்டாயா ? ” இலங்கை ராணுவத்தின் முன் நிராயுதபாணியாய் எல்லாத்தையும் இழந்து கையறுயற்று நிற்பது போல , ஒரேயடியாய் தளர்ந்து போனான் . அவளை தூக்கி நிறுத்துற ஒவ்வொருவாட்டியும் ஒரு சிரிப்பு சிரிப்பாளே . இனி அதைக் காண முடியாது . அவனுடைய ஆவியும் வெளியேறி காயத்திரியின் கைப் பிடித்து கூட்டிக் கொண்டு மேலே போனால் எவ்வளவு நல்லாய் இருக்கும் .

அன்றிலிருந்து மூன்று வருசமாக அவள் சென்ற நாளில் ஒவ்வொரு மாசத்திலும் கோவிலை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறான் . இன்று அவளின் நினைவு நாள் ! .

கொஞ்சநாளுக்கு முதல் சுகன் புதிதாக வாங்கிய வீட்டிற்கு அலைபேசியில் ” வா , வா ” என்று கூப்பிட்டுக் கொண்டிருந்தான் . அது ஞாபகம் வந்தது . அவ்விடத்திற்கு அயலில் கார் சென்ற போது ” வீட்டிலா இருக்கிறாய் ? ” என்று கேட்டான் . ” வா ” என்றான் . அலைச்சல் வேலையில் தினமும் ஒரு மூட் . எரிபொருள் விலை ஏறியதில் …புலம் பெயர் நாடே வேறொரு மாதிரி தோற்றம் காட்டுகிறது . இந்த நாட்டுக்கு வெளிநாட்டுக் கொள்கை கிடையாது . அயலில் உள்ள பெரியவன் என்ன சொல்றானோ ?….பின்னாலே போறவன் . வாழ்க்கைச் செலவு கூடும் . பஞ்சத்தை எட்டிப் பார்க்கும் என்று தெரியும் . இன்றைய தலைவரின் அப்பருக்கு இருந்த தைரியம் ….கிடையாது . என்ன இருந்தாலும் பழசு வலிமையானது தான் . ஊரிலே ஏர் மேடை கட்டி இறைக்கும் முறை , சூத்திரக்கிணறுகள் …எல்லாவற்றையும் மெருகூட்டி மீள கொண்டு வாருங்கள் . அதை வீழ்த்த இன்று கூட எதுவுமே இல்லை . காந்தி வயதானவராக இருக்கலாம் . அவரது கொள்கைகள் வயதானதில்லை .

இந்த தலைவர்களா இயற்கையைக் காப்பாற்றப் போறவர்கள் ? . வாயில் கஞ்சாவை வைத்துக் கொண்டு பேசுறவர்கள் . வெறித்தனமாக சண்டை பிடிக்க ஆயுதங்களை அனுப்பிக் கொண்டு கிடக்கிற பலவீனமானவர்கள் . சரியான மெண்டல்கள் . விடுங்கள் .

ஓர்கானிக் உழைப்பில் மட்டும் கவனம் பதித்து உழையுங்கள் . அதை நிர்வகிக்கிற கட்டமைப்பிலே நிறைய குளறுபடிகள் ; சுரண்டல்கள் ; கட்டுக்கள் ; பறிப்புக்கள் ; துரத்தல்கள் . பண நோட்டுகளின் மதிப்புகள் இமய மலையின் உச்சியைக் கடந்து கொண்டு போகிறது . அங்கே இருக்கிற பொருளைக் கொண்டு வந்து இங்கே விற்றாலும் அங்கத்தைய விலையில் தான் விற்கப்படுகிறது . இடையில் உள்ள தூரமா பெறுமதியை மாற்றுகிறது ? எல்லாம் புலுடா ? . இந்த உக்ரேன் மோதலுடன் எல்லாமே மாறட்டும் .

பிரித்தானிய சாம்ராட்சியத்தின் கடைசி படிக்கட்டும் வீழ்ந்து உடைந்து போகட்டும் . இலங்கையும் இந்த மக்கள் எழுச்சியுடன் பச்சைப்பாவாடைக் கட்டிக் கொள்ளட்டும் .

நியூற்றன் துணிக்கை நியூற்றன் கருவைத் தாக்குற கொள்கையை சமூகங்களில் வைத்தே உலகமயமாதலை சோதித்துப் பார்த்தார்கள் . அது நிறைய பிரச்சனைகளையே கொண்டு வந்திருக்கிறது . அபிமஞ்சுவைப் போல வியூகத்திலிருந்து வெளியே வரும் வழி தெரியவில்லை . சண்டைகளை வளர்த்திக் கொண்டு போகிறார்கள் . இங்கத்தையவர் ” பிராந்திய சுதந்திரம் ” பற்றி பேசுகிறார் . இலங்கை அரசு தமிழர்களை அடித்தபோது பேசிய அதே பேச்சுக்கள் . இவர்களின் பிரபு , சேரிப் பிரச்சனை நம்மூர் சாதிகளுக்கு வேற ஒரு வடிவம் கொடுத்தது . அது தான் நாம் இன்று காண்கிற சாதிப் பிரச்சனைகள் . நிறுவி ,நிறுவிப் பாருங்கள் . ஐரோப்பிய நாட்டினரே காரணம் என்ற விடையையே பெறுவீர்கள் . நம்மவர்களே புறுபுறுக்கிறார்களா ? . அடிமை நிலைக்குள் வீழ்ந்து ரொம்ம நாளாகி விட்டது . ” விழித்து எழுந்து வா ! ” என்றால் யுகக் கணக்கிலே நடைபெறுகிற சமாச்சாரம் . “ ஏன்? , என்ற கேள்வி இல்லாமல் …வாழ்வு இல்லை ! ”.

நண்பனைச் சந்திக்கச் சென்றான் . “டேய் வாடா ” வரவேற்றான் . வீடு ஒரு கனவு . நம்ம நாட்டில் அதை சுழல்க் காற்றில் தள்ளி விட்டிருக்கிறார்களே . கடிக்கிற வேட்டை நாய்கள் நம்பிரதேசம் எங்கிலும் திரிந்து கொண்டு … ., இந்த எழுச்சி …ஒரு புரட்சியாகவே மாற மாட்டாதா . அப்பனே , கடவுளே நீ தான் துணையாய் நிற்க வேண்டும் ! .

வீட்டிலே அவனும் குட்டி மகள் சுபாவும் இருந்தார்கள் . அவன் மனைவியும் மூத்தவன் ரமணனும் ” நோஃவிரில் குரோசரிக் கடைக்கு போய் இருந்தார்கள் . ” மாமா தோட்டம் கொத்தி விட்டு வருகிறீர்களா ? ” என்று மழழையில் கேட்டாள் . புரியாது சுகனைப் பார்க்க ” உன் மண்வெட்டிப் பல்லைக் கூறுகிறாள் ” என்றான் . அவளிடம் திரும்பி ” உனக்கு வாய் கூடி விட்டது ” என்று செல்லமாக கோபித்தான் . அந்த வயசு … பட்டங்கள் தெளிக்கிற வயசு . அவர்கள் வைக்கிற பட்டங்களைக் கேட்டால் தலையை பிய்த்துக் கொள்வீர்கள் . அவன் தங்கச்சியை “இராவணன் மீசை “என்று பழித்தான் . அது கடற்கரையில் வாழ்ற தாவரம் . அதன் உருண்டு ஓடுற முள்ளு ….. பந்தா , பூவா , காயா ..? ….வித்தியாசமாகப் பார்வைக்கு பட ‘ பட்டப்பேர் ‘ . அதைச் சொன்னால் தங்கச்சி அழுவாள் . பிறகென ! . ஒல்லியான அவனுக்கு அவள் வைத்த பேர் ” குண்டா ” . இவள் வெளிநாட்டில் பிறந்தவள் . கொஞ்சம் மேலே போய் விட்டிருக்கிறாள் . தொடர்ந்து ” எங்கே சிந்தையை வைத்து விட்டு வந்து விட்டீர்கள் . தொலைந்து விட்டதா ? ” என்று கேட்டாள் . பெண்கள் சூட்டிகைகள் . இது என்ன ? . புரியவில்லை . சுகனுக்கும் புரியவில்லை . ” இது என்னடி ? ” என்று கேட்டான் . அரைக் கண்ணை வைத்துக் கொண்டு கன்னத்தில் கையை வைத்து நடித்துக் காட்டினாள் . ” எடியே அவன் மூஞ்சியே அப்படித் தான் .” என்று சொல்ல மெளலியும் சிரித்தான் .

அவளுக்கு மூஞ்சி என்றது விளங்கவில்லை . தாய் , செந்தமிழில் சொல்லிக் கொடுக்கிறாள் . ” அது என்னப்பா மூஞ்சி ? ” கேட்டாள் . ” செல்லம் உன்னை குஞ்சு என்று கூப்பிடுறோமே . (முகத்தைக் காட்டி ) இதையும் அப்படி சொல்கிறோம் “என்றான் . விளங்கின மாதிரி தலையை ஆட்டினாள் . அதை ஞாபகம் வைத்திருந்தாலே பெரிய விசயம் . ” அப்ப காலை …? ” என்று நினைப்பு வரக் கேட்டாள் . ” தாமரைப்பூ ” என்றான் . வெள்ளையா ,சிவப்பா ? ” கேட்டாள் . ” வெள்ளை ” . ” ஓ ” என்றவள் , கண்ணைக் காட்டினாள் . ” அது மீன் , மீனம்மா” என்றான் . மெளலியிடம் திரும்பி , “இப்படி கேட்டுக் கொண்டு வந்தால் என்னால் சமாளிக்க முடியாதடா , ஏதாவது தோன்றினால் சொல்லு ” என்றான் . ” எப்படி உன் அலைச்சல் வேலை போகிறது ? ” கேட்டான் .இந்த எரிபொருள் உயர்வால் …கவிழ்ன்று விட்டது . குறைந்தால் தான் நிமிறும் .” என்று அலுத்துக் கொண்டான்

” என்னடா ஒரேயடியாய் சலிச்சுக் கொள்கிறாய் .உன்னுடையது மட்டுமில்லை . எல்லா வேலையுமே சலிப்பையும் கொண்டது தான் . அது சரி , உனக்கு ‘ வேலை ‘ என்றால் என்ன என்று முதலில் தெரியுமா ? ” என்று கேட்டான் . ” சொல்லு ” என்றான் . ” அது , உண்மையில் அனுபவமடா ! .சம்பளம் தரப்படுவதெல்லாம், அதில் வசதி வாய்ப்புக்கள் கூடிக் கு றைந்திருந்தாலும் …அது உக்கிப் போற வெறும் பேப்பர் தான் . பிளாஸ்டிக் வேணாம் என்றவர்கள் அதில் அடிக்கிறார்கள் . அதை விடு . நாம் புத்தகம் வாசிக்கிறோம் . அதுவும் வேலை தான் . எந்த முயற்சியில் இறங்கினாலும் , ( சம்பளம் கிடைக்காட்டியும் கூட… ) அது வேலை தான் ! . நீ சிறுகதை எழுதுகிறாயே …” தொடர , ” அப்பா , ஞானியே எங்கே இருந்து இந்த முத்துக்களைப் பெற்றாய் . போதும் நிறுத்து ” என்று சிரித்தான் . ” வெளியில் சொல்லாதே சாமியார் எனச் சிரிப்பார்கள் ” என்றான் கூடவே . ” எல்லாம் இதை கிண்டிக் கிளறிக் கொண்டிருந்தேன் . ( அலைபேசியைக் காட்டினான் ) வந்தது . யாமறியோம் எல்லாம் இதன் பராம்பரமே ” என்றான் . ” அந்த பொயின்றும் சிந்திக்கக் கூடியது தான் ” மெளலி தலையை ஆட்டிக் கொண்டான் .

அவளை தூக்கிக் கொண்டு அவன் வீட்டைக் காட்டினான் . ஒரு பெரிய அறையும் இரண்டு சிறிய அறைகளும் கொண்டது . பரவாயில்லை . அவனிடம் சுபாவைக் கொடுத்து விட்டு தேனீருக்கு தண்ணீர் வைத்தான் . தயாரித்த பிறகு முறுக்குடன் சுபாவை வாங்கிக் கொண்டு கதிரையில் இருந்து குடித்தார்கள் . அவளுக்கு ஜூஸ் .

” அப்ப கழறுறேன்ரா , சுபாக்குட்டி , பைபாய் ” என்று கையைக் காட்ட , முகம் முழுக்க சந்தோசம் தெரிய கையை காட்டினாள் . கார் டயரில் ஆணி ஏறினால் , ” அது எங்களைப் பார்த்து தான் ஏறுது ” என்று சுகன் சொல்லுறதும் நினைப்பு வந்தது . ” காயத்திரி ” அவளையும் அப்படி நினைத்தான் . கண்ணில் …துளிர்த்தது .

வழமை போல வானொலி ஒலிப்பரப்பாளர் நிரஞ்சனா , ஒரு குட்டிக் கதை சொல்லத் தொடங்கி இருந்தார் .

” தலைப்பு வேலை ” என்று விட்டு ” ஒரு கணனிக் கம்பனியில் ஒரு துப்பரவு வேலைக்கான காலி இடம் ஏற்பட்டிருந்தது . சந்திரன் பொறுமைக்குப் பேர் போனவன் .வேலையில்நேர்த்தி அவனுக்கு முக்கியம் . சலிக்காது வேலை செய்வான் .சமிரி அப்பார்ட்மெண்டில் , மற்றவர் செய்யிற போது குற்றம் கண்டு பிடித்தாலும் , சேர்ந்து சரி செய்வான் . சிடு , சிடுப்பில்லாமல் செய்வதால் அவனை எல்லோருக்கும் பிடிக்கும் . முகத்தை கழுவிக் கொண்ட அவன் மூக்கு மூடியை மாட்டிக் கொண்டான் . ” உனக்குத் தான் வேலை கிடைக்கும் ” என்று நண்பர் வாழ்த்தி அனுப்பினர் . வேலையில் பொது , ஸ்கிள் … பிரிவுகள் இருக்கின்றன . எங்கட ஆட்கள் ‘ பொது ‘ தான் .கம்பனியில் , அறையின் ஒரு பகுதியைக் காட்டி ” எங்கே செய் ” என துப்பரவு பொருட்களையும் , துணியையும் கொடுத்து விட்டனர் . அவன் வேலை ஆச்சரியமூட்டியது . இப்படியே அந்த தளம் முழுதையும் துப்பரவாக்கி விடுவார்கள் போல இருந்தது . ” சுப்பர் ” என பாராட்டைத் தெரிவிக்க , அவனுக்கு தலை நிமிர்ந்தது . ஒருத்தர் ” உன்னுடைய ‘ ஈ முகவரியைக்’ கூறு ” என்று கேட்டார் . ” என்னிடம் இல்லை ” என்று தெரிவிக்க , ” இது கொரானாக் காலம் . எங்களுக்கு கட்டாயம் வேண்டுமே . மன்னிக்கவும் ” என்று அடுத்த ஆளைக் கூப்பிட்டனர் .

அவன் ஓரேயடியாய் சோர்ந்து போனான் . அவன் ஏதாவது ஒரு வேலையில் சேர்ந்தாக வேண்டி இருந்தது . கொரானா பல வேலைகளை பறித்திருந்தது . எட்ட நின்று பழகிறது … நீண்டு அரசும் பொறுமை இழந்து , எல்லாக் கட்டுப்பாடுகளையும் தளர்த்தி , மறுபடியும் வேலைக்கு போகச் சொல்லி இருந்தது . அவன் கையில் உள்ள பணம் கரைந்து கொண்டிருந்தது . சமரிக்கு …கொடுக்க வேண்டும் . சாப்பாட்டுக்கு கொடுக்க வேண்டும் . கொடாததுக்கு வட்டி கட்ட வேண்டியும் வரலாம் . கையிலே பத்து ரூபா மட்டுமே எஞ்சி இருந்தது . இந்த வேலை கிடைத்தால் வெல்லலாம் என்று நினைத்திருந்தான் . ஈ முகவரியிலே ‘ பஞ்’ அடிப்பான் என்று நினைத்துப் பார்த்திருக்கவில்லை . தமிழீழம் எங்களுக்கு என்ன கிடைத்தா விட்டது ? . எத்தனை இயக்கங்கள் இருந்தன . எதற்கு ? ,எங்களுக்குள்ளே பலப்பரீட்சை ! . இருந்ததையும் இழந்து விட்டு ….ஊருக்கு திரும்ப போகவே முடியாதா ? .

கோப்பிக் கடையிலே கோப்பி குடிக்கவே மனமில்லை . கால் போன போக்கிலே நடந்தான் . மனம் ஒன்றில்லை , பல குரங்கு . சப்வேயிலே போய் பாய்வோமா ? என்று ஒன்று கேட்டது . வீதியில் பாலத்திற்கு கீழே ஓடிய விரைவு வீதி கண் சிமிட்டியது . விரக்தியில் கிடந்தான் . ஒரு யானையையே எறும்புகள் வீழ்த்தி விடுகின்றன . ராஜமெளலி படத்திலே வார ‘ ஈ ‘ இலும் சிறிய ஒன்று உலகையே ஆட்டி படைக்கிறது . வீதியில் விவசாயச் சந்தைக் கடை ஒன்று திறந்திருந்தது . நுழைந்தான் . இருந்த பத்து ரூபாவிற்கும் ஐந்து இறாத்தலைக் கொண்ட வெங்காய பைகள் மூன்றை வாங்கினான் . உருளையில் இருந்த சிறிய ” கண்ணாடிப் பொலித்தீன் பைகள் கொஞ்சம் தர முடியுமா ? ” என்று கேட்டான் . கடையாள் ” ஏன் ” என்று கேட்டார் . ” இதைக் கொண்டு போய் விற்கப் போறேன் ” என்றான் . இப்படி யாருமே வருவதில்லை . ஆச்சரியப்பட்ட அவர் ” தாராளமாக எடு ” என்று அனுமதித்தார் . கூடவே வெற்றுச் சாக்கு ஒன்றையும் எடுத்து அவன் முன்னால் போட்டார் . ” இதிலே போட்டுக் கொண்டு போ ” என்றார் . சின்ன அளவில் ஐந்தை ஒரு பையில் போட்டு முடிச்சுப் போட்டான். பெரியதில் நாலை கோட்டான் . வேடிக்கைப் பார்த்த விவசாயியும் அவர் மகனும் ” வாழ்த்துக்கள் ” கூறி அனுப்பினர் . ஒரு வேகத்தில் வாங்கி விட்டான் தவிர , விற்றுத்தள்ளுமா ? என்ற பட்டாம் பூச்சிகள் பறக்க தொடங்கி விட்டிருந்தன .

நிரஞ்சனாவும் , சந்திரனுக்கு கூறுகிறார் . வேலை என்றால் என்ன ? . அவனும் தன்னையே கேட்டுக் கொள்கிறான் . ” அது ஒரு அனுபவம் ” . அட , சுகன் அறுத்ததையே இவர்களும் அறுகிறார்களே . நம்ம ஆள் நேர்த்தி மிக்கவன் இல்லையா ! . சிந்திப்பதை நிறுத்தி விட்டு ,அவன் சாக்கை தோளில் போட்டுக் கொண்டு சப்வேக்கு அருகில் வைத்து ” இரண்டு ரூபா, இரண்டு ரூபா ” எனக் கூவிக் கொண்டிருந்தான் . சாப்பாடைக் கொண்டு போகும் பையில் வெங்காயப் பையை வைக்கக் கூடியதாக இருந்தது . வேலையால் வாரப் பெண்கள் வாங்கிக் கொண்டார்கள் . ஏன் பத்து ரூபாவிற்கு என கதை செல்கிறது . மெளலி யோசித்துப் பார்த்தான் . சிறிய தொகை விற்க முடியும் . கதை தானே . ஆச்சரியப்படத் தக்க முறையில் அவன் எல்லாத்தையுமே விற்று விட்டான் . கையிலே இருபது ரூபாவாகி இருந்தது . ” பரவாயில்லையே ” உள்ளத்தில் சந்தோசம் கொப்பளித்தது .

கண்ணன் கீதையிலே கூறுகிறார் . முயற்சி செய் . கடமையைச் செய் . அடுத்த பத்து நிமிசத்திலே நடக்கப் போறது கூட உனக்குத் தெரியாது . வேலை செயிறது தான் உன்னுடைய வேலை . எல்லையைத் தாண்டி போகக் கூடாது . பிறகு , ” எல்லாம் சிவமயம் ” என யோசிக்க வைத்து விடும் . அவனுடைய வீடு ஐந்து கிலோ மீற்றர் தூரத்திலேயே இருந்தது . யாழ்ப்பாணத்தானுக்கு இது ஒரு தூரமா ? . ராஜநடை போட்டு போனான் . சிவாஜி தோற்றது . போங்கள் .

சமரியர் நல்ல மனமுடையவர்களாக இருந்தார்கள் . கதை இல்லையா ? எல்லோரும் நல்லவர்களாகத் தானிருக்கப் போறார்கள் . ” முயற்சியில் இறங்கி இருக்கிறேன் ” என்றான் . எல்லாருமாக ஐந்து பேர்கள் . ” நீ தங்குறதிற்கும் , சாப்பிடுறதுக்கும் பணம் தர வேண்டியதில்லை . இப்ப நாங்கள் பிரித்து கட்டிக் கொள்கிறோம் . வேலை கிடைக்கிற போது தா . அவசரமில்லை . இந்த முயற்சியை சனி , ஞாயிறுகளில் அப்பவும் தொடர்ந்து வைத்திரு , இப்ப மனதைப் போட்டு குழப்பிக் கொள்ளாதே ” என்று தட்டிக் கொடுத்தார்கள் .வேலை கிடைக்கும் போல இல்லை . ஆனால் அதே விவசாயக் கடையில் அடுத்த நாள் ‘ உருளைக் கிழங்கு ‘ என மாறி , மாறி வாங்கி விற்கத் தொடங்கினான் . சிலவேளை விற்காதும் எஞ்சி விடும் . சமரியிலே …கொடுத்தான் . ஒவ்வொரு நாளும் விற்பனைப் பற்றி விவசாயி அக்கறையுடன் விசாரித்தார் . ஒரு கண்ணாடிப் பை உருளையைக் கொடுத்து இது இருபது ரூபா . நீ ஒவ்வொரு நாளும் ஒரு ரூபாப்படி கொடு . என்றார். முன்பின் தெரியாத ஒரு உதவி . அவனை நெக்குருக வைத்தது . அப்பிள் , தோடை …என பழ வகைகளையும் விற்று வந்தான் . சனி ,ஞாயிறு தினங்களில் சில உணவகங்களிற்கு அருகிலும் வைத்து விற்றான் . சில எரிபொருள் நிலைய மூலையிலும் விற்க அனுமதித்தார்கள் . அவன் பைக்கான பணத்தையும் கழித்து விட்டான் . நல்ல மாதிரியான உடையில் நேர்த்தியாக வைத்து விற்பதில் பல அனுபவங்களையும் பெற்று வந்தான் . ஒரே விவசாயக்கடையில் நேர்மையாக வாங்கிறதில் பிடித்து போக , அவர் விற்காது விடுறதை வத்தல்களாக , ஊறுகாய்களாக தயாரிக்கும் முறைகளையும் கற்றுக் கொடுத்தார் . அவனுக்கு வேலை கிடைக்கவே இல்லை . விவசாயின் புத்திமதிப்படி தள்ளு வண்டி ஒன்றும் வாங்கி , முனிசிபால்டியின் வெண்டர் அனுமதி எடுத்து , வாடகைக்கு நிறுத்தி விற்கிற அளவிற்கு வளர்ந்தான் . அவனுக்கு மேலும் சில விவசாய சந்தைக் கடைகள் பரிச்சமாகின . அவன் சமரிப்பணம் கொடுக்கவும் தொடங்கி இருந்தான் . சமரித் தோழன் ஒருவனிடம் கார் இருந்தது . நகரத்துக்கு வெளியில் உள்ள …கடைகளிலிருந்து வாங்கி வர உதவுகிறான் .

அப்படி பலரின் வழிகாட்டுதலில் இரண்டு வருடங்களில் சிறிய கடை ஒன்றுக்கும் உரிமையாளனாகி விட்டான் . ஓரளவு வளர்ச்சிக்குப் பிறகு இலக்ஷ்மி காடச்சமும் கிடைக்கத் தொடங்கி விடுகிறது .அவனுக்கு மணமாகி தனி வாடகை வீட்டிற்கும் மாறினான் .

நம்மவர் முன்னேறி இருக்கிறார் என்று சுடர் ஒளி பத்திரிகை நிருபர் , பேட்டி எடுக்க வருகிறார் . கதையைக் கேட்டவர் , ” உங்களுக்கு மட்டும் ‘ ஈ முகவரியும் ‘ இருந்தால் ..எங்கேயோ போய் இருப்பீர்கள் ” என்கிறார் . அதற்கு சந்திரன் சிரிக்கிறார் . ” இல்லையே , இப்பவும் நான் ஒரு கணனிக் கம்பனியிலே நிலத்தை சுத்தம் செய்து கொண்டு தான் இருப்பேன் ” என்கிறார் . நிருபரிடம் அந்த பகுதியை அவர் கூறி இருக்கவில்லை . அவர் தலையை பிய்த்துக் கொண்டார் . ஏன் என்பதை சொல்லாமலே விட்டு விட்டார் .

வேலைக்கு என்று ஒரு உறுதியான அர்த்தம் உண்டு .இதே போல சாதியிற்கும் அர்த்தம் உண்டு . ஆனால் வந்தவர் , சென்றவர் எல்லாம் அந்த அர்த்தங்களை சிதறடித்து விட்டிருக்கிறார்கள் . இன்று நாம் ஒவ்வொரு சொல்லுக்கும் உரிய உண்மையான அர்த்தத்தை தெரிய,புரிந்து கொள்ள தமிழ் அகராதியை தேட வேண்டி இருக்கிறது . இன்று , ஒரு மொழியை , இன்னொரு மொழி மரியாதை அளிக்காது , குறை கூறி , கொச்சைப் படுத்துகிறது . கனடாவில் எல்லாம் முதலாம் குடிமகனின் மொழி ஆட்சி மொழியாக கூட கிடையாது . தன்னுடையதே சிறந்தது என்கிறதே சரித்திரமாக கிடக்கிறது .

எல்லா அடக்குமுறைகளும் ஒரே வடிவத்தில் . தான் கிடக்கின்றன . அடிப்படைவாதிகளிற்கு இந்த மொழி , மதம் தான் தெரிகிறது . கருவளையம் அவன் எல்லாப் புலன்களையும் மறைத்து நிற்கிறது . நாம் தோல்வியின் விளிம்பில் நிற்கலாம் . ஆனால் பழமையின் வழித்தோன்றல்கள் நாம் . நம்மவர் ” யாவரும் கேளீர் ” என்ற பெருந்தன்மைமிக்கவர்கள் .

எம்முன் நிற்வபவர்கள் வளரவில்லை . எனவே நாம் உண்மைகளை தேடியே பயணப்படுவோம் . கோட்டான்கள் கூவட்டும் . கூகைகள் பிளிறட்டும் . எம்நாடு ,எம்மண் எமக்குரியது தான் . நாம் அதை நோக்கி கடுமையாக உழைப்போம் . வேலை செய்வோம் . மனிதன் சிந்திக்கிறான் . சிந்திக்கிறதே ஒரு வேலை என்று தெரியும் . அது அனைத்துக் கட்டுக்களையும் உடைத்தெறியும் . அதை கட்டுப்படுத்த வீசப்பட்ட ஆயுதம் தான் இந்த பண நோட்டு . அதை மதிப்பிழக்க வைப்போம் . பழமையை மீளக் கொண்டு வந்து ….விடுதலை செய்வோம் . உரோமர் , கிரேக்கர் , பிரெஞ்சுப் புரட்சி கொண்டு வந்த சுதந்திரம் , ஜனநாயகம் எல்லாம் அர்த்தமற்று போய் விட்டன . பிரான்சு நாட்டில் சக்கரவர்த்திப் போல அனைத்து அதிகாரமும் கொண்ட ஜனாதிபதி . சிறிலங்காவிலும் மன்னரைப் போல ஒரு ஜனாதிபதி ..உலக நாடுகள் அனைத்திலும் ( முக்கால்வாசி) ஜனாதிபதிகளே ஆட்சி . மக்களாட்சி மலர தோளை உயர்த்தி உழைப்போம் , வேலை செய்வோம் . நிரஞ்சனா , கதையை முடித்து விட்டார் .

அது சரி , இது என்ன குட்டிக்கதையா , புரட்சிக்கதையா ? புதிய குட்டிக்கதை ! . வாகனம் கோவிலை அடைந்து விட்டது . இனி , அவன் காயத்திரியோடு பேசப் போகிறான் . அதில் உங்களுக்கு இடம் இல்லை .

Series Navigationஅனுபவமா? தண்டனையா?சொல்வனம் இணையப் பத்திரிகையின் 275 ஆம் இதழ்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *