“யூ ஆர் அப்பாயிண்டட் ” – புத்தக விமர்சனம்

This entry is part 14 of 48 in the series 15 மே 2011
 “யூ ஆர் அப்பாயிண்டட் “என்கிற புத்தகம் சமீபத்தில் வாசித்தேன். இதனை எழுதிய திரு. பாண்டியராஜன் மாபா என்கிற மனித வள நிறுவனத்தின் தலைவர். தனது 25 ஆண்டு அனுபவத்தையும் வைத்து இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் எந்தெந்த துறைகளில் வேலை வாய்ப்பு அதிகம் என்பது குறித்த இந்த புத்தகம், பயன் தரக்கூடிய பல தகவல்களை கொண்டுள்ளது. மிக எளிமையான மொழியில் எழுதப்பட்ட இப்புத்தகம் ப்ளஸ் டூ முடித்து அடுத்து என்னை படிப்பில் சேரலாம் என்று யோசிக்கும் இளைஞர்களுக்கு நிச்சயம் உதவ கூடியது. கல்லூரியில் படிக்கும் மாணவர்களும் அடுத்து என்ன செய்யலாம் என்ற அறியவும், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்காகவும் வாசிக்க வேண்டிய புத்தகம் இது. 

ப்ளஸ் டூ ரிசல்ட் வந்த இந்நேரத்தில் இந்த புத்தகத்தில் உள்ள சில முக்கிய தகவல்களை பகிர்வது பலருக்கும் உதவும் என்று தோன்றுகிறது. புத்தகத்திலிருந்து சில செய்திகள் உங்கள் பார்வைக்கு:

* இந்தியாவில் 24000 மருந்து கம்பெனிகள் உள்ளன. ஆண்டிற்கு 20,000 கோடிக்கும் மேல் மருந்துகள் விற்பனையாகிறது. மருந்து உற்பத்தி (Manufacturing) விற்பனை (Sales) , ஆராய்ச்சி ( Research) என ஏராளமான வேலை வாய்ப்பு இத்துறையில் உள்ளது. பி. எஸ். சி கெமிஸ்டிரி, பி. பார்ம், எம். பார்ம், பி.இ கெமிக்கல் இஞ்சினியரிங் போன்ற படிப்புகள் படித்தவர்களுக்கு இத்துறையில் வேலை வாய்ப்பு அதிகம்.

* மென்பொருள் (Software, மென்பொருள் சேவை துறை ( ITES, ஹார்ட்வேர் ஆகிய துறைகளில் B .E அல்லது MCA முடித்த கம்பியூட்டர் இஞ்சினியர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பு இருப்பது அனைவரும் அறிந்ததே. இந்தியா இந்த துறைகளில் அதிகம் செய்வது, ஆள் பிடித்து வேலைக்கு அமர்த்துவது, ப்ராஜெக்ட் செய்து கொடுப்பது போன்ற low end வேலைகளைத்தான். இதனால் உலக அளவில் சதவீத வியாபாரம் தான் இந்தியாவிற்கு கிடைக்கிறது. விண்டோஸ், அவுட்லுக் எக்ஸ்பிரஸ் போன்ற மதிப்பு மிக்க ஐ.டி. ப்ராடக்ட்களை தயாரித்து விற்றால் இந்தியாவிற்கு அதிக வருமானமும் வேலை வாய்ப்புகளும் கிடைக்கும்.

இந்தியாவில் பி. காம், பி. எஸ். சி போன்றவை மட்டுமல்ல இஞ்சினியரிங்கும் முடித்து விட்டு வேலை இல்லாதிருப்போர் ஏராளம். இன்னொரு பக்கம் தங்கள் பணிக்கு சரியான ஆள் ( Right fitting candidate) கிடைக்காமல் தவிக்கும் நிறுவனங்களும் அதிகமாகவே உள்ளன.1 முதல் 2 சதவீதம் மாணவர்கள் தான் படிப்பு. வேலை இரண்டிலுமே பிரகாசிப்பவர்கலாக உள்ளனர். மாணவர்கள் படிப்பது மட்டுமன்றி, தான் செல்ல விரும்பும் வேலைக்கு தேவையான திறமையை வளர்த்து கொள்ள வேண்டியது அவசிய தேவை.

உலகின் பெரிய 50 கம்பனிகளில், குறைந்தது 25 ஆவது ரீடெயில் என்கிற சில்லறை விற்பனை துறையில் இருக்கின்றன. Foodworld, Spencer, Life Style மட்டுமின்றி, நம் ஊரில் இருக்கும் சாதாரண கடைகளும் ரீடெயில் துறையில் அடங்கும். நம் நாட்டில் விவசாயத்திற்கு அடுத்து அதிகமான வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரும் துறை இது. இந்தியாவில் சின்னதும், பெரியதுமாய் ஒரு கோடிக்கும் அதிகமான கடைகள் உள்ளன. ப்ளஸ் டூ படித்த இளைஞர்களுக்கு Foodworld போன்ற கடைகளில் மாதம் 4000 முதல் 5000 வரை சம்பளம் தரும் துறை இது.

* இந்தியா மட்டுமல்ல, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் கூட சிவகாசியில் தயாரான டைரிகளை தான் பயன்படுத்துகிறார்கள். பிழைப்பு தேடி, யார் வந்தாலும் அவர்களை பட்டினி போடாத ஊர் என சிவகாசிக்கு பெயர் உண்டு.

தமிழகம் மற்றும் ஆந்திராவில் தான் மகளில் சுய உதவி குழுக்கள் மிக நன்கு செயல் படுகின்றன. வங்கிகள் இவர்களுக்கு ஆர்வத்துடன் கடன் தருகின்றன. காரணம் இவர்களுக்கு தரப்படும் பணம் பெரும்பாலும் வங்கிக்கு திரும்ப கிடைத்து விடுகிறது (இவர்களிடம் வாரா கடன் 2சதவீதம் மட்டுமே )

காற்றிலிருந்து மின்சாரம் தயாரிப்பது இன்றைக்கு அவசிய தேவையாகவும் முக்கிய தொழிலாகவும் உள்ளது. இந்த நிறுவனங்களுக்கு தேவைப்படும் ராட்சச காற்றாலை விசிறி கம்பங்களை (ஒவ்வொன்றும் ரூபாய் 8 கோடி!! ) உற்பத்தி செய்வதில் திருச்சி தான் இந்தியாவிலேயே முன்னணியில் உள்ளது. திருச்சியில் இத்தகைய நிறுவனங்கள் ஏழு உள்ளன. இங்கு பணியாற்ற பிட்டர், வெல்டர், கிரைண்டர் (ஐ.டி. ஐ/ டிப்ளமோ படித்தவர்கள்) அதிகம் தேவைப்படுகிறார்கள்.

தமிழகம் எப்போதும் தோல் துறையில் முன்னணியில் உள்ளது. இந்திய தோல் ஏற்றுமதியில் 60% தமிழகத்திலிருந்து தான் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆம்பூர், ராணிப்பேட்டை, திருச்சி, ஈரோடு, சென்னை ஆகிய நகரங்களில் தோல் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன. தோல் துறையா என முகம் சுழிக்காது இஞ்சினியரிங் படித்த மாணவர்கள் இந்த துறைக்கு சென்றால் அருமையான வளர்ச்சி உண்டு.

நர்ஸ் வேலைக்கு அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் எப்போதும் டிமாண்ட் அதிகம். இந்தியாவில் கிடைக்கும் சம்பளத்தை விட40 மடங்கு அதிக சம்பளம் என்பதால், நர்ஸ் கோர்ஸ் படித்த பலரும் வெளி நாடு செல்ல விரும்புகின்றனர். சுமார் 131 செவிலியர் கல்லூரிகளை கொண்ட கேரளா இந்தியாவில் மிக அதிக நர்ஸ்களை உருவாக்குகிறது.

பயோ டெக்னாலஜி துறையில் ஹைதராபாத், பெங்களூரு,மகாராஷ்டிரா அளவிற்கு தமிழகம் இல்லாது, சற்று பின்தங்கி இருந்தது. பின் இந்த படிப்பின் அருமை உணர்ந்து ஐ.டி க்கு “டைடல் பார்க் ” போல பயோ டெக்னாலஜிக்கு “டைசல் பார்க்” துவங்கி உள்ளது. இந்த துறையில் ஆபிஸ் என்றால் ஆராய்ச்சி கூடம் தான். தினம் தினம் புதிது புதிதான வேலை செய்ய விரும்புபவர்களுக்கு ஏற்ற துறை இது. ஆராய்ச்சி சம்பந்தமான அனைத்து டாகுமெண்டுகளும் ஆங்கிலத்தில் தான் இருக்குமென்பதால் ஆங்கில அறிவு இந்த துறையில் மிக அவசியம்.

***

மாபா என்கிற நிறுவனத்தின் மூலம் கிடைத்த அனைத்து அனுபவங்களையும் உள்ளடக்கிய இந்த புத்தகம் வாசிக்கவும், பரிசளிக்கவும் ஏற்ற ஒரு சிறந்த புத்தகம்.

புத்தகம் பெயர் : யூ ஆர் அப்பாயிண்டட்

வெளியீடு: விகடன் பிரசுரம்

Series Navigationஎன்ன வாசிப்பதுராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – 10
author

மோகன் குமார்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *