சொப்கா பீல் குடும்பமன்றம் ஒன்றுகூடல் – 2022
குரு அரவிந்தன்
பீல் பகுதியில் உள்ள சொப்கா குடும்ப மன்ற ஒன்று கூடல் சென்ற ஞாயிற்றுக் கிழமை 07-08-2022 மிசசாகா கொம்யூனிட்டி சென்ரர் பூங்காவில் இடம் பெற்றது. புலம் பெயர்ந்து வந்த இங்குள்ள இளம் தலைமுறையினரின் வளர்ச்சியில் அதிக அக்கறை கொண்டு இயங்கிவரும் இந்த சொப்கா மன்றம், ஒன்று கூடலின் போது மிசசாகா உணவு வங்கிக்காகவும் உணவுப் பொருட்களைச் சேகரித்தது குறிப்பிடத் தக்கது. அங்கத்தவர்கள் மனமுவர்ந்து உணவுப் பொருட்களை கொண்டு வந்து சேகரித்தனர். உணவு வங்கிக்கு உணவு சேகரித்துக் கொடுக்கும் இந்த வழக்கம் பல வருடங்களாகத் தொடர்ந்தும் சொப்கா மன்றத்தால் நடைமுறைப் படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதைவிட சொப்கா மன்றம் பூங்கா துப்பரவாக்கல், இரத்ததானம், முதியோருக்கான வகுப்புகள், மாணவர்களுக்கான சங்கீத, தமிழ் வகுப்புகள், வாராவாரம் முதியோர் ஒன்றுகூடல்கள், முதியோர், இளையோருக்கான பயிற்சிப் பட்டறைகள், முத்தமிழ் விழா, பொங்கல் விழா, முதியோருக்கான ஓய்வூதிய சேவை போன்ற தன்னார்வத் தொண்டு சேவைகளையும் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது. கோவிட் – 19 காலத்தில் முதியோருக்குத் தேவையான தொண்டு சேவையைச் சொப்கா குடும்ப மன்ற இளையோர் செய்து கொடுத்தது பாராட்டுக்குரியது. இதைவிட சிறுகதைப் பயிற்சிப் பட்டறை மூலம் பயிற்சிபெற்று, மன்ற அங்கத்தவர்களான பெண் எழுத்தாளர்கள் 16 பேர் எழுதிய சிறுகதைகளைத் தொகுத்து ‘நீங்காத நினைவுகள்’ என்ற பெயரில் கனடா பெண் எழுத்தாளர்களில் முதலாவது சிறுகதைத் தொகுப்பாக வெளிவந்து சாதனை படைத்திருந்தது. மற்றும் இளையோரால் சமயற்கலை பற்றிய உணவு வகைகளை எப்படிச் சமைப்பது என்பது போன்ற விபரங்கள் அடங்கிய மின்நூல் ஒன்றும் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது.
கோவிட் -19 காரணமாக வீட்டுக்குள் அடைந்து கிடந்தவர்களுக்கு இது புத்துணர்வு தரம் ஒரு நிகழ்வாக அமைந்திருந்தது. இந்த ஒன்று கூடலின் போது பங்கு பற்றிய அங்கத்தவர்களுக்குக் காலை உணவும், மதிய உணவும் வழங்கப்பட்டது. சிறுவர், சிறுமிகள் மிகவும் உற்சாகத்தோடு விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றினார்கள். பெரியோருக்கான சொல்தேடல் போட்டியும், இன்னும் பல நிகழ்ச்சிகளும் தொடர்ந்து இடம் பெற்றன. விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெற்றவர்களுக்குச் சிறப்பு விருந்தினர்களால் பரிசுகள் வழங்கப்பட்டன. மாலை 5 மணியளவில் இனிதே நிறைவு பெற்ற இந்த ஒன்றுகூடல், சிறப்பாக அமைவதற்குச் சொப்கா நிர்வாகசபை அங்கத்தவர்கள் சிறப்பாகச் செயற்பட்டிருந்தனர்.
- சொப்கா பீல் குடும்பமன்றம் ஒன்றுகூடல் – 2022
- அகம் புறம்
- இது போதும்..
- தேன் குடித்த சொற்கள் !
- முடிவை நோக்கி !
- தக்கயாகப் பரணி [நிறைவுப் பகுதி]
- திண்ணை இதழ் ஜனநேசன் படைப்புக்கு விருது
- கைப்பேசிக்குள் நிகழ்ந்த கவர்ச்சி நடனம்.
- நிமித்தங்கள்
- பூமியில் அடித்தட்டு அதிர்வுப் பெயர்ச்சி இல்லாது [Plate Tectonics] உயிரினங்கள் பெருகச் சூழ்வெளி உதவியிருக்க முடியாது
- பாலியல் அத்துமீறல் இல்லாத பிரதேசத்திலிருந்து ஒரு வெளியேற்றம்..