எஸ்ஸார்சி
வளவதுரையன் என்றும் மரபுக்கவிதைகளின் உரைகல். அழகுப் புதுக்கவிதைகள் சளைக்காமல் எழுதுபவர். புதினம் சிறுகதை கட்டுரை என இலக்கியப்பங்களிப்புச் செய்பவர். சங்கு இலக்கிய இதழின் ஆசிரியர். இலக்கியச்சோலை கூத்தப்பாக்கம் அமைப்பின் ஆணிவேர்.
கண்ணாடிக்குமிழ்கள் வளவதுரையனின் மற்றுமொரு புதுக்கவிதைத்தொகுப்பு. இதனை சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. 144 பக்கங்கள்.பதிப்பகத்தார் வளவதுரையன் பற்றித்தரும் குறிப்பு நிறைவாக வந்திருக்கிறது. கடலூர் கவிஞர் அன்பன் சிவா. கவிஞர் அவருக்கு இப்புத்தகத்தைச் சமர்ப்பித்து இருக்கிறார். என்னுரையில் வளவதுரையன் கம்பனின் ‘ நீர்க்கோல வாழ்வை நச்சி நெடிதுநாள் வளர்த்துப்பின்னைப்போர்க்கோலம் செய்துவிட்டார்க்கு உயிர் கொடாது அங்குப் போகேன்’ என்ற வரிகளை எடுத்தாளுகிறார். தொல்லிலக்கியங்களில் ஆழங்கால் பதித்தவர் வளவதுரையன்.
முதல் கவிதை’ அறுந்த செருப்பு’ துவக்கமே பின்நவீனத்துவமாய் அனுபவமாகிறது. ‘தைக்க ஊசி நூலைவிட முதலில் மனம்தான் தேவை’ என்று முத்தாய்ப்பாகக்கவிதை முடிகிறது.
காத்திருப்பு என்பது அடுத்த கவிதை.
கவிஞருக்கு உள்ளத்தில் கவிதை ஒளிந்துகொண்டு வெளிவரத்தயங்குகிறது. குழந்தைக்குச்சோறு ஊட்டும் தாய்போல் கவிதையைக் கொஞ்சிக்கொஞ்சி அழைக்கிறார். வரவில்லையே கவிதை. பின் ஈக்களை விரட்டுவதுபோல் மிரட்டிக்கூடப்பார்க்கிறார். இப்படி உவமைகளைக்கையாள்வதில் வளவதுரையன் வித்தகராய் இருப்பதைக்கவிதைகளில் அனேக இடங்களில் காணமுடிகிறது.
அச்சமும் ஆசையும் என்னும் கவிதை ஓர் இணையர்களின் ஊடல் பற்றிப்பேசுகிறது. திருக்குறளை அத்தனை லகுவாய்க்கையாள்கிறார் கவிஞர். அவன் அவளைக்கட்டிப்பிடிக்கிறான். பீலிபெய்சாகாடும் அச்சிறும்’ என்று அவள் நழுவுகிறாள். ஓடிப்பிடித்து ஒய்யாரமாய்கைப்போட்டுப்பார்க்கிறான் அவன்.’நுனிக்கொம்பர் ஏறினால் அஃதிறந்தூக்கின்’ என அவளோ பைய அடிக்கிறாள். ‘சரி நாளை வருகிறேன்’ என அவன் புறப்படுகிறான். அவளோ’ கொக்கொக்க கூம்பும் பருவத்து’ என குறுநகைபுரிகிறாள். ‘ ஏன் எப்போதும் சண்டைக்கு வருகிறாய்’ என்கிறான் அவன். ‘ஊடுதல் காமத்திற்கின்பம்’ அவள் விடை சொல்கிறாள். தமிழ் அதிகம் படித்தவளைக்காதலித்தது தவறு என்கிறான் அவன். ‘தமிழைப்பழித்தவரை என் தாய் தடுத்தாலும் விடேன்’ சிரித்து மிரட்டுகிறாள் அவள்.
அச்சமும் ஆசையும் மாறி மாறி இவண் அனுபவமாகிறது. ஊடல். வளவதுரையனோ ஆன்மீக இலக்கியங்களில் திளைத்தவர் என்பதையும் உலகறியும்.
பக்குவமாய்- என்கிற தலைப்பில் ஒரு கவிதை
.’ பெருந்தனக்காரர்களின் சொற்களாய்க்
காய்ந்து கொண்டிருந்த
கதிரவனின் வெப்பம்’
மென்மையாக மாறத்
தொடங்கிய மாலை நேரம்’
பெருந்தனக்காரர்களின் சொற்கள், கவிஞர் அதனைச் சுடும் வெயிலுக்கு இணையாய்ச்சொல்கிறார். ஞாயிறு யார்மாட்டும் பாரபட்சம் காட்டுவதில்லை. பெருந்தனக்காரர்கள் அனேகமாய் எளியவர்களிடம் அன்புகாட்டல் அரிது.
எழுதுதல்- பற்றி ஒரு கவிதை. எழுதுவதை நிறுத்தினால் நீ காணாமற்போய்விடுவாய் என எழுத்தாளர்கட்கு எச்சரிக்கை தருகிறது. எழுத்தாள நண்பர் அமரர் வே. சபாநாயகம் எப்போதும் சொல்வார்.
‘நாம எழுதலன்னா நாம இருக்கறதே தெரியாம போய்விடும்’ அப்படித்தான் கவிஞர் வளவதுரையனும் எண்ணிப்பார்க்கிறார். எழுதிக்கொண்டே இருக்கவேண்டும் இல்லை என்றால்,
‘நீ இருந்த இடமே
தெரியாதபடிக்கு
சுவடுகளை எல்லாம்
சுனாமி வந்தது போல
அழித்துவிடுவார்கள்’
கவிஞர் கடலூக்காரர் சுனாமி பற்றிக்கூடுதலாய் அனுபவம் பெற்றுமிருப்பார். எப்படி சுவடுகள் அழிந்து போகும் என்பதனைச்சொல்ல சுனாமியை அழைக்கிறார்.
‘ஆகவே
ஏதாவது எழுதிக்கொண்டே
இருக்கவேண்டும்
புரியவேண்டும் என்பதில்லை
புரிந்தது போல் எழுத வேண்டும்
புரியாதது போலவும்
எழுதவேண்டும்
எப்படியோ
எழுதிக்கொண்டே
இருக்கவேண்டும்’
எத்தனைக்கூர்மையான விமரிசனத்தை வாசகப்பரப்பிற்குக்கடத்தியிருக்கிறார் வளவதுரையன் பாருங்கள். வாழும் உலகம் என்ன எழுதுகிறோம் என்றா பார்க்கிறது எதாவது எழுது எழுது என்று நிர்பந்திக்கிறது இல்லாவிட்டால் தொலைந்தாய் நீ என்கிறது. ஒரே ஒரு கவிதை எழுதி ஆயிரம் ஆண்டுகளைக்கடந்தும் வாழ்பவன் கவிஞன் என்பதைத்தெரிந்தே எழுதுகிறார். நீர்த்துபோதலினின்றும் எழுத்தாளர்கள் தம்மைக்காத்துக்கொள்ளவேண்டும் கட்டாயம். சக எழுத்தாளர்களை ஆற்றுப்படுத்தவே வளவதுரையன் எழுதுதல் கவிதை படைத்துள்ளார்.
தவளைக்கூச்சல் தலைப்பில் ஒரு கவிதை. கவிதையில் இறுதி வரிகளாய் வருவதைக்காண்போம்.
‘தம்மை விருந்துண்ணத்
தாமே அழைக்கும்
தவளைச்சத்தம்’
நுணலும் தன் வாயால் கெடும் நாம் அறிவோம், தவளையின் கூச்சலை தம்மை விருந்துண்ண அழைக்கும் தவளைச்சத்தம் என்கிறார் வளவதுரையன். வித்தியாசமான பார்வை. கவிப்பார்வை.
பூனையின் புலம்பல்- நகைச்சுவை ததும்பும் கவிதை.
சிங்கம் துர்க்கைக்கு வாகனம்,காளை சிவனுக்கு வாகனம், கழுதை மூதேவிக்கு வாகனம்,ஆடு செவ்வாய்க்கு வாகனம்,நாய் பைரவருக்கு வாகனம்,எருமை எமனுக்கு வாகனம், பன்றி திருமாலுக்கு வாகனம். இவை சரி. பூனைக்கு மட்டும் குறை ’நான் என்ன பாவம் செய்தேன் எந்தக்கடவுளும் என்ன சீண்டவில்லை? வாசகன் தான் இதனை ஆராய வேண்டும்.
கனவில்தான் –என்னும் ஒரு கவிதை. கிளி பற்றிய சோகம் பேசுகிறது.
‘ஒரு நெல்லுக்காகக்
கழுத்து நோக
முப்பது சீட்டுகளைக்
கலைக்கவேண்டி உள்ளது’
கிளியின் புலம்பல் நம்மைச்சிந்திக்க வைக்கிறது. அந்தக்கிளிக்கு ஓர் இணை எதிர் மரக்கிளையில் வாழ்கிறது. ஆனால் என்ன?’ கலவி எல்லாம் எப்படிச் சாத்தியம்’ என்கிறது சோசியத்திற்கு சிறைப்பட்ட கிளி. கவிஞருக்குக் கிளியின் சோகம் புரிந்தே இருக்கிறது.
தொலைத்தல்- என்னும் கவிதை ஒரு சுவாரசியமான தகவல் சொல்கிறது. வாழை மரம் குலை போட்ட அடையாளம் வைத்து ஒரு வீட்டைக்கண்டுபிடிக்க முடியுமா என்ன? அடுத்தமுறை அந்த வீட்டைத்தேடினால் அந்த வாழைக்குலை இன்னும் தொங்கிக்கொண்டே இருக்குமா சொல்லுங்கள். தொலைத்தல் கவிதையில் எதனையும் தொலைக்காமல் வாசகனுக்குச்சொல்லிவிடுகிறார் கவிஞர்.
’கை ஒடிதல்- தலைப்பில் ஒரு கவிதை.
விருதும் பட்டமும்
விளக்கொளியும்
தலைக்கு மேல் சுழலும்
ஒளிவட்டமும்
தாளாத துயரத்திற்கே
அடிகோலும்’
விருது பட்டம் ஒளிவட்டம் எல்லாம் சரி. மாணிக்கவாசகப்பெருமான்’ கல்வி என்னும் பல் கடல் பிழைத்தும்’ என்பார். கவிதை விஷயம் விளங்கிக்கொள்ள நாம் திருவாசகத்தைத்துணைக்கு எடுத்துக்கொள்ளலாம். ஆனால் ‘ விளக்கொளியும்’ என்கிறாரே அதுவா அது கலைஞன் தன்னைப் பிரஸ்தாபிக்க கிடைக்கும் மேடை. Limelight என்பார்கள் ஆங்கிலத்தில்.
பசுமாடு என்னும் தலைப்பில் ஒரு கவிதை. வீதிக்குழாய் ஒன்று. அதனைச்சுற்றி முற்றுகையிடும் குடங்கள். அதனில் எத்தனை ரகங்கள். வண்ணங்கள். வெல்லத்தைச்சுற்றியிருக்கும் எறும்பு போல் குழாய் வாயைப்பார்த்துக்காத்துக்கிடக்கும் காலிக்குடங்கள். தமிழ்நாட்டின் இருப்பைப்போல் குடங்களில் பல்வகைப்பிரிவுகள். தமிழ் நாட்டினிருப்பு. உங்களுக்கு மனதில் என்ன ஓடுகிறதோ அதுவேதான்.
வாசகனுக்கு வேலை கொடுப்பதில் சமர்த்தர் வளவதுரையன். அதனை சங்கு இதழிலும் செய்வார், இலக்கியம் பேசுவோம் இணைய இதழிலும் அதனைத்தொடர்வார். ஒரு வினா வைப்பார் விடை கேட்பார். சங்கு அட்டைப்பட ஓவியத்திற்கு ஒரு கவிதை எழுதென்பார். அனைவரையும் பாராட்டுவார்.
குழாயில் தண்ணீர் வராதவரைக்கும் ஒற்றுமையே பேச்சும் மூச்சும். குழாயில் தண்ணீர் வரத்தொடங்கினால் இடக்கரடக்கல் இல்லாமலே பல சொற்கள். கூர்த்த பார்வை வளவதுரையனுக்கு.
பாரதியோடு லேசாக ஒரு சீண்டல். ’பாம்பும் அத்தை மகளும்’ கவிதைக்கு வருவோம்
‘நிறத்தை எழுத முடியாததால்தான்
பாம்பின் நிறமொரு குட்டியெனப்
பாரதி பாடினாரோ?
பாம்பின் அந்த நிறத்தைச்சொல்லமுடியாமல் ‘ பாம்பின் நிறம்’ என்றாராம் பாரதி. அத்தைமகளை பாம்போடு எண்ணிப்பார்க்க கவிஞருக்கு என்ன கஷ்டமோ, யார் அறிவார். பாம்பை ஒரு பிடாரன் பிடித்துவிட்டானாம். அத்தை மகளை இனிக்கட்டவேண்டுமாம் அவர்தானே சொல்கிறார்.
பிரிவு என்னும் ஒரு கவிதை. எத்தனைச்சட்டமாய் நியாயம் சொல்கிறது பார்ப்போம்.
‘பிரிவு என்பது
வருத்தம்தான் தரும்
ஆனால்
பீடுபெற வேண்டுமெனில்
நாற்றங்கால் விட்டு
நாற்றுகள் பிரியத்தான் வேண்டும்’
எழுதாத சொற்களை முதிர்கன்னிகள், கூட்டில் வாழும் பறக்காத குஞ்சுகள் என்கிறார் கவிஞர்.
நடக்கவே தெரியவில்லை என்னும் தலைப்பில் ஒரு கவிதை. மனிதனுக்கு ஒழுக்கமாய் இருக்கத்தெரியவில்லை. ராமாயணத்தை மேற்கோள் காட்டிப்பேசுகிறார் வளவதுரையன்
‘இராமனுக்குக்கம்பன் சூட்டிய பெயர்
நடையில் நின்றுயர் நாயகன்
இங்கு நடைக்கு ஒழுக்கம்
என்னும் பொருளும்
நடந்து வந்து சேர்கிறது.
ஆதலால் மனிதனுக்கு
நடக்கவே தெரியவில்லை’
மிருகங்கள் பறவைகள் நடக்கின்றன. மனிதன் எப்படி நடக்கவேண்டுமோ அப்படி நடக்கத்தெரியாதவனாய் இருக்கிறான் என்கிறார் கவிஞர்.
எங்கே வாழ்கிறது- என்னும் தலைப்பில் இன்னுமொரு கவிதை. தேசபிதா மகாத்மாவோடு வாதாடிப்பார்க்கிறது.
’மக்களே இல்லாத கிராமங்களும்
கிராமங்களே இல்லாத மக்களும்
இந்தியா கிராமங்களில் வாழ்கிறதாம்
எங்கே வாழ்கிறது?’
திருமண மண்டபத்தில் ஒரே கூச்சல். ஏதேதோ வகை வகையாய். அறிவியலின் ஆதிக்கம் மந்திரம் ஓதும் அய்யரையும் விட்டுவைக்கவில்லை.
‘ஒரே கூட்டம்
அய்யரெல்லாம் இப்பொழுது
ஒலிபெருக்கியில் மந்திரம் சொல்ல
ஆரம்பித்து விட்டார்கள்’
ஒரு எள்ளல் கலந்த விமரிசனத்தை இங்கே காண்கிறோம். மந்திரங்கள் ஒலிபெருக்கியில் என்ன, ஸ்மார்ட் போன் வந்த பிறகு வாஷிங்டன் திருமணத்திற்கு மயிலாடுதுறை அய்யர்கள் மந்திரம் சொல்லி, ஜிபேயில் தட்சணைக்காசு பெறுகிறார்கள்.
கோடுகள்- என்கிற கவிதையோடு முடிக்கலாம்.
‘எப்பொழுதும் சில இடங்களை
மட்டும்தான் நிரப்பமுடியும்
எதை எவரை இட்டு வேண்டுமானால்
நிரப்ப நினைக்கிறார்கள்.
சில நிரப்ப முடியாதவை’
தமிழ்க்கவிதைளில் நேர்த்தியானதொரு ஒழுகலாற்றைத்தொடர்ந்து கைகொள்ளும் கவிஞர்களில் வளவதுரையன் முன் நிற்பவர். கவிஞரை நிறைவாக வாழ்த்துவோம்.
————————————————————————————
- சூரிய மண்டலத்தில் துணைக்கோள் நிலவு எப்போது பூமியைச் சுற்றத் தோன்றியது ?
- எனக்கென்ன?
- வளவதுரையனின் கண்ணாடிக்குமிழ்கள் கவிதை நூல் குறித்து…….
- அந்த கணம்
- இந்த கணம்
- கணம்
- நாவல் தினை அத்தியாயம் பதிமூன்று பொது யுகம் 300
- 15 வது குறும்பட விருது விழா
- செருப்பு